பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோரை 20 ஆண்டுகளுக்குப் பிறகும் சிறையில் வைத்திருப்பது நீதியா?

இந்தியாவில் குப்தர்கள் ஆட்சிக் காலம் முதற் கொண்டும் தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் ஆட்சி முதற்கொண்டும் மனுநீதிதான் உரிமையியல் சட்டமாகவும் குற்ற இயல் சட்டமாகவும் குற்றத் தண்டனைச் சட்டமாகவும் இருந்தது. சாதியை மீறினாலும் மேல்சாதிக்காரர்களைக் கீழ்ச்சாதிக்காரன் தாக்கினாலும் ஒருவனைக் கொலை செய்தாலும் குற்றம் செய்தவன் எந்த வருணத்தைச் சேர்ந்தவன் என்பதைப் பார்த்து குற்றத் தண்டனைகள் வழங்கப்பட்டன.

பார்ப்பானைச் சூத்திரன் அடித்துவிட்டால் அவன் கையை வெட்டிவிடுவதுதான் தண்டனை. பார்ப்பான் மற்ற வருணத்தானைக் கொலை செய்தால் பார்ப்பான் தலையை மொட்டை அடித்து ஊரிலிருந்து வெளியே அனுப்புவதுதான் பார்ப்பானுக்குத் தண்டனை. இந்தக் கொடுமையை 1830க்குப் பிறகு மாற்றியவன் வெள்ளைக்காரன்தான்.

இசுலாமியர் ஆட்சிக் காலத்தில் கொலை செய்தவனுக்குக் கொலை, திருடியவனுக்கு உறுப்புகள் வெட்டப்படுதல் இவைதான் தண்டனை. அப்படிக் குற்றம் செய்தவனைத் தரையில் மல்லாக்கப் படுக்க வைத்து நீளமான ஆணிகளை உள்ளங்கையில் அடித்துத் தரையோடு இறுக்கி விடுவார்கள். பிறகு ஒவ்வொரு கையாகக் கொஞ்சம் கொஞ்சமாக வாளால் அறுப்பார்கள். அவன் கத்தாமல் இருப்பதற்காக வாயில் துணியைத் திணிப்பார்கள். இந்த வன்கொடுமைத் தண்டனை முறையை நேரில் பார்த்த வெள்ளைக்காரன் ஒரு கையை வெட்டும் தண்டனைக்கு 7 ஆண்டுகள், இரண்டு கைகளை வெட்டும் தண்டனைக்கு 14 ஆண்டுகள் என்று சட்டம் செய்து உறுப்புகளை வெட்டும் தண்டனை முறையை நிறுத்தினான்.

உரிமையியல் சட்டங்களையும் குற்ற இயல் சட்டங்களையும் குற்றத் தண்டனைச் சட்டத்தையும் முறைப்படுத்த வேண்டி 1860இல் தான் வெள்ளையன் உரிமையியல் சட்டம், குற்ற இயல் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் என்பனவற்றை இயற்றினான். அந்தச் சட்டங்கள்தான் இன்றும் நடைமுறையில் உள்ளன. இவைபற்றி 1974இலேயே நான் விரிவாக எழுதியுள்ளேன். அவை 1980இல் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளையன் வெளியேறி 64 ஆண்டுகள் ஆன பிறகும் வெள்ளையன் செய்த சட்டங்களை இந்தியன் என்கின்ற பொறுப்பற்றவன் மாற்றவே இல்லை. அதனால்தான், சிறை வைப்பது என்பது குற்றவாளிகளைச் சீர்திருத்துவது என்பதற்கு மாறாகக் குற்றவாளிகளைப் பழி தீர்ப்பது, கொலைக்குக் கொலையே தண்டனை என்பது இங்கே கொண்டாடப்படுகிறது. தனிப்பட்ட பகைமை, உரிமை இயல் தகராறு, படுகொலைகள் என்பவைதான் குற்றத்தின் பிறப்பிடங்கள். இது 13.4.1919இல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையில்தான் துலாம்பரமாக இந்தியர்களுக்கு தெரிந்தது.

பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ டயர் என்பவரின் ஆணைப்படி, ஜெனரல் டயர் என்கிற வெள்ளை அதிகாரி, ரவுலட் சட்டத்தை எதிர்க்க ஜாலியன் வாலாபாக்கில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்களை நோக்கிச் சுட்டான். அதனால் செத்துப் போனவர்கள் 379 பேர் என்று பொய்க்கணக்குக் கொடுத்தான். ஜாலியன் வாலாபாக்கில் அன்று இரவு கை விளக்கோடு நுழைந்த உத்தம்சிங் என்கிற இளைஞன் நூற்றுக்கணக்கான இந்தியர்களைப் பறவைகளைச் சுட்டுக் கொல்வதுபோல் சுட்டுக் கொன்றவனைப் பழி வாங்குவேன் என்று உறுதிகொண்டான். அவன் அதற்காக இந்தியாவை விட்டு வெளியேறினான். எங்கெல்லாமோ சுற்றிவிட்டு 1923இல் இங்கிலாந்தை அடைந்தான்; படாத துன்பப்பட்டான்.

இந்தியர்களைச் சுட்ட இரண்டு வெள்ளையர்களைக் கொன்றுவிட உத்தம்சிங் நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். இடையில் ஜெனரல் டயர் பக்கவாத நோயால் செத்துப் போனான். மிஞ்சியிருந்த மைக்கேல் ஓ டயரை 13.3.1940இல் ஒரு மேடையில் இருந்து இறங்கும்போது உத்தம்சிங் சுட்டுக் கொன்று பழி தீர்த்தான். பின், தண்டனைக்குட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட அவன் உடல் அங்கேயே எரிக்கப்பட்டது. அவனுடைய சாம்பலை இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி 1971இல் இந்தியாவுக்குச் கொண்டு வந்து மரியாதை செலுத்தினார். இப்படி மரியாதை செலுத்தியதில் கியானி ஜெயில் சிங் அவர்களுக்கும் பங்குண்டு.

அடுத்து வெள்ளையனை எதிர்த்துப் போராடிய பகத்சிங், சுகதேவ், பாலகுரு என்கிற இளைஞர்களை வெள்ளையன் 1931இல் தூக்கிலிட்டுக் கொன்றான். அதனால் வெள்ளையனைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறிற்றா? விடுதலை வேட்கை வளர வளர எதிரியைப் பழிவாங்கும் எண்ணம் வளரும்; அது வளர்ந்தது. அதனால்தான் வெள்ளையன் வெளியேறினான்.

இந்திய மண்ணில் 30 கோடி இந்தியர்களாலும் மதிக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகளை, அவர் இசுலாமியர்களுக்கு ஆதரவாகப் பேசினார் என்கிற ஒரே காரணத்துக்காக ஆர்.எஸ்.எஸ்.சைச் சேர்ந்த இந்து மத வெறி பிடித்த நாதுராம் கோட்சே நூற்றுக்கணக்கான மக்கள் முன்னால் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்து சுட்டுக் கொன்றான்.

அந்தச் சேதி கிடைத்த நேரத்தில் பெரியார் ஈ.வெ. இராமசாமி சேலம் பகுதியில் இருந்தார். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பெரியார் எவரிடமும் பேசாமல் விசுக் விசுக் என்று நடந்தார். ஒரு மணி நேரம் கழித்து, தன்னுடன் இருந்த சேலம் அ. சித்தய்யனிடம், “ஏம்பா, காந்திக்கே இந்த கதி என்றால் நாளைக்கு நம்ம கதி என்ன?” என்று வினவினார் என்பதை அந்தப் பெருமகன் நம்மிடம் சொன்னார்.

மதவெறி, இனவெறி காரணமாக, சாதிவெறி காரணமாக ஒருவனைக் கொல்வதைப் பெரியார் விரும்பவில்லை என இதன்மூலம் நாம் அறிய முடிகிறது. பார்ப்பன ஆதிக்கத்தையும் பார்ப்பன வருணாசிரமப் பண்பாட்டையும் மட்டுமே அவர் வெறுத்தார். பார்ப்பானைக் கொல்லுங்கள் என்று ஒருபோதும் அவர் கூறியதில்லை. அப்படிக் கூறியிருந்தால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பார்ப்பனர்களைக் கொன்று இருப்பார்கள். பார்ப்பனக் கொட்டம் தலைக்கு மீறிப் போன நிலையில், அவருடைய தொண்டர்களைப் பார்த்து, ‘தற்காப்புக்குக் கத்தி வைத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் வீட்டை அடையாளம் பார்த்துக் கொள்ளுங்கள். நான் கட்டளை இட்டால் மட்டுமே பார்ப்பானைத் தாக்குங்கள்’ என்று 1952-க்குப் பிறகு பார்ப்பனர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் விடுத்தார். அவ்வளவே.

காந்தியார் கொல்லப்படுவார் என்று பல காங்கிரசுகாரர்களுக்குத் தெரியும். அதனால்தான் காந்தியாரின் வழக்குத் தொடர்பான கோப்புகளைத் தன்னிடம் வைத்திருந்த ஓர் அதிகாரி, ஓடும் தொடர் வண்டியிலிருந்து அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு காந்தியின் எதிரிகளைக் காப்பாற்றினான். எந்தக் காரணத்துக்காக உத்தமர் காந்தியைக் கோட்சே கொன்றானோ, அதே காரணத்துக்காகத்தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பின்னாளில் பாபர் மசூதியை இடித்தார்கள். அதன் விளைவாகப் பம்பாயிலும் சூரத்திலும் அகமதாபாத்திலும் எண்ணற்ற இசுலாமியர்களும் சில இந்துக்களும் கொலையுண்டார்கள். பம்பாய்க் கொலையைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கிருஷ்ணா ஆய்வுக் குழுவின் அறிக்கை, குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டது. பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு இன்னமும் தண்டனை வழங்கப்படவில்லை.

காந்தியாரைக் கொன்றவனுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியதால் 1984 அக்டோபர் 31 அன்று இந்திராகாந்தி கொல்லப்படுவது நிற்கவில்லை.

இந்திராகாந்தி விரைவில் கொல்லப்படுவார் என்று எனக்கு முதன்முதல் சொன்னவர் பாம்செப் அமைப்பின் நிறுவனர் என் தோழர் கன்சிராம் ஆவார். அவர் 17.10.1984இல் சென்னையில் நடைபெற்ற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவரைத் தில்லிக்கு வழியனுப்புவதற்காக மீனம்பாக்கத்துக்கு அழைத்துச் சென்ற என்னிடம், இந்திராகாந்தி விரைவில் கொல்லப்படுவார் என்பதை மறைமுகமாகத் தெரிவித்தார். ஏன் என்று கேட்டேன். “அவர் செய்த அமிர்தசரஸ் பொற்கோயில் அக்கிரமத்துக்காகக் கொல்லப்படுவோம் என்று அவரே நினைத்தார். 15.8.1984இல் செங்கோட்டையில் கொடி ஏற்றப் போகவே அவர் அச்சப்பட்டார். இந்திராகாந்தி போன்ற 3 பெண்களை ஆயத்தப்படுத்தி 3 தனித்தனிக் கார்களில் செங்கோட்டைக்கு அனுப்பி வைத்தார். தான் வேறொரு காரில் சென்றார். அதனால் அவர் தப்பித்தார். அந்தப் பயத்தின் காரணமாக அவருடைய வீட்டைச் சுற்றி இரவு பகலாக ஆயுதந்தாங்கிய காவலர் காவல் நிற்கின்றனர்” என்று கன்சிராம் சொன்னார்.

இந்திரா காந்தி வழக்கமாக வெளியே வரும்போது எஃகு உள்சட்டை அணிந்து இருப்பார். அன்றைக்கு அப்படி அணியவில்லை. ஏன் அணியவில்லை என்னும் புதிர் இன்னமும் விடுபடவில்லை. தொலைக்காட்சிப் பேட்டிக்காக வெளியே வந்தார். அவருடைய மெய்க் காவலர்களே அவரைச் சுட்டுக்கொன்றார்கள். அப்படிச் சுட்டவர்களைத் தூக்கிலிட்டார்கள். அப்படிச் சுட்டவர்களைப் பஞ்சாபியர்கள் வீரச்சக்கர விருது கொடுத்துப் பாராட்டுகிறார்கள். கொலைக்குக் கொலை என்பதால் அடுத்துக் கொலை செய்யப்படுவது நின்று போயிற்றா?

அவர்களைச் சிறைப்படுத்தி அவர்கள் திருந்திய பிறகு, விடுதலைச் செய்யப்பட்டிருந்தால் கொலைகாரர்களுக்கு விருது வழங்கும் எண்ணம் பஞ்சாபியர்களுக்கு வந்திருக்காது. ஒரு இந்திராகாந்தியைச் சீக்கியன் கொன்றான் என்பதற்காக அன்றைய பிரதமர் இராஜீவ்காந்தி, புதுதில்லியிலும் சுற்றுப்புறங்களிலும் 3 ஆயிரம் சீக்கியர்களைப் பட்டப் பகலில் பதைக்கப் பதைக்கக் கொல்லப்படச் செய்தார். அதனால், கணவர்களையும் மனைவிகளையும் மகன்களையும் மகள்களையும் பேரன்களையும் பேத்திகளையும் இழந்த சீக்கியர்களுக்கு இன்றளவும் நீதி வழங்கப்படவில்லை.

இதைவிடக் கொடுமையான கொலையைத்தான் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை என்கிற கொலைகாரப் படையை அனுப்பி நாளொன்றுக்கு ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி செலவு செய்து இரண்டு ஆண்டுகள் இலங்கைத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் இராஜீவ் காந்தி கொன்றொழித்தார். பல ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ்ப் பெண்களின் வாழ்வைச் சீரழித்தார். அப்படிச் சீரழிக்கப்பட்ட ஒரு வீராங்கனைதான் தாணு. அவர் சென்னையில் தங்கியிருந்ததோ, திருப்பெரும்புதூர் மக்களவை வேட்பாளரான மரகதம் சந்திரசேகர் மகளின் வீட்டில் தான். அது எப்படி நடந்தது என்பது இன்றுவரை புலப்படவில்லை. அன்றைய தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவரான வாழப்பாடி கூ. இராமமூர்த்தி, முறையாக இராஜீவ் காந்தியை தேர்தல் பரப்புரைக்கு அழைக்கவில்லை. அவர் அழைக்காமல், இராஜீவ் காந்தி ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார் என்பதும் புதிராக இருக்கிறது. தேர்தல் பரப்புரைக்குச் சென்ற அவர் மகிழுந்தில் தன்னுடன், காங்கிரஸ் தலைவர்களை அழைத்துச் செல்லாமல், யாரோ இரண்டு பெண் செய்தியாளர்களை அழைத்துச் சென்றது ஏன் என்பது புதிராக இருக்கிறது.

என்ன புதிரது? அன்றைய முன்னாள் அமைச்சரான பி.வி. நரசிம்மராவின் மதகுரு சந்திராசாமியும், அமெரிக்க சி.ஐ.ஏ.வின் கையாளாக விளங்கும் சோழவந்தான் சுப்பிரமணிய சுவாமியும், அமெரிக்க சி.ஐ.ஏ.வின் கையாளாக இருந்து இராஜீவ்காந்தியைக் கொல்லுவ தற்குச் சிவராசனையும் தாணுவையும் ஏற்பாடு செய்தார்கள் என்று ஊரே அப்போது முழங்கிற்று. இந்தப் புதிர் இன்றுவரை விடுபடவில்லை.

இவ்வளவும் தெளிவாகத் தெரிந்தும் சோலையார்ப் பேட்டையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞன் பேரறிவாளனையும் இலங்கைக் குடிமகனான முருகனையும் அவன் மனைவி நளினியையும் யாரோ ஒரு சாந்தன் என்பதற்குப் பதிலாக, சின்ன சாந்தனையும் இராஜீவ் கொலையாளிகள் என முடிவு செய்து அவர்களுக்குத் தூக்குத்ண்டனை வாங்கிக் கொடுத்து, அதை நிறைவேற்றி, அவர்களைத் தூக்கில் தொங்கப் போட்டால் அதனால் இனிமேல் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அரசியல் கொலைகள் நடைபெறாமல் போய்விடுமா?

தங்கள் தலைவரைக் கொன்றதற்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ்ப் போத்துகளைத் தூக்கில் போட்டே தீரவேண்டும் என்று உண்ணாநோன்பிருந்து, உரக்கக் கூவும் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர்களும், தொண்டர்களும், இதில் என்ன நீதியைக் காண்கிறார்கள்.

கொலை நடந்த பிறகு, 20 ஆண்டுகள் சிறையில் இருக்கும் பேரறிவாளனும் முருகனும் சின்னசாந்தனும் நளினியும் மனம் மாறி இருக்கிறார்களா? திருந்தியிருக்கிறார்களா? என்பதை அவர்களின் நடவடிக்கைகளின் மூலம் அறிந்து, தூக்குத் தண்டனையை விலக்கிச் சிறையில் இருந்துவிட்ட 20 ஆண்டுகளையும் வாழ்நாள் தண்டனையாகக் கருதி உடனே விடுதலை செய்திட எந்தச் சட்டம் தடையாக இருக்கிறது?

இராஜீவ் காந்தி திருப்பெரும்புதூரில் கொலையுண்ட சமயத்தில், தமிழ்நாட்டில், ஆளுநர் ஆட்சி இருந்தது. எப்போதும், எதிரும் புதிருமாக இருக்கிற தி.மு.க., அ.தி.மு.க. என்கிற எந்தக் கட்சியும், அப்போது ஆட்சியில் இல்லை. இந்த இரு கட்சியினரும், அவரவர், நேற்று வரை பதவி வகித்த போது, இந்த வழக்கில் நேர்மையான - சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இது ஊரறிந்த உண்மையாகும். தமிழ்நாட்டு முதலமைச்சர் என்கிற பொறுப்பை ஏற்றிருந்த தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினர் அன்று மனம் வைத்திருந்தால், அவர்களே தமிழ்நாட்டு அமைச்சரவையில், முடிவெடுத்து, ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்து, தமிழ்நாட்டு ஆளுநரே அவர்களை விடுதலை செய்திருக்க வழி கண்டிருக்க முடியும்.

இதுபற்றி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 161 என்ன கூறுகிறது :

“ஒரு மாநில ஆளுநர், மாநிலத்தின் ஆட்சித் துறை அதிகாரம் அளாவி நிற்கும் ஒரு பொருட்பாடு தொடர்பான சட்டம் எதற்கும் எதிரான ஏதேனும் குற்றச் செயலுக்காகக் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட எவரொருவரின் தண்டனைக்கான குற்ற மன்னிப்புகள், நிறுத்தி வைப்புகள், நிறைவேற்றுக் காலத் தாழ்வுகள் அல்லது குறைப்புகள் அளிக்கவோ அல்லது தீர்ப்புத் தண்டனையை இடைநிறுத்தி வைக்க, குறைக்க அல்லது மாற்றிக் குறைக்கவோ அதிகாரம் உடையவர் ஆவார்.”

மேலே கண்ட விதியில், தண்டனைக்கான குற்ற மன்னிப்புகள், நிறுத்தி வைப்புகள், நிறைவேற்றுக் காலத் தாழ்வுகள் அல்லது குறைப்புகள் அளிக்கவோ அல்லது தீர்ப்புத் தண்டனையை இடைநிறுத்தி வைக்கவோ, தண்டனையைக் குறைக்கவோ அல்லது தண்டனையை மாற்றிக் குறைக்கவோ ஆளுநர் அதிகாரம் உடையவர் ஆவார் என்றிருக்கிறது. தண்டனையை மாற்றிக் குறைத்தல் என்கிற அதிகாரம் இன்றைய ஆளுநருக்கு இருப்பதை வைத்து பேரறி வாளன், சின்னசாந்தன், முருகன், நளினி ஆகியோரின், தூக்குத் தண்டனையையும் வாழ்நாள் தண்டனையையும் உறுதியாகக் குறைக்க முடியும்.

இந்த வகையில் தூக்குத் தண்டனைகளைக் குறைக்கச் சொல்லிப் பரிந்துரை செய்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தெளிவான தீர்மானத்தை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி. செயலலிதா அவர்களை மனமாரப் பாராட்டுகிறோம். முதலமைச்சர் அவர்கள் இதில் பிடிவாதமாக இருந்து பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யத் தொடர்ந்து முயற்சிப்பார் என மனமார நம்புகிறோம். இதுபற்றித் தமிழ்நாட்டு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு வேளை, குடியரசுத் தலைவர் கருணை மனுவைத் தள்ளுபடி செய்த பிறகு இதில் ஆளுநர் தலையிட முடியுமா என்கிற அய்யப்பாடு இருக்குமானால், சட்ட அறிஞர்களைக் கலந்து, இந்தியத் தலைமை அமைச்சருக்கும் இந்திய உள்துறை அமைச்சருக்கும் இந்தியச் சட்ட அமைச்சருக்கும் தனித்தனி வேண்டுகோள் மடல்களை விடுத்து சட்டமன்றத்திலும் தமிழ்நாட்டு அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம். ஏன் எனில் மீண்டும் குடிஅரசுத் தலைவருக்கு மறு ஆய்வுக்காக கருணை மனுவை குற்றம் சாட்டப்பட்டவர்கள் விண்ணப்பிக்கும்போது மேலே கண்டவர்களின் தெளிவான பரிந்துரை இருந்தால் தான் குடிஅரசுத் தலைவர் கொலைத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாக மாற்ற முடியும் என்று கருதுகிறோம். இதற்கு வாய்ப்பு இருப்பதாகவே மனமார நம்புகிறோம்.

அரசமைப்புச் சட்டத்தின் விதி 72(1) கூறுவதை நாம் உற்றுநோக்கினால் இந்த உண்மை விளங்கும்.

விதி 72(1), குடிஅரசுத் தலைவர் -

(அ) தண்டனை அல்லது தீர்ப்புத் தண்டனைப் படைத் துறையாட்சி நீதிமன்றத்தால் அளிக்கப்படுகிற அனைத்து நேர்வுகளிலும்,

(ஆ) தண்டனை அல்லது தீர்ப்புத் தண்டனை ஒன்றியத்தின் ஆட்சித்துறை அதிகாரத்தில் அடங்கும் ஒரு பொருட்பாடு தொடர்பான சட்டம் எதற்கும் எதிரான ஒரு குற்றச் செயலுக்காக அளிக்கப்படுகிற அனைத்து நேர்வுகளிலும்,

(இ) தீர்ப்புத் தண்டனை, ஓர் இறப்புத் தீர்ப்புத் தண்டனையாக இருக்கிற அனைத்து நேர்வுகளிலும்,

ஏதேனும் குற்றச் செயலுக்காகக் குற்றத் தீர்ப்பளிக் கப்பட்ட எவரொருவரின் தண்டனைக்கான குற்ற மன்னிப்புகள், நிறுத்தி வைப்புகள், நிறைவேற்றுக் காலத் தாழ்வுகள், அல்லது குறைப்புகள் அளிக்கவோ, அல்லது தீர்ப்புத் தண்டனையை இடை நிறுத்தி வைக்க, குறைக்க அல்லது மாற்றிக் குறைக்கவோ அதிகாரம் உடையவர் ஆவார்.

இந்த விதியிலும் எந்தத் தண்டனையையும் குறைக்கவோ, மாற்றிக் குறைக்கவோ குடி அரசுத் தலைவர் அதிகாரம் உடையவர் ஆவார் என்றிருக்கிறது. இதனை உணர்ந்துதான் ஏற்கெனவே இருந்த குடிஅரசுத் தலைவர்கள் இந்திய அரசின் கருத்தை மாற்றுவதற்காகக் கருணை மனுவைத் திருப்பி அனுப்பினார்கள். தண்டனையைக் குறைக்கச் சாதகமான பரிந்துரை இந்திய அமைச்சரவையிடமிருந்து வரவில்லை என்பதால்தான் இந்த மனுவை அவர்கள் கிடப்பில் போட்டார்கள்.

இப்போது பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரைத் தூக்கில் போட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பரிந்துரைத்ததால் தான் இன்றைய குடிஅரசுத் தலைவர் மாண்புமிகு பிரதீபா பாட்டீல் அவர்கள் கருணை மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.

இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு செயலலிதா அவர்களும் முன்னாள் முதலமைச்சர் மதிப்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்களும் இந்திய அரசினருக்கு நேரில் சென்று அழுத்தம் தரவேண்டும் என்று வேண்டுகிறோம்.

தமிழ்நாட்டுக் காங்கிரசாருக்கு ஓர் அன்பான வேண்டுகோள் : தமிழ்நாட்டு மக்கள் 1972 முதல் 30:40 என்ற விழுக்காட்டில் தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு பெரும் பிரிவாகப் பிரிந்தே கிடக்கிறார்கள். இங்கு 1969க்குப் பிறகு காங்கிரசுக்கு தனித்த செல்வாக்கு இல்லை. இந்த ஈன நிலைக்குக் காங்கிரசைக் கொண்டு வந்தவர் மறைந்த பிரதமர் இந்திராகாந்திதான். எப்படி? அவர்தான் 1969இல் நடைபெற்ற குடிஅரசுத் தலைவர் தேர்தலின்போது, காமராசரை வீழ்த்த வேண்டி, 16.8.1969 இரவு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு ஓடோடிச் சென்று 131 சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளை வி.வி.கிரிக்குத் தந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்திப் பெற்றவர். எந்தக் கலைஞரைக் கருவியாக வைத்துக் காமராசரை வீழ்த்தினாரோ, அந்தக் கலைஞரை இந்திராகாந்தி 31.1.1976இல் வீட்டுக்கு அனுப்பினார்.

அவசரகால ஆட்சியை இந்திராகாந்தி அறிமுகப்படுத்திய நேரத்தில், வழக்கமாகக் காமராசரைச் சந்திக்கும் நானும் திருச்சி நோபிள் கே.கோவிந்தராசு அவர்களும் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள அவரது இல்லத்தில் காமராசரைச் சந்தித்தோம். அன்றைய அவசர நிலைமையைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது காமராசர் மனம் நொந்து “முண்டை, முண்டை நாட்டைக் கெடுத்துட்டாளே! இதுக்கா சுதந்தரம் வாங்கினோம்” என்று கூறி நொந்து கொண்டார். தமிழ்நாட்டில் காங்கிரசை அழித்தவரும் இந்தியா முழுவதும் காங்கிரசைப் பலவீனப்படுத்தியவரும் இந்திராகாந்தி தான். இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோரை 1961இல் அடித்து வீழ்த்தியவர் இந்தியாவின் பிரதமர் பண்டித நேருதான். இவற்றையெல்லாம் சரிவர அறியாமல் “இந்தியாவில் நேரு குடும்ப ஆட்சி நீடிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சி அமைக்கப்பட வேண்டும்” என்று கிளிப்பிள்ளைகளைப் போல் கீச்சிடுவதும், இராஜீவைக் கொன்ற கொலையாளிகளைத் தூக்கில் போடு என்று கூக்குரலிடுவதும் தமிழ்நாட்டுக் காங்கிரசுக்குத் துணைபோகாது, தமிழ்நாட்டுக் காங்கிரசுக்காரர்கள் திருந்துங்கள்; மனம் மாறுங்கள். தூக்குத் தண்டனையை இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்குங்கள் என்று கோரிக்கை வையுங்கள். தூக்குத் தண்டனை பெற்றவர்கள் மனம் திருந்தி நல்லவர்களாக வாழ வழி தேடுங்கள் - நீங்களும் தமிழர்கள் என்பதற்காக அன்று - நீங்களும் மனிதகுலத்தின் ஓர் அங்கம் என்பதால்தான், இக் கோரிக்கை.

உயர்நீதிமன்றம் அளித்த எட்டுவாரக் காலம் நவம்பர் 7 அன்றுடன் முடிகிறது - இன்றைய முதலமைச்சர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் உண்மையில் வெற்றிபெற வேண்டுமானால்-அந்தத் தீர்மானத்தை ஆதரித்து முன்னாள் முதல்வர் கலைஞர் விடுத்த அறிக்கை செயல்பாட்டுக்கு வர வேண்டுமானால், இந்த இரண்டு கட்சியினரும்-முன்னின்று தமிழ் நாட்டில் உள்ள 57 நாடாளுமன்ற உறுப்பினர்களுள், காங்கிரசார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) ஆகியோரைப் புறந்தள்ளிவிட்டு, மற்றுமுள்ள எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய முதலமைச்சர் செயலலிதா அவர்கள் தலைமையில் இந்திய தலைமை அமைச்சர், இந்திய உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு நேரில் அழுத்தம் தந்து, இந்திய அமைச்சரவையானது இது சம்மந்தப்பட்ட கருணை மனுவை மறு ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளுமாறும், மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டையாகக் குறைக்குமாறும், அக்டோபர் 31-க்குள் பரிந்துரைக்குமாறு வேண்டிக் கொள்ள, மிகமிக விரைவில் ஆவன செய்வது ஒன்றுதான் இம்மூவரின் தூக்குத் தண்டையை குறைக்க ஒரே வழியாகும் என்று நாம் திடமாகக் கருதுறோம். இதனை நிறைவேற்ற வேண்டுமாய்க் கோருகிறோம்.

இந்த வெளிச்சத்தில் பின்கண்ட கோரிக்கைகளை இந்திய அரசினர் நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகிறோம்.

*      இராசிவ் காந்தி கொலை வழக்கிற்காகப் பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் மூவருக்கும் அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறையுங்கள்!

*      பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக் குமார், இராபர்ட் பயாஸ், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும், அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததை, வாழ்நாள் தண்டனையை அனுபவித்ததாகக் கருதி, உடனே விடுதலை செய்யுங்கள்.

*      தருமபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகளை எரித்ததற்காக மூன்று பேருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்திடுங்கள்!

*      நாடாளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் பாக்கிஸ்தானியன் அப்சல்குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாக மாற்றிடுங்கள்!

*      இந்தியக் குற்றவியல் சட்டத்திலிருந்தும் இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்தும் தூக்குத் தண்டனை அளிக்கும் விதிகளை அடியோடு அகற்றிடுங்கள்!

*      இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 72(1) விதியிலும், 161 ஆவது விதியிலும் பயிலப்படும் தூக்குத் தண்டனை என்கிற திட்டவட்டமான சொற்கோவைகளை அடியோடு அகற்றுங்கள்!

- வே.ஆனைமுத்து

Pin It