2001 செப்டம்பர் 11 அன்று அல்கொய்தா ஆட்களால், நியூயார்க் நகரின் உலக வணிக இரட்டைக் கோபுரக் கட்டடம் வானூர்திகளைக் கொண்டு தாக்கித் தகர்க்கப்பட்டது. இத்தாக்குதலில் 3000க்கும் மேற்பட் டோர் இறந்தனர். இவர்கள் பல நாடுகளைச் சேர்ந்த வர்கள். அந்த இடத்தில் அமெரிக்கா நினைவுச் சின்னத் தை எழுப்பி உள்ளது. இத்தாக்குதல் நடந்து பத்தாண் டுகள் நிறைவடைந்த - இவ்வாண்டு செப்டம்பர் 11 அன்று, நினைவுச்சின்னம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. 11.9.2011 அன்று ஒபாமாவும், புஷ்ஷும் தம் மனைவியருடன் நினைவுச்சின்னம் முன்நின்று இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர். உலகில் பயங்கரவாதத்தை ஒழித்திட அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும் என்று சூளுரைத்தனர்.

புஷ் தொடங்கி வைத்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரை’ ஒபாமாவும் தொடர்ந்து நடத்தி வருகிறார். 2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான், 2003 மார்ச்சு ஈராக், 2011 ஆகசுட்டு லிபியா என மூன்று நாடுகள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நேட்டோ படைகள், படையெடுத்தன. அந்நாடுகளில் இருந்த ஆட்சிகளை ஒழித்துக்கட்டின. அதனால் இம்மூன்று நாடுகளும் இரணகளமாகிவிட்டன. புஷ்ஷால் பிடிக்க முடியாத ஒசாமா பின்லேடனை பராக் ஒபாமா கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டார்.

லிபியா, பல நூற்றாண்டுகள் ஒத்தாமன் பேரரசின் கீழ் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இத்தாலியின் காலனி நாடாக இருந்தது. 1951இல் லிபியா விடுதலை பெற்றது. லிபியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செனூசி பழங்குடி இனத்தவரான, இடிரிஸ்-அல்-செனூரி லிபியாவின் மன்னரானார். கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசி தலைநகரானது. மன்னராட்சியில் முல்லாக்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

மும்மர் கடாபி லிபியாவின் மேற்குப் பகுதியில் வாழும் கதத்ஃபா இனக்குழுவைச் சேர்ந்தவர். மாக்ரஹா, வர்ஃபல்லா என்கிற மற்ற இரண்டு பெரிய இனக் குழுக்களுடன் சேர்ந்து, கடாபி 1969 செப்டம்பரில் மன்னராட்சியை வீழ்த்தி லிபியாவின் அதிபரானார். அதுமுதல் 2011 ஆகசுட்டு வரை - 42 ஆண்டுகள் கடாபி லிபியாவின் ஆட்சித் தலைவராக இருந்தார்.

லிபியாவில் பழங்குடி இனக்குழுக்களின் முதன் மையை கடாபி நன்கு அறிந்தவர். அதனால் ஃபெஸ்ஸன், திரிபேலித்தானியா போன்ற பெரிய இனக்குழுக்களை அரவணைத்துக் கொண்டார். லிபியாவில் சனநாயக உரிமைகளை வளர்த்தெடுக்கவோ, சனநாயகக் கட்ட மைப்புகளை உருவாக்கவோ கடாபி முயலவில்லை. மேலும் முறையான இராணுவ அமைப்பையும் வளர்க்கவில்லை. மாறாக இனக்குழுவினரையே சிறந்த படையாகக் கருதினார். மன்னராட்சியில் செல்வாக்கும் அதிகாரமும் பெற்றிருந்த முல்லாக்களை ஓரங்கட்டினார். மசூதிகளின் சொத்துகளை அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார். மேற்குப் பகுதியில் உள்ள திரி போலியைத் தலைநகரமாக்கினார்.

கடாபி ஆட்சிக்கு வந்ததும், எகிப்தில் நாசர் மேற் கொண்டது போன்ற சில மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினார். அதனால் மக்களின் நன்மதிப்பை யும் நம்பிக்கையையும் பெற்றார். இதை அடிப்படை யாகக் கொண்டு, கடாபியே லிபியாவை ஆளுவதற்கு முழு உரிமையும், அதிகாரமும் படைத்தவர்; கடாபியே லிபியா, லிபியாவே கடாபி என்கிற கருத்தை லிபிய மக்களிடம் திட்டமிட்டு வளர்த்தார். உலக அரங்கிலும் அவ்வாறே காட்டிக்கொண்டார்.

1975இல் இராணுவ உயர் அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கடாபி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றனர். இதேபோன்று 1980இல் ஒரு முயற்சி நடந்தது. இவற்றில் நூற்றுக்கணக்கானவர் கொல்லப்பட்டனர். தனக்கு எதிரானவர்கள் என்று அய்யப்படுவோரை எல்லாம் கொல்வது என்ற வழிமுறையைக் கடாபி கையாண்டார். இராணுவத்தை நம்பாமல், தன் இனக்குழுவைச் சேர்ந்த - தனக்கு விசுவாசமான 3000 பேரைக் கொண்ட படையை தன் மெய்க்காப்புக் காக உருவாக்கிக் கொண்டார். இதற்குப் புரட்சிகரப் பாதுகாப்புப்படை என்று பெயர்.

1980களில் கடாபி, ஒரு அமெரிக்க வானூர்தியையும் ஒரு பிரான்சு நாட்டின் வானூர்தியையும் சுட்டு வீழ்த் தினார். இதில் 400க்கும் மேற்பட்டோர் மாண்டனர். நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பது போன்ற கடாபியின் இச்செயலால், அமெரிக்காவும் மேற்கு அய்ரோப்பிய முதலாளிய நாடுகளும் லிபியா மீது பொருளாதார - அரசியல் தடைகளை விதித்தன. எனவே மேலை நாடுகளின் ஊடகங்கள், கடாபி, ஒரு கொடுங்கோலன், கொலைகாரன், உலக அமைதிக்கு எதிரி, மக்கள் பகைவன் என்றெல்லாம் உலகம் முழுவதும் பரப்புரை செய்தன. அதேசமயம், இந்த மேலை ஏகாதிபத்திய நாடுகள், உலக நாடுகள் பலவற்றில், கடாபியைவிட பன்மடங்கு அழிம்புகளையும் கொடுமை களையும் மக்களுக்கு இழைத்துக் கொண்டிருந்தன. 2002ஆம் ஆண்டுவரை லிபியா மீதான தடைகள் நீடித்தன.

1979 முதல் 1989 வரையில் ஆப்கானிஸ்தானில் சோவியத் நாட்டின் ஆதரவு பெற்ற ஆட்சி இருந்தது. சோவியத் படைகள் ஆப்கனில் இருந்தன. சோவியத் படைகளை வெளியேற்ற வேண்டும் என்று இசுலாமி யத் தீவிரவாதக் குழுக்கள் போராடின. பல இசுலாமிய நாடுகளிலிருந்தும் இளைஞர்கள் ‘இப்புனிதப் போரில்’ ஈடுபட்டனர். ஒரு இலட்சம் இசுலாமிய இளைஞர்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களும், பயிற்சியும் அளித்தது. இதற்காகப் பெருந்தொகையைச் செலவிட்டது. 1989 இல் சோவியத் படைகள் வெளியேறிய பிறகு, ஆப்கனில் போரிட்ட இசுலாமிய இளைஞர்கள் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர்.

அவ்வாறு லிபியாவுக்குத் திரும்பிய இளைஞர்கள் அப்துல் - அகீம் - பெல்ஹஜ் என்பவர் தiமையில் ஒன்றுதிரண்டனர். பெல்ஹஜ், லிபியாவில் 1966இல் பிறந்தவர். 1988இல் பொறியியல் பட்டம் பெற்றார். உடனே ஆப்கான் சென்று போரில் ஈடுபட்டார். பெல்ஹஜ் 1990இல் ‘லிபிய இசுலாமிய போர்க்குழு’ என்ற அமைப்பை உருவாக்கினார். கடாபியின் அரசு, இசுலாமிய மதகுருக்களை மதிப்பதில்லை; மசூதிகளின் சொத்துகளை அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக் கிறது; இசுலாமியச் சட்டங்களை முறையாகப் பின் பற்றுவதில்லை என்கிற காரணங்களுக்காக, இசுலாமியப் போர்க்குழு, 1993 மற்றும் 1995களில் கடாபி ஆட்சியை எதிர்த்துப் போராடியது. இவர்களைக் கடாபி கடுமையாக ஒடுக்கினார். அதன்பின், இவர்களில் பெரும்பாலோர் பிற நாடுகளுக்குத் தப்பி ஓடினர்.

ஆனால், இதே அப்துல் - அகீம் - பெல்ஹஜ் தலை மையிலான படைதான் 21.8.2011 அன்று தலைநகர் திரிபோலிக்குள் நுழைந்து அந்நகரைக் கைப்பற்றியது. இத்தலைகீழ் மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

2001 செப்டம்பர் 11 அன்று இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின், அல்கொய்தா அமைப்போடு தொடர்பு டைய இசுலாமியத் தீவிரவாதிகளை அமெரிக்கா வேட்டையாடத் தொடங்கியது. அவ்வாறு தேடப்பட்ட வர்களில் பெல்ஹஜ்ஜும் ஒருவர். இவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு, பாங்காங் சிறையில் கொடுமை யாகத் துன்புறுத்தப்பட்டார். அதன்பின் லிபியாவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இசுலாமிய தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா கடாபியின் ஆதரவை நாடியது. லிபியா மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கவும் முன் வந்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களை லிபியாவில் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் பட்டது. கடாபி இதை ஏற்றுக்கொண்டார். அமெரிக்கா வின் உளவுத்துறையான சி.அய்.ஏ.வும் கடாபி அரசும் இசுலாமிய தீவிரவாதிகளை ஒடுக்குவதில் ஒன்றி ணைந்து செயல்பட்டனர்.

இங்கிலாந்தில் கல்வி பயின்ற கடாபியின் மகன் சயிப்-அல்-இஸ்லாம், லிபியாவைப் படிப்படியாகச் சனநாயக நாடாக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும் கடாபியின் குடும்ப ஆட்சி மீது உலக அரங்கில் உள்ள வெறுப்பைக் குறைக்க எண்ணினார். எனவே தன் தந்தை கடாபியிடம் கூறி, அப்துல்-அகீம்-பெல் ஹஜ் உள்ளிட்ட 211 இசுலாமிய தீவிரவாதிகளை 2010 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்தார். இவர்களில் பெரும்பாலோர் ஆப்கனிலும் ஈராக்கிலும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிட்டவர்கள். கடாபி அரசுக்கு விசுவாசமாக இருப்போம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு, இவர்கள் விடுதலையாயினர். ஆனால் 2011இல் கடாபி ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி யில் இவர்கள்தான் முன்னிலை வகித்தனர். இவர் களின் நோக்கம் லிபியா ஷரியத் சட்டப்படி ஆளப்பட வேண்டும் என்பதேயாகும்.

லிபியா எண்ணெய் ஏற்றுமதி மூலம் நல்ல வருவாய் பெற்றபோதிலும் பெரும்பான்மையான மக்கள் வறுமையிலும், அடிப்படையான வாழ்க்கை வசதிகள் இல்லாமலும் வாழ்கின்றனர். குறிப்பாக கிழக்கு லிபியாப் பகுதி புறக்கணிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழாத வாறு ஒடுக்கப்பட்டனர். எனவே இம்மக்களிடம் கடாபி ஆட்சிக்கு எதிரான வெறுப்பும் சினமும் கனன்று கொண்டிருந்தன.

இந்நிலையில், 2011 பிப்பிரவரி 15 அன்று பெங் காசியில் 39 அகவையினரான, மனித உரிமைப் போராளியும், வழக்கறிஞருமான பாத்தி டெர்பில் என்பவரைக் கடாபி ஆட்சி கைது செய்தது. அதுசமயம், துனிசியாவிலும், எகிப்திலும் பல ஆண்டுகளாக ஆட்சி யிலிருந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக இளைஞர்க ளும், மக்களும் வீதியில் இறங்கி போராடிக் கொண்டி ருந்தனர். எனவே பிப்பிரவரி 17 அன்று, பெங்காசி யில், பாத்தி டெர்பில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். உடனே இது ஆயுதப் போராட்டமாக வெடித்தது. லிபிய இசுலாமிய போர்க் குழு அமைப்பினர் இதை முன்னின்று நடத்தினர். பெங்காசி நகரம் புரட்சிப் படையினரின் கட்டுப்பாட்டுக் குள் வந்தது. அடுத்து லிபியாவின் மூன்றாவது பெரிய நகரமான மிஸ்ராட்டாவையும் புரட்சிப் படையினர் கைப்பற்றினர்.

புரட்சிப்படை லிபியாவில் கடாபிக்கு எதிராக, தேசிய இடைப்பட்ட அரசை (National Transitional Council) அமைத்திருப்பதாக அறிவித்தது. உடனே இந்த அரசை அமெரிக்காவும், மேற்கு அய்ரோப்பிய நாடுகளும், இந்த ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாக உள்ள நாடுகளும் சேர்த்து மொத்தம் 40 நாடுகள் தேசிய இடைப்பட்ட அரசுக்கு ஏற்பிசைவு தெரிவித்தன. கடாபி அரசு, புரட்சிப் படைக்கு எதிராகக் கடுமையான தாக்கு தல்களைத் தொடுத்தது. அதனால் புரட்சிப்படை மேற் கொண்டு முன்னேற முடியாமல் தவித்தது.

இப்போரில் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். ஆனால் ஏகாதிபத்திய நாடுகளும் அவற்றின் ஊடகங் களும், கடாபி தன் சொந்த நாட்டு மக்களையே கொல்வது மாபெரும் கொடுமை என்று ஓலமிட்டன. ஏகாதிபத்திய நாடுகளின் தொண்டரடிப்பொடி ஆழ் வாராக உள்ள அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவை 27.2.2011 அன்று கூட்டப்பட்டது. லிபியா வின் கடாபி ஆட்சிக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட எப் பொருளையும் விற்கக் கூடாது என்று தீர்மானம் இயற்றப்பட்டது. அதிபர் கடாபி அவருடைய 7 மகன்கள், மகள் ஆயிஷா மற்றும் இராணுவத் தளபதிகள் உட்பட 17 பேரின் சொத்துகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தன் சொந்த நாட்டு மக்களையே கொல்லும் கடாபி அரசை பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், 2009 சனவரி முதல் மே 19க்குள்ளாக இலங்கையில், தங்கள் தாயக உரிமைக்காகப் போராடிய ஈழத்தமிழர்கள் மீது கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்களைக் கொன்ற - 2006 முதல் 2009 மே வரையில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்ற இராசபக்சேவை, பன்னாட்டு போர்க் குற்ற நீதிமன்றத்தின் முன் நிறுத்திட, அய்.நா. பாதுகாப்புக் குழு ஏன் தீர்மானம் இயற்றவில்லை? அய்.நா. ஆய்வுக்குழு இராசபக்சே படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஓர் அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டு, மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டது. இராசபக்சே அந்த அறிக்கையைக் குப்பைக் கூடையில் வீசியெறிந்தார்.

உண்மையில், பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன் றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டியவர்கள், அமெரிக்காவும், அதன் ஏகாதிபத்திய கூட்டாளி நாடுக ளான பிரிட்டன், பிரான்சு, இத்தாலி முதலான நாடுக ளேயாகும். உலக பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முழக்கத்துடன், அமெரிக்காவின் தலைமை யிலான கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் படையெடுத்து அந்நாடுகளைக் கைப் பற்றின. ஆப்கானில் ஒரு இலட்சம் அமெரிக்கப் படை கள் நிலைகொண்டுள்ளன. ஈராக்கிலிருந்து 2011 திசம்பருக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் திரும்பப் பெறப்படும் என்று ஒபாமா அறிவித்திருக்கிறார். ஆனால் இது நடக்காது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறு கின்றனர்.

ஆப்கான், ஈராக் போர்களில் 10 இலட்சம் பொது மக்கள் கொல்லப்பட்டனர். ஈராக்கில் 20 இலட்சம் பேர் தம் வாழிடங்களிலிருந்து வெளியேறி அகதிகளாக வாழ் கின்றனர். ஆப்கானில் 2 இலட்சம் பேர் அகதிகளாக்கப் பட்டனர். 7,500 அமெரிக்கப் படையினர் மாண்டுள்ளனர். இதுவரை இவ்விரு நாடுகளின் மீதான போர்களுக்காக மட்டும் அமெரிக்கா 5 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடி) செலவிட்டுள்ளது. ஆப்கானில் மட்டும் அமெரிக்க இராணுவத்திற்கான போர்ச் செலவு ஒரு மாதத்திற்கு 800 கோடி டாலர்.

உலகச் சந்தையில், டாலருக்கு உள்ள நாணய மாற்று மதிப்பின் தகுதியைப் பயன்படுத்தி, அமெரிக்கா கடன் வாங்கியே இப்போர்களை நடத்திக் கொண்டி ருக்கிறது. இதனாலும் அமெரிக்காவின் பெருமுதலாளி யக் குழுமங்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளை அளித்ததாலும், தற்போது அமெரிக்காவின் கடன் 14.5 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. 15 கோடி மக்களைக் கொண்ட வங்கதேசம் ஓராண்டில் பயன்படுத்தும் எண் ணையைவிட, அதிகமாக ஆப்கான் போரில் அமெரிக்கா பயன்படுத்துகிறது. ஈராக் மீதான போருக்கு முன் - 2002இல் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 25 டாலராக இருந்தது. 2008இல் இது 140 டாலராக உயர்ந்தது. இதனால் அமெரிக்காவில் மட்டுமின்றி, எல்லா நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் உழைக்கும் மக்களின் வாழ்நிலை மேலும் சீர்குலைந்தது. அமெரிக்காவில் 6 பேரில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றார். எனவே, மனித குலத்திற்கே மாபெரும் அச்சுறுத்தலாக விளங்கும் அமெரிக்காவையும் அதன் கூட்டாளி நாடுகளையும் பன்னாட்டுப் போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

லிபியாவில் புரட்சிப் படைகள், கடாபி அரசுப் படைகளின் வான்தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பின்வாங்கும் நிலை ஏற்பட்டது. எனவே பிரிட்டனும் பிரான்சும் வலியுறுத்தியதன் பேரில், அமெரிக்கா நேட்டோ படைகளை லிபியாவுக்கு அனுப்ப இசைந்தது. 2011 மார்ச்சு மாதம் நேட்டோ படைகள் லிபியாவுக்குச் சென்றன. கடாபியின் வானூர்தி தளங்களையும், படைத்தளங்களையும் குண்டுவீசித்தாக்கின. டுரோன் எனப்படும் விமான ஓட்டுநர் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. ஒபாமா குடியரசுத் தலைவரான பிறகு ஆளில்லா வானூர்திகள் மூலம் குண்டு வீசுவது அதிகமாகி வருகிறது. பாக்கிஸ்தான் பகுதியில் ஒளிந்திருக்கும் பின்லேடனின் அல்கொய்தாவினரைக் கொல்வது என்ற பெயரால், 2009இல் 53 தடவையும் 2010இல் 117 தடவையும், 2011 ஆகசுட்டு வரை 49 தடவையும் அமெரிக்காவின் ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளி உலகிற்குத் தெரியாமல், பல ஆயிரம் பாக்கிஸ்தானிய குடிமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது சிரியா, சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்திட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

கடாபிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியதும், கடாபியுடன் அரசியலிலும், இராணுவத்திலும், உயர் அதிகாரப் பதவிகளில் இருந்த பலர் புரட்சிப் படையின் பக்கம் சேர்ந்து கொண்டதுடன், அதை முன்னின்று நடத்தினர். மே மாதம் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் கடாபியின் மகன் சயீப்-அல்-அராஃப்பும், இரண்டு பேரக் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

22.8.2011 அன்று புரட்சிப்படை தலைநகர் திரி போலிக்குள் நுழைந்து அதைக் கைப்பற்றியது. கடாபியின் மூத்தமகன் சயீப்-அல்-இஸ்லாம் கைது செய்யப்பட்டார். கடாபியின் மனைவியும் குழந்தைகளும் அல்ஜிரியாவில் அடைக்கலம் புகுந்தனர். கடாபி தலைமறைவானார். அவர் லிபியாவில் இருக்கிறாரா? அல்லது வேறு நாட்டில் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

ஆப்கனில் அமெரிக்காவின் முழு ஆதரவு பெற்ற ஆட்சி காபூலில் நிறுவப்பட்டுள்ள போதிலும், கிராமப் பகுதிகளும், மலைப்பகுதிகளும் இன்னும் தலீபன்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. உள்நாட்டுப் போர் நடந்து கொண்டேயிருக்கிறது. அதேபோன்று ஈராக்கில் ஷியா-சன்னி-அமெரிக்கப் படைகள் என்கிற மும்முனைத் தாக்குதல்கள் பல ஆண்டுகள் நடந்தன. பெரும்பான்மையினராகவுள்ள ஷியா பிரிவினரின் கை ஓங்கியுள்ள போதிலும், மோதல்களும், தற்கொலைப்படைத் தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

அதைப்போலவே கடாபியின் வீழ்ச்சிக்குப்பின், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கடும் போட்டி நடக்கப் போகிறது. பெல்ஹஜ் தலைமையிலான லிபிய இசுலாமியப் போர்க்குழுவுக்கும், கடாபி ஆட்சியிலிருந்து வெளியேறிய படைத் தளபதிகள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவுக்கும் இடையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சி அதிகாரத்தை இழந்த கடாபியின் இனக்குழுவினரும் மற்ற இனக்குழுக்களும் என்ன செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒபாமா, “லிபியா சர்வாதிகாரியின் பிடியிலிருந்து விடு பட்டுவிட்டது. லிபியாவின் எதிர்காலம் இனி அந்நாட்டின் மக்கள் கைகளில் இருக்கிறது” என்று அறிவித்திருக்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பின், ஆப்கனிலும், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கிலும், அமெரிக்கா கூறிவரும் சனநாயகத்தின் சட்ட ஆட்சி அமையவில்லை. அமெரிக்கப் படைகள் அந்நாடுகளில் நிலைகொண்டுள்ளன. மோதல்களும், உயிரிழப்புகளும் தொடர்கின்றன. எனவே லிபியாவில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மக்கள் குருதி சிந்தவும், மடியவும் கொடுமைகளுக்கு ஆளாகவும் நேரிடுமோ?

முன்பு பாலஸ்தீனத்தை ஒடுக்க இசுரேலுக்கு ஆயுதங்களும், பணமும், வாரிவாரி வழங்கியதும், அண்மையில் ஆப்கான், ஈராக், லிபியா நாடுகள் மீது படையெடுத்ததும், உலக நாட்டாண்மையான அமெரிக்காவும், அதன் ஏகாதிபத்தியக் கூட்டாளி நாடுகளும் அரபு நாடுகளில் கொழித்திருக்கும் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்கேயாகும். இதற்காக அரபு நாடுகள் பலவற்றில் அமெரிக்கா தன் படைகளை நிறுத்தியுள்ளது.

நிலவியல் சார்ந்த அரசியல் இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்டுவதன் வாயிலாக, உலக நாடுகளின் இயற்கை வளங்களையும் மக்கள் உழைப்பையும் சுரண்டிக் கொழுப்பதே இந்த ஏகாதிபத்திய நாடுகளின் குறிக்கோளாகும். எனவே இந்த ஏகாதிபத்தியங்களை எதிர்த்து வீழ்த்துவதன் மூலமே, உலகில் தேசிய இன மக்கள், அரசியல், பொருளியல், சமூக-பண்பாட்டு விடுதலையை அடைய முடியும்.

Pin It