திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 16 செப்டம்பர் 1996ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தந்தை பெரியாருக்கு முழு உருவ சிலை வைக்கப்பட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்து வைத்தார். 2 ஆண்டுகள் கழித்து முத்துப்பேட்டை பகுதியில் உள்ள இந்துத்துவ சக்திகளால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. மீண்டும் கடந்த 2004ம் ஆண்டு மதிமுக சார்பில் புதிதாக முழு உருவ பெரியார் சிலை அமைக்கப்பட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்து வைத்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் இந்துத்துவா சக்திகளின் தொடர் சதி செயல்களால் பல்வேறு மத கலவரங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டன. வருடா வருடம் இந்து முன்னணி பா.ஜ.க. சார்பில் வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு தொடர்ந்து முத்துப்பேட்டை பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்தனர். தந்தை பெரியார் சிலையை எப்படியேனும் அகற்ற பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் திடீரென அக்டோபர் 6ம் தேதி அன்று எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் முத்துப்பேட்டை பகுதியில் சட்ட ஒழுங்கை பாராமரிப்பதாக காரணம் காட்டி முத்துப்பேட்டை பேரூராட்சி செயல்அலுவலர் நாராயணமூர்த்தி என்ற பார்ப்பன அதிகாரி பெரியார் சிலையினை இரும்பு கூண்டு போட்டு அடைத்து வைத்தார். இந்த நிகழ்வு முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி அறிந்த திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர் இரா. காளிதாசு உடனடி யாக முத்துப்பேட்டை பகுதிக்கு சென்று கூண்டு போடப்பட்ட பெரியார் சிலையை புகைப்படம் எடுத்து மன்னார்குடி கோட் டாட்சியரிடம் பெரியார் சிலைக்கு போடப் பட்ட இரும்புக்கூண்டை உடனடியாக அகற்றக் கோரியும், தவறினால் வரும் சனிக் கிழமை அக்டோபர் 11 அன்று திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் முத்துப் பேட்டையில் இரும்புக்கூண்டு அகற்றும் போராட்டம் நடைபெறும் எனக்கூறி மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மதி வாணன், அக்டோபர் 7 மதியம் இப் பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு பெரியார் சிலைக்கு போடப்பட்ட இரும்புக் கூண்டை உடனடியாக அகற்ற முத்துப் பேட்டை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தினார். அதிகாரிகள் மாலை 5 மணியளவில் இரும்புக்கூண்டை அகற்றினர்.

இப்பிரச்சினையில் உடனடியாக திராவிடர் விடுதலைக்கழகம் தலையிட்டதின் பேரில் முடிவுக்கு வந்தது இந்துத்துவா சக்திகளுக்கு தக்க பதிலடியாக அமைந்தது.

Pin It