தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கைகளுக்காகச் சிங்கள அரசு மீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன் மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்கியுள்ளன.

நீண்ட பல ஆண்டுகளாகச் சிங்கள அரசிற்குப் பொருளாதார - இராணுவ உதவிகளையும், அரசியல் ஆதரவுகளையும் வழங்கி வந்த மேலை நாடுகள் தற்போது சிங்கள அரசைக் கைவிட்டு ஒதுங்கும் அரசியல் போக்கை மேற்கொண்டு வருகின்றன. உலக அரசுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர்ச்சியான கண்டனங்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழினக் கொலையைத் தீவிரப்படுத்தியுள்ள சிங்கள அரசை ஒரு "பயங்கரவாத அரசாக" முத்திரை குத்தும் ஆரம்ப முயற்சிகளில் அனைத்துலக சமூகம் இறங்கியுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதத்தில் சிங்கள அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க முயற்சிக்கும் ஒரு நடவடிக்கை, சிங்கள அரசு மீதான ஒரு பொருளாதாரத் தடை போன்றே காணப்படுகிறது. சிங்கள அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் இருபதினாயிரம் கோடி ரூபாய் வருமானம், ஒரு இலட்சம் சிங்களவருக்கு வேலை வாய்ப்பையும் கொடுக்கும் ஆடை ஏற்றுமதிக்கான சலுகைகள் நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் காட்டப்படாவிட்டால் மேற்குறித்த "பொருண்மியத் தடை" நடவடிக்கைக்கு சிங்கள அரசு உள்ளாகும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்துள்ளது. ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து, கனடா போன்ற நாடுகள் சிங்கள அரசுக்கான பொருளாதார உதவிகளைப் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளன.

அமெரிக்கா - பிரிட்டன் போன்ற நாடுகள் சிங்கள அரசுக் கான போராயுத வழங்கல்களை ஏற்கனவே நிறுத்தியுள்ளன. சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் உலக நாடுகளில் முதன்மை இடம் வகிக்கும் ஜப்பான் தனது உதவிகளை மட்டுப்படுத்தியுள்ளது. சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களை - இனக்கொலையை அம்பலப்படுத்தி அண்மையில் அமெரிக்க அரசு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த அறிக்கை சிங்களப் பேரினவாதிகளை சீற்றத்திற்குள்ளாக்கியது.

சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவரை தனது அலுவலகத்திற்கு அழைத்த சிங்கள வெளி விவகார அமைச்சர் அமெரிக்கா அறிக்கையின் விவரங்கள் பொய்யானவை என்று வலியுறுத்தினார். அந்த அறிக்கையை அமெரிக்க அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவரைக் கேட்டுக் கொண்டார். சந்திப்பை முடித்துக் கொண்டு தூதரகம் திரும்பிய அமெரிக்கத் தூதுவர், பத்திரிகையாளர்களைஅழைத்தார். சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கை சரியானது தான் என்று வலியுறுத்திச் சிங்கள அரசின் முகத்தில் கரி பூசிவிட்டார்.

உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் மோதல் போக்கைச் சிங்கள அரசு தொடர்ந்தபடியுள்ளது. இப்போது அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடனும் மோதலைத் தொடுத்துள்ளது. ஐ.நா. சபையின் மனித உரிமைக் கழகத்தில் ஒரு உறுப்புரிமை நாடாக சிறிலங்கா இருந்து வருகின்றது. இப்போது அந்த உறுப்புரிமையை இழக்கும் நிலையில் சிங்களம் உள்ளது. வரும் மே மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமைக் கழகத்திற்கான தேர்தலில் சிறிலங்கா தோல்வியடையப் போகின்றது என்று கொழும்பு வார ஏடொன்று அபாய அறிவிப்புச் செய்துள்ளது.

இவ்விதமாக உலகின் மதிப்பு வாய்ந்த ஜனநாயக நாடுகள் மனித உரிமை அமைப்புக்கள், சிறிலங்கா அரசை தீண்டத்தகாத ஒரு அரசாக ஒதுக்கி வைக்க முற்படும் இந்த வேளையில், மேற்குறித்த நாடுகளுடன் முரண்பாடான உறவுகளைக் கொண்டுள்ள சீனா - பாகிஸ்தான் - ஈரான் போன்ற நாடுகளைச் சிங்கள அரசு தனது இராணுவக் கூட்டாளிகளாக மாற்றி வருகின்றது. மேலை நாடுகள் விரும்புவது போல மனித உரிமைகளை மதிக்கச் சிங்கள அரசு தயாரில்லை என்ற நிலைப்பாட்டையே கூட்டாளிகளை மாற்றுவதன் மூலம் அது வலியுறுத்த விரும்புகின்றது.

இது தவிர, ராஜபக்சே அரசுக்கு மற்றொரு பேரிடியும் விழுந்துள்ளது. இந்தியாவின் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.என். பகவதி தலைமையில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்புக் குழு ஒன்று சிறிலங்காவில் நடந்த 16 மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றி விசாணை நடத்தி வந்தது. இந்தக் குழுவில் பிரான்சு, இந்தோனேசியா, அமெரிக்கா, நெதர்லாந்து, பங்களா தேஷ், கனடா, சைப்ரஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளைச் சார்ந்த அந்த நாட்டின் பிரபலமானவர்கள் இடம் பெற்றிருந்தனர். உண்மையில், சர்வதேச சமூகத்திடம் மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் ஏதும் நடக்கவில்லை என்று காட்டுவதற்காக - ராஜபக்சே கடந்த 2007 ஆம் ஆண்டில் இப்படி ஒரு குழுவை அமைத்தார்.

கடந்த 10 ஆம் தேதி இந்த சர்வதேசக் குழுவினர், தங்களது நடவடிக்கையை நிறுத்தி, குழுவையே கலைத்து விட்டதாக அறிவித்து விட்டனர். "ராஜபக்சே அரசு - இந்தக் குழுவின் செயல்பாட்டுக்கு எந்த வகையிலும் உதவிடவில்லை. அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும் இல்லை. இது அரசியல் உறுதியற்ற அரசு. எனவே, குழுவை கலைத்துவிட்டு நாடு திரும்புகிறோம்" என்று அறிவித்துவிட்டனர்.

விடுதலைப் புலிகளோடு - கடுமையான யுத்தத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பகவதி குழுவின் இந்த அறிவிப்பு, ராஜபக்சே அரசுக்கு பலத்த அடியைத் தந்துள்ளதாக ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக எழுதி வரும் முரளிதர்ரெட்டியே 'பிரண்ட்லைன்' ஏட்டில் எழுதியுள்ளார். தமிழின அழிப்புப் போரைத் தொடரும் நோக்கில் மேலை நாடுகளுக்கு எதிராகச் சிங்கள அரசு மேற்கொள்ளும் இந்த செயல்களால் - மேலும் நெருக்கடிகளை சந்திக்கவே போகிறது.

Pin It