உலகம் முழுவதும் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் ஆயிரக்கணக்கான இணையத்தளங்களில் இடம்பெற்று வருகின்றன. தகவல் தொழில் நுட்பப் புரட்சி அளித்த கொடை இது. இதில் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. தனி நபர்களிடையே நடைபெறும் உரையாடல்களைக் கமுக்கமாக ஒட்டுக்கேட்க முடியும். பதிவு செய்ய முடியும். இது ஒரு காலத்தில் அரசுகளின் உளவுத் துறைக்கு மட்டுமே முற்றுரிமையாக இருந்தது. இன்று வளர்ந்துவரும் அறிவியலும், தொழில்நுட்பமும் இதைத் தகர்த்து அரசுகள் பகிர்ந்து கொள்ளும் செய்திகளைக்கூட இணையத் தளம் வழியாக வெளியாக்கிவிடுகின்றன. ஏகாதிபத்தியங்களின் இருட்டு உள்ளங்கள், திருட்டு முகங்கள் இன்று வெளிச்சம்போட்டுக் காட்டப்படுகின்றன. மனித உரிமைப்போராளி விக்கிலீக்சு அசாங்கேவைப் பார்த்து இன்று உலகமே வியக்கின்றது.

“சிங்கங்கள் அணிவகுத்து அப்படைக்கு ஆடு தலைமை தாங்கினால் நான் அஞ்சமாட்டேன். ஆடுகள் அணிவகுத்துச் சிங்கம் தலைமை தாங்கினால் அச்சப்படுவேன். (I am not afraid of an army of lions led by a sheep; I am afraid of an army of sheep led by a lion-Alexander, the Great) என்றார் மாவீரன் அலெக்சாண்டர். இன்றைக்குத் தகவல் தொழில்நுட்பப் ப்புரட்சியின் சிங்கமாக அசாங்கே காட்சியளித்து அமெரிக்காவை அச்சுறுத்தி வருகிறார். அவருக்குத் துணையாக இருப்பவர்கள் ஏழு பேர் கொண்ட ஒரு போராளிப் படைதான். இந்தப் படையைக் கண்டு பல நாடுகள் நடுங்கிப்போய் உள்ளன. உலகெங்கும் உள்ள புரட்சி எண்ணம் படைத்த இளைஞர்கள், அசாங்கேவிற்கு ஆதரவாக அணிவகுத்துள்ளனர்.

 பொறுத்துக்கொள்ளுமா அமெரிக்கா ஏகாதிபத்தியம்? போட்டது ஒரு பொய் வழக்கை. பல இளம் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தினாராம் அசாங்கே - அமெரிக்கா கூறுகிறது. இளம் வயது முதற்கொண்டு பொது நலனில் அக்கறை காட்டும் பொறுப்புள்ள குடிமகனாகத்தான் என் மகன் வளர்ந்தான் என்று அசாங்கேவின் தாய் குறிப்பிடுகிறாள். பல நடுநிலையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பொய் வழக்கை முதற்கட்டமாக முறியடித்துள்ளனர். தனது பணி ஓயாது என்று குறிப்பிடுகிறார் அசாங்கே அறிஞர் ஜார்ஜ் ஆர்வெல்லின் உயரிய சிந்தனையைத்தான் தனது இணையத் தளத்தின் குறிக்கோளாக அறிவித்துள்ளார் அசாங்கே. “பொய்யை உண்மையாகவும், கொலைகாரனை மாண்புமிக்கவனாகவும் ஆக்குவதற்குத்தான் அரசியல் என்னும் ஆயுதம் வலிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று அறிஞர் ஜார்ஜ் ஆர்வெல் குறிப்பிட்டார். யார் அந்த சிந்தனையாளர்?

1903இல் பீகார் மாநிலத்தில் பிறந்த இங்கிலாந்து சென்று பட்டம் பெற்றுப் புகழ்மிக்க எழுத்தாளரானார். மக்களாட்சி முறையை நம்புகிற சமதருமமே உலகிற்குத் தேவைப்படுகிறது என்று அறிவித்தவர். அவரின் பல கட்டுரைகளும், படைப்புகளும் ஏகாதிபத்திய அரசுகளின் உண்மைத் தோற்றங்களை உலகிற்குப் பறைசாற்றின. இந்தச் சிந்தனையாளரின் நெறியில்தான் அசாங்கே 2006ஆம் ஆண்டுத் தொடங்கிப் பல உரையாடல்களை, படங்களை, ஆவணங்களை வெளியிட்டுப் பல நாடுகளின் இரட்டை வேடத்தைக் கலைத்து வருகிறார்.

முதன்முதலாக, (2006) சோமாலியாவின் அரசியல் தலைவர் ஷேக் அசேன், தன் சுயநலத்திற்குத் துணைபோகாத அரசு உயர் அலுவலர்களைக் கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிகளை விக்கிலீக்சு இணையத் தளம் வெளியிட்டது. 2007ஆம் ஆண்டு கென்யாவின் அரசியல் தலைவர் டேனியல் ஆரப் மோயி குடும்பம் செய்த ஊழல் ஆவணங்களை வெளிப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கௌதமாலா தீவில் சிறைப்படுத்தப்பட்ட இராணுவ வீரர்களை அமெரிக்கா எவ்வாறு கொடுமைப்படுத்தியது என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டது. 2010 ஏப்பிரல் மாதத்தில் இரண்டு செய்தியாளர்களையும் அப்பாவி மக்களையும் அமெரிக்க இராணுவம் சுட்டுக்கொல்லும் கொடூரக்காட்சியை வெளியிட்டது.

2010 சூலை மாதம் வரை ஆப்கானித்தான் போருக்காக அமெரிக்கா செய்த போர்ச் செலவுக் கணக்கை வெளியிட்டது. அக்டோபர் திங்களில் அமெரிக்க அரசின் துணையோடு ஈராக்கியப் பொம்மை அரசு அப்பாவிக் குடிமக்களைத் துன்புறுத்திய காட்சியையும் காட்டியது. பூனைக்குத் துணையாகவும் பாலுக்குக் காவலாகவும் இருப்பதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை; வெள்ளைப் பூனை என்றாலும், கறுப்புப் பூனை என்றாலும் அவை பிடிப்பது எலிகளைத்தான். புஷ் போய் ஒபாமா வந்தாலும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கை மாறாது. இந்தியா, பாகித்தான் ஆகிய இரு நாடுகளையும் தமது ஏகாதிபத்தியப் பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அமெரிக்க நாடு போட்ட வேடத்தை விக்கி லீக்சு கலைத்துள்ளது. தனது நாட்டு முதலாளிகளின் நன்மைக்காகத்தான் அணு உலை ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்களை இந்தயாவுடன் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது என்பதையும் விக்கி லீக்சு ஆதாரங்களும் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டு நடந்த உண்மை நிகழ்ச்சிகளையும் விக்கிலிக்சு இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் இராபர்ப் ஓ பிளேக், அமெரிக்க அரசிற்கு அனுப்பிய செய்தியில், கருணா, புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் எவர் என்று சந்தேகப்பட்ட பலரைப் படுகொலை செய்துள்ளார். சிறுவர்களைத் தனது ஆயுதக் குழுவில் சேர்த்துள்ளார். வணிகர்களிடம் கட்டாயமாகப் பணம் வசூலித்துள்ளார். இதற்கு கோத்தபய ராசபக்சே துணை நின்றுள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் கொடுமைக்கு அஞ்சி ஓடிய தமிழ் ஈழப் பெண்களைச் சிங்கள இராணுவ வீரர்களின் பாலியல் தேவைக்காக ஒப்படைத்துள்ளார். பல தமிழ்த் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த இருவரும் கொலை செய்துள்ளனர். இதற்கு இலங்கை அரசு துணைபோகிறது என்று விக்கி லீக்சு இணையத் தளம் வெளியிட்டுள்ளது. இவ்வகைக் கொடுமைகள் சந்திரிகா காலத்திலிருந்தே நடைபெற்று வருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டில் செல்வி செயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றார். புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்று திரு. பழ. நெடுமாறன், திரு. வைகோ, திரு. சுப.வீரபாண்டியன், திரு. சாகுல்அமீது போன்ற பலரை பொடா சட்டத்தில் சிறையிலடைத்தது செயலலிதா அரசு.

ஆனால், 2004ஆம் ஆண்டில் கருணா தமிழ்நாட்டில் உதகைத் தேயிலைத் தோட்டத்தில் மறைவாக இருந்து தமிழ்நாட்டில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு இந்திய அரசு உளவுத்துறை துணைபோயிருக்கிறது. இதுபோன்ற பல சட்ட விரோதச் செயல்களை சனநாயக அரசுகள் தங்களின் அரசியல் சுயநலத்துக்காகச் செய்து வருகின்றன என்று செய்திகள் இப்போது வெளி வருகின்றன. இதுபோன்ற ஓரிலக்கத்து ஐம்பதாயிரம் செய்திகளை ஆவணங்களோடு விக்கிலீக்சு இணையத்தளம் வெளியிட்டுள்ளது. சனநாயக அரசுகள் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் சட்ட விரோதமாகச் செய்தது; மனித உரிமை ஆர்வலர்களையும்,. மக்களாட்சி நெறியில் நம்பிக்கையுள்ள நடுநிலையாளர்களையும் நடுங்க வைத்துள்ளது. மனித உரிமைப்போராளி அசாங்கேவின் முயற்சியால் பல நாடுகளின் போலி முகங்கள் கிழிக்கப்படுகின்றன; அரசியல் ஆவணங்கள் சந்திசிரிக்கின்றன. இதுதான் மக்களாட்சியின் மாண்பா? அரசின் இலக்கணமா? என்று வினாக்கள் தொடர்கின்றன.

2001இல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டன. 2010இல் அமெரிக்காவின் இரட்டை முகங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அசாங்கே செய்த மக்களாட்சித் தொண்டும். மனித உரிமைகளுக்காக அவர் போராடி வருகின்ற களங்களும் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

Pin It