‘மகாராஷ்டிரா’ ஆட்சி அறிவிப்பு:

ஆந்திராவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசு மண்ணின் மைந்தர்களுக்கே 80 சதவீத வேலை வாய்ப்புகளை வழங்கும் கொள்கையை உருவாக்கி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு மண்ணின் மைந்தர் வேலை வாய்ப்புக் கொள்கையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகும். 80 சதவீத வேலை வாய்ப்புகளை மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க மறுக்கும் தனியார் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரிச் சலுகைகள் முழுமையாக இரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிரா தொழில் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கடந்த ஆக. 26ஆம் தேதி அறிவித்தார். இவர் சிவசேனாக் கட்சியைச் சார்ந்தவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், தொழிற் சாலைகள், எண்ணிக்கை 3.8 இலட்சம். இதில் 2.4 மில்லியன் பேர் வேலை செய்கிறார்கள்.

எச். ராஜா கிராமத்துக்குள் நுழைய விடாமல் துரத்தப்பட்டார்

கடலூர் மாவட்டம் அரியநாச்சி எனும் கிராமத்தில் கோயிலை புதுப்பிப்பது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு பிரிவினருக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் செயலாளர்களில் ஒருவரான பார்ப்பனர் எச். ராஜா ஒரு பிரிவினருக்கு ஆதரவாக அக்கிராமத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது அரியநாச்சி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எச். ராஜாவை கிராமத்துக்குள்ளேயே நுழைய விடாது கருப்புக் கொடி காட்டி தடுத்தனர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தும் எச். ராஜா ஒழிக என்று முழக்கமிட்டனர். கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. வேறு வழியின்றி எச். ராஜா அவமானப்பட்டு திரும்பிப் போனார். தி.மு.க., அ.தி.மு.க.வினர் இணைந்து கண்டன சுவரொட்டிகளை ராஜாவுக்கு எதிராக ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

ஆகஸ்ட் 25ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கிய ‘மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண’த்துக்கு தமிழகம் முழுதும் காவல் துறை வழங்கிய அனுமதியை திடீரென மறுத்தது. வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு, தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் ஆகிய பிரச்சினைகளை காவல்துறை காரணமாகக் கூறியது. அதைத் தொடர்ந்து கழகத்தின் பரப்புரைப் பயணம் தள்ளி வைக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் மீண்டும் பரப்புரைப் பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடங்குகிறது. செப். 20இல் நாமக்கல் பள்ளிப் பாளையத்தில் நிறைவு விழா மாநாடு நடைபெறும். காவல்துறைக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தோழர்களே, தயாராவீர்!

Pin It