ஆரிய - திராவிட யுத்தமாகவே களத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல். மீண்டும் ஒருமுறை பாஜக அரசு அமைந்தால், அது எத்தகைய பேராபத்தை விளைவிக்கும் என்பதை, பாஜகவினர் பரப்புரையில் உதிர்க்கும் வார்த்தைகளே நமக்கு எச்சரிக்கையூட்டுகின்றன. வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவிக நகர் பகுதியில், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து ஏப்ரல் 1-ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்ட, திமுக நிர்வாகி தமிழ்வேந்தன், “மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம ஆட்டுக்கறியும் சாப்பிட முடியாது, மாட்டுக்கறியும் சாப்பிட முடியாது. கோழிக்கறியும் சாப்பிட முடியாது. தயிர் சாதம், புளி சாதம்,, சாம்பார் சாதம் மட்டும் தான் சாப்பிட முடியும்” என்று மக்கள் மத்தியில் பேசினார்.

தேர்தல் வெற்றிக்காக தரைமட்ட அளவுக்கு திமுக விமர்சனங்களை வைப்பதாக இந்த காணொளியைப் பகிர்ந்து பாஜகவினர் வசைபாடினர். ஆனால் அதுதான் நடக்கப் போகிறது என்பதை பிரதமர் மோடியே நேரடியாக எச்சரித்து விட்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்கள் லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வியுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்டிறைச்சியும், மீனும் சாப்பிட்டதை அரசியலாக்கியிருக்கிறார் பிரதமர் மோடி. “புனித சாவான் மாதத்தில் எதிர்க்கட்சியினர் இப்படி ஆட்டிறைச்சியும், மீனும் உண்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார் மோடி.

modi 371மக்கள் வீடுகளில் மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ அல்லது வாங்கிச் சென்றாலோ தாக்கியது போய், இப்போது எதிர்க்கட்சியினர் வீடுகளின் சமையலறை வரை நுழைய ஆரம்பித்து விட்டார்கள். அடுத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போல இறைச்சி சமைப்பதை கண்காணித்து தடுக்கவும், ஒவ்வொரு வீடாக சோதனையிடவும் மோடி ஒரு புதிய துறையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க 10 ஆண்டுகளில் மோடி அரசு சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. ஆனால் மதத்தின் பெயரால் யார் எதை உண்ண வேண்டும், எதை உண்ணக்கூடாது என்று பட்டியல் போட துணிந்து கொண்டிருக்கிறது பாஜக அரசு.

ஆனால் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்தலையொட்டி லோக்நிதி சி.எஸ்.டி.எஸ். நிறுவனம் மக்கள் மத்தியில் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. அதில் கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி கடுமையாக எகிறியிருக்கிறது என்று 71% பேர் கூறியுள்ளனர். வேலையின்மை விகிதம் 8%-மேல் அதிகரித்திருக்கிறது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கூறுகிறது. கொரோனா பேரிடரில்தான் 8%-ஐ தாண்டியது. இப்போதும் 8%-ஐ தாண்டியிருப்பது என்பது மிக மோசமான நிலை. குடும்பங்களின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது, கடன் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் 10% பேரிடம் 77% செல்வங்கள் குவிந்திருக்கிறது. சுமார் 67 கோடி ஏழைகளிடம் நாட்டின் மொத்த செல்வத்தில் 1% மட்டுமே இருக்கிறது. 10 ஆண்டுகால பாஜக செய்த சாதனைகள் இவைதான்.

ஆனால் இவற்றுக்கு தீர்வு காண திட்டம் தீட்டாமல், அடுத்தவர் தட்டில் என்ன உணவு இருக்கிறது என சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். அத்துடன், ஒவ்வொரு சட்டமாகத் திருத்திக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, ஒட்டுமொத்த அரசியலமைப்பையும் மாற்றி விடலாம் என்றும் திட்டம் போட்டிருக்கிறது பாஜக. இம்முறை 400 தொகுதிகளுக்கு மேல் வென்றால்தான், அரசியலமைப்பை திருத்த முடியும் என மார்ச் மாத தொடக்கத்தில் உத்தர கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே கூறினார். இப்போது அயோத்தி எம்.பி. லாலு சிங்கும் தேர்தல் பரப்புரையில் இதே கருத்தைக் கூறியிருக்கிறார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பா.ஜ.க.-வினர் 3 பேர் இக்கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இம்முறை 400க்கு மேல் வெல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கமாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆக, அரசியலமைப்பை தூக்கியெறிய பாஜக துணிந்து விட்டது என்ற எச்சரிக்கையை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தென் மாநிலங்களில் கால் பதிக்கவே தடுமாறும் பாஜக, வட மாநிலங்களை மட்டுமே வைத்து பெரும்பான்மை பெறுவதற்கான வழிகளையும் தேட ஆரம்பித்துவிட்டது. ஏற்கெனவே 888 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றத்தைக் கட்டிவிட்டார்கள். தேர்தலுக்குப் பின் தொகுதிகளை மறுசீரமைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அவ்வாறு மறுசீரமைக்கப்பட்டால் தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் 39-இல் இருந்து 31-ஆகக் குறையும். ஒட்டுமொத்த தென்மாநிலங்களும் 26 தொகுதிகளை இழக்கும். ஆனால் ஏற்கெனவே அதிக தொகுதிகளை வைத்திருக்கும் உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே 31 தொகுதிகளைக் கூடுதலாகப் பெறும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு ஏற்கெனவே நிதிப் பகிர்வில் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. இப்போது தொகுதிகளையும் குறைத்து தென் மாநிலங்களின் தேவையை இல்லாமல் ஆக்கச் செய்ய முயல்கிறார்கள்.

எச்சரிக்கையோடு பாஜகவை விரட்டி அடிப்போம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It