குரங்கு தன் வாலை நீட்டி நீட்டி இழுத்துக் கொள்ளும் குணமுடையது. அதைவிட மோசமாக மத்திய பாஜக அரசு இந்தியை நீட்டி நீட்டி இழுத்துக் கொண்டிருக்கிறது தமிழகத்தில். 

இதற்குக் காரணம் தமிழர்களின் வலிமையான எதிர்ப்பு. 

பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் மாநிலங்களை அச்சுறுத்தும் எதேச்சாதிகாரமாய் இருக்கிறது இது.

இவ்வாண்டின் புதிய பாடத்திட்டத்தின்கீழ் 12-ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடத்தில், 142-ஆம் பக்கத்தில் சமஸ்கிருதத்தின் காலம் கி.மு. 2,000 என்றும் தமிழ்மொழியின் காலம் கி.மு.300 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகத் தொன்மையான மொழிகளுள் ஈப்ரூ, தமிழ், லத்தீன் ஆகியவைகளே முதன்மை பெற்றுள்ளன. இவைகளுக்குப் பின்னரே சமஸ்கிருதம் வருகிறது வரலாற்றில். 

கைபர் போலன் கணவாய் வழியாகக் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் நுழைந்த காலம் கி.மு. 1,500. இதற்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் கி.மு. 1,000 ஆண்டில் உருவானது ரிக், யஜூர், சாம, அதர்வன (வேதம்) நூல்கள்.

அப்பொழுது சமஸ்கிருதம் எழுத்து வடிவம் பெறவில்லை.மேற்கண்ட நூல்களை உருவாக்கிய ஆரியர்கள் அப்பொழுது பேசிய மொழி ‘ஆர்ய’ என்ற ஒரு வகை பேச்சு மொழியே தவிர சமஸ்கிருதம் அன்று எனப் பேரறிஞர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். சமஸ்கிருத மொழி எழுத்து வடிவம் பெற்றதே கி.மு. 1,000-த்திற்குப் பின்னர் என்பதே வரலாறு. 

சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைப்பாயிரம், இறையனார் அகப்பொருள் உரையின்படி தமிழ்மொழிக்கு ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து வளர்த்தவர்கள் தமிழர்கள். அப்பொழுதே தமிழ் வரி வடிவம் பெற்று நூல்களும் எழுதப்பெற்றுள்ளன என்பதும் தமிழர்களின் வரலாறு.

தாலமி, பிளினி, மெகஸ்தனிஸ் உள்ளிட்ட மேலை நாட்டவர்களின் நூல்களில் தமிழின் தொன்மையைப் பார்க்க முடிகிறது.

செம்மொழித் தமிழுக்கு இருக்கும் தொன்மை சமஸ்கிருததுக்கு இல்லை என்ற வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு, சமஸ்கிருதத்திற்கு கி.மு.2,000 என்றும், தமிழுக்கு கி.மு.300 என்றும் பொய்யான தகவலை மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்வது நஞ்சுக்கு ஒப்பானது. 

தொடக்கத்தில் இந்தி, இந்தி என்று சொல்லிக் கொண்டிருந்த பாஜக அரசு, இப்பொழுது சமஸ்கிருதத்தை விதைக்கத் தொடங்கிவிட்டது.

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் சொல்கிறார் இது ஏதோ தவறாக நடந்து விட்டது என்று. இதுநாள் வரையிலும் தமிழுக்கு இப்படி ஒரு நிலை வராமல் இப்பொழுது மட்டும் தமிழக அரசுக்கு தெரியாமல் வந்தது எப்படி?

மத்திய மாநிலக் காவி அரசுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  

Pin It