book review thirunangaiகாலம் மிக வித்தியாசமானது. அது ஒவ்வொருவர் வாழ்விலும் ஆடுகிற விளையாட்டும் அப்படித்தான். சில நேரங்களில் வாழ்வு இனிக்கும் நொடிகளாகிறது. சில நேரங்களில் இரணங்களைப் பரிசளிக்கிறது.

அவிழ்க்க முடியாத புதிர்களையும் தந்து விடுகிறது. இந்த உலகில் ஆணாகவோ, பெண்ணாகவோ பிறந்து எவ்வளவோ புறக்கணிப்புகள், ஏமாற்றங்கள், இழப்புகள், துரோகங்கள் என சக மனிதர்களால் அனுபவித்திருப்போம்.

ஆண்களிடம் பழகியிருப்போம், பெண்களிடம் பழகியிருப்போம், அவர்கள் வாழ்வியல் பற்றியும் கொஞ்சம் புரிந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவை இரண்டும் கலந்து திருநங்கையர்களாக பிறந்த உறவுகளிடம் பழகியிருக்கிறோமா? அவர்களின் வாழ்வும் உணர்வுகளும் வலிகளும் ஏதாவது உணர்ந்திருப்போமா? என்றால் நிச்சயமாக வாய்ப்பிருக்காது என்றே கருதுகிறேன்.

இது போன்ற தோழமைகளைக் காணுகிறபோது புரியாத வயதில் கிண்டல் செய்திருக்கிறேன். பிறகு கடை வீதிகளில் பார்க்கிறபோது காசு கேட்பார்கள் கொடுத்திருக்கிறேன், காசு இல்லாதபோது திட்டவும் செய்திருக்கிறார்கள்.

இரவு நேரங்களில் சில விடயங்களில் ஈடுபடுவதையும் பார்த்திருப்போம் இப்படியாக அவர்கள் வாழ்க்கையைத் தொலைவிலிருந்து பார்த்திருப்போம். தோழர் குணவதி ஏழாண்டுகளுக்கு முன் முகநூலில் எனக்கு அறிமுகமானார்.

அவரே கூறிய பிறகுதான் திருநங்கை என்பது தெரியும். அப்பொழுதுகூட அதிகமாக பழக்கமில்லை என்னுடைய இரண்டாம் கவிதை தொகுப்பை வெளியீட்டு நிகழ்வில் பெற்றுகொண்டார். இப்படி ஒரு நபர் தான் சிறப்பு செய்ய வேண்டும் என்பதை கனவாகவே கொண்டிருந்தேன்.

சமூக நெருக்கடிகள், குடும்ப புறக்கணிப்புகள் எல்லாவற்றையும் கடந்து தொலைந்த வாழ்வை மீட்டெடுக்கவே இச்சமூக கட்டமைப்பில் போராடித் தொலைக்க வேண்டியுள்ளது. போராடி வெற்றி கண்டவர்கள் ஒரு சிலர் தான் தோழர் திருநங்கை குணவதி.

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் மூன்றாம் பாலினமாக மாறிய இவர்களின் வலியும் யாருக்கும் புரியாது கண்ணீரை அறிவாரும் இல்லை.

" எனது அழுகையின் ஈரம்
எவ்வளவு தூரம் என
என் தலையணை மட்டுமே அறியும்"

- எனும் போது மனித நேயத்தை விரும்பும் யாருக்கும் நிச்சயமாக கண்ணீர் வரும் .

இவ்வுலகில் யார் வலி தந்தாலும் கூட பொறுத்துக் கொள்ள முடியும் உறவுகள் தரும் பாலியல் தொல்லைகள் மிக மிக கொடூரமானது. இக்கொடுமையைப் பதிவு செய்ய முன்வரும் கவிஞர் 'உறவுகளில் பாலியல் வன்முறை' என்கிற போதே உணர முடியும் .

எத்தனை இடங்களில் நிராகரிக்கப்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நின்றோம் - என்று கவிதைக்கு மட்டுமல்ல வாழ்விலும் சாதித்துக் காட்டியுள்ளார். ஆமாம் திருநங்கையர்களுக்கு முதன் முதலாக "தாய்க்கூடு" நூலகம் ஒன்று தொடங்கியுள்ளார்.

நிறையக் கவிதைகளில், தங்களுக்கு நேர்ந்த சமூக அவலங்களையும், பதிவு செய்த கவிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக காணப்படும் மதம், சாதிய ஒடுக்கு முறைகள் ஏற்றத்தாழ்வுகள் இன்றும் அறிவியல், கணினி யுகத்திலும் தொடரும் அவலம் வேறெந்த நாட்டிலும் இல்லை.

சாதிய சகதியைப் பூசித் திரியும் ஓநாய்களின் முகத்தில் காறி உமிழ்ந்து ,செருப்பால் அடிக்கும் கவிதை " எங்களில் ஜாதி இல்லை "

உங்களைப் போல எங்களிடம் எந்தவொரு
ஜாதியும் இல்லை
பேதமும் இல்லை
ஜாதிக்கலவரமும் வந்ததில்லை
கீழ்ஜாதி மேல்ஜாதியும் இல்லை
எங்களுள் ஒரே ஜாதி
பெண்மை ஜாதி
------
ஜாதிய மோதல்களும் இனவெறியும்,
மதவெறியும்
இங்களிடம் இல்லவே இல்லை

- என்று எழுதிய இந்த கவிதையால் தொகுப்பு முழுமையடைவதாகவும் உணர்கிறேன்.

மூன்றாம் பாலினத்தை கொச்சைப் படுத்தும் மனித கூட்டமே உங்களிடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம். அன்பால் மனித நேயத்தால்தான் இந்த உலகம் தழைக்கும் என்கிறார்.

- சிவ.விஜயபாரதி

Pin It