கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நீங்கள் பறந்து வருவீர்கள் என நினைத்தோம், தோழர்களே.

kovai violence father22-ஆம் தேதி இரவு சசிகுமார் எதன் காரணத்தால், யாரால் கொல்லப்பட்டாரோ! ஆனால் அவர்கள் தாமதிக்கவில்லை. உடனே அதனை இசுலாமியர்களுக்கு எதிராக திருப்புவதென முடிவெடுத்தார்கள். அது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. தலைமையில் கேட்க வேண்டும், மேலிருந்து உத்தரவு வர வேண்டும் என்பதில் அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.

இந்து முன்னணியும் அமைப்புதான். அதற்கென அமைப்பு முறைகள் உண்டு. ஒரு சம்பவத்தில் அவர்களுக்கிருக்கும் ஒரே மாதிரியான குரலும், ஒரே மாதிரியான செயல்பாடும் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறதென்றால் அது அவர்களின் அமைப்பு பலத்தால்தான்.

ஆக, 22-ஆம் தேதி நள்ளிரவின் ஒரு சில மணி நேரங்களுக்குள் அவர்களால் தெளிவாக திட்டமிடப்பட்டு  23-ஆம் தேதி அதிகாலையில் துணிச்சலாக செயல்பட முடிந்தது. ஓயாது ஒலித்த அவர்களின் தொலைபேசியால் ஒரு கடையும் திறக்கவில்லை, ஒரு வாகனமும் ஓடவில்லை. விடிவதற்கு முன்பே கோவையும், திருப்பூரும் மயான அமைதிக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டது.

நாங்கள் விழித்தெழுந்து வீட்டிலிருந்து வெளிவந்தபோதே அச்சம் எங்களை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. மளமளவென குவிந்த அந்த கூட்டத்தைக் கண்டு 1998-இன் பயத்தால் எங்கள் நெஞ்சு பதைக்கத் தொடங்கியது.

ஆனாலும் எங்களுக்கு ஒரு அசட்டு நம்பிக்கையிருந்தது!

எங்களுக்கிருந்த பயம் உங்களுக்கும் இருக்கும்தானே. 1998-இன் வலியையும், பிரச்சினைகளையும் காலம் தாழ்ந்தேனும் “மௌனத்தின் சாட்சியம்” மூலம் நீங்களும் அறிந்ததுதானே. இனியொரு பாதிப்பு நடக்கா வண்ணம் நீங்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவீர்கள் என்பதே எங்கள் நம்பிக்கையாய் இருந்தது.

இயக்கங்கள் பலவாக இருந்தாலும் கோவையில் பொதுவுடைமை அமைப்புகள் நிறைந்துதானே இருக்கின்றன. தொழிலாளி மக்கள் இன்னும் உங்கள் பின்னால்தானே இருக்கிறார்கள். இன்னும் இருக்கிற பஞ்சாலைகள் அனைத்திலும் பொதுவுடைமை சங்கங்களில்தானே தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பிரிக்கால் மற்றும் L.M.W ஆலைகளில் வீரியமிக்க தொழிற்சங்கங்கள் இருக்கின்றனவே. ஆகவே, அவர்களைக் காட்டிலும் அதிகம் பேரை நம்மால் அணிதிரட்ட முடியுமென்று நாங்கள் நம்பினோம்.

இந்து முன்னணி தலைவர்களின் செல்போன்கள் இடையறாது ஒலித்ததுபோல் பொதுவுடைமை இயக்கத் தலைவர்களின் போன்களும் செயல்படும் என்றிருந்தோம். தமிழகத்திலுள்ள அனைத்து பொதுவுடைமை தலைவர்களும் கோவையை நோக்கி சிட்டாக பறந்து வருவார்கள்: அவர்களும், அவர்களின் பாட்டாளி வர்க்கமும் இசுலாமியர் வாழ்விடங்களை சுற்றி அரணாக நிற்பார்கள்; எந்த சக்தியாலும் அந்தக் கோட்டையை நெருங்க முடியாது என நம்பினோம்.

“தமிழத்தை குஜராத்தாக மாற்றுவோம்” என அவர்கள் சொல்வதற்கு முன்பே “தமிழ்நாடு குஜராத் அல்ல! தமிழகம் இந்தியாவுக்கே முன்மாதிரி” என எங்கள் பொதுவுடமைத் தோழர்கள் முழங்கி எச்சரிப்பார்கள் என்றிருந்தோம்.

எல்லாம் வீணாகப் போயிற்று. எந்த அனுபவமும் நம்மை வழி நடத்தவில்லை. எல்லாம் நடந்த பிறகு என்ன செய்யலாமென ஆலோசனைக் கூட்டம் நடத்துகிற அளவில்தான் நிலமை இருந்ததைக் கண்டு நெஞ்சம் நொறுங்கிப் போனோம்.

அந்த ஆலோசனைக் கூட்டங்களைக்கூட பொதுவுடைமை இயக்கங்கள் முன்னெடுக்கவில்லை. மற்றவர்கள் முன்னெடுத்ததில் கோவையிலாவது பொதுவுடைமை இயக்கங்கள் கலந்துகொண்டு ஆறுதலளித்தன. ஆனால், திருப்பூரில் தலைமையிடம் கேட்டு முடிவு எடுக்கிறோம் எனக் கூறியதைக் கேட்டு நாங்கள் நிலைகுலைந்ததை என்ன சொல்ல?

மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும் அவநம்பிக்கையும், அதிருப்தியும்!

kovai violenceஇதற்கு மேலும் செய்வதற்கு நிறைய இருக்கிறதுதானே தோழர்களே! அச்சத்தால் உறைந்திருக்கும் இசுலாமியர் பகுதிகளுக்கு நீங்கள் வரலாம். நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தரலாம். இந்து முன்னணியின் சதிக்கு பலியாகிக் கிடக்கும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் மதப் பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியல் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம். மத நல்லிணக்க அமைதிப் பேரணி மற்றும் நிகழ்வுகளை நடத்தலாம்.

பொதுவுடைமைத் தலைவர்களும், முன்னணியாளர்களும் தொடர்ச்சியாக இசுலாமிர்களின் மத்தியில் செயல்படுவதன் மூலமாக இசுலாமியர் மத்தியிலும் நல்ல அம்சங்களை மலரச் செய்யலாம். ஆரம்பகால பொதுவுடமைத் தோழர்கள் இப்படித்தானே மக்களிடம் ஐக்கியமானார்கள். பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச் சென்று அவர்களோடு ஒன்றிணைந்தார்கள். மக்களோடு மக்களாய் வாழ்ந்தார்கள். மக்களின் இயக்கங்களாக பொதுவுடைமை இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள்.

இப்போதும் இதைச் செய்யலாமே தோழர்களே! அனைத்து தரப்பு மக்களிடமும் மதப் பயங்கரவாதத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகளை இணைத்து கலை இலக்கியப் பிரச்சார வடிவங்களை மேற்கொள்ளலாம்.

இன்னும் எவ்வளவோ செய்யலாமே தோழர்களே! இதற்கான எந்த அறிகுறியும் இல்லையே தோழர்களே! மெல்ல மெல்ல எங்களை ஆக்கிரமிக்கும் அவநம்பிக்கையையும், அதிருப்தியையும் ஒழிக்க ஏதாவது செய்யுங்கள். இல்லையேல் எங்களைப் போன்ற ஒடுக்கப்படுகிற மக்களின் அழிவில் நீங்களும்தானே அழிய வேண்டும். ஆண்டைகளுக்கு சேவகம் செய்ய பொதுவுடைமை இயக்கம் அவசியப்படாதே!

- திருப்பூர் குணா