கல்வி - வேலை குறித்து பேச மறுக்கும் ஊடகங்கள்!
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் சில முன்னணி தேசிய ஊடகங்களில் இப்போதும் எதிர்க்கட்சிகளே கடும் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டி ருக்கின்றன. இந்தியாவில் இரவு 8 மணிமுதல் 10.30 மணிவரை அதிகமானோர் செய்திகளை பார்க்கின்றனர். அதனால் இந்த நேரத்தை பிரைம் டைம் என்பார்கள். பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை இந்த நேரத்தில் பல முக்கிய ஊடகங்கள் விவாதித்த தலைப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து நியூஸ் லாண்டரி ஊடகம் பகுப்பாய்வு செய்துள்ளது. ரிபப்ளிக் டிவி, நியூஸ் 18, டைம்ஸ் நவ், சி.என்.என்.- நியூஸ் 18, ஆஜ் தக் உள்ளிட்ட 6 தொலைக்காட்சிகளில், 6 நெறியாளர்களின் 429 நிகழ்ச்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவே 52% விவாதங்கள் நடைபெற்றுள்ளன. வெளிப் படையாக பாஜகவுக்கு ஆதரவாக 27% விவாதங்கள் நடந்துள்ளன. ஒன்றிய அரசுக்கு எதிரான விவாதங்கள் மிகச் சொற்பமாக 1.4% அளவில் மட்டுமே நடந்திருக்கிறது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியின் கல்வி- வேலைவாய்ப்பு நிலைகள் குறித்து 1.1% மட்டுமே விவாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நடுநிலையற்ற ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளும் நம்பகத்தன்மை அற்றதாகவே உள்ளன. எதார்த்த கள நிலவரத்தை மறைத்து, கருத்துருவாக்கம் செய்ய முயற்சிப்பதாகவுமே இருக்கின்றன.சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
கொரோனாவுக்கான முதல் மருந்து என்று பொய்யான தகவல்களுடன் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவை கடுமையாகக் கண்டித்த உச்சநீதிமன்றம், செய்தித்தாள்களில் பொது மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிடுமாறு உத்தரவிட்டது. ஆனால் லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு மிகச் சிறிய அளவில் விளம்பரம் வெளியிடப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக பொது மன்னிப்பு வெளியிடப்படும் அளவில், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பதஞ்சலி நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரித்துள்ளது உச்சநீதிமன்றம். அத்துடன், பொய் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பிரிவு 170 ஏன் திடீரென்று நீக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
- விடுதலை இராசேந்திரன்