உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில மாதங்களாகவே உதயநிதி துணை முதல்வராவது குறித்தப் பேச்சுக்கள் தான் ஊடகங்களில் பேசு பொருளாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் ஒரு மிகச்சிறந்த பெரியாரிஸ்ட் மற்றும் பகுத்தறிவாளர் ஆவார். சுயமரியாதை, சமூகநீதிக் கொள்கைகளில் அழுத்தமான உறுதி கொண்டவர். இதை வெளிப்படையாகவே அவர் அறிவித்திருக்கிறார்.

டெங்கு, மலேரியாவைப் போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் மீது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சங்பரிவார கும்பல்கள் வழக்குத் தொடுத்தன. ஆனால் இந்த வழக்குகளுக்கு எல்லாம் அவர் அஞ்சி நடுங்கிடவில்லை. உளவியல் ரீதியாக அவரை நிலைகுலையச் செய்துவிடலாம் என்ற எதிரிகளின் கணிப்பைத் தவிடுபொடியாக்கினார். 2023இல் இராயப்பேட்டையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் “நான் ஒரு கருப்புச்சட்டைகாரன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

மிக எளிமையான தோற்றம், அழுத்தமான கருத்துகளைப் பதிவு செய்பவர். அவருக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட போது அதில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். தி.மு.கவுக்கு வரும் இளைஞர்களைக் கொள்கையாளர்களாக மாற்ற பயிற்சிப் பட்டறைகளை நடத்தினார். பெரியார் இயக்கச் செயற்பாட்டாளர்களான கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் கழக அருள்மொழி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் போன்றவர்களை அழைத்து வகுப்பெடுத்தார். அதேபோல சேலத்தில் நடைபெற்ற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டையும் திராவிட இயக்க மாநாடாகவே நடத்திக் காட்டினார்.

விளையாட்டுத்துறை அமைச்சரான பிறகு புதிய விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதி, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அவர்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்து முடித்தார். மேலும் சர்வதேச பார்முலா 4 கார் பந்தயம், செஸ் ஒலிம்பியாட் எனப் பல்வேறு சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை உலக நாடுகளே வியக்கும் அளவிற்கு நடத்திக் காட்டினார்.

நிர்வாக ரீதியிலும் தனது முத்திரையைப் பதித்தார் உதயநிதி ஸ்டாலின். அதிகார வர்க்கம் அமைச்சர்களை மிரட்டித் தங்கள் வலைக்குள் விழச் செய்து வருவதை சமீபகாலமாக நாம் பார்த்து வருகிறோம். இந்தச் சூழ்ச்சிகளுக்குச் சிக்காமல் இருப்பவர்கள் தான் மக்களுக்கான தலைவர்களாக இருக்க முடியும். அரசுத்துறைகளில் ஆய்வு செய்வதில் வித்தியாசமான முறையைக் கையாண்ட அவர், அதிகாரிகள் படிக்கும் அறிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், ஏற்கனவே கள நிலவரங்களை அறிந்து பின்னர் துறை சார்ந்த அதிகாரிகளைக் கேள்விக் கணைகளைத் தொடுத்து அதிகாரிகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்தார். இதனால் பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அவரின் மிகச்சிறந்த செயல்பாடுகளால் கூடுதலாகத் துணை முதல்வர் பொறுப்பும் அவருக்குக் கிடைத்துள்ளது. இதனைப் சிலர் வாரிசு அரசியல் என்று கூறிவருகிறார்கள். அது குறித்து நமக்கு எந்தக் கவலையும் இல்லை. காரணம், நம்மைப் பொறுத்தவரையில் உதயநிதி ஸ்டாலினைக் கொள்கை வாரிசாகத்தான் கருதுகிறோம். தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் இளைஞர்களை நோக்கி நகர்ந்து வருகிறது. சங்கிகளும், போலி தமிழ்த்தேசியக் கும்பலும், திரைப்பட பிம்பங்களோடு வருகிறவர்களும் இளைஞர்களைக் குறிவைத்து வருகிறார்கள். அந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கடமை உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. இதிலும் அவர் வெற்றிக் கொடி நாட்டுவார் என்று உறுதியாக நம்புகிறோம்.

பெரியார் தொண்டர், பகுத்தறிவுவாதி, சனாதனத்தை எந்தவொரு அதிகார மிரட்டலுக்கும் பயப்படாமல் எதிர்க்கும் துணிச்சல் மிக்க இளைஞரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வரானது வரவேற்கத்தக்க ஒன்று. இந்தச் சூழலில் அவருக்கு எதிர்ப்புகள் வருகிற போது பெரியாரிய இயக்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் துணை நிற்கும்.

விடுதலை இராசேந்திரன்