தமிழ்நாடு மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்! தமிழ்நாடு மாணவர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 30-11-2024 அன்று நங்கவள்ளி ஒன்றியம் வனவாசி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தக் கூட்டத்தில் மாணவர் கழகச் செயல்பாடுகள் குறித்தும், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா யோஜனா என்ற குலத் தொழில் திட்டத்தைப் பற்றியும் பல்வேறு வகையான மாணவர்கள் சார்ந்த சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது, மாணவர் கழகத் தோழர்களின் பல்வேறு கேள்விகளுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்க உரையாற்றினார். இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்ட மாணவர் கழக அமைப்பாளராக சர்மிளா, நங்கவள்ளி ஒன்றிய மாணவர் கழகப் பொறுப்பாளராக சுகந்தன் பிரபாகரன் ஆகியோரை கழகத் தலைவர் அறிவித்தார்.
பங்கேற்ற மாணவர் கழகத்தினர்:
சேலம் மாவட்டம் : சேலம் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்கள் ச.நாகராஜ், கவியரசு, மதிவதனி, சுகந்தன் பிரபாகரன், மா. சுசிகுமார், சர்மா, அருண்குமார், ஆனந்த், பாபு.
சென்னை மாவட்டம் : சென்னை மாவட்ட மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, அமைப்பாளர் இளவரசன், ச.நரேஷ் (எ) அழகிரி, ப.அன்பழகன், கா.செந்தாமரைக்கண்ணன், R.விக்னேஷ், மே.நித்தியேஷ், பிரவின்.
கோவை மாவட்டம்: கோவை மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் நவின் குமார். ஈரோடு மாவட்டம்: ர.சர்மிளா, செ.கார்மேகம்.
திருப்பூர் மாவட்டம் : மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் கனல்மதி.தஞ்சாவூர் - பேராவூரணி : தி.சியாம், பா.தங்கதீபக், பி.அகிலேஷ்வரன், கு.பிரபாகர், கா.கோபாலன்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த கலந்துரையாடல் கூட்டம் இரவு 7 மணி வரை நடைபெற்றது.
தீர்மானங்கள்:
30.11.24 சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதியைப் பாடமாகச் சேர்க்க தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைப்பது.
2) தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 2015-க்கு பிறகு நடத்தப்படாமல் இருக்கும் மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்தக்கோரி முற்போக்கு மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து பேரணி நடத்தி அரசின் கவனத்திற்குக் கொண்டு சேர்ப்பது.
3) 2023-24 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோரின் நியமனத்தில் 200 புள்ளி சுழற்சி முறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வகுப்பு வாரியாக நியமிக்கப்பட்டோரின் பட்டியலை RTI மூலம் கேட்டுப் பெறுவது.
4) மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வகுப்புவாரியாக சேர்க்கைப் பட்டியலை RTI மூலம் கேட்டுப் பெறுவது.
5) படித்து முடித்து வேலை வாய்ப்பிற்குத் தேவையான கூடுதல் படிப்புகளைப் பாடத்திட்டத்திலேயே சேர்த்து அதன்மூலம் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது.
6) பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது.
7) பொறியியல் படிப்பிற்கான சேர்க்கையில் SC/ST மாணவர்களுக்கான கட்டணமில்லா முறையை கல்லூரிகளில் உறுதிப்படுத்துவது.
8) அரசு மருத்துவர்கள் அரசு செலவில் முதுநிலை மருத்துவக் கல்வி பயின்ற பின் உள்நாட்டில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணிபுரிய வேண்டுமென்பதைப் போன்றே IIT மற்றும் IIM-ல் படித்தவர்கள் உள்நாட்டில் குறிப்பிட்ட காலம் பணிபுரிய அரசாணை வெளியிட ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது.
9) பாடத்திட்டக் குழுவில் மாணவர் பிரதிநிதியும் வேலை வழங்கும் நிறுவனப் பிரதிநிதியும் இருக்க வேண்டுமென இந்தக் கூட்டம் தீர்மானம் இயற்றுகிறது.
10) தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தொடக்கக் கல்வி “தாய்மொழிக் கல்வியாக” இருக்க வேண்டுமென தீர்மானம் இயற்றப்ப்படுகிறது.
11) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் Caste Anti-discrimination Cell செயல்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பெ.மு. செய்தியாளர்