kolathur mani copy‘பெரியாரும் - மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (10)

• இத்தாலி நாட்டு மார்க்சிய சிந்தனையாளர் ‘அடிக் கட்டுமானம் - மேல கட்டுமானம்’ என்ற மார்க்சிய அடிப்படைகளோடு ‘குடிமைச் சமூகம்’ என்ற கருத்தாக்கத்தை முன் வைத்தார்.

• அது அரசியல் பண்போ பொருளாதா பண்போ இல்லாத ஒரு சமூகம். சமூக மாற்றத்தில் இதன் தாக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

• மேலை நாட்டு மதங்களுக்கும் இந்தியாவின் இந்து மதத்துக்கும் உள்ள பண்பு வேறுபாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது.

மார்க்சியத்தில் பல மாற்றங்கள் வந்தது. கிராம்சி - யைப்பற்றி சொல்லவேண்டும். அவரது கருத்தைப் படித்தவுடன் எனக்கு வியப்பாக இருந்தது. அண்டோனியோ கிராம்சி, மேல் கட்டுமானத்தில், இரண்டு மேல் கட்டுமானங்கள் இருக்கின்றன என்கிறார். ஒன்று வழக்கமாகச் சொல்லப்படுகிற அரசியல் மேற்கட்டுமானங்கள்; மற்றொன்று ‘குடிமைச்சமூகம்’ என்ற ஒன்றைக் கூறுகிறார்.

சிவில் சொசைட்டி என்று ஒன்று இருக்கிறது. அது மெல்ல மெல்ல பேசிப் பேசி, அவர்களை அதற்கு ஆட்படுத்தி விடுகிறது. அதில் அவர் சொல்லுவார். இது கொயர்ஷன் (Coercion) பலவந்தம்; அது கன்செண்ட் (consent). அது வேறு இது வேறு.

அதன் மூலமாகத் தான் கல்வியின் மூலமாக பொது சமூகத்தின் உரையாடல் வழியாக நியாயப்படுத்திக் கொண்டே ஒரு கூட்டம் இருக்கும். சீக்கிரம் அதை கவிழ்த்து விடவே முடியாது என்று கிராம்சி குடிமைச் சமூகம் என்பதை விளக்குகிறார்.

அது நேரடியாக அரசியல் பண்பும் அதே போல் நேரடியாக பொருளாதாரப் பண்பும் இல்லாத ஒரு கட்டுமானம். ஆனால், இன்னொரு பக்கம், சமயம் குடும்பம் கல்வி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் வழியாக ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக பொது மனோபாவம் ஒன்றை உருவாக்குவது. அரசுக்கு ஆதரவான பொதுச் சம்மதத்தை, (consent),  குடிமைச் சமூகம் உருவாக்குகிறது.

இந்த சிவில் சொசைட்டி அதை மாற்றுவதற்கு என்ன செய்தது, அதைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்திருப்போமா? ஏனென்றால், அது இத்தாலி நாட்டில் ரோமில் இருப்பதனால் அவர் பேசினாரா தெரியவில்லை. கிராம்சி அதைப் பற்றி ஒரு கேள்வி  வைக்கிறார். நாமும் அப்படியே ஏற்று நடந்து கொள்ளக்கூடாது.

கிராம்சி வாழ்ந்த இத்தாலியில் உள்ள மதத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை.

நான் ஏற்கனவே சொன்னது போல, இங்கே இஸ்லாத்தில்ட, தலித் முஸ்லீம் இட ஒதுக்கீடு வட நாட்டில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத் தில் கோட்பாட்டளவில் இல்லையென்றாலும், பின்பற்றுபவர்கள் வேறு. பெரியாருக்கு அரசிட மிருந்து பெரிய எதிர்ப்பு வந்த காரணம், அவர் கிருஸ்துவ மதத்தின் மீது வைத்த விமரிசனம்.

புதுச்சேரியில் இருக்கிற மாதாக் கோவிலில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இருந்த சுவரை இடிக்கிறார்கள். எதற்கு? அந்த பக்கம் தலித்துகள், இந்தப் பக்கம் மற்ற சாதியினர். அதை இடிப்பது தான் முதலில் பிரச்சனை யாகிறது. அதன்பின் தான், வழக்கு போடப்படுகிறது. நோயல் என்பவர் இதற்காக போராடி, தன்னுடைய வாழ்க்கையை அதனால் இழந்து போனார்.

புதுச்சேரியினுடைய சுயமரியாதை இயக்கத் தலைவர். அவர் பிரான்சு வரைக்கும் சென்று வழக்கு நடத்தியும், சொத்துக்கள் எல்லாம் வீணாகி, இறுதியில் ஒன்றிமில்லாதவராக போனார். அப்படி ஒரு போராட்டம் வந்தது. இங்கேயும் அதே மாதிரி, ஒவ்வொரு இடத்திலேயும் தீர்மானம் போட்டார்கள். 'குடிஅரசு' வாங்கக்கூடாது என்று அனைத்து மாதா கோவிலிலும் தீர்மானம் போட்டார்கள்.

அப்பொழுது தான், அதன் காரணமாகத் தான் பெரியாருடைய 'புரட்சி' பத்திரிக்கை நிறுத்தப்பட்டு விட்டது. அதை பெரியார் பின்னால் எழுதுகிறார். நான் இஸ்லாம் பற்றி பேசினேன். என் குடியரசு பத்திரிக்கையைத் தடை செய்தார்கள்; கிருஸ்துவ மதத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன் என்னுடைய 'புரட்சி' பத்திரிக்கை நிறுத்தப் பட்டு விட்டது. இந்து மதத்தினரிடம் அன்றாடம் நான் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறேன், என்று அவர் எழுதுவார்.

அந்த நாடு, ஏற்றத் தாழ்வு இல்லாத நாடு. ஆனால் நம் நாட்டில் இருக்கிற இந்த குடிமைச் சமூகத்தையோ அதை மாற்றுவதற்கான முயற்சி யிலேயோ, ஆனால் எதிர் புரட்சியாளர்களாக இருக்கிற, மாற்றத்தை விரும்பாதவர்கள் அதை செய்துக் கொண்டிருக்கிறார்கள், கல்வியில் புகுத்துகிறார்கள். ஏற்கனவே காந்தி இறந்து போனார் என்று எழுதுகிறார்கள்.

ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், குஜராத் வரலாற்று பாட புத்தகங்களில், 30.01.1948ல் காந்தி ‘இறந்து’ போனார் என்று எழுதினார்கள். அப்போதே நான் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இன்னும் கொஞ்ச நாட்களில் காந்தி தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்லப் போகிறார்கள் என்று கூறினேன்.

அதுவும் கடந்த ஆண்டே நடந்து விட்டது. காந்தி தற்கொலை செய்திருக் கலாம் என்று எழுதி விட்டார்கள். துப்பாக் கியில் சுட்டது கூடவா தெரியாது, உலகத்தில்? அவ்வளவு துணிச்சல் இருக்கிறது, எதை வேண்டு மானாலும் சொல்லலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் பாட நூல்களில் மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள் ஒரு நூலில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளைச் சொல்லுவார். பாடபுத்தகத்தில், ஆரியர் வருகை என்று எழுதினார்கள். மொகலாயர் படையெடுப்பு என்று எழுதினார்கள். இருவரும் படையெடுத்துத் தான் வந்தார்கள். இந்த இரண்டையும் படையெடுப்பு என்று எழுது, இல்லையென்றால் இரண்டையும் வருகை என்று எழுது. ஆரியர் வந்த போது நாம் வரவேற்பு பத்திரம் படித்தா  அவர்களை வரவேற்றோம்.

அழைப்பு, வரவேற்பு கொடுத்தோமா? நீயும் தான் படையெடுத்து வந்தாய், அவர்களும் தான் படையெடுத்து வந்தார்கள். அந்த ஒரு சொல்லில் இஸ்லாமியருக்கு எதிரான வன்மத்தை மூளையினுள் புகுத்திவிட முடியும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாடப்புத்தகத்தில் கொண்டு வருகிறார்கள்.

ஆனால் நாம், நமக்கான பாடப் புத்தகங்களிலோ, நமக்கான பொதுவெளிகளிலோ சமத்துவ சமுதாயத்திற்கு சாதகமான அல்லது பொதுவுடமைக்கு சாதகமான, இந்த மாதிரி கருத்துக்களை கொண்டு வருவதற்கு நம்முடைய அரசுகளுக்கும் ஆட்சிக்கு வந்தவர்களுக்கும் அக்கறை கொள்வதில்லை.

அதற்காகவே இயக்கம் நடத்துகிற கட்சி நடத்துகிறவர்களும் கூட, அதைப் பற்றி பேசுவதில்லை என்பது தான், இப்பொழுது நாம் விவாதிக்கிற செய்தி. அப்படிப்பட்ட விவாதத்திற்கு வந்திருக்கின்ற MCPI - நிகழ்வில் பேசுவதற்கு பெருமையாகக் கருதுகிறேன். இப்படி ஒரு சிந்தனை மாற்றம் என்பது, எளிதில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

நான் கடந்த கால செயல்பாடுகளை, பெரியாரைப் படித்து பலபேரிடம் காட்டியிருக்கிறேன். காங்கிரசில் 90 அயோக்கியர்களும், 10 முட்டாள்களும் சேர்ந்து தான் காங்கிரஸ் கட்சியாக இருந்தது, அந்த 10இல் நானும் ஒருவன், என்று பெரியார் சொல்லுவார். மடையனாகத்தான் அந்த கட்சியில் நான் இருந்தேன் என்று பெரியார் சொல்லுவார்.

தான் தவறு இழைத்து விட்டோம் என்று சொல்லுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். தோழர் இன்ஷியா பேசுகிறபோது கூறினாரே, பெரியாருடைய சொல்லில் அவர் ஆரம்பிக்கும் போதும், முடிக்கும்போதும், எல்லா உரைகளிலும், நான் சொல்லுவது, நான் ஒரு சுதந்திரச் சிந்தனையாளன், எனக்கு சுதந்திரமானச் சிந்தனை, சுதந்திரமான அனுபவம். சுதந்திரமான நினைப்பு உண்டு. அதனால் நான் பெற்ற கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன்.

என்னைப் போலவே உங்களுக்கும் சுதந்திரமானச் சிந்தனை சுதந்திரமான அனுபவம் சுதந்திரமான நினைப்பு உண்டு, அதைக் கொண்டு ஆய்ந்துப் பாருங்கள். சரியென்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள், தவறு என்று பட்டால் ஒதுக்கி விடுங்கள். இதைத் தான் பெரியார் அனைத்துக் கூட்டங்களிலும் கூறி வந்தார்.

பின்னர், தவறு என்று பட்டால், திருத்து, திருத்திக் கொள்ளுகிறேன் என்று திருத்திக் கொள்ளும் உரிமையை கொடுத்து கருத்துகளை  மக்களிடம் சொன்ன தலைவராக இருந்தார் பெரியார். நீ சொல். தப்பென்றால் நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால், தவறைச் சொல்லாமல் இருக்கக்கூடாது. சொல். நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பேன். ஆனால், நான் சரியென்று பட்டதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். 

‘ஸ்தாபனத்தைப் பற்றி’ என்ற நூலில்கூட  ஸ்டாலின் சொல்லுவார், யார் ஒருவர் இயக்கத்தின் மீதான விமரிசனத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லையோ, அவரே ஸ்தாபனத்தின் துரோகியாவார். நீ தப்பு என்பதை சொல்லாமல் இருந்தாயானால், துரோகி ஸ்தாபனத்திற்கு, நிறுவனத்திற்கு, கட்சிக்கு, இயக்கத்திற்கு நீங்கள் தான் துரோகிகள். அது மாதிரி, பெரியார் சொன்னார். தவறு இருந்தால் சொல்லுங்கள் நான் மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

தவறைச் சுட்டிக் காட்டிய பின்னாலும், திருத்துவதற்கு முன் வராத ஒரு கட்சியிலிருந்து தான், தோழர்களெல்லாம் தங்களை மாற்றிக் கொண்டு, சமூக மாற்றத்தை, ஏனென்றால், இந்தியாவுக்கான பண்பாடுகளை, இந்தியாவுக்கான நிலைமைகளை, அறிந்துக் கொண்டு, அதற்கேற்ப தங்களுடைய செயல் திட்டங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று வந்திருக்கிறார்கள்.

குறிப்பாக MCPI, அவர்கள் பெற்ற மாற்றம், இன்றைய ஒரு புது மாற்றத்திற்கு வழியமைக்கும். இதை நோக்கி பல கம்யூனிஸ்ட்கள், வரவேண்டுமென்று விரும்பு கிறோம்,  வரும் என்று நம்புகிறோம்.

(நிறைவு)

- கொளத்தூர் மணி

Pin It