தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். காவி ஆட்சியை வீழ்த்துவோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இப்போது அறிவிக்கிறார். இவரே எங்களது கட்சியில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று ஏற்கனவே கூறியவர் தானே? இது முரண்பாடு அல்லவா? என்று கேட்டார்கள்.

முரண்பாடு அல்ல என்று நான் பதில் கூறினேன். பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் அனைவருமே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ‘இந்து’க்கள் என்ற பட்டியலில் தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலை உருவாக்கி அவர்களுக்கு சமூகநீதி உரிமைகள் வழங்கப்பட்டாக வேண்டும் என்ற நிலையை உருவானதற்கே அடிப்படை என்ன? இந்த மக்களை இந்துக்களாகி, பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடிமையாக்கி,  அவர்கள் மீது சுமத்திய இழிவை நீக்கவும் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தரவும் இந்த இடஒதுக்கீடு பட்டியல்களே வந்தன! ‘இந்துக்கள்’ என்றாக்கப்பட்டதால் உழைக்கும் மக்கள் கொடுத்த கடும் விலை இது.

திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் - சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவம் என்று இப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த சுயமரியாதையும், பகுத்தறிவும், சமூகநீதியும், சமத்துவமும், எந்த மக்களுக்காக பேசப்படுகிறது? இவைகளை பறிகொடுத்து நிற்கும் ‘இந்து’ மக்களுக்குத் தானே!

அனைத்து ஜாதியினரும் கோயில் கர்ப்பகிரகத்தில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையை பெரியாரும் தி.மு.க.வும் யாருக்காகக் கேட்டார்கள்? பார்ப்பனியத்தால் சூத்திர இழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் இந்துக்களுக்குத் தானே?

ஆக, உரிமை பறிக்கப்பட்ட பார்ப்பனியத்தால் ‘இந்து’க்கள் என்ற அடையாளப்படுத்த மக்களின் உரிமைக்காகவே திராவிட இயக்கம் போராடுகிறது. அதே நேரத்தில் இந்த உரிமைகளை மறுக்கும் இந்து மதத்தை எதிர்க்கிறது.

ஆனால், இந்து மதத்தைக் காப்பாற்றப் புறப்பட்டிருக்கும் பார்ப்பனியம் இந்த வெகுமக்களான ‘இந்த’க்கள் உரிமைகளை மறுக்கிறது.

அதே நேரத்தில் இந்து மதத்தை எதிர்க்கும் நாங்கள், அந்த மதத்தால் பாதிக்கப்பட்ட இந்து மக்களுக்காகக் களத்தில் நிற்கிறோம். 

அதனால்தான் ஸ்டாலின் கூறினார். எங்கள் கட்சியில் உள்ள 90 சதவீதம் பேர் ‘இந்துக்கள்’ என்றார். சுயமரியாதையும் சமூகநீதியும் மறுக்கப்பட்ட ‘இந்துக்கள்’ இவர்களோடு சேர்த்து உரிமைகள் மறுக்கப்பட்ட முன்னாள் ‘இந்துக்களான’ அதாவது இஸ்லாமியர்கள், கிறித்துவர்களின் உரிமைகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுக்கிறோம். இந்த முன்னாள் இந்துக்களை பகைவர்களாக சித்தரிக்கிறார்கள், ‘இந்து’ மதக் காப்பாளர்கள்.

சுருக்கமாகச் சொன்னால், நாங்கள் பார்ப்பன இந்து மத எதிர்ப்பாளர்கள். ஆனால் இந்து மதத்தால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ‘இந்து’க்களுக்கு ஆதரவாளர்கள்.

‘நான் இந்துவாகத்தான் பிறந்தேன்’ என்றுதான்  அம்பேத்கரும் கூறினார். ஆனால் ‘இந்துவாக சாக மாட்டேன்’ என்று சூளுரைத்தார்.

இந்து மத எதிர்ப்பாளர்கள் என்ற வாதத்துக்குள் பதுங்கிக் கொண்டு திராவிட இயக்கத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள்!

(கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரையிலிருந்து)

Pin It