தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கத் தொடங்கியுள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் பெற வேண்டிய கட்டணத் தொகை அரசால் நிர்ணயிக்கப்பட்டு அதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

Directorate of Collegiate Educationஅதேபோன்று விண்ணப்பப் படிவங்களுக்கு எவ்வளவு தொகை வாங்க வேண்டும் என்பதும் அரசினால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விதிமுறைகளை மீறி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகள் விண்ணப்பங்களுக்கான விலையை அதிக அளவில் நிர்ணயித்துப் பெறுவது என்பதும், அதேபோன்று கல்விக் கட்டணமாக அதிகமான தொகையினை மாணவர்களிடமிருந்து பெறுவது என்பதும் நடந்தேறி வருகின்றது.

பல்கலைக்கழக மானியக் குழு, நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தங்களுக்கான தனி இணையதளங்களை வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த இணைய தளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல தகவல்கள், குறிப்பாக ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு கட்டணத் தொகை கட்ட வேண்டும் என்பது குறித்தும், மாணவர்கள் குறை தீர்க்கும் குழுக்கள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளது. ஆனால் இந்த வழிகாட்டுதல்கள் பெரும்பாலான கல்லூரிகளில் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு முரணாக சில கல்லூரிகள் தங்கள் இணைய தளங்களிலேயே அதிகமானக் கட்டணத் தொகைகளை அறிவித்துள்ளன.

இளங்கலை அறிவியல் மற்றும் கலை பாடப் பிரிவிற்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 48 என்றும், முதுகலை அறிவியல் மற்றும் கலை படிப்பதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 58 என்றும் அரசால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல கல்லூரிகளில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும் விண்ணப்பப் படிவங்கள் விற்கப்படுகின்றன.

ஒரே விண்ணப்பப் படிவத்தில் சேர விரும்பும் எல்லா பாடத்திட்டங்களுக்கும் விண்ணபிக்கலாம். ஆனால், சில கல்லூரிகள் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு விண்ணப்பப் படிவம் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி அதிகமான தொகையை வசூலித்து வருகிறார்கள்.

இதில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்ற விதி இருந்தும்கூட, சில இடங்களில் அவர்களிடம் இருந்தும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது தவிர அரசு 'இலவச உயர்கல்வி' என்று 2007களில் பிரகடனப்படுத்தி விட்டு அதற்கான கட்டணத் தொகையையும் நீக்கிவிட்டது. ஆனால் பல அரசு உதவி பெறும் கல்லூரிகள் வெவ்வேறு தலைப்பிட்டு வெறும் 500 ரூபாய் மட்டுமே கட்ட வேண்டிய இடத்தில் ரூபாய் 5000 முதல் 15,000 வரை வசூல் செய்து வருகின்றன. கல்விக் கட்டணம் பெறுவதில் அதிக விதிமீறல்கள் நடைபெறுவதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

எனவே உயர் கல்வி சேர்க்கையில் நடைபெறும் விதிமீறல்களைத் தடுக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கின்றோம்:

பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு கல்லூரிகளில் இடம் கிடைத்தால் போதும் என்ற மனோபாவத்தில் கல்லூரி நிர்வாகங்கள் விதிக்கும் எந்தவித கட்டணத்தையும் சிரமப்பட்டு கட்டுகிறார்கள். இதில் மிகக் குறைந்த கட்டணத்தொகையில் தரமான உயர் கல்வியை மக்களுக்கு வழங்குவதற்காக அரசு ஆணைகள் வெளியிட்டும், பல்கலைக்கழக மானியக் குழு இதற்கான வழிகாட்டுதல் கொடுத்தும், அவற்றையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு, விதிமீறல்களை செய்து ஏழை எளிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அநீதி இழைத்து வரும் கல்வி நிறுவனங்கள் மீது முதலமைச்சரும், உயர் கல்வி அமைச்சரும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் உடனடியாகத் தலையிட்டு, கல்விக் கட்டணங்கள் வசூலிப்பதில் வீதிமீறல்கள் செய்யும் கல்விக்கூட நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர் கல்வி பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது.

ஒவ்வொரு கல்விக்கூடத்திலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத் தொகையினை விளம்பரப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு எல்லா ஊடங்ககளிலும் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் பற்றி புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அரசு விதிமுறைகள்படி மாணவர் சேர்க்கைப் பட்டியல் ஒவ்வொரு கல்லூரியிலும் அதன் தகவல் பலகையிலும், விண்ணப்பதாரர் பார்க்கும் வகையில் கல்லூரியில் ஒரு பொது இடத்திலும் மற்றும் கல்லூரிகளின் இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.

கல்லூரிகள் தாங்கள் வசூலிக்கும் கட்டணங்களுக்கு உரிய ரசீது வழங்குவது உறுதி செய்ய்யப்பட வேண்டும்.

இணைய தளங்கள் மூலமாகத்தான் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற சில கல்லூரிகள் வலியுறுத்துவதைத் தடை செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரிகள் விண்ணப்பத்துடன் கல்லூரி மற்றும் பாடத்திட்டங்கள் பற்றிய தகவலோடும் தருவதுதான் விதி. ஆனால் இணையங்கள் தகவல் ஏட்டைத் தருவதில்லை. மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு இது மிகவும் சிரமமாக அமையும். இணைய வழி விண்ணப்பம் என்பது விருப்பப் படுபவர்களுக்கு மட்டுமான வசதியாக இருக்கலாம். அது ஒரு கட்டாயமாக ஆக்கப்படக்கூடாது.

அதிகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதைக் கண்காணித்து தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட வேண்டும்.

- இரா.முரளி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம்