தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் நிகழ்வு, மனசாட்சியை உலுக்கும் மாபெரும் சோக வரலாறாக என்றென்றும் நிலைத்திருக்கும். இத்துன்பியல் நிகழ்வு, தமிழருக்கு - ஏன் உலக விடுதலை வரலாற்றுக்கும் - பல புதிய படிப்பினைகளை நல்கி உள்ளது.
இட்லரின் நாஜிப்படையினருக்கு நூரம்பர்க் விசாரணை கடும் தண்டனைகளை வழங்கியது போல், ஈழத்தமிழர்களை இனப்படுகொலை புரிந்த சிங்களக் காடையர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது தமிழர்களின் ஆறா வேட்கையாக இன்னும் கனன்று கொண்டிருக்கிறது.
தமிழீழத்தில் இனப் படுகொலை
பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைத்து பார்த்தால், மனம் பதறுகிறது. சிந்தனை தடுமாறுகிறது.
ஐயோ! எவ்வளவு குரூரமான பேரழிவு?
முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் கதறியது போல், வரலாற்றில் எந்த நிகழ்வுக்கும் தமிழ்நாடு அப்படிக் கதறி இருக்காது. கொழுந்து விட்டெறிந்த கோபம் - ஆற்றாமை - குற்ற உணர்வு - விரக்தி என மாபெரும் உளவியல் சிக்கலில் தமிழினம் அழுந்தி அல்லாடியது அப்பொழுது.
தமிழீழத்திலிருந்து வரும் ஒவ்வொரு செய்தியும் நடுநடுங்க வைத்தது. ஒரு படுகொலையைக் காட்டிலும் மற்றொரு படுகொலை கடும் பதற்றத்தைத் தந்தது.
"இது போதும், இனி வேண்டாம்" என மனம் கிடந்து தவித்தது. ஆனால், நடைபெறும் சம்பவங்களை ஊடகங்கள் விலாவாரியாகக் கொட்டிக் கொண்டே இருந்தன. வெறும் செய்திகளாக மட்டுமல்லாமல், காட்சி வடிவிலும், நிழற்பட வடிவிலும் நிகழ்வின் கோரத்தை வெளியிட்டுத் தமிழ் மக்களைத் துன்பக்கேணியில் முழ்கடித்தன.
இக்கொடிய துன்பங்களின் சுமை தாங்க முடியாமல், பலருக்கு மனம் பேதலித்துப் போய்விட்டது. தீரா உளவியல் சிக்கல், வாழ்வின் இயல்பாகப் போன கொடுங்காலம் அது.
தமிழகத்தின் கொதிநிலை அப்பொழுது உச்ச கட்டத்தில் இருந்தது. நான் பேசும் தமிழைப் பேசிய ஒரே காரணத்திற்காக ஒண்ணரை இலட்சம் மக்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டார்கள். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் தமிழர்கள் துடிதுடிக்கத் துடைத்தழிக்கப்பட்டனர்.
தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகச் சிதைக்கப்பட்டனர். சிங்கள இராணுவத்தினர் இசைப்பிரியா போன்றோரைச் சீரழித்துப் படுகொலை செய்ததை மனச்சான்றுள்ள எந்த மனிதனும் மன்னிக்க மாட்டான்.
மேதகு பிரபாகரன் அவர்களது 12 வயதுப் பாலகன் பாலச்சந்திரனுக்குப் பிஸ்கட் கொடுத்து விட்டு, பக்கத்தில் நின்று சுட்டுக்கொன்றதைக் கண்டு இந்த உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது. மனித நேயமே இந்த உலகில் மடிந்து விட்டதா? என்ற கேள்வி, அனைவரது உள்ளத்திலும் பூதாகரமாக எழுந்தது.
"போரைக் கைவிட்டுச் சரண் அடைந்தால் துன்புறுத்த மாட்டோம்" என்று சிங்கள அரசு கொடுத்த உத்தரவாதத்தை நம்பி, வெள்ளைக் கொடி அசைத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நடேசன், புலித்தேவன் மற்றும் நடேசனின் துணைவியார் வினிதா ஆகியோர் கருணையின்றிக் கொல்லப் பட்டனர்.
"போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, பாதுகாப்பு வளையம் (No Fire Zone) பகுதிக்குள் வந்தால் உயிர் பிழைக்கலாம்" என சிறீலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நம்பி, பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி நரவேட்டை ஆடியது இராஜபட்ச அரசு.
போரில் இறந்தவர்கள், காயம் பட்டவர்கள், உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்கள் என்ற வேறுபாடு எதுவுமில்லாமல், அனைவர் மீதும் இராணுவ வாகனங்களை ஏற்றி நசுக்கித் தமிழீழத்தையே பிணக்காடு ஆக்கியது, பெளத்த இனவெறி அரசு.
உலகில் எந்த இனப்படுகொலையிலும் அதிகம் நடக்காத ஒன்று இலங்கையில் நடந்தது. ஆண் - பெண் வேறுபாடு இல்லாமல் அனைவரையும் நிர்வாணமாக்குதல் வெகு இயல்பாக நாள்தோறும் அங்கு நடந்தது.
தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, அவர்களை எள்ளிநகையாடி, இளித்துக் கொண்டே சிங்கள இராணுவம் அவர்களைப் பின்னாலிருந்து சுட்டுப் படுகொலை செய்வதை இங்கிலாந்தின் சானல் 4 ஊடகம் வெளியிட்ட பொழுது, தமிழகம் அதிர்ந்து போனது.
போரும் தமிழக எதிர்வினையும்
ஈழத்தமிழ் மக்கள் படும் சித்ரவதைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் தமிழகத்தில் பேரணி - ஆர்ப்பாட்டம் - உண்ணா நோன்பு - மனிதச் சங்கிலி - நினைவேந்தல் - தீக்குளிப்பு எனப் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்தன. மக்கள் எழுச்சி கண்டு தமிழக அரசும், மைய அரசும் அஞ்சி நடுங்கின.
மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வக்கற்ற அரசாங்கம், வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. தமிழகமே இரத்தக் களரியாக மாறியது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (வைகோ) தமிழக வாழ்வுரிமைக் கட்சி (வேல்முருகன்) நாம் தமிழர் கட்சி (சீமான்) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
(திருமாவளவன்) இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி
(தா.பாண்டியன்) தமிழர் தேசிய முன்னணி (பழ. நெடுமாறன்) தந்தை பெரியார் திராவிடர் கழகம்
(கு.இராம கிருஷ்ணன்) திராவிடர் விடுதலைக் கழகம்
(கொளத்தூர் மணி) தமிழ்த்தேசியப்பேரியக்கம்
(பெ. மணியரசன்) மே 17 இயக்கம் (திருமுருகன்) ஆதித்தமிழர் பேரவை (இரா. அதியமான்) தமிழ்த்தேச விடுலை இயக்கம்
(தோழர் தியாகு) போன்ற பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும் தமிழீழ விடுதலைப் போரை ஆதரித்துப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தன. இவை தவிரவும் தமிழகமெங்கும் பல்வேறு செயல்பாட்டாளர்களும், தமிழ் அமைப்புகளும், பொது மக்களும் பங்கேற்ற போராட்டங்கள் தொய்வுறாமல் நாள்தோறும் தொடர்ந்தன. அவற்றின் பட்டியல் மிக நீண்டது.
வேறுபாடு கடந்த பேராதரவு
தமிழகத்தின் மிகப் பெரும் சிக்கலாக இருக்கும் "சாதி" எனும் நச்சு வளையத்தைத் தாண்டி, ஈழச் சிக்கல் தமிழக மக்களை ஒன்றிணைத்தது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் செய்தியாகும். இதற்கு முன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில்தான் இப்படி பட்ட சாதி கடந்த ஓர்மை தமிழ்நாட்டில் இருந்தது என்பதும் கருதத்தக்கதாகும்.
முள்ளிவாய்க்கால் போராட்டத்தின் முன்னும் பின்னும் இதற்கான ஆதரவுக் குரல், இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் எதிரொலித்தது. பெங்களூர், மும்பை, புதுதில்லி போன்ற இடங்களில் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும், அவற்றை முன்னெடுத்து நடத்தியவர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கப் போராளி யாசின் மாலிக் அவர்கள், தமிழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஈழப் போருக்குக் காஷ்மீர் மக்களின் பேராதரவினை வெளிப்படையாக உறுதி செய்தார். அதே வேளையில் ஈழ ஆதரவுப் போராட்டத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்கு முறைகளையும் அப்பொழுது அவர் கண்டித்தார்.
" ஈழத் தமிழர்களின் விடுதலைக் குரலைத் தற்காலிகமாக ஒடுக்கலாம். ஆனால் விடுதலைக் கருத்தையோ, கோட்பாட்டையோ எந்தச் சக்தியாலும் ஒடுக்க முடியாது.
அதே போல் ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்குவது அரசுக்கு வெற்றி ஆகாது. அடக்குமுறையால் அமைதியையும், பாதுகாப்பையும் உருவாக்க முடியாது. எனவே அரசு, தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், மக்கள் தமக்கான தீர்வை அவர்களே கண்டடைவர். அமைதியை வெற்றிடத்தில் உருவாக்க இயலாது. வலிமையானதோர் அடித்தளம், அமைதிக்குத் தேவை" என யாசின் மாலிக் சுட்டிக் காட்டினார்.
தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளிலுள்ள சனநாயக சக்திகளின் ஆதரவை ஒருங்கிணைக்க "போர்க் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்" (Forum against War crimes and Genocide) எனும் அமைப்புத் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் அமரந்தா, பேராசிரியர் இராமு. மணிவண்ணன், சேவ் தமிழ்ஸ் இயக்கத்தைச் சார்ந்த செந்தில் மற்றும் இக்கட்டுரை ஆசிரியர் ஆகியோர் அதில் செயல்பட்டனர். இவ்வமைப்பின் சார்பாகக் கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டப்பட்டது.
கலைஞர்கள் - எழுத்தாளர்கள் - மனித உரிமையாளர்கள் பங்களிப்பு
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முன்பே தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஈழ மக்களின் பெருந்துயரை விளக்கும் படக்காட்சிகள் பரவலாக நடைபெற்றன. ஒலிநாடாக்கள், குறும்படங்கள் பல வெளியிடப் பட்டன.
எடுத்துக்காட்டாக, 2009 மார்ச் 23 ஆம் நாள் ஐ.நா.மனித உரிமைக் கழகச் செயலர் நாயகம் திருமதி நவநீதம் பிள்ளை புது தில்லி வந்திருந்தார். அவரைச் சந்தித்து ஈழத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை விளக்கிக் கூற வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பியூசிஎல்) தமிழ்நாடு அலகு, அமைப்பின் அன்றைய அனைத்திந்தியத் தலைவராக இருந்த மூத்த வழக்கறிஞர் (மறைந்த) கே.ஜி.கண்ணபிரான் அவர்களை வேண்டிக் கொண்டது.
அதற்கேற்ப திருமதி நவநீதம்பிள்ளையை அவர் நேரில் சந்தித்து ஈழப் போரின் கொடுமைகளை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட, தடை செய்யப்பட்ட வெப்ப எறி குண்டுகளை (Thermobaric Bombs) சிறீலங்கா அரசு, மக்கள் மீது போட்டு அழித்து வருகிறது என்றும், மருத்துவமனைகள் மீதும் எறிகணைகளை வீசி வருகிறது என்றும், போரில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துச் சொல்கிறது என்றும் பல்வேறு உண்மைகளைத் திரு.கண்ணபிரான், ஐ.நா. செயலர் நாயகத்திடம் ஆதாரபூர்வமாக விளக்கிச் சொன்னார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்கத் தன்னாலான முயற்சிகளைச் செய்வதாகத் திருமதி நவநீதம் பிள்ளை உறுதியளித்தார்.
தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் ஈழப் போராட்டத்திற்கும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் பேராதரவு தந்தனர். இவர்களது தீவிர எதிர்ப்பினால், கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியத் திரைப்பட விழாப் பரிசளிப்பு நிகழ்ச்சி புறக்கணிக்கப் பட்டது.
அதே போல், கொழும்பில் நடைபெறவிருந்த தமிழ் எழுத்தாளர் மாநாட்டைத் தமிழ் எழுத்தாளர்கள் புறக்கணித்தனர். தவிரவும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முன்னும் பின்னும் எண்ணற்ற நூல்கள் தமிழகத்தில் வெளிவந்தன. அவை அனைத்தையும் இங்கு பட்டியலிட இயலாது.
இருப்பினும், சான்றாக இரண்டு நூல்கள் குறிப்பிடத்தக்கன. "இராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி" எனத் தீர்ப்பளித்த டப்ளின் பேராயத்தின் அறிக்கை புது மலர் பதிப்பகம் (ஈரோடு) சார்பாகவும், சிறீலங்கா அரசின் அத்துமீறலை வெளிப்படுத்திய தாருஷ்மென் தலைமையிலான ஐ.நா.வல்லுநர் குழு அறிக்கை, புதுமலர் பதிப்பகம் - தலித் முரசு ஆகியவற்றின் சார்பாகவும் அச்சில் வெளிவந்தன. இவ்விரு அறிக்கைகளையும் பூங்குழலி அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
வேறு சில முக்கிய நிகழ்வுகள்
தமிழீழ விடுதலைக்கு மாபெரும் உந்து சக்தியாக இன்று வரை இருப்பது, முத்துக்குமாரின் தீக்குளிப்புதான். நினைத்தாலே நடுங்கச் செய்யும் ஒப்பற்ற தியாகம் அது. ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் எழுச்சி ஊட்டிய உன்னதத் தியாக நிகழ்வு அது.
"தமிழீழ விடுதலைப் போருக்கு எதிராகவும், சிங்கள இனவெறி இராணுவத்திற்கு உதவி செய்யவும் இந்தியா, இராணுவத் தளவாடங்களை அனுப்புகிறது; கோவை வழியாக இரயில் மூலம் அவை எடுத்துச் செல்லப் படுகின்றன" என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போய், கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஈழ ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு கோயமுத்தூர் சின்னியம்பாளையம் அருகில் அந்த இரயிலை இடைமறித்தனர். மேலும் அதிலிருந்த தளவாடங்களை உடைத்து நொறுக்கினர். இதனால் பலர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தை முன் நின்று நடத்தியதற்காகக் கோவை கு.இராமகிருஷ்ணன், பொன்.சந்திரன் (பியூசிஎல்) தனலட்சுமி (மக்கள் சிவில் உரிமைக் கழகம்) உள்ளிட்டோர் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பிறகு, கோவை கு. இராமகிருஷ்ணன்,
கண. குறிஞ்சி,
பொன். சந்திரன்,
மருதுபாண்டியன்,
முத்து. முருகன்,
திருமொழி ஆகியோரது முன் முயற்சியில் "தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு" கோவையில் உருவாக்கப்பட்டது. இதன் சார்பாகத் தமிழகம் தழுவிய மாபெரும் மாநாடு கோவையில் நடத்துவது எனத் தீர்மானிக்கப் பட்டது. எனவே பிற மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் பணி, இக்கட்டுரை ஆசிரியர்வசம் ஒப்படைக்கப்பட்டது. இம்மாநாட்டிற்கு ஆதரவு திரட்டத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இறுதியாக 2011 நவம்பர் 6 அன்று கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் திரு.பழ. நெடுமாறன்அவர்கள் தலைமையில் மாநாடு தொடங்கியது. திருவாளர்கள் வைகோ, திருமாவளவன், டி.ராஜா, கு.இராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, பால் நியூமென், தோழர் தியாகு, மூத்த வழக்கறிஞர் சுரேஷ், அமெரிக்காவிலிருந்து செயல்பாட்டாளர் ரான் ரைட்னர் மற்றும் பல்வேறு இயக்க முன்னோடிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 40,000 - க்கும் அதிகமானோர் வந்து கலந்து கொண்டனர்.
கட்சி சார்பற்ற முறையில் தமிழீழத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஆர்வலர்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய மாநாடு இதுதான் எனக் குறிப்பிடலாம். ஆனால் கோவையில் 50 ஆண்டுகளில் பெய்யாத பலத்த மழை அன்று கொட்டித் தீர்த்ததால், தொடங்கிய சிறிது நேரத்திலேயே அம்மாநாடு நிறுத்தப்பட்டதுதான் பெரும் அவலம்.
முள்ளிவாய்க்காலை நினைவு கூரும் வண்ணம் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. பழ.நெடுமாறன் தஞ்சையில் உருவாக்கியுள்ள "முள்ளிவாய்க்கால் முற்றம்" சிங்கள இனவெறி அரசின் இன அழிப்பையும், போர்க் குற்றத்தையும் காலங்கடந்தும் அம்பலப் படுத்திக் கொண்டே இருக்கும் மாபெரும் நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது.
அதே போல், மே 17 இயக்கம் ஆண்டு தோறும் முன்னெடுக்கும் "முள்ளிவாய்க்கால்நினைவேந்தல்" சென்னை மெரினா கடற்கரையில் மிக எழுச்சியுடன் நடைபெற்று வந்தது. ஆனால், அரசின் நியாயமற்ற தடையால் அந்த நிகழ்வில் தற்பொழுது சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தவிரவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தமிழகம் எங்கும் பல்வேறு அமைப்புகள் ஆண்டுதோறும் பரவலாகக் கடைப்பிடித்து வருகின்றன.
முள்ளிவாய்க்கால் தரும் படிப்பினைகள்
தமிழகத்திலும், சர்வதேச அளவிலும் தமிழர்களின் நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை முள்ளிவாய்க்கால் நிகழ்வு தெளிவாக அடையாளம் காட்டி உள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்று முடிந்ததும், பச்சோந்திகள் சில மெல்லத் தலை தூக்கின. " படுகொலை நடந்து முடிந்து விட்டது. இனி மறப்போம், மன்னிப்போம். இது பகை மறக்கும் காலம்" என அருள்வாக்கு வழங்கத் தொடங்கினர். தமிழீழப் போராட்டத்தை எதிர்த்து அதை எவ்வளவு இழிவாகச் சித்தரிக்க முடியுமோ, அவ்வளவு கேவலமாக வெளிப்படுத்தியவர்கள் இவர்கள். அந்தச் சிங்களக் காடையர்களுக்கு இணையான துரோகத்தை இழைத்தவர்கள் இவர்கள். அறிவுலகிலும், சமூக வெளியிலும் நெளியும் இந்தப் புல்லுருவிகளை இனங்காண முள்ளிவாய்க்கால் நமக்கு உதவியுள்ளது.
தாய்த்தமிழகத்தின் பொறுப்பு
அடுத்து, தொடக்கத்திலிருந்தே தமிழீழ விடுதலைப் போருக்கு எதிரான நடவடிக்கைகளில் முனைந்து நின்றது, இந்திய அரசாங்கம்தான். ஈழ மக்களின் விருப்பத்திற்கு எதிராக 1987-ல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. அடுத்து அம்மக்களுக்கு எதிராக, சிங்களக் காடையர்களுக்கு ஆதரவாக, இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் எண்ணற்ற அட்டூழியங்களில் ஈடுபட்டது. புலேந்திரன் - குமரப்பா உள்ளிட்ட ஏழு போராளிகளின் சாவுக்குக் காரணமாக இருந்ததும், திலீபனின் அநீதியான மரணத்திற்குக் காரணமாக இருந்ததும் இந்தியாதான். தவிரவும், இன்று வரை சர்வதேச அரங்கில் இனப்படுகொலை புரிந்த சிறீலங்கா அரசுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு கொடுத்து அதைப் பாதுகாத்து வருவதும் இந்தியாதான். எனவே இந்திய அரசின் இத்தகைய தமிழீழ மக்களின் பாலான இன ஒதுக்கல் கொள்கையைக் கைவிடச் செய்ய, அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக மக்களுக்கு இருக்கிறது.
தமிழீழச் சிக்கலில் தெற்காசியச் சூழலில், இந்திய அரசின் பங்களிப்பு என்பது மிகவும் காத்திர மானது. எனவே இந்தியா, உதவி செய்யா விட்டாலும், ஈழத்தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படாமல் அழுத்தம் தர வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு இருக்கிறது. அதற்கேற்ப இந்தியாவின் தெற்காசிய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழீழ மக்களின் கடமை
அதே போல், தமிழீழமக்களின் முக்கியக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை தமிழீழத்தில் உள்ள மக்களின் கடமையாக இருக்கிறது.
(1) தமிழீழத்திலுள்ள சிங்கள இராணுவத்தைத் திரும்பப்பெறு!
(2) தமிழீழப் பகுதியைச் சிங்கள மயமாக்காதே!
(3) தமிழீழப் பகுதியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணி நிலங்களை மீண்டும் தமிழர்களுக்கே வழங்கு!
(4) காணாமல் அடிக்கப்பட்ட தமிழர்கள், சிறையில் வாடும் தமிழர்கள் ஆகியோரை வெளிக்கொண்டு வா!
(5) மக்கள் மீது கருப்புச் சட்டங்களை ஏவாதே!
- என்பன போன்ற கோரிக்கைகளுக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட வேண்டிய கடமை தமிழீழ சனநாயக சக்திகளுக்கு உள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் பொறுப்பு
சர்வதேச அரங்கில், அரசுகள் பலவும் தமிழீழ விடுதலைப் போருக்கு எதிராகத்தான் உள்ளன. ஆனால் உலகளாவிய அளவில் சனநாயக சக்திகளும், அறிவுத் துறையினரும், பிற விடுதலை இயக்கங்களும், முற்போக்கு அமைப்புகளும் தேசிய இனங்களின் விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றன. அத்தகைய சக்திகளின் ஆதரவைத் திரட்ட வேண்டிய பணி, புலம்பெயர்ந்த தமிழர்களின் முக்கியக் கடமையாக உள்ளது.
அதே போல்,
(1) தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை வெளிக்கொணர, பன்னாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
(2) தமிழீழத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
(3) சிறீலங்காவில் தமிழர் - சிங்களர் என இரண்டு தேசிய இனங்கள் உள்ளன என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
- என்பன போன்ற கோரிக்கைகளுக்குச் சர்வதேச மக்களின் ஆதரவைப் பெறத் தமிழகத் தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும் இணைந்து முயற்சிக்க வேண்டும்.
இன்றைய நிலையில் இறையாண்மை உள்ள அரசு, தமிழகத்திலும் இல்லை. தமிழீழத்திலும் இல்லை. இருப்பினும், எல்லாம் முடிந்து விட்டது எனச் சோர்ந்திடத் தேவையில்லை. நம்பிக்கை, மலைகளையும் நகர்த்த வல்லவை. எனவே இலக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கியாக வேண்டும்.
பத்தாண்டுகள் என்பது தனி மனித வாழ்வில் மிக நீண்ட காலம். ஆனால், வரலாற்றில் அது ஒரு துளி ! இனப்படுகொலைக்கு உள்ளான தேசிய இனங்கள், 50/60 ஆண்டுகள் கழிந்த பிறகும் வரலாற்றில் உரிய நீதியைப் பெற்றுள்ளன. எனவே, நீதிக்கான நெடும் பயணம் தொடரப்பட வேண்டும்.
நமது இலட்சியம் வெற்றி அடைய, இடைக்காலத் திட்டம், தொலைநோக்குத் திட்டம் -- என இரண்டும் தேவைப்படுகிறது. அதற்குத் தமிழீழத் தமிழர், தமிழகத் தமிழர், புலம் பெயர்ந்த தமிழர் எனும் ஆயுத எழுத்தை வலுப்படுத்தினால், விடியலை வென்றெடுக்கலாம்.
- கண.குறிஞ்சி