அய்ஸ்லேண்ட் நாடு அய்.நா.வில் பெண்கள் மற்றும் பாலின சமத்துவத்துக்கான சர்வதேச மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டின் தனித்துவம் பெண்கள் பங்கேற்காமல் ஆண்கள் மட்டுமே பங்கேற்பதுதான். ஜனவரி மாதம் அய்.நாவில் இந்த வித்தியாசமான மாநாடு நடைபெறும் என்ற தகவலை அய்ஸ்லாந்து வெளி விவகாரத் துறை அமைச்சர் குன்னர் பிராகி சுவன்சன் தெரிவித்துள்ளார்.

‘சுரிநாம்’ நாடும் இந்த மாநாட்டுக்கு தனது பங்களிப்பை வழங்குகிறது. “ஆண்கள் மற்றும் ஆண் இளைஞர்களை ஒருங்கிணைத்து, பாலின சமத்துவம் குறித்து நேர்மறையான  வழி முறைகளில் விவாதிக்க விரும்புகிறோம். இம்மாதத்தில் ஒரு இலட்சம் ஆண்களை திரட்டி சர்வதேச இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்கிறார், அமைச்சர்.

அய்.நா. பெண்கள் அமைப்பின் தலைவர் ஃபியும் கிலே லேம்போ நெருக்கா கூறுகையில் - “இதே நிலை தொடருமானால் பாலின சமத்துவம் 95 ஆண்டுகளில் சாத்தியமாகலாம்” என்றார்.

‘அவளுக்காக அவன்’ என்று இந்த இயக்கத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனாவில் பெய்ஜிங்கில் 1995இல் சர்வதேச பெண்கள் மாநாடு கூடி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த இயக்கம் மீண்டும் முனைப்பெடுத்துள்ளது. அப்போது பேசிய ஹிலாரி கிளின்டன் (அமெரிக்க அதிபர் துணைவி யார்), “பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளே” என்ற முழக்கத்தை முன் வைத்தார். 190 நாடுகள் இந்த இயக்கத்தில் அப்போது பங்கெடுக்க முன் வந்தன.

பெய்ஜிங் மாநாட்டின் 20 ஆம் ஆண்டு நினைவாக நடக்கவிருக்கும் இந்த மாநாட்டிலும் ஹிலாரி கிளின்டன் முக்கிய பங்காற்றுவார் என்று அய்.நா. செயலாளர் பான்கி மூன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் சமத்துவத்தை ஆண்களிடம் வலியுறுத்தும் இந்த இயக்கம், தமிழ்நாட்டிலும் நடத்தப்படவேண்டும்.

Pin It