அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை என்று சங்பரிவாரங்கள் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளன. பொது சிவில் சட்டம் குறித்த சில வரலாற்றுத் தகவல்கள்: (19.2.2015 இதழ் தொடர்ச்சி)

சுதந்திரம் பெற்றபின் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில் சட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொடக்கத்தில் அரசியல் சட்டம் வழிகாட்டும் கோட்பாடு எண்.37 ஆக இடம் பெற்றிருந்த பொது சிவில் சட்டம், அரசியல் நிர்ணய சட்டம் நிறைவேறியபின் கோட்பாடு எண்.44 ஆக இடம் பெற்றது. அதன்படி குடிமக்கள் அனைவரும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமுல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். இதனால் தாங்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் ஆபத்துக்குள்ளாகுமோ என்ற அச்சத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களான முகமது இஸ்மாயில் சாகேப், நசிருத்தீன் அகமது, மகபூப் அலி பெய்க் மற்றும் பாக்கர் சாகேப் பகதூர் போன்றவர்கள் திருத்தங்கள் கொண்டு வந்து, தங்கள் தனிநபர் சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென கோரினர். அதற்கு அவர்கள் யூகோஸ்லாவியா, செர்பிய, குரேஷியா மற்றும் ஸ்லோவினிய நாடுகளில் சிறுபான்மை இனத்தவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை சுட்டிக்காட்டி, அதே போன்றதொரு பாதுகாப்பை இங்கேயும் கோரினர். இது குறித்து கருத்து தெரிவித்த அம்பேத்கர், மதத்திற்கு தனிநபர் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதையும், சட்டமியற்றுவதற்குகூட மதம் குறுக்கிடும் போக்கையும்  புரிந்து கொள்ள முடியவில்லையென்ற அவர், ஏற்றத் தாழ்வும், பாரபட்சமும், மற்ற பிற்போக்கு நிலையும் உள்ள சமூகத்தை சீர்திருத்தும் முயற்சிக்கு உரிமை என்ற பெயரால் எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க இயலாது என்று கூறினார். எனினும் ஒரு பொது சிவில் சட்டம் இயற்ற அரசுகள் முற்படும்போது குறிப்பாக முசுலீம் சமூகத் தினரின் கருத்தொற்றுமையுடன் செயல்படவில்லை யென்றால் குழப்பமே ஏற்படும் என்பதையும் கூறி எச்சரித்தார். அரசியல் சட்டத்தின் மூன்றாம் பாகமான அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பில் இடம் பெற்றிருக்க வேண்டிய இந்த கோட்பாடு, துணைக் குழுவில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனதால் வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற நான்காம் பாகத்தில் இடம் பெற்றது. வழிகாட்டும் நெறிமுறையில் உள்ள கோட்பாடுகள் 37 முதல் 51 வரை பெரும்பாலும் இன்றுவரை அமுல்படுத்தப்படாமல் உள்ளன.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, நாடு முழுவதும் இந்துக்களுக்கு ஒரு பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவர இந்து தனிநபர் சட்டங் களை தொகுக்க அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைத்தார். பெண்களுக்கு சம உரிமை, சொத் துரிமை, விவாகரத்து உரிமை வழங்க வேண்டு மென்பதில் அம்பேத்கருடன் நேருவும் ஒத்த கருத்து கொண்டிருந்தார். அத்தகைய கருத்துகளையொட்டி அம்பேத்கர் முயன்று உருவாக்கிய மசோதா இந்து பழமைவாதிகளிடமும், இந்து மகா சபையினரிடமும் (இன்றைய பிஜேபியின் முன்னோடி) கடுமையான கண்டனத்தை சந்தித்தது. அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் இந்த மசோதா இந்து பாரம்பரியத்துக்கு எதிரானது என்றும், ஒவ்வொரு இந்து குடும்பத்தையும் பாதிக்கும் என்று கூறியதோடு, மசோதா நிறைவேறினாலும் சட்ட அங்கீகாரம் பெற தன்னுடைய கையெழுத்து கிடைக்காது என்பதையும் உணர்த்திவிட்டார். பெண்களைத் தவிர பெரும்பாலான காங்கிரஸ்உறுப்பினர்களும், எதிர்ப்பாக இருந்தனர். எனவே எவ்வித விளக்கமுமின்றி மசோதா கைவிடப் பட்டது. இதை எதிர்த்து சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், தன் பதவியை ராஜினாமா செய்தார். மசோதாவை எதிர்க்க வேண்டுமென்று காங்கிரஸ்கட்சியின் தலைமைக் கொறடா உத்தரவு பிறப்பித்தார். அதை ஏற்றுக் கொண்டார். நேரு, விசுவாசமில்லாத தலைமைக் கொறடாவுக்கு விசுவாசமான பிரதமர் என காட்டமாக அம்பேத்கர் விமர்சித்தார்.

1952இல் நடைபெற்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான நேரு, இந்து தனி நபர் சட்டங் களில் தேவையான மாற்றங்களுடன் சட்டங்களை கொண்டு வந்தார். 1954இல் கொண்டுவரப்பட்ட சிறப்பு திருமண சட்டத்தின் அடிப்படையில் எவரும் திருமணத்தை பதிவு செய்யலாம். அதன் மூலம் அவரவர் மதம் சார்ந்த தனிநபர் சட்டம் அனுமதிக்க வில்லையென்றாலும் வாரிசுரிமை, மரபுரிமை போன்றவற்றை பெற வழி செய்யப்பட்டது. எனினும், இந்த சட்டப்படி பதிவு செய்வதை முசுலீம் மத குருமார்கள் பாவம் என்று கூறி எதிர்த்தனர். அதன் பின் இந்து திருமண சட்டம் 1955இல் கொண்டு வரப்பட்ட, பலதார மணம் தடை செய்யப்பட்டது. தத்தெடுத்தவர் பிள்ளையின் தாயாரை, தத்தெடுப்பவர் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை தடுக்கும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் ஆகியவை 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. முசுலீம், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் கிருத்துவர்கள் தவிர ஏனைய அனைவரும் இந்து என்றே வகைப்படுத்தப்பட்டனர். இறைவன் தந்த குரானும், நபிகள் நாயகம் கூறிய வார்த்தைகளுமே ஷரியத் சட்டத்தின் அடிப்படை என்பதால், ஒவ்வொரு முசுலீமும் அதனை கடைபிடிப்பது கட்டாயம் என்று முசுலீம் சமூகம் கருதியதால் முசுலீம் தனிநபர் சட்டத்தில் அரசு குறுக்கீடு ஏதும் செய்யவில்லை. அதேபோன்று சீக்கியர்களுக்கு கிரந்தசாகிபும், கிருத்துவர்களுக்கு பைபிளும், பார்சி களுக்கு ஜெண்ட் அவெஸ்தாவுமே தனிநபர் சட்டங் களுக்கு அடிப்படையாக இருந்தன. மத சட்டங்கள் அனைத்துமே பெண்களை கீழ்நிலையிலேயே வைத்துள்ளன. பெண்கள் அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் கோரும் பாலின சமத்துவத்தை ஏற்பதில்லை. மத அடிப்படைவாதிகளின் பேச்சும் செயலும் பாலின சமத்துவத்திற்கு எதிராகவே உள்ளன. பாலின சமத்துவத்தையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் பெண்களுக்கு உறுதிப்படுத்தாமல் ஒரு பொது சிவில் சட்டத்தை நோக்கிப் போக முடியாது.

நெருக்கடி தந்த நீதிமன்ற தீர்ப்புகள்

1985க்குப் பிறகு வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு களில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் தேவையை மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. ஷரியத் சட்டத்தையொட்டி இந்த தீர்ப்புகள் வழங்கப் பட்டதால் முசுலீம் சமூகம் நெருக்கடிக்கு ஆளானது. பிரசித்தி பெற்ற ஷாபானு வழக்கு விவாகரத்து பெற்ற முசுலீம் பெண்கள் ஜீவனாம்சம் குறித்ததாகும். 73 வயதான ஷாபானு திருமணமாகி 40 வருடங்கள் கழித்து, ஷரியத் சட்டப்படி மும்முறை தலாக் சொல்லப்பட்டு விவாகரத்தானவர். அவருக்கு சட்டப்படி இத்தா காலமான மூன்று மாதத்திற்கு மட்டும் ஜீவனாம்சம் தரப்பட்டது. தனது எஞ்சிய ஆயுட்காலத்திற்கு வேறு ஆதரவில்லையென்பதால் குற்றவியல் சட்டம் பிரிவு 125இன்படி தனக்கு ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்சநீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்றுக் கொண்டு ஜீவனாம்சத்தை அவரது முன்னாள் கணவர் தர வேண்டுமென தீர்ப்பு தந்தது. ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, முசுலீம் சமூகம் நாடு முழுவதும் கடுங்கண்டனத்தையும், போராட் டத்தையும் நடத்தியது. எனவே பிரதமராகவிருந்த ராஜீவ் காந்தி முசுலீம் சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் 1986இல் முசுலீம் பெண்கள் (விவகாரத்து பாதுகாப்பு) சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார். இதன்படி விவாகரத்தான முசுலீம் பெண்ணுக்கு அவருடைய சொத்தை யார் அடைவதற்கு உரிமை பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தரவேண்டும் அல்லது சொத்து ஏதுமின்றி ஆதரவற்று இருந்தால் வக்ப் போர்டு பராமரிப்புக்கான தொகையை வழங்க வேண்டும். இதன் மூலம் இத்தா காலத்திற்குப் பிறகு ஜீவானாம்சம் தரும் பொறுப்பிலிருந்து கணவர் விடுவிக்கப்பட்டதோடு ஷரியத் சட்ட அம்சமும் பாதுகாக்கப்பட்டது. எனினும் ஷாபானு வழக்கு தொடர்பான தீர்ப்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்திய அம்சம் கணக்கில் கொள்ளப்படவில்லை. எனவே சட்டத்தின் முன் பாலின வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்ற கோட்பாடு மீறப்பட்டுள்ளதாக விமர்சனமும் எழுந்தது. இந்தப் பிரச்சினையில் ஒரு இந்துப் பெண்ணுக்கு கிடைக்கும் சலுகை முசுலீம் பெண்ணுக்கு மறுக்கப்படுவதாக பெண்களின் அமைப்புகள் எதிர்ப்பை முழங்கின.

அதேபோன்று 1995இல் சரளா முட்கல் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சகாய் இரண்டாம் திருமணம் செய்ய வேண்டுமென்பதற்காக முசுலீமாக மதம் மாறி திருமணம் செய்வது குற்றவியல் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று தீர்ப்பு வழங்கினார். இந்து திருமண சட்டம் ஒருதார மணத்தை வலியுறுத்துவதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மதம் மாறுவதைத் தடுக்க வேண்டுமானால், ஒரு பொது சிவில் சட்டம் மத்திய அரசு நிறைவேற்றுவது அவசியம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டார். வேறு சில தீர்ப்புகளும் இதே காலத்தில் ஷரியத் சட்டத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வந்தன. வலதுசாரி இந்து பழமைவாதி களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டு மென்ற அவர்களின் வாதத்துக்கு இந்த தீர்ப்புகள் வலுசேர்த்தது. மேலும் பெண்கள் அமைப்புகளும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் டூனிசீயா, துருக்கி போன்ற முசுலீம் நாடுகளில் பலதார மணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதையும், பாகிஸ்தான், சிங்கப்பூர், சவுத் யேமன் போன்ற நாடுகளில் ஷரியத் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்திருப்பதையும் சுட்டிக்காட்டி ஷரியத் சட்டத்தில் தகுந்த மாற்றங்கள் கொண்டுவர முசுலீம் சமூகத் தினரை வற்புறுத்தினர்.

இந்து பழமைவாதிகளும் சங்பரிவாரங்களும் பாரம்பரியமிக்க இந்து தனிநபர் சட்டத்தின் அடிப்படையிலேயே பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தியது, முசுலீம்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது. பாபர் மசூதி இடிப்பும், அது தொடர்பான வழக்கில் இதுவரை யாரும் தண்டிக்கப் படாமல் இருப்பதும், மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்டுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ள நிலையும், அவர்களை ஒரு பலவீனமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இருக்கும் தனிநபர் சட்டங்களிலேயே தங்கள் தனிநபர் சட்டம் மேலானது, உயர்வானது, பெண்களுக்கு கூடுதல் உரிமை தருகிறது என்று முஸ்லீம்கள் வாதாகிறார்கள். இதை மாற்றும் பொறுப்பு அரசிடமே உள்ளது. ஒரு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதில் அம்பேத்கர் நிதானம் காட்டினாலும் உறுதியுடன் இருந்தார். வேண்டுமானால் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு செய்கிறவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கலாம் என்றும் கூறினார். கோவாவில் அத்தகைய நிலை இருக்கிறது. போர்த்துக்கீசிய குடும்ப சட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டமென்ற ஒப்பந்த அடிப்படையிலேதான் 1961இல் கோவா மாநிலம் விடுதலை பெற்றது. பின்னர் பொதுவான தனிநபர் சட்டத்தை கோவா அரசு கொண்டு வந்தாலும், அதை ஏற்பதாக அறிவிப் பவருக்கு மட்டுமே அமுலாகும் என்பதும் சேர்க்கப் பட்டது.

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அந்தந்த சமூகத்திலிருந்து பெண்களே எதிர்க்க முன் வரவேண்டும். அதுவே ஒரு பொது சிவில் சட்டத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடியாக இருக்கும். குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதுபோல் ஆர்.எஸ்.எஸ். தனது பரிவாரங்கள் மூலம் பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று எழுப்பும் குரல் உள்நோக்கமுடையது. படிப்படியாக அனைத்து மதத்தினரின் மனமாற்றத்துடன் கொண்டு வர வேண்டிய பொது சிவில் சட்டத்தை இந்துமத அடிப்படையில் கொண்டுவர வேகம் காட்டினால், தேசம் மற்றும் மக்களின் ஒற்றுமையை உடைக்கும் கலவரத்தின் விதையாகவே அது இருக்கும்!

ஆதாரம்: இணையதளங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் மாத இதழ்

Pin It