சேலம் பெரியார் அரசு பல்கலையில் தனியார் பவுண்டேஷன் மற்றும் தனியார் கல்வி குழுமம் (கம்பெனி) தொடங்குவதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்

இது குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை :

சேலம் பெரியார் பல்கலையில் அண்மையில் நடை பெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் துணை வேந்தரின் செயல் பாடுகள் அரசின் பிரதிநிதிகளால் கடும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் மேலும் ஓரு அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது .

சேலத்தில் பெரியார் பல்கலைத் தொடங்கிய நோக்கமே சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பட்டியலின, பழங்குடி ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை வளர்க்கவே ஆகும். அதைச் சிதைக்கும் வகையில் அண்மையில் பூட்டர் பவுண்டேஷன் என்ற தனியார் கம்பெனி கல்வி நிறுவனத்தை பெரியார் பல்கலையில் துவக்க கடந்த 6ம் தேதி நடைபெற்ற ஆட்சிக்குழுவில் டேபிள் அஜெண்டா வைத்து உள்ள தாக தெரிய வருகிறது . இதன் இயக்குநர்கள் யார் எனில் துணை வேந்தர் திரு. ஜெகநாதன், பதிவாளர் பொறுப்பு தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், இவர்களோடு திருச்சி பாரதிதாசன் பல்கலைப் பேராசிரியர் ஒருவர். பொதுவாக அரசு ஊழியர் ஒருவர் தனியார் நிறுவனமோ வணிகமோ துவங்க வேண்டுமானால் அரசின் முன் அனுமதி பெற வேண்டும். அரசுப் பணியினில் இருந்து பணித்துறப்பு செய்த பிறகு தான் தனியார் கம்பெனியினைத் தொடங்க முடியும். மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் பங்குகளை வாங்கவோ முதலீடு செய்யவோ வேண்டும் என்றால் பல நடைமுறைகளைப் பின்பற்றியும் ஆட்சிக்குழுவில் ஒப்புதல் பெறவும் வேண்டும்.

ஆட்சிக் குழுவின் ஒப்புதலை அரசுக்கு அனுப்பி அரசின் அனுமதி பெற வேண்டும். அப்படி பெற்றால் தான் அரசு ஊழியரின் பணிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆனால் இந்த நடைமுறை எதையும் கடை பிடிக்காமல் தன்னிச்சையாக அரசுக்கு தெரிவிக்காமலேயே துணை வேந்தர் தன்னையும் ஒரு இயக்குநராக வைத்து பெரியார் பல்கலையில் தனியார் கம்பெனியை சட்டத்திற்கு விரோதமாக பூட்டர் என்ற தனியார் கம்பெனியை கம்பெனி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார். இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு விரோதமானது; அரசுக்கும் எதிரானது; மேலும் பெரியார் பல்கலையை தனியார் வியாபார நிறுவனம் ஆக்கும் செயலுமாகும். இது நடைமுறைக்கு வந்தால் புதிய பாடங்களை அவர்களே துவங்கலாம். அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் பாடங்களை நடத்த அனுமதி கொடுக்கலாம் பாடங்களை விற்கலாம்.பாட கட்டணம் தேர்வுக் கட்டணம் எல்லாம் அவர்களே நிர்ணயம் செய்யலாம். பல்கலை உபகரணங்கள், பல்கலையின் இடம், ஆய்வகம் ஆகியவற்றைத் தனியார்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். அதற்கு பல்கலைக்கு எதுவும் தர வேண்டாம்.

இவர்களிடம் பல கம்பெனிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் கல்வி நிறுவனம் துவங்கலாம். அரசுக்கோ பல்கலைக்கோ இவர்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்க வேண்டியது இல்லை. தனியார் கம்பெனியினை பல்கலையில், அதுவும் பல்கலை அதிகாரிகளே துவங்குவதை அரசு அனுமதிக்கக் கூடாது. இனியும் அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க கூடாது. தனியார் கல்வி துவங்கினால் மாணவர்களிடம் இருந்து கொள்ளை கட்டணம் வசூல் செய்வார்கள். சமூக நீதி, இட ஒதுக்கீடு காற்றில் பறக்கும் நிலைக்கு தள்ளப் படும்.

ஆகவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அரசுக்கு எதிராக செயல் பட்டு வரும் துணை வேந்தர், பதிவாளர், கணினி அறிவியல் துறை பேராசிரியர் சதிஷ் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி உடனடியாக அரசுக்குத் தெரிவிக்காத பல்கலை அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பான இயக்குனர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.

அதுவரையில் துணை வேந்தர் கூட்டிய ஆட்சிக் குழுவின் தீர்மானங்களை நிறுத்தி வைத்திட வேண்டும். இனி அரசின் செயலாளர் தலைமையில் தான் ஆட்சிக் குழு கூட வேண்டும். மேலும் ஆட்சிக் குழு தீர்மானங்களை பொது மக்கள் கல்வியாளர்கள் அறியும் வகையில் பல்கலை இணைய தளத்தில் இதுவரை வெளியிட்டு வந்தததுபோல மீண்டும் வெளியிட வேண்டும்.

சேலம் பல்கலையின் இந்நடவடிக்கைகள் அனைத்தையும் ஆளுநர் மீதான உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவதற்குள் செய்து முடித்திட வேண்டும் என்ற அவசரத்தைத்தான் காட்டுகின்றன.

தமிழ்நாடு அரசு, குறிப்பாக உயர்கல்வித்துறை உடனடியாக தலையிட்டு இச்சட்டவிரோத முன்னெடுப்புகளைத் தடுத்திட வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

Pin It