இந்தியா, செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ அனுப்பியது நாட்டுக்கு பெருமைதான் என்றாலும் இந்த நாட்டு மக்கள் அறிவியல் மனப்பான்மையில்லாத மூடநம்பிக்கையாளர்களாகவே இருக்கிறார்கள். இப்படி கூறுவது பெரியார் இயக்கமல்ல; ‘டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு’ - இப்படி ஒரு கட்டுரையை எழுதியுள்ளது. 2014 அக்டோபர் 4 ஆம் தேதி அந்த ஏட்டில் சேட்டன் பகத் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் முன் வைத்துள்ள கருத்துகள்: நாம் நமது குழந்தைகள், விஞ்ஞானப் பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும்.

அதில் அதிக மதிப்பெண் பெற வேணடும் என்று விரும்புகிறோம். ஆனால், வாழ்க்கையில் இதற்கு நேர்மாறாக மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறோம். மற்ற நாடுகளைவிட நமது நாட்டில்தான் மூடநம்பிக்கைகள் அதிகம். விஞ்ஞான தேர்வை எழுதச் செல்வதற்கு முன்பு தயிரில் சர்க்கரையைக் கலந்து சாப்பிட்டால் தேர்வு எளிமையாக இருக்கும் என்று ஒரு மூடநம்பிக்கை. ஏதோ, மேலே ‘கடவுள்’ ஒரு தணிக்கை அலுவலகத்தை வைத்துக் கொண்டு எந்தக் குழந்தை எதைச் சாப்பிட்டு விட்டு தேர்வு எழுத வந்தது என்று கண்காணித்துக் கொண்டிருப்பதுபோல, ஒரு நம்பிக்கை! பாபாக்கள், சோதிடர்கள், சாமியார்கள் ஏராளம் இருக்கிறார்கள்.

குற்றம் செய்துவிட்டு கோயிலுக்குப் போய் ‘பரிகாரம்’ செய்து கொள்ளலாம். பல நேரங்களில் ‘காணிக்கை’களோடு கடவுள் தரிசனம் நடக்கிறது.

வீதிகளில் மதச் சடங்குகள், மத ஊர்வலங்கள், சுற்றுச் சூழல் பாதிப்புகளோடு போக்குவரத்து நெருக்கடிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் மேலே இருந்துகொண்டு கடவுள் கண்காணிக்கிறாரா? நான் நம்பும் கடவுளை நம்பாமல், மற்றவர் வேறு ஒரு கடவுளை நம்பினால், அவர் வேறு; நான் வேறு என்ற பிரிவினை மனப்பான்மை. நான் நம்பும் கடவுளை நம்பும் ஒருவர், திடீரென மரணமடைந்து விட்டால், உடனே, அச்சம் தொற்றிக் கொள்கிறது. இந்த அச்சம், வேறு கடவுளை நம்புகிறவர் மீது உருவாகும் அச்சத்தைவிட பன்மடங்கு அதிகம். ஆமாம், நம்பும் கடவுள் மீதே சந்தேகம் வந்து விடுகிறது. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மருத்து வத்தை பயன்படுத்துகிறோம். தொலை தொடர்பு வசதிகளை கணினிகளை பயன்படுத்துகிறோம். ஆனால், விஞ்ஞான சிந்தனையோ மனப்பான்மையோ இருக்கிறதா? விடை இல்லை என்பது தான்.

அறிவியலை பதவிகளுக்கும், சுயநலத்துக்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.

பழக்க வழக்கம், கலாச்சாரம், ஒழுக்கம், ஏன் தேச பக்தியைக்கூட அறிவியலைவிட மேன்மையானது என்று போற்றுகிறோம். இவ்வளவுக்கும் பிறகு, ‘மங்கள்யான்’ வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த விஞ்ஞானிகளை பாராட்டுவதில் ஏதேனும் அர்த்தமிருக்கும் என்றால், வாழ்க்கையில் அறிவி யலுக்கு கொஞ்சமாவது கூடுதலாக மதிப்பளிப்பது தான்” என்று எழுதியுள்ளார் கட்டுரையாளர். பெரியார் இயக்கம் காலம் காலமாக முன் வைத்த கருத்துகள்தான்.

ஆனாலும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ போன்ற நாளேடுகளே இத்தகைய கட்டுரைகளை வெளியிடுகின்றன. இத்தகைய கட்டுரைகளை ஆபூர்வமாக வெளியிடும் இந்த நாளேடுகளாவது மூடநம்பிக்கைகளை, ராசி பலன்களை வெளி யிடுவதை நிறுத்தக் கூடாதா என்பதே நமது கேள்வி!           

உலகப் “பெருமை”

பகவான் அவதாரம் எடுத்ததாகச் சொல்லப்படும் ‘புண்ணிய பூமி’க்கு மற்றொரு “உலகப் பெருமை” உண்டு. உலகிலேயே திறந்தவெளியை கழிப்பறையாக மாற்றுவதில் முதலிடத்தில் நிற்பதும் இந்த ‘புண்ணிய பூமி’தான். திறந்த வெளியில் மலம் கழிக்கும் வழக்கத்தால் நீர்த் தொற்று தொடர்பான வியாதிகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேதி, தொற்று, சோகை போன்ற விதிகளால் ஆண்டுக்கு 3 இலட்சம் பேர் மரணமடைகிறார்கள்.

5 வயதுக்குட்பட்ட 5200 குழந்தைகளிடம், 3039 குடும்பங்களில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. வீடுகளில் கழிப்பறை இருந்தும்கூட அதைப் பயன்படுத்தும் பழக்கம் வரவில்லை என்ற உண்மை ஆய்வில் கண்டறியப்பட்டது. ம.பி. மாநிலத்தில் மே 2009லிருந்து ஏப்ரல் 2011 வரை 80 கிராமங்களில் இந்த ஆய்வு நடந்தது.

கழிப்பறைகள் இருந்தும் அதைப் பயன்படுத்த மறுக்கிறது இந்த மாநிலம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜார்க்கண்ட் மாநிலம்தான் மிக மோசம்; இம்மாநில கிராமங்களில் வாழும் மக்களில் 92.4 சதவீதம் பேர் கழிப்பறை இல்லாதவர்கள். ம.பி.யில் 86.9 சதவீதமும், ஒரிசாவில் 85.9 சதவீதமும், சத்தீஸ்கரில் 85.5 சதவீதமும், பீகாரில் 82.4 சதவீதமும், கழிப்பறையைப் பயன்படுத்தாதவர்கள்.

ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 69.3 சதவீத கிராமத்தினருக்கு கழிப்பறை இல்லை.

இதிலும் பாலினப் பாகுபாடுகள் உண்டு. பெண்கள் கழிப்பறை வேண்டும் என்று வலியுறுத்தினாலும் ஆண்கள் அதற்காக செலவிட விரும்புவதில்லை.

இந்து மத நம்பிக்கை “ஆச்சாரங்களில்” ஊறிப்போன இந்த மாநிலங்களில் இத்தகைய பிற்போக்கு சிந்தனை வேரூன்றி இருக்கிறது. வீடுகள் தோறும் கழிப்பறைகள் இருந்தாலும்கூட அவை பயன்படுத்தப்படாமல் ‘பார்வை’க்கு மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன.

Pin It