திருப்பூரில் தற்போது பெரியார், அண்ணா சிலைகளை அதிமுக அரசு கூண்டமைத்து மறைத்துள்ளது. பெரியாரும் அண்ணாவும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு திருப்பூரில் நடந்தது என்பதனை நினைவூட்டும் வகையில் பெரியாரும் அண்ணாவும் ஒன்றாக இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக் கும் இந்த சிலைகளை அதிமுக எடப்பாடி அரசு கூண்டு போட்டு மறைத்துள்ளது.
எனவேதான் கூண்டு அமைக்கும் பணிகள் ஆரம்பித்த பொழுதே திராவிடர் விடுதலைக் கழகம் தன்னுடைய கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது. காவல் துறை, வருவாய் துறையிடம் தங்களுடைய கண்டனத்தையும், கூண்டு அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் கழகத்தின் கோரிக்கையும் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி பெரியார், அண்ணா சிலைகளைப் பார்க்க முடியாமல் மறைத்து தமிழக அரசு கூண்டை முழுமையாக அமைத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாவட்டத் தலைவர் முகில் ராசு ஆகியோர் தலைமையில் தோழர்கள் முத்து, மாதவன், அய்யப்பன், மாரிமுத்து, மோகன் ஆகியோர் 16.01.2021 அன்று வடக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் அமைக்கப்பட்ட கூண்டினை அகற்றக் கோரி மனு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கூண்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாத நிலையில் 18.01.2020 அன்று மாவட்ட ஆட்சியரிடம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்ட தலைவர் முகில்ராசு, தோழர்கள் ராமசாமி, சரஸ்வதி, நீதிராசன், பாண்டியநாதன், தனபால், முத்து, மாதவன், மோகன், ஈழமாறன், திராவிடர் கழகத் தோழர் கருணாகரன் ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்.
தொடர்ந்து இந்தக் கூண்டை அகற்றாமல் கழகத்தின் கோரிக்கையையும் பொது மக்களின் கோரிக்கையையும் இந்த அரசு தொடர்ந்து புறக்கணித்து வருமே யானால் கூண்டை அகற்றுவது பற்றி தோழமை அமைப்புகளுடன் கலந்தா லோசனை செய்து அடுத்தக் கட்ட போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் தீவிரமாக பரிசீலிக்கும் என்று திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
***
கரூரில் ஜாதி ஆணவப் படுகொலை: மதுரை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூரில் ஜாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் சமூக இளைஞர் ஹரிஹரனுக்கு நீதி கேட்டு மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 12.1.2021 அன்று மதுரையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், அதிமமுக பொதுச் செயலாளர்.
பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் ஆரோக்கிய மேரி, தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி தலைவர் மணி பாபா, ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கார்த்தி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் அவுதா காதர் பாட்சா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகப் பேச்சாளர் அப்பாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜீவ், குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்க நிறுவனர் விடுதலை நேயன், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாத்துரை, தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ் பித்தன், எஸ்டிபிஐ உள்ளிட்ட தோழமை அமைப்பு தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் சமூக மக்கள் தாமாக முன் வந்து பங்கேற்றார்கள்.
- விடுதலை இராசேந்திரன்