தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது என்று கருநாடக அரசு அறிவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பை ஏற்கக் கூடாது என்று கருநாடக காங்கிரஸ் ஆட்சியை மிரட்டி கலவரத்தை நடத்தி வருவது கருநாடக பா.ஜ.க.த்தான். கருநாடக முதல்வர் சித்தராமய்யா, மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க தாம் தயாராக இருந்தாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.தான்’ என்று சுட்டிக் காட்டியிருந்தார். மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மாநில பா.ஜ.க. தலைவரான எடியூரப்பா போன்றோர், உச்சநீதிமன்ற தீர்ப்பை கருநாடக அரசு ஏற்கக் கூடாது என்று கன்னட வெறியோடு பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை முற்றுகையிட்டு தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் போராட்டத்தை செப்.20 அன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தின. திராவிடர் விடுதலைக் கழகம், த.பெ.தி.க., தமிழ்ப் புலிகள் இயக்கம், மே 17, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் கட்சி, தமிழ்த் தேச குடியரசு இயக்கம், பெரியார் சிந்தனையாளர் முன்னணி, தமிழர் விடியல் கட்சி, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், தமிழர் விடுதலைக் கழகம், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், திருவள்ளுவர் கழகம், தமிழர் உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பொழிலன், குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட அமைப்பின் பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் முற்றுகையிடப்படுவதன் நோக்கத்தை விளக்கி போராட்டக் குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை :

கருநாடகாவில் தமிழர்கள் மீதான வன்முறைக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ கும்பல் இருந்தது வெளிப்பட்டிருக்கிறது. குஜராத்திலும், முசாஃபர் நகரிலும் நடந்தது போன்ற ஒரு திட்டமிட்ட தாக்குதலை இவர்கள் தமிழர்கள் மீது நடத்த திட்டமிட்டிருக் கிறார்கள்.

தங்களுக்கே குடிநீர் இல்லை என கன்னட மக்களை ஏமாற்றும் கர்நாடக அரசு 13 இலட்சம் லிட்டர் காவிரி தண்ணீரை தினந்தோறும் கோக், பெப்சி ஆலைகளுக்குக் கொடுத்துக் கொண் டிருக்கிறார்கள். மேலும் காவிரி நீரை தனியார் மயமாக்கி கன்னட மக்களுக்கே விற்பனை செய்யவும் தனியாருக்கு அனுமதி கொடுத்திருக் கிறது. இதனையெல்லாம் மறைக்க காவிரியில் தண்ணீர் இல்லை. தமிழகம், காவிரி நீரை நம்மிடமிருந்து பறிக்கிறது என்று உண்மைக்கு புறம்பான தகவல்களை கன்னட மக்களிடம் பரப்பி வருகிறது. இந்த வேலையை கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக பின்பலமாக இந்துத்துவ குழுக்கள் செய்து வருகின்றன.

இதே போன்று தமிழகத்திலும் காவிரி டெல்டா பகுதிகளில் இருக்கிற நிலக்கரி, பெட்ரேல், மீதேன் போன்றவற்றினை எடுத்து ரிலையன்ஸ் போன்ற குஜராத்தி மார்வாடிகளின் நிறுவனங் களுக்குக் கொடுக்கும் ஒப்பந்தங்களும் தொடர்ச்சியாக போடப்படுகின்றது. எனவே இதற்கெல்லாம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற காரணத்தால் அவர்களை விவசாயத்தை விட்டு வெளியேற்றவும் வேண்டுமென்றே காவிரி நீரை தர மறுக்கிறார்கள். இதற்கு பின்னாலும் இந்த இந்துத்துவ கும்பல்கள் தான் இருக்கின்றது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன.

கர்நாடக முதல்வர், இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “தாம் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய காவிரி நீர் பங்கினை வழங்கக் கூடாது என எடியூரப்பா நெருக்கடி கொடுப்பதாக”  தெரிவித் திருந்தார். அதே நாளில் ஒரு தனியார் தமிழ் செய்தி சேனலில் பெங்களூரிலிருந்து பேசிய தமிழ் பெண்மணி ஒருவர் கன்னடர்களின் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு முழுக்க முழுக்க பின்னணியாக இருப்பது பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ கும்பல் என்று அம்பலப்படுத்தினார்.

கர்நாடகாவின் உள்துறை அமைச்சரான பரமேஸ்வரா, கர்நாடகத்தில் நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு பின்புலமாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக குற்றம் சாட்டியதுடன், அது குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இப்படியாக தமிழர்களுக்கெதிராக நடந்த வன்முறை வெறியாட்டத்திற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். மற்றும்  அதன் சங்பரிவார் கும்பல்கள் இருந்தது என்பது பட்டவர்த்தனமாக தெரிந்த பின்னும், எதிர்காலத்தில் இதைவிட மோசமான ஒரு வன்முறை வெறியாட்டத்திற்கு கன்னட இனவெறியை தயார்படுத்தும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்துத்துவ கும்பல்களின் சதியை மக்களுக்குச் சொல்லும் விதமாகவும் இந்துத்துவத்தின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இன் அலுவலகத் தினை ஒன்று கூடி முற்றுகையிடுகிறோம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Pin It