திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவைக் கூட்டம் 21.03.2024 வியாழக்கிழமை அன்று ஈரோடு பவானி சாலையில் உள்ள கே.கே.எஸ்.கே மஹாலில் நடைபெற்றது.
செயலவை கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார்.
கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் அறிமுக உரையாற்றினர்.
தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் காணொளி வாயிலாக சென்னையில் இருந்து கூடியிருந்த தோழர்கள் மத்தியில் நேரலையில் உரையாற்றினார். அவர் தனது உரையில் கழகம் கடந்து வந்த பாதை, ஆற்றிய பணிகள், நம் முன் இருக்கும் சவால்கள், பரப்புரையில் புதிய யுக்திகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம், சமூக வலைதள பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விரிவாக உரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து கழக மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் பாஜக அரசை வீழ்த்த வேண்டிய அவசியம் குறித்தும், திமுக கூட்டணியை ஆதரித்து தாங்கள் செய்த பரப்புரைகள் குறித்தும், அதில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதன் அவசியத்தை ஒட்டுமொத்தமாக செயலவையில் பேசிய நிர்வாகிகள் குறிப்பிட்டிருந்தாலும், சில தோழர்கள் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் வேட்பாளர் சூரிய மூர்த்தியின் ஜாதி வெறி பேச்சை குறிப்பிட்டு அந்த வேட்பாளரை ஆதரிப்பதில் நமக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
திமுக கூட்டணியை ஆதரிக்கும் அதே நேரத்தில் இந்த நாமக்கல் கூட்டணி கட்சி வேட்பாளரை மட்டும் ஆதரிப்பதை கழகத் தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி செயலவையில் 2 தீர்மானங்களை தோழர்கள் மத்தியில் எடுத்துரைத்து விரிவாக பேசினார்.
தோழர்களின் ஒட்டுமொத்த கரவொலியுடன் இரண்டு தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆதரிப்பது என முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது தீர்மானமாக நாமக்கல்லில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட ஜாதி வெறி பிடித்த வேட்பாளரை மாற்ற வேண்டும் என்றும், ஒருவேளை அந்த வேட்பாளர் மாற்றப்படாமல் அதே வேட்பாளர் போட்டியிடுவாரேயானால் நாமக்கல்லில் மட்டும் தேர்தலைப் புறக்கணிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டு தீர்மானங்களையும் விளக்கி கழகத் தலைவர் அவர்கள் மிகவும் விரிவாக உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கழகத் தலைவர் பதிலளித்தார்.
செயலவை கூட்டம் துவங்குவதற்கு முன்பு காலையிலேயே செயலவை நடைபெற்ற ஈரோடு கே.கே.எஸ்.கே மகாலுக்கு காவல்துறை குவிக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகளும் நேரில் வந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விட்டதால் செயலவை கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று எழுத்துப்பூர்வமாக கழக அமைப்புச் செயலாளரிடம் கடிதம் வழங்கினார்கள்.
ஆனாலும் கழகத் தலைவர் தேர்தலில் போட்டியிடாத எமது இயக்கத்திற்கு தேர்தல் நடைமுறைகள் பொருந்தாது என்று எடுத்துக் கூறினார். மேலும் திட்டமிட்டபடி இந்த செயலவை நடைபெறும் என்றும் கைது நடவடிக்கைக்கும் நாங்கள் தயார் என்றும் அறிவித்தார்.
தலைவரின் விளக்கத்தை ஏற்காது தேர்தல் அதிகாரிகள் கூடிய தோழர்கள் மீது தேர்தல் கால நடத்தை விதிகளின் கீழ் வழக்கை பதிவு செய்தார்கள்.
செயலவையில் நாமக்கல் வேட்பாளரை மாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றிய சில மணி நேரங்களில் கூட்டணி கட்சியின் வேட்பாளர் மாற்றப்பட்டார். எனவே நாமக்கல்லில் போட்டியிடும் மாற்றப்பட்ட கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து கழகம் அனைத்து தொகுதிகளைப் போல அந்தத் தொகுதியிலும் ஆதரவாக பரப்புரையிலும் வாக்கு செலுத்துவதிலும் ஈடுபடும்.
- திராவிடர் விடுதலைக் கழகம்