சென்னையில் விபி.சிங் சிலையை அரசு சார்பில் திறந்து வைத்த தமிழ்நாடு முதல்வர், இது தமிழர்களின் நன்றி உணர்வு என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழுஉருவ சிலையை திறந்து வைத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 150 ஆண்டு பழமைவாய்ந்த மாநில கல்லூரி வளாகத்தில், வி.பி.சிங்கின் அருமை நண்பர், கலைஞர் நீடுதுயில் கொண்டிருக்கின்ற கடற்கரை சாலையில் சமூகநீதியின் சின்னமாம் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எங்களுடைய அழைப்பை ஏற்று, இங்கு வந்துள்ள வி.பி.சிங் மனைவி சீதா குமாரிக்கும், அவருடைய மகன் அஜயா சிங்க்கும் உங்களுடைய அனைவரின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வி.பி.சிங் சிலை வைப்பது மூலமாக அவருடைய புகழ் உயருகிறது என்று பொருள் இல்லை; நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி இருக்கிறோம்.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதிக் கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங். தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று அதில் உறுதியாக இருந்தவர் வி.பி.சிங். அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. ஏன், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவரும் அல்ல. ஆனாலும் ஏழை – எளிய, பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தி காட்டியவர். அப்போது நாடாளுமன்றத்தில் பெரியார், அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகிய மூவருடைய பெயரைத்தான் வி.பி.சிங் குறிப்பிட்டார். பெரியாருக்கு தனிப்பட்ட நன்றியை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.mk stalin and akilesh yadav at vp singh statue inagurationபதவியில் இருந்த பதினோரு மாத காலத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு தொடக்கப்புள்ளி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தொடக்கப்புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை உருவாக்கியது, லோக்பால் சட்டத்துக்கு தொடக்க முயற்சிகள், தேர்தல் சீர்திருத்தங்கள், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது, நாடாளுமன்றத்தின் நடுவே அம்பேத்கர் படம், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், உழவர்கள் பிரச்னையை தீர்க்க மூன்று குழுக்கள், டெல்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை அச்சிட உத்தரவு, நுகர்வோர் பாதுகாப்பு – இன்னும் பட்டியல் நிறைய இருக்கிறது.

சமூகநீதியின் காவலரான வி.பி.சிங்குக்கு சிலை வைத்ததன் மூலமாக தமிழ்நாடு அரசு இன்றைக்கு பெருமை அடைகிறது. சமூகநீதிப் பயணத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்னை இல்லை; எல்லா மாநிலங்களின் பிரச்னை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி – வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்னை ஒன்றுதான். அதுதான், புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு – ஒதுக்குதல் – தீண்டாமை – அடிமைத்தனம் – அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.

தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக முறை யாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின – பழங்குடியின மக்களுடைய இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். இதை யெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து, உறுதி செய்ய அனைத்து கட்சி எம்.பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்

இதனையெல்லாம் அகில இந்தியளவில் சமூகநீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நலனுக்காகச் செயல்பட வேண்டும். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய உறுதிமொழி; “இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட – பட்டியலின பழங்குடியின சிறுபான்மை – விளிம்பு நிலை மக்களுடைய உயர்வுக்கான ‘அரசியல் செயல் திட்டங்கள்’ ‘அரசின் செயல் திட்டங்களாக’ மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம். ‘வி.பி.சிங் மறையலாம். அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. அவரை யார் மறந்தாலும், தமிழ்நாடு மறக்காது. திராவிட மாடல் அரசு மறக்காது’ இவ்வாறு அவர் பேசினார்.

ஒன்றிய அரசு துறைகளில் பார்ப்பன ஆதிக்கம்

ஒன்றிய அரசு துறை செயலர்களில் 89 பேரில் 85 பேர் உயர் சாதியினர். பல்கலைக்கழக மானியக்குழு இணை இயக்குநர் பதவிக்கு இடஒதுக்கீடே கிடையாது. ஒன்றிய அரசின் துறை செயலாளர்கள் 89 பேரில் 85 பேர் உயர்சாதியினர். கூடுதல் செயலாளர்கள் 93 பேரில், 82 பேர் உயர்சாதியினர். பிற்படுத்தப்பட்டவர் கிடையாது. ஒன்றிய அரசு துறைகளின் இணை செயலாளர்கள் 275 பெயரில், 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். அசாம், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருக்கின்ற மத்திய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு வரை இடஒதுக்கீடே இல்லாத நிலைதான் நீடிக்கிறது. 45 மத்திய பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பேராசிரியர்கள் 4 விழுக்காடு மட்டும்தான். இப்படித்தான் பல்வேறு துறைகளில் இன்றைக்கும் நிலைமை இருக்கிறது.

சரி, நீதிமன்றங்களில் சமூகநீதியின் நிலை என்ன? 2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 72 பேர் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள். ஆனால், 458 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. ஏன், அரசு துறைகளின் பதவி உயர்வுகளின் போது இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தபடவில்லை. இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்குதான் நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். - தமிழக முதல்வர் உரையில் இருந்து

பிறப்பில் பாகுபாடு பார்த்தால் எப்படி அங்கு நடுநிலை இருக்கும்: வி.பி.சிங் மகன் அஜயா சிங் பேச்சு

வி.பி.சிங் மகன் அஜயா சிங் பேசியதாவது: இந்த நாள் எனக்கு சிறந்த நாள், என் இதயத்தில் இருந்து நன்றி கூறுகிறேன். இங்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. அதனால் என் மகள் 1995 அல்லது 1996ல் என் தந்தை ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இருந்த போது உருவாக்கிய பேச்சை என்னிடம் அளித்தார். அதனை இங்கே பகிர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த பேச்சுக்கு பிறகு 4 மாதத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், ‘இந்தியாவில் சமூகம் மற்றும் அரசியல்’ என்ற பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. மிக நீளமான அப் பேச்சை சுருக்கி கூறுகிறேன்.

ஜனநாயகம் என்பது வெறும் வாக்குச் சீட்டு மட்டும் அல்ல, அது அரசாங்கத்தில் உள்ள மனிதனின் மாண்பு. ஒருவரின் கால் மற்றொருவரின் தலை மீது இருந்தால் அது எப்படி ஜனநாயகம் ஆகும். ஒருவனை பிறப்பால் பாகுபாடு பார்த்தால் எப்படி அங்கு நடுநிலை இருக்கும். இதை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால் அரசு மட்டும் போதாது, இட ஒதுக்கீடு போன்றவையே இதை ஒழிக்க உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். என் தந்தைக்கு இத்தகைய மரியாதை அளித்ததற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய குடும்பம் நீங்கள் செய்ததை எப்போதும் மறக்காது.

வழிகாட்டும் தமிழ்நாடு ; அகிலேஷ் பேச்சு

சென்னையில் விபி.சிங் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் “ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று நாம் பேசுகிறோம். அனைத்து பிரிவினருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் என்பதற்காக கேட்கிறோம். ஆனால் அனைத்துத் துறைகளையும் ஒன்றிய ஆட்சி தனியார்மயாக்கி இட ஒதுக்கீட்டையே ஒழித்துவருகிறது. போராடிப் பெற்ற உரிமைகள் பறி போகின்றன. எனவே நமது போராட்டம் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா வழியில் தொடரவேண்டியிருக்கிறது.

மண்டல் பரிந்துரையை விபி.சிங் அமுல்படுத்திய போது உயர்ஜாதி மாணவர் ஒருவர் இட ஒதுக்கீடே கூடாது என்று தீக்குளித்தார். இப்போது உயர்ஜாதியினரே தங்களுக்கு 10 சதவீத தனி ஒதுக்கீடு பெற்றுவிட்டார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான். அந்த நீதி வழங்கிய பிரதமர் விபி.சிங் சிலை தான் இங்கே திறக்கப்பட்டுள்ளது.

மண்டல் ஆணையம் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சமூகநீதிப் போராட்டம் தொடங்கிவிட்டது. மாபெரும் சமூகசீர்திருத்தவாதி பெரியார் ராமசாமி அதைத் தொடங்கிவிட்டார். கலைஞர் மற்றும் பல தலைவர்கள் இதற்காக போராடினார்கள். அந்த தலைவர்கள் காட்டிய இலட்சியப்பாதையில் நீங்கள், அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறீர்கள். சமூகநீதியிலும், சுயமரியாதையிலும் நம்பிக்கையுள்ள அனைவரும் அந்தப் போராட்டத்தில் இணைந்து நிற்பார்கள் என்றார் அகிலேஷ் யாதவ்.

- பெ.மு. செய்தியாளர்

Pin It