கல்விசார் இயக்கங்கள் பற்றி எண்ணிப் பார்க்கும் பொழுது, அமெரிக்கக் கவிஞர் இராபர்ட் பிராஸ்ட்டு அவர்களின் ஒரு பாடல் (கவிதை) தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது.
"தேர்ந்தெடுக்காத பாதை" (The road not taken) எனும் அப் பாடலில் பாவலர்தனது பட்டறிவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். மரங்கள் நிறைந்த காட்டுப் பாதையில் பாவலர்(கவிஞர்) சென்று கொண்டிருக்கும் பொழுது, அவர் முன் இரண்டு பாதைகள் பிரிகின்றன. இரண்டு பாதைகளையும் அவர் நன்கு ஆராய்ந்து பார்க்கிறார். ஒரு பாதையில் பலரும் நடந்து சென்ற அறிகுறிகள் தென்படுகின்றன. மற்றோர் பாதையில் செடிகளும் புல்லும் நிறைந்து கிடக்கிறது. யாரும் அதில் சென்றதற்கான சுவடே தெரியவில்லை. நீண்ட சிந்தனைக்குப் பின், யாரும் பயணம்செய்யாத பாதையைத் தேர்ந்தெடுத்து, அதில் அவர் தன் பயணத்தைத் தொடர்கிறார். ஆனால், தனது பயணத்தில் அவர் எதிர்பாராத பெரும் வெற்றி பெறுகிறார் என அப்பாடல் செல்கிறது.
அரிச்சுவடி பயிலும் பள்ளியிலிருந்து, ஆய்வுகள் மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்கள் வரை பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்களுக்குப் பல நூற்றுக்கணக்கான சங்கங்கள் உள்ளன. அரசின் புள்ளிவிவரப்படியே ஏறக்குறைய 300 ஆசிரியர் சங்கங்கள் தமிழகத்தில் உள்ளன. தொடக்கப் பள்ளி என்றாலும், உயர்நிலைப் பள்ளி என்றாலும், மேனிலைப் பள்ளி என்றாலும், கல்லூரி என்றாலும், பல்கலைக் கழகம் என்றாலும், ஒவ்வொரு படிநிலையிலும் தனித்தனியே பல்வேறு சங்கங்கள் உள்ளன. தொடக்கப் பள்ளி என்றால், அதற்காகப் பல சங்கங்கள் உள்ளன. அதைப் போலவே மற்ற பிரிவுகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டுப் பற்பல சங்கங்கள் உள்ளன. தத்தம் பிரிவு சார்ந்த கோரிக்கைகளுக்காக ஒவ்வொரு அமைப்பும் ஒரு தொழிற்சங்கம் போலத் தொடர்ந்து போராடி வருகின்றன. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது. அம் முன்னெடுப்பு வரவேற்கத் தக்கதும்கூட!
ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை ஒன்றாக இணைந்து ஒரு குடைக்கீழ் செயல்படும் முயற்சி, தமிழ்நாட்டில் இதுநாள் வரை மேற்கொள்ளப் படவில்லை. யாரும் பயணம் செய்யாத பாதையாக அது விளங்குகிறது. இராபர்ட் பிராஸ்டு போல, யாரும் பயணம் செய்யாத அப்பாதையில் செல்ல ஒரு புதிய முயற்சி அண்மையில் கருக்கொள்ளத் தொடங்கியது.
அத்தருணத்தில்தான் தமிழ்நாட்டிற்கு எனத் தனித்துவமான ஒரு கல்விக் கொள்கையை உருவாக்குவதற்குத் தமிழ்நாட்டரசு அமைத்திருந்த கல்விக் குழுவிலிருந்து பேராசிரியர் சவகர் நேசன் அவர்கள் விலகியிருந்தார். எனவேஅவரது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் முகத்தான் மதுரையிலும், சென்னையிலும் கருத்தரங்குகள் நடத்தப் பட்டன. சென்னையில் நடந்த கருத்தரங்கின் இறுதியில், அதில் பங்கேற்ற பல அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் "மக்கள் கல்விக் கூட்டியக்கம்" எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐந்து கல்வியாளர்களை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்டு, செயற்குழு -பொதுக்குழு என மூன்று அடுக்காக இது கட்டமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைத்த / ஒன்றிணைக்கும் ஓர் அமைப்பாக மக்கள் கல்விக் கூட்டியக்கம் தோன்றியது வரலாற்றின் தவிர்க்க முடியாத போக்காகும். வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பதைப்போல இதுவரை காலியாக இருந்த அந்த இடத்தை இக்கூட்டியக்கம் நிரப்பியது.
அனைத்து ஆசிரியர்களின் கோரிக்கைகள், கல்விசார் சிக்கல்கள் ஆகியவை குறித்துக் குறுக்கீடு செய்வதும், ஆதரவளிப்பதும், அரசிடம் எடுத்துச் செல்வதும் கூட்டியக்கத்தின் திசைவழியாகத் தீர்மானிக்கப் பட்டது. இக்கூட்டியக்கம் ஒருதொழிற்சங்கம் அல்ல! மாறாக, ஆசிரியர் சங்கங்களின் ஒருமித்த பேரமைப்பு என்பதாக இதன் எல்லை தீர்மானிக்கப்பட்டது.
தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் மிகப்பெரும் ஆபத்து, கல்வி வணிகமயமாதல், காவிமயமாதல், மையமயமாதல், கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகள், மாநிலங்களின் கல்வி உரிமை, பாடத்திட்டங்கள் சீரமைப்பு, தமிழ்வழிக் கல்வி, மாணவர்களின் உரிமை போன்ற கல்விசார் அனைத்துச் சிக்கல்களிலும் குறுக்கீடு செய்து கல்வியில் சனநாயகத்தை நிலைநாட்டுவதும் கூட்டமைப்பின் செயல்திட்டமாக விரிவடைந்துள்ளது.
அதன் அடிப்படையில், இன்றைக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின்-எரியும் பிரச்சனையாக இருக்கும் - இரண்டு கோரிக்கைகளை முதலில் முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டு, 2023 அக்டோபர் ஒன்றாம் நாள் தமிழகம் தழுவிய ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியர்களின் பணிநிரந்தரம் / பணிப் பாதுகாப்பு மற்றும் சம வேலைக்குச் சமஊதியம் எனும் இரண்டு கோரிக்கைகள் மாநாட்டில் முன்னெடுக்கப் பட்டன. தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரிகளில் கௌரவ (?) விரிவுரையாளர்கள் என்ற பெயரில்சுமார் 7,000 பேர் பல்லாண்டுகள் அத்துக் கூலிக்குப் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் அரசுப் பள்ளிகளில் பகுதிநேர (?)ஆசிரியர்கள் என்ற பெயரில் எண்ணற்றோர் கொத்தடிமைகள் போலப் பணியாற்றி வருகின்றனர். இன்றைய நிலையில் ஒரு கட்டடப் பணியாளர் ஒரு நாளைக்குப் பெறும் கூலியைவிடக் குறைவான தொகையைப் பெற்று, மிக உயர்ந்த கல்வித் தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்களும், பகுதி நேர ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர் என்பது பேரவலம்.
எனவே கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோரது தகுதிக்கேற்ற அரசு ஊதியம் வழங்க வேண்டும். அவர்களது பணியை நிரந்தரமாக்க வேண்டும் எனும் முகாமையான கோரிக்கைகளை ஆதரித்துக் கூட்டமைப்புச் சார்பாகச் சமூக ஊடகங்களில் பரவலான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. பல நூற்றுக் கணக்கான ஆதரவுக் கையொப்பங்களைப் பெற்று, இணையவழிக் கோரிக்கை மனுவும் அரசுக்கு அனுப்பப்பட்டது.
இவ்விரு கோரிக்கைகளையும் வலியுறுத்திய மாநிலக் கோரிக்கை மாநாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த பல்வேறு ஆசிரியர் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் பெருவாரியாகப் பங்கேற்று மாநாட்டின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்த்தனர்.
அரசுக் கல்லூரிகள் / அரசுப் பள்ளிகள் என்ற அளவில் நின்றுவிடாது, தனியார்க் கல்லூரிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் பல்வேறு பிரிவு ஆசிரியர்களுக்காகவும் இம்மாநாடு குரல் எழுப்பியது கருதத் தக்கதாகும். தவிரவும், கல்விசார்ந்த இத்தகைய சிக்கல்களைத் தெளிவுபடுத்தத் தக்க வகையில், "தமிழகக் கல்விக் கொள்கைக்கான திசைவழி" மற்றும் "தமிழகத்தில் ஆசிரியர்களின் அவல நிலை, -விடியல் எப்போது?" எனும் இரண்டு தொகுப்பு நூல்களும் வெளியிடப்பட்டன. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்களைத் தொகுத்துக் குறுவெளியீடு ஒன்றும் வெளியிடப்பட்டது.
இம்மாநாடு நடைபெற்ற காலகட்டத்தை ஒட்டிப் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காகச் சென்னையில் நடைபெற்ற பள்ளிஆசிரியர்கள் போராட்டத்திற்கு மக்கள் கல்விக் கூட்டமைப்புப் பல்வேறு வகைகளில் பேராதரவினை வழங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது.
ஆசிரியர்கள் / மாணவர்கள் / அரசு ஆகிய மூன்று கூறுகளும் இணைந்ததாகக் கல்விப் புலம் அமைந்துள்ளது. எனவே மாணவர்கள் பங்கேற்காத எந்தக் கல்வி முயற்சியும் முழுமை பெற்றதாக இருக்க முடியாது. எனவே ஆசிரியர்களது பல்வேறுஅமைப்புகளை ஒருங்கிணைத்தது போலவே, மாணவர் இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, அவர்களது உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கக் கூட்டமைப்புத் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகத்தான் புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர் நாசர் அவர்களுக்கு ஆதரவாகக் கூட்டமைப்புத் துணை நிற்கிறது. பிப்ரவரி 19, 2023 அன்று அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பைச் சார்ந்த நபர்கள், முற்போக்கு எண்ணங் கொண்ட சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கி உள்ளனர். இதில் மூலக்கூறு மருத்துவத்திற்கான சிறப்பு மையத்தின் (SCMM) முனைவர் பட்ட மாணவர் நாசர் முகமது மொகைதீன் அவர்கள் கடுமையாகக் காயம் அடைந்தார். மேலும் தமிழ் மாணவன் என்பதாலும், முசுலீமாக இருப்பதாலும் நாசர் குறி வைத்துத் தாக்கப்படுகிறார். மேலும் அவரது ஆய்வுப் படிப்பை முடிப்பதற்குப் பல்வேறு தடைகள் போடப்பட்டு, தனது ஆய்வைப் பாதியிலேயே கைவிட்டு, சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்தே அவரை விரட்டியடிக்கத் தீவிரமான சதிகள் நடக்கின்றன. மேலும் பல்கலைக் கழக வளாகத்திலுள்ள பெரியார், மார்க்ஸ், ஜோதிபாய் பூலே போன்ற தலைவர்களின் படங்களையும் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சார்ந்த ஏபிவிபி மாணவர் அமைப்பினர் உடைத்து நாசமாக்கி உள்ளனர். இத்தகைய சங்பரிவார் ஆதரவாளர்களின் வன்முறைத் தாக்குதலைக் கண்டித்தும், ஆய்வு மாணவர் நாசருக்கு ஆதரவாகவும் இணையவெளிக் கையெழுத்து இயக்கத்தை மக்கள் கல்விக் கூட்டியக்கம் மாநில அளவில் முன்னெடுத்து வருகிறது.
தவிரவும், கல்வி அதிகாரத்தை முற்றிலும் ஒன்றிய அரசின் கைப்பிடிக்குள் சிறை வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் சங்கிகள் வேக வேகமாகச் செய்து வருகின்றனர். ஏற்கெனவே மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி அதிகாரம் கமுக்கமாக ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டது. இத்தகைய சனநாயகப் பகைநடவடிக்கையை மாற்றி அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தவிரவும், தமிழ்நாட்டிற்கான கல்வி இறையாண்மையை நிறுவ வேண்டிய அவசரக் கடப்பாடு, எதிர்காலத்தின் மீது கரிசனம் கொண்ட அனைவருக்கும் உள்ளது.
மேலும் கல்வியில் சமத்துவத்தையும், சமூகநீதியையும் நிலைநாட்ட வேண்டிய இலட்சியத்தைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இவ்விரு விழுமியங்களுக்கும் எதிராகச் செயல்படும் சக்திகளை முறியடிக்க வேண்டிய கடமை இப்பொழுது முன்னுரிமை பெற்றுள்ளது.
கல்வி என்பதன் பின்னுள்ள அரசியலை அடையாளம் கண்டுகொள்வதன் மூலமே அதற்கு எதிரான தடைகளை வெற்றி காண இயலும். அவ்வகையில் கல்வியின் திசைவழியைத் தீர்மானிக்கும் சக்திகள் குறித்த பின்னணி மிகவும் முக்கியமானது.
1990-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் திணிக்கப்பட்ட தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய எதிர்மறைப் போக்குகள் குறித்த புரிதல் அவ்வகையில் மிகவும் தேவை. இந்த மூவகைப் போக்குகள் மற்ற துறைகளைப் போலவே, கல்வித் துறையையும் பெரும் நாசத்திற்கு உள்ளாக்கி விட்டது. அந்தக் கால கட்டத்தில்தான் கல்வி என்பது சேவை அல்ல. அது ஒரு சரக்கு (Education is not a service but a commodity) எனவும், அந்தச் சரக்கை நல்ல விலைக்கு விற்க முடியும் எனவும், அதன் மூலம் குறுகிய காலத்தில் பெரும் இலாபத்தை ஈட்ட முடியும் எனவும் உலக வங்கி முதலாளிகளுக்கு வழிகாட்டுதல் தந்தது. "கல்வியைத் தொழிலாகச் செய்து இலாபம் ஈட்டுவது தவறல்ல" என நீதிமன்றங்களும் அப்போக்கினை ஊக்குவித்தன. மேலும் காட் (GATT) ஒப்பந்தத்தை ஆதரித்து இந்தியா ஏற்கெனவே கையொப்பமிட்டிருந்த காரணத்தால், நலத் திட்டங்களுக்கான அரசின் பங்களிப்புக் கணிசமாகக் குறைக்கப்பட்டது. அனைத்துத் துறைகளிலும் தனியார்மயம் எனும் சூறாவளிப் பேரழிவைத் தந்தது. கல்வித் துறையிலும் அது பாரதூரமான தாக்கத்தை உருவாக்கியது. அதிலும் குறிப்பாகக் கல்வியில் தனியார் மூலதனம் பெருமளவு குவிக்கப்பட்டது. இன்றைய நிலையில் கல்வியில் அதிக அளவு தனியார் மூலதனத்தைக் குவித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னோடியான இடத்தைப் பெற்றுள்ளது. எனவே இன்றைய கல்வி என்பதை இந்தப் பின்னணியில் புரிந்து கொண்டு, அதைச் சனநாயகப் படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு கல்வியாளர்களுக்கு உள்ளது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, கல்வி உரிமைகளுக்காகக் களமாடி வெற்றி பெறக் கூட்டுவலிமை தேவைப்படுகிறது. கல்வியில் விடிவு என்பதைக் கல்வியாளர்கள் மட்டுமே களமாடி வெற்றி கண்டுவிட முடியாது. சனநாயக ஊழியில் மக்களின் பங்கேற்பு இல்லாமல் எதுவும் நடக்காது. எனவே கல்விசார் சிக்கல்களை மக்களிடம் கொண்டு சென்று, அவர்களது ஆதரவை வென்றெடுக்க வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய முயற்சியை மேற்கொள்ளும் எந்தவொரு அமைப்பும் விடியலைக் கண்டடைய முடியும். அத்தகைய விடியலின் வெளிப்பாடாக மக்கள் கல்விக் கூட்டியக்கம் உருவாகி உள்ளது எனக் கருதலாம். அதன் வளர்ச்சி, கல்வித் துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
- கண.குறிஞ்சி, மக்கள் கல்விக் கூட்டியக்கம்