வடக்கு மாகாண சட்டமன்ற - தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை முழுமையாக ஏற்போம்

திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை, இளந்தமிழகம் இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை

துருக்கி நாட்டின் கோஸ் தீவில் போட்றம் கடற்கரையில் மூன்று வயதுச் சிறுவன் அயலன் சடலமாக ஒதுங்கிய நிழற்படம் ‘கரையொதுங்கிய மானிடம்’ என்ற தலைப்புடன் இணையத்தில் உலவி ஐரோப்பியர்களை உலுக்கிப் போட்டுள்ளது. அம்மக்கள் குற்றஞ்சுமந்த இதயத்துடன் ஏதிலியர் களை இருகை நீட்டி வரவேற்று அரவணைக்க முன்வந்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 2 முடிய நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் நடைபெற்ற அமர்வில் நடைமுறையில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்யும்படியான கூறுகளுடன் ஒரு தீர்மானம் அம்மன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளை புலனாய்வுக் குழுவையும், மார்த்தி அத்திசாரி (பின்லாந்து), சில்லிய காட்ரிட் (நியூ சிலாந்து), அசுமா சகாங்கீர் (பாகிஸ்தான்) ஆகிய மூவரடங்கிய அறிவுரைஞர் குழுவையும் அமைத்தார்.

புலனாய்வுக் குழுவினரோ வல்லுநர்களோ இலங்கைக்குள் நுழையக்கூட அனுமதிக்க மறுத்து விட்டது சிறிலங்கா அரசு. இலங்கையிலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் ஈழத் தமிழர்கள் சான்றுகளையும் சான்றியங்களையும் அனுப்பி வைத்தனர். இவ்வாண்டு மார்ச்சு மாதமே புலனாய்வு குழுவின் அறிக்கை மன்றத்தில் முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இலங்கையில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தைக் காரணங் காட்டி அறிக்கை முன்வைப்பை செப்டம்பர் அமர்வுக்குப் பிற்போட்டார் இப்போதைய மனித உரிமை மன்ற ஆணையர் சையது அல் உசைன்.

இலங்கையில் இவ்வாண்டு சனவரியில் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த இராசபட்சே தோற்று, மைத்ரிபால சிறிசேனா வென்று அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆகஸ்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இராசபட்சேயின் முயற்சி தோற்று இரணில் விக்கிரமசிங்கா பிரதமராகப் பொறுப் பேற்றுள்ளார். மேற்குலக நாடுகளும் இந்தியாவும் விரும்பி வரவேற்றுள்ள இந்த ‘ஆட்சி மாற்றம்’ இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயல் வழியைக் கிடப்பில் போடுவதற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது.

இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்தான் இப்போதைய அதிபர் மைத்ரி. இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு காண் பதற்கு அரசியல் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் இரணில்.

சிங்களப் பேரினவாத சூழ்ச்சியின் அரசியல் முகம் இரணில், இராணுவ முகம் இராசபட்சே. இப்போதும்கூட இராசபட்சே ஈட்டிய இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றும் வேலையைத்தான் இரணில் செய்து கொண் டிருக்கிறார்.

மைத்ரியின் ‘நல்லாட்சி’யில்தான் இன அழிப்புப் போரின் படைத் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு ‘ஃபீல்டு மார்சல்’ பட்டம் சூட்டப்பட்டது. 57ஆம் படைப் பிரிவின் தளபதி தலைமைத் தளபதியாக மகுடம் சூட்டப்பெற்றார்.

மார்ச்சு மாதம் வரவிருந்த அறிக்கையை செப்டம்பருக்குப் பிற்போட்டதுதான் புதிய ஆட்சியின் முக்கியச் சாதனை என்று மைத்ரியே மார்தட்டிக் கொண்டார். அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற் போனவர்களைக் கண்டு பிடித்தல், அவர்களைக் காணாமலடித்தவர்களைத் தண்டித்தல், தமிழர் தாயகத்திலிருந்து சிங்களப் படை நீக்கம், சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துதல், பறித்துக் கொண்ட தமிழர் காணிகளை மீட்டளித்தல் உள்ளிட்ட தமிழர்தம் கோரிக்கைகள் உயிர்ப்புடன் நீடிக்கின்றன.

அண்மையில் இலங்கை சென்ற அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான அயலுறவுத் துணையமைச்சர் நிஷா பிஸ்வால் இலங்கை அரசுத் தரப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் தனித் தனியாகச் சந்தித்துப் பேசினார். இதையடுத்துக் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய பிஸ்வால், ஐநா மனித உரிமை மன்றத்தின் வரவிருக்கும் கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவரும் என்று அறிவித்தார். புதிய ஆட்சியாளர்களுக்கு மேலும் கால அவகாசம் தந்து இலங்கையில் நல்லிணக்கத்தை வளர்க்க அது உதவும் என்றார். அமெரிக்க வல்லரசு நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டது என்பதே உலகத் தமிழர் களிடமும் மனித உரிமை ஆற்றல்களிடமும் ஏற்பட்டுள்ள வலியுணர்வு.

செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 3,000 பேர் உயிரிழப்புக்குப் பழிவாங்க ஆப்கனில் புகுந்து பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்ததோடு, பாகிஸ்தானின் நில, வான் எல்லையை மீறி ஊடுருவிச் சென்று ஒசாமா பின்லாடனைக் கொன்றது அமெரிக்கா. ‘நீதி செய்யப்பட்டு விட்டது’ என்றார் அதிபர் ஒபாமா. ஆனால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி செய்யும் கவலையே இல்லாமல், தன் புவிசார் அரசியல் நலனை மட்டுமே முன்னிறுத்தி நாப்புரண்டு பேசுகிறது அமெரிக்க வல்லாதிக்க அரசு.

கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அமெரிக்க நிலைப்பாடு புதிதோ வியப்புக்குரியதோ அன்று. இதுதான் அமெரிக்கா! இதுதான் வல்லாதிக்கம்! இதுதான் புவிசார் அரசியல்! ஏற்றத் தாழ்வான உலக ஒழுங்கின் இயங்கு விதிகள் இப்படித்தான் உள்ளன. அமெரிக்க நிலைப்பாட்டை மக்களிடையே தோலுரித்துக் காட்டுவோம்! நீதியும் நிகர்மையும் கோலோச்சும்படியான புதிய உலக ஒழுங்கிற்காகப் போராடுவோம்!

ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களையும் சர்வதேசச் சட்ட மீறல்களையும் ஆராய்ந்து நீதி வழங்கப் பன்னாட்டுப் பொறிமுறை தேவை என்று முதல்வர் விக்னேஸ்வரன் முன்மொழிந்த தீர்மானம் இலங்கை வட மாகாண சபையில் நிறைவேறியுள்ளது.

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத் தாயகத்திலும் பல்வேறு இயக்கங்கள், குடியியல் சமூக அமைப்புகள் நீதிவழங்கலுக்குப் பன்னாட்டுப் பொறிமுறை வேண்டு மெனக் கேட்டு நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்தையும் ஈருருளிப் பயணம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளையும் போராட்டங்களையும் பாராட்டி வரவேற்கிறோம்.

இந்திய அரசைப் பொறுத்த வரை, இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்றோ, பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்றோ நிலையெடுத்ததில்லை. கடந்த காங்கிரசு அரசு ஐநா மனித உரிமை மன்றத்தில் பன்னாட்டுப் புலனாய்வை எதிர்த்தது. இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானங்களையும் எதிர்த்திருக்க வேண்டும் என்றது ஆர்எஸ்எஸ். இலங்கையுடனான அரசியல், பொருளியல் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளுமாறு தமிழக சட்டப் பேரவை இயற்றிய தீர்மானங்களை இந்திய அரசு கிஞ்சிற்றும் மதிக்கவில்லை. இனக் கொலைக்குத் துணை போன இந்தியா, கடந்த ஆறு ஆண்டுகளாகப் பன்னாட்டு அரங்கில் சிறிலங்காவைப் பாதுகாத்து வருகிறது.

மார்ச்சு மாத அய்.நா. கூட்டத் தொடரின் போது இந்தியப் பிரதமர் மோடி இலங்கை சென்றார். இப்போது செப்டம்பர் அமர்வின் போது இலங்கைப் பிரதமர் இரணில் இந்தியா வருகிறார். அண்மையில் இந்தியா இலங்கைக்கு மூன்று கப்பல்கள் கொடுத் துள்ளது. இரணில் பயணத்தின் போது ஊநுஞயு என்றொரு பொருளியல் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று செய்திகள் வருகின்றன. ஆக, இராணுவ வகையிலும் பொருளியல் வகையிலும் சிங்கள அரசின் பக்கம் நிற்கிறது இந்தியா.

இந்திய - சிங்களக் கூட்டை முறித்து இந்திய அரசின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் கொண்டுவரச் செய்வதுதான் ஈழ மக்களுக்கு நீதி கிட்டச் செய்யும் போராட்டத்தில் தமிழக மக்களின் அடுத்தக் கட்டப் பாய்ச்சலாக இருக்க முடியும். அமெரிக்காவோ இந்தியாவோ வேறு ஏதேனும் உலக நாடோ பன்னாட்டுத் தீர்ப்பாயம் அல்லது அது போன்ற தொரு பொறிமுறையை முன்வைத்தால் தமிழ் மக்கள் ஏற் பார்கள், இதற்குக் குறைவான வேறு எதையும் ஏற்க மாட்டார்கள்.

தமிழக சட்டப் பேரவையும் வட மாகாண சபையும் இயற்றியுள்ள தீர்மானங்களைத் தமிழினத்தின் ஒருமித்த உணர்வுக் குரலாக ஏற்று, ஈழத்தில் இனக்கொலை நடந்த உண்மையை ஒப்புக்கொண்டு, அதற்குரிய நீதி கிடைக்கச் செய்யுமாறு இந்திய அரசை வலியுறுத்திப் போராடுவோம்! நம் கோரிக்கைகள்:

இந்திய அரசே!

1) தமிழீழ மக்களுக்கு நீதி வழங்குவதற்கான முழுமையான பன்னாட்டுப் பொறிமுறையை ஏற்படுத்துமாறு ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டுவருக!

2) இலங்கை அரசே அமைக்கும் உள்நாட்டுப் பொறி முறையோ, பன்னாடு கலந்த கலப்புப் பொறி முறையோ போதுமென்று அமெரிக்காவோ வேறு நாடு அல்லது நாடுகளோ தீர்மானம் கொண்டுவந்தால் எதிர்த்து வாக்களித்திடுக! அத்தீர்மானத்தை தோற்கடிக்க ஆவண செய்க!

3) இலங்கை அரசுடன் அரசியல், பொருளியல், பண்பாட்டு உறவுகளைத் துண்டித்திடுக!

என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளா தி. செந்தில், மக்கள் விடுதலை இயக்கத்தைச் சார்ந்த பாலன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

Pin It