கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும்

தமிழ்நாட்டில் அரசுத் துறையில் ஆரம்ப சுகாதார மய்யங்களில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருவோருக்கு பணியில் இருக்கும்போதே உயர் பட்டப்படிப்புக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும் கோட்டா முறையை அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.; இந்த கோட்டா முறை நீக்கப்பட்டால் கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் வரும் வாய்ப்புகள் குறைந்து விடுவதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் பட்டப்படிப்பு படித்த மருத்துவர்களின் சேவையும் கடும் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே மருத்துவ சேவையின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இந்த ஆபத்தை நீக்கிட அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏப்.26 அன்று கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மருத்துவர் களிடையே பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

மருத்துவ சேவையில் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்வது தமிழகம். இங்கேதான் குறைந்தது 90 சதவீத மாணவர்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து படித்து வரு கிறார்கள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து மருத்துவர்கள் வருவதால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ சேவையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. வடமாநிலங்களில் இடஒதுக்கீடு எண்ணிக்கை மிகவும் குறைவு. பார்ப்பன உயர் ஜாதிக்காரர்கள்தான் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிராமத்திலிருந்து சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களை ஜாதியக் கண்ணோட்டத்திலேயே அலட்சியப்படுத்தும் மனநிலையோடுதான் அங்கே மருத்துவ சேவை நடக்கிறது.

தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க வேண்டு மானால் கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவத் துறையில் படிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு நிபந்தனையை பார்ப்பனர்கள் உருவாக்கி இருந்தார்கள். நீதிக் கட்சியில் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோதுதான் இந்த முறையை நீக்கினார். பனகல் அரசர் சமஸ்கிருதம் படித்தவர். சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பார்ப்பனர்களுக்கு தனிப் பிரிவு ஒதுக்கப்பட்டிருந்தது. ஏனைய ‘மனநலம்’ பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அவர்கள் ஒன்றாக கலக்கக் கூடாது என்று தனித்து வைக்கப்பட் டிருந்தனர். இந்த அவலங்கள் சமூக நீதிக் கொள்கையால்தான் மாறியது.

இந்தியா முழுமைக்கும் ஒற்றைக் கலாச்சாரம் - ஒற்றைப் பண்பாடு - ஒற்றைத் தேசம் என்ற நிலை நோக்கி, பா.ஜ.க. ஆட்சி நாட்டை இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது. தமிழகத்தின் தனித்துவமான சமூகநீதிக் கொள்கைகள் இதற்கு தடையாக இருப்பதால் கல்வி உரிமைகளில் சமூக நீதியை பல்வேறு சட்டங்கள் வழியாக பறித்துக் கொண்டே வருகிறார்கள். இங்கே தீவிரமாக ‘இந்துத்துவம்’ பேசும் பார்ப்பனரல்லாதவர்கூட சமூக நீதிக் கொள்கையை ‘இந்துத்துவா’ கொள்கைக்காக பலி கொடுக்க மாட்டார். தமிழ்நாட்டின் இந்த உளவியலை பா.ஜ.க. புரிந்து கொள்ள மறுக்கிறது.

இங்கே நடக்கும் மருத்துவர் போராட்டத்தின் கோரிக்கை, மருத்துவர்களின் நலன் என்பதையும் தாண்டி மக்களின் வாழ்வியலோடு இணைந்து நிற்கிறது. கிராம மக்களுக்கு மருத்துவ சேவை என்பது அந்த மக்களின் வாழ் வுரிமையோடு பிணைந்து நிற்கிறது. சமூகநீதி என்ற கோட்பாட்டை ஏதோ படிப்பு, வேலை வாய்ப்பு என்ற எல்லைகளோடு சுருக்கி விட முடியாது. சமத்துவம், வாழ்வுரிமை, சுகாதாரம், கல்வி, பெண்ணுரிமை என்று பல்வேறு அம்சங்களையும் சமூகநீதி இணைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்வியும், சமூக நீதியும் அது சார்ந்த பண்பாடுகளும் தனித்துவமானது. எனவே தமிழகக் கல்விப் பிரச்சினைகளில் மத்திய அரசின் தலையீட்டைத் தடுத்து மீண்டும் கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரவேண்டும். போராடும் உங்களின் கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் எங்கள் இயக்கம் துணையாக நிற்கும்” என்று குறிப்பிட்டார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் த ப சி குமரன், சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் தோழர்கள் உடன் வந்திருந்தனர். நிகழ்வில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் பங்கேற்றுப் பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

“போராடும் மருத்துவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். கல்வி உரிமையில் தொடர்ந்து இந்திய அரசு குறுக்கிட்டு வருகிறது. இதற்கு அடிப்படையான காரணம் கல்வி உரிமை. மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதுதான். 1976ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை அமுலில் இருந்தபோது, அன்றைய காங்கிரஸ் ஆட்சி இதை செய்தது. அரசியல் சட்டத்தில் மாநில அதிகாரப் பட்டியல், மத்திய அரசு அதிகாரப் பட்டியல், பொதுப் பட்டியல் என்று மூன்று பிரிவுகள் இருக்கின்றன.

இரண்டு அரசுகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டுள்ள மருத்துவப் பட்டியலின் கீழ் மாநில அரசு ஒரு சட்டம் இயற்றினால் அதற்கு மத்திய அரசின் அங்கீகாரம் பெற வேண்டும். அதே நேரத்தில் மத்திய அரசு தானாகவே சட்டம் இயற்றி, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துக் கொள்ளலாம். முதலில் இப்போது நாம் போராட வேண்டிய அடிப்படையான கோரிக்கை, மீண்டும் கல்வி உரிமையை மாநில அதிகாரத்துக்குக் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும். இந்தியாவில் சமூக நீதிக்கு வழிகாட்டக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் தமிழகத்தில் நடைமுறையிலிருந்த அனைத்துப் பிரிவினருக்குமான சம பங்கீட்டு முறையை 1951ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்தது. உச்சநீதிமன்றம் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து பெரியார் நடத்திய போராட்டத்தினால்தான் அரசியல் சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்டு, ‘கல்வி சமூக நீதியாக’ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு உரிமை கிடைத்தது. அப்போது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் தனது மருத்துவக் கல்வியில் சேரும் கல்வி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்று வழக்கு தொடர்ந்த மனுதாரர் செண்பகம் துரைசாமி, ஆனால் மருத்துவக் கல்லூரிக்கு அவர் இடம் கேட்டு மனுவே போடவில்லை என்ற உண்மை உச்சநீதிமன்ற விசாரணையில் வெளி வந்தது. மனுவே போடாத ஒருவர், தனது உரிமை மறுக்கப்பட்டுவிட்டதாக வழக்கு தொடர்ந்து, தனக்கு சாதகமான ஒரு தீர்ப்பையும் பெற்றுக் கொண்ட நிலை அன்று நிலவியது. அந்த சமூகச் சூழலில்தான் பெரியாரின் சமூக நீதிக்கான போராட்டம் நடந்தது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இப்போது மத்திய கல்வித் திட்டமான ‘சி.பி.எஸ்.ஈ.’ பாடத் திட்டத்தின்கீழ் ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வு முறையை நாடு முழுதும் மத்திய அரசு திணித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாணவர்கள், மாநில அரசு பாடத் திட்டத்தின்கீழ் படிப்பவர்கள். இவர்கள் எப்படி ‘சி.பி.எஸ்.ஈ.’ பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுத முடியும்? இது கொடுமையானது அல்லவா? இவையெல்லாம் எதனால் நடக்கிறது? கல்வி உரிமை - மாநிலப் பட்டியலிலிருந்து பறிக்கப்பட்டு, பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதால்தான்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையையே ஒழிக்கப்பட வேண்டும். எதற்கு அகில இந்திய கோட்டா என்று ஒன்று இருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புக்கான மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ‘கோட்டாவாக’ எடுத்துக் கொள்ளப்படுகிது. மருத்துவ முதுநிலைப் பட்டப் படிப்புக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை ‘அகில இந்திய கோட்டா’வாக மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. நமது தமிழ்நாடு அரசு நமது மக்கள் வரிப்பணத்தில் நாம் உருவாக்கி செயல்படுத்தும் மருத்துவக் கல்லூரிகளில் எதற்கு ‘அகில இந்திய கோட்டா’க்கள் நுழைய வேண்டும்? நமக்கு அகில இந்திய கோட்டாவே வேண்டாம்; அதுபோல் பிற மாநிலங்களுக்குப் போய் நமது மாணவர்கள் படிக்கவும் வேண்டாம். நமக்கு அந்த இடங்கள் வேண்டாம்; தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களிலும் தமிழக மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். இந்த உரிமைக் குரலை ஒலிப்பதற்கு இப்போது நம்மிடம் பெரியார் இல்லை. அவர் போராடி பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டின் பலனைத்தான் நமது மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இனி உங்களிடமிருந்தே பெரியார்கள் வரவேண்டும். தமிழ்நாட்டுக்கு பல பெரியார்கள் இன்று தேவைப்படுகிறார்கள். பெரியார்களாக பலர் வெளியே வந்து போராட வேண்டும்” என்று நீதிபதி அரிபரந்தாமன் தனது உரையில் குறிப்பிட்டார்.

அரசு மருத்துவர்கள் போராடுவது ஏன்?

தமிழகத்தில் தற்போது 1800 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 330 அரசு மருத்துவமனைகள், 19 அரசு மருத்துவ கல்லூரிகள், 50க்கும் மேற்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் போன்ற மருத்துவத் துறைகளில் சுமார் 16000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் சேவை செய்து வருகின்றனர். இதில் சுமார் 9000 மருத்துவர்கள் இளநிலை படிப்பு (எம்.பி.பி.எஸ்.) மட்டுமே முடித்துவிட்டு ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றார்கள். இத்தகைய சிறப்பான பணியினாலேயே அனைத்து சுகாதார குறியீடுகளிலும் இந்தியாவில் தமிழகம் முன்னிலையில் இருந்த வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 1500 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் அனைத்திந்திய கலந்தாய்வு மூலம் 50 சதவித இடங்களும், மாநில அரசின் கலந்தாய்வின் மூலம் 50 சதவீத இடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இதில் மாநில அரசிடம் உள்ள மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பின் மொத்த 750 இடங்களில் 50 சதவீத இடங்கள் சிறப்பு சேவை ஒதுக்கீடாக சுமார் 375 இடங்கள் அரசு மருத்துவர்களுக்காக கடந்த 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. ஏழை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் இரண்டு வருடம் பணி புரிந்த பிறகு தமிழ்நாடு சேவை இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவ முதுநிலை படிப்பு இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடும், அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் சிறப்பு சேவை ஊக்க மதிப்பெண்களாகவும் வழங்கப்பட்டு முதுநிலை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோதே மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவத் துறைகளில் மருத்துவர்கள் பற்றாக் குறையுள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அளவிற்கு ஓர் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது அரசு பணியில் உண்மையாக உழைத்த மருத்துவர்களிடையே மனவேதனையையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. இவ்வாறு இடஒதுக்கீட்டை இரத்து செய்தால், மருத்துவர்கள் சேவை சலுகைகள் இல்லாத அரசு பணியினை விடுத்து செல்வது மட்டும் அல்லாமல், புதிதாக அரசு பணியில் சேருபவர் எண்ணிக்கையும் குறைய நேரிடும். இதனால் ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவை பூர்த்தி செய்ய சிறப்பு மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவதுடன், எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள்கூட இல்லாத நிலை ஏற்படும். 

Pin It