திருநங்கைகள் தமிழ் சமூகத்தில் அங்கீகாரம் தேடி அலையும் ஒரு நாடோடி கூட்டம். இருக்க இடம் கிடையாது, அடையாளம் கிடையாது அங்கீகாரம் கிடையாது.

முதலில் திருநங்கை என்பவர்கள் யார் ? அனைவருக்கும் புரியும் படி கூற வேண்டும் என்றால் உடல் ரீதியாக ஆணாக பிறந்து ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு பிறகு தனது உடலில் உணர்வில் பெண் என உணர்ந்த பிறகு பெண்ணாக மாறும் ஒரு மாற்றுப்பாலினத்தை சேர்ந்தவர்கள். சிலர் வெளிப்படையாக தன்னை உணர்ந்ததும் வீட்டை துறந்து வெளியே வந்து திருநங்கையாக மாறி தாங்கள் விரும்பிய ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பர். சரி இவர்களது பூர்வீகம் என்பது எப்படி ஆரம்பிக்கிறது என்றால் அதனை விவரிக்க முடியாது. காரணம் இது உடல் ரீதியான உணர்வு ரீதியான ஒரு மாற்றம். இதற்கு கால நிர்ணயம் செய்ய முடியாது. ஆனால் இவர்கள் தாங்கள் மகாபாரத கதையில் வரும் அரவான் கதாபாத்திரத்தை தங்களது கடவுளாக வணங்குகின்றனர். இந்த அரவான் திருவிழா வட தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலர் இந்த விழாவில் கலந்து கொள்வர். இவர்களுக்கு என தனிக்கலாசாரம், மொழி வழக்கு, சடங்கு முறைகள் என பல உள்ளன. அது குறித்து பிறகு பார்க்கலாம்.

transgendersஇந்த திருநங்கைகள் பெரும்பாலும் தங்களது குடும்பத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு ஒரு திருநங்கை குழுவில் சேர்ந்து அங்கயே வளர்ந்து பிறகு தனது விருப்பப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறுகிறார். இது தான் பெரும்பாலான திருநங்கைகள் சொல்லக்கூடிய கதை. அரவாணி, ஒன்பது, உஸ், அலி என்ற சொல்லாடல் மறைந்து எப்படி திருநங்கை என்று கண்ணியமாக அழைக்கப்பட்டு வருகிறதோ அது போல தான் திருநங்கைகளும் பெண்ணாக மாறிவிட்டோம் இது மட்டும் நம் பிறப்பின் அடையாளம் கிடையாது என வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முயற்சி செய்கின்றனர். எவ்வளவு சமத்துவம் சமூக நீதி பேசினாலும் கடைசியில் இவர்களை எந்த அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு என அங்கீகரிப்பது தான்.

இவர்கள் மீது வைக்கப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பாலியல் தொழில் மற்றும் கடைகளில் பிச்சை எடுப்பது. ஆனால் இதையும் தாண்டி பல துறைகளில் அவர்கள் வென்றுள்ளனர். அதிலும் சிலர் மட்டும் தான் பலருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த கட்டுரையின் முழு நோக்கமே இவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு கிடையாதா? என்பது தான். சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லும் இதே மண்ணில் தான் இந்த சாதியில் பிறந்ததால் உனக்கு கல்வி மறுக்கப்பட்டு விடக்கூடாது என்று சாதியை முன்னிலை படுத்தி இட ஒதுக்கீடு வழங்கி அவர்களை கல்வி பொருளாதாரம் வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் கொடுக்க அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது வரை தமிழ்நாட்டை கண்டு மற்ற மாநிலங்கள் மிரள காரணம் அந்த 69 சதவீத இட ஒதுக்கீடு.

சரி சாதியால் கல்வி வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று போராடும் அரசு இவர்களுக்கு என்ன காரியம் செய்தது. உதரணாமாக கழிப்பறையில் கூட ஆண் பெண் என உள்ளது. மூன்றாம் பாலினத்திற்கு என தனி கழிப்பிடம் உள்ளதா?? இப்போது தான் விண்ணப்ப படிவத்தில் பாலினத்தில் ஆண், பெண் என்பதை தாண்டி மூன்றாம் பாலினம் என கொண்டு வந்துள்ளோம். அப்படி இருக்க இந்த கழிப்பறை யோசனை நாம் எப்போது சிந்திக்க போகிறோம். ஆக எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இவர்கள் குறித்த அக்கறையும் கொஞ்சம் குறைவாக இருக்க செய்கிறது. இவர்களினால் என்ன பயன் ஓட்டு அரசியலுக்கு பெரிய அளவில் வலு சேர்க்காது என்று எண்ணி விட்டுவிடுகின்றனர்.

இவை அனைத்தையும் தாண்டி இவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். திருநங்கைகள் குறித்து பேசப்பட காரணம் ஒரு பாலினம் தனது அடையாளத்தை தனக்கே தெரியாமல் சாதிய அடையாளமாக மாறி வருகிறது என்பதை உணர்த்துவதற்கே. ஜூன். 29 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் அந்த வழக்கின் முக்கிய சாராம்சம். இதற்கு தமிழ்நாடுஅரசு சார்பில் ஏற்கனவே இவர்கள் எம். பி. சி என்ற பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற்று வருகிறார்கள் என்று தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கவும் அந்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

அதாவது மூன்றாம் பாலினம் என்பதை பெண் கருதிக்கொண்டு அவர்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடுக்குள்ளும், மேலும் சாதிய ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (எம். பிசி)என்ற பிரிவுக்குள் இட ஒதுக்கீடு வழங்கபடுவதாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாலியல் மாற்றம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் ஆண் பெண்ணாக மாறுகிறார். அவர் திருநங்கையாக புதிய பிறப்பு எடுக்கிறார். பிறகு தனக்கென ஒரு பெயர் உருவாக்கிகொண்டு இந்த சமூகத்தில் ஒரு திருங்கையாக அவர் அறிமுகமாகிறார். ஆனால் இங்கு இந்த சிஸ்டம் மூன்றாம் பாலினம் என்பதை பெயரளவு வைத்து க்கொண்டு இது போன்ற சட்ட சிக்கலால் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். பலர் இந்த விழிப்புணர்வு குறித்து பேசி வருகின்றனர். ஆனால் அது அரசின் காதுகளுக்கு எட்டப்படவில்லை.

இந்த இடத்தில் திராவிட கட்சிகள் திருநங்கைகளை அங்கீகரித்ததையும் அழிவுக்கு கொண்டு சென்றதையும் பேசாமல் கடக்க முடியாது. 2013ம் ஆண்டு இடஒதுக்கீடு தான் ஒரே தீர்வு என திருநங்கை ஆர்வலர் கிரேஸ் பானு சட்டப்போரட்டத்தை தொடர்ந்தார். அதன் பிறகு 2016 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகள் ஸ்வப்னா, கிரேஸ் பானு, செல்வி மனோஜ் பிரேம்குமார், லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வம் ஆகியோர் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் திருநங்கைகளுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டு இது குறித்து ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அப்போது இருந்தது அம்மையார் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சி. இந்த மூன்று சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு வந்த போது கலைஞர் கருணாநிதி அதை வெகுவாக பாராட்டி வரவேற்றார். காரணம் கலைஞர் கருணாநிதி தான் முதன் முதலில் 2008ம் ஆண்டு திருநங்கை நல வாரியம் அமைத்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தார். இதனை பார்த்து தான் உச்சநீதிமன்றம் ஏன் மற்ற மாநிலங்களிலும் இது போல செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியது.

மேலும் இத்தோடு நின்று விடாமல் மத்தியில் ஒரு மசோதாவை கொண்டு வந்தார் கலைஞர் கருணாநிதி. திருநங்கைகளுக்கு தனி பிரதிநிதித்துவம் அந்த தனி நபர் மசோதாவை தாக்கல் செய்தவர் தற்போதுள்ள திமுக எம். பி திருச்சி சிவா. ஆம் திருச்சி சிவா கொண்டு வந்த தனிநபர் மசோதா எந்த வித எதிர்ப்புமின்றி தாக்கலானது. கலைஞரும் திருச்சி சிவாவுக்கும் ஆச்சரியம் என்னவென்றால் சுதந்திரம் பெற்று இன்று வரை 14 தனி நபர் மசோதாக்கள் மட்டும் தான் எந்த வித எதிர்ப்பும் இன்றி தாக்கல் செய்யப்பட்டதாக தகவல். இதன் பிறகு 2019ம் ஆண்டு திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மசோதாவில் இருந்த அம்சங்கள் அப்படி திருநங்கைகள் வறுமை காரணமாக பிச்சை எடுப்பது குற்றம், திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனை ஏழு ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது போன்ற அம்சங்களால் இதனை பலர் எதிர்த்தனர். ஆனால் இதனை மீறியும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு முன்னோடியாக தமிழ்நாடு 2008 ம் ஆண்டு தமிழ்நாடு திருநங்கை நல வாரியம் என அமைத்து தமிழ்நாட்டில் உள்ள திருநங்கைகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கினார் கலைஞர் கருணாநிதி. ஆனால் திருநங்கை உரிமை பாதுகாப்பு மசோதாவின் கீழ் நீங்கள் பிறப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு மாவட்ட ஆட்சியரிடம் சென்று தான் அடையாள அட்டை வாங்க முடியும். ஆனால் இதை கலைஞர் கருணாநிதி முறியடித்து காட்டினார். இங்குள்ள மூன்று விதிகளுக்குள் உட்பட்டால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். ஒன்று அறுவை சிகிச்சை செய்து மாற்றுபாலின உடையில் முழுநேரமாக வாழ்பவர்கள், இரண்டாவது அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் மாற்றுபாலின உடையில் முழுநேரமாக வாழ்பவர்கள், மூன்றாவது அறுவை சிகிச்சை செய்து, செய்யாமல் திருநங்கைகள் கூட்டத்தில் மாற்றுபாலின உடையில் முழுநேரமாக வாழ்பவர்கள். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு நல வாரியம் மூலம் உதவித்தொகை கடன் உதவி கல்வி உதவி கிடைக்க கலைஞர் கருணாநிதி வழிவகை செய்தார். அதனால் கலைஞர் திருநங்கை நல வாரியம் அமைத்த நாளை திருநங்கை நாளாக தமிழ்நாட்டில் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் அதன் பிறகு வந்த அரசு இதனை கண்டுகொள்ள வில்லை. 2021 தேர்தலுக்கு முன்பாக அவசரவசரமாக திருநங்கை என்ற ஒரு பாலினத்தை ஒரு சாதிக்குள் திணித்து விட்டனர். அதன் பிறகு வந்த திமுக அரசாவது இதனை கருத்தில் கொண்டு திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கும் என்று எண்ணிய நேரத்தில் தான் அதே விஷயத்தை மேற்கோள் காட்டி இப்போதும் அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் திருநங்கைகளுக்கு ஒரு சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூட சென்னை பல்கலை கழகத்தில் கல்வி பயில விரும்பும் திருநங்கைகளுக்கு கல்வி செலவை அரசே ஏற்கும் என்றெல்லாம் அறிவிப்புகள் வந்தது. ஆனால் இது போன்று தற்காலிக தீர்வு கொடுக்காமல் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்த, திகழும் தமிழ்நாடு ஏன் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

- சேவற்கொடி செந்தில்

Pin It