தமிழகம் முழுதும் திருநங்கைகள் பல்லாயிரக்கணக்கில் சென்னையில் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தினர். மோடி ஆட்சி திருநங்கைகள் நலனுக்காக மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மசோதா திருநங்கைகளின் வாழ்வை மேலும் மோசமாக்கிவிடும் என்று செப்.21 அன்று திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பால கிருஷ்ணன், தி.மு.க.வைச்சார்ந்த விஜயா தாயன்பன், பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் திருநங்கைகள் கோரிக்கையை ஆதரித்துப் பேசினர்.

திருநங்கைகள் உரிமைகளுக்காக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தனிநபர் மசோதா ஒன்றை மாநிலங்களவையில் கொண்டு வந்தார். அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 35 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு தனி நபர் மசோதா, அப்போதுதான் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதாவில் இடம் பெற்றிருந்த நல்ல அம்சங்களை இப்போது மோடி ஆட்சி அறிமுகப்படுத்தியுள்ள மசோதா நீர்த்துப் போகச் செய்ததோடு, ஏற்கெனவே உச்சநீதிமன்றம், திருநங்கைகள் உரிமைகளை வலியுறுத்தி வழங்கிய தீர்ப்பின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ளாமல் புறந்தள்ளிவிட்டது. இது குறித்து திருநங்கைகள் தரப்பில் முன் வைக்கப்பட்ட கருத்துகள்:

திருநங்கை என்றால் அவர்கள் பாதி ஆண், பாதி பெண்ணாகவே இருக்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது.  எந்த அடையாளத்தை தேர்வு செய்வது என்பது திருநங்கைகளுக்குரிய உரிமை. இது மனித உரிமைக்கு எதிரானது.

‘திருநங்கை’யாக உரிமை கோரும் ஒவ்வொருவரும் மாவட்ட நீதிபதி தலைமையிலான குழுவின் சோதனைக்கு உட்பட வேண்டும் என்று கூறுவதோடு, அவர்களுக்காக கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இவை எதிரானவை என்று திருநங்கைகள் சுட்டிக்காட்டினர்.  

Pin It