தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட வேண்டுமென்று எஸ்.பி.ஐ.-க்கு இட்ட உத்தரவால், மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து ஆட்டம் கண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பணம் கொடுக்காத நிறுவனங்களை அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை வைத்து மிரட்டுவதும், தாராளமாக நன்கொடைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கிற 41 நிறுவனங்கள் 2,471 கோடி ரூபாயை பாஜகவுக்கு வழங்கியிருக்கின்றன. இதில் சோதனைக்கு பிறகு மட்டுமே 1,698 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வாரி வழங்கியிருக்கின்றன. 121 கோடி ரூபாய் சோதனை நடந்த 3 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல 33 நிறுவனக் குழுமங்கள் 172 முக்கியமான திட்டங்கள் மற்றும் திட்ட அனுமதிகளை அரசிடம் இருந்து பெற்றிருக்கின்றன. இந்த திட்டங்கள் மட்டும் ஒப்பந்தங்களின் மதிப்பு 3.7 லட்சம் கோடி ரூபாய் - இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு 3.7 லட்சம் கோடி ரூபாய்.இதற்கான பலாபலனாக இந்த 33 நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு அளித்த நன்கொடை 1,751 கோடி ரூபாய். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட தேர்தல் பத்திர எண்களையும், பாஜக பெற்ற நன்கொடையையும் ஒப்பிட்டு இந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண்.
ஊழலற்ற கட்சி என தனக்குத்தானே முத்திரை குத்திக்கொண்டு, வரலாற்றில் வேறெந்த கட்சிகளும் செய்யாத அளவுக்கு சட்டப்பூர்வமாகவும், தொழில்நுட்பப் பூர்வமாகவும் மெகா ஊழல்களை பாஜக செய்து கொண்டிருப்பது இவற்றின் மூலம் உறுதியாகிறது. எனவே பாஜக பெற்ற நன்கொடை மற்றும் ஒன்றிய அரசிடம் இருந்து ஒப்பந்தங்கள் பெற்ற நிறுவனங்கள், சோதனைகளுக்குப் பிறகு நன்கொடைகளை வாரி வழங்கிய நிறுவனங்களை சுதந்திரமான அமைப்பைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
குறிப்பாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி இந்நிறுவனம் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் 30 கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்கிறது. அதே ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் 10 கோடி ரூபாயை பாஜகவுக்கு கொடுத்திருக்கிறது. மீண்டும் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் 10 ரூபாய் என மொத்தம் 55 கோடி ரூபாயை பாஜகவுக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறது இந்நிறுவனம்.
இதற்காக இந்நிறுவனத்திற்கு 2 பெரிய பரிசுகள் கிடைத்திருக்கின்றன. முதலாவது பரிசு, ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் இணைப்புத் திட்ட ஒப்பந்தம். 2020-இல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில், கடந்த ஆண்டு நவம்பரில் நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிக் இயந்திரங்களின் உதவியோடு 17 நாட்களுக்குப் பிறகு, 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். விபத்துக்குள்ளான அந்த சுரங்கப்பாதையை அமைத்ததும் இந்த நவயுகா நிறுவனம்தான். இதுபோல நாடு முழுவதும் பல முக்கியமான நெடுஞ்சாலைகள், பாலங்கள் அமைக்கும் திட்டங்களின் ஒப்பந்தங்கள் இந்நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது.
எனவே பாஜக பெற்ற தேர்தல் பத்திர நன்கொடைகள் குறித்து உரிய விசராணை நடத்தப்பட வேண்டியது அவசியமான ஒன்று
- விடுதலை இராசேந்திரன்