hijab karnatakaகர்நாடகாவில் பல பள்ளிகளில் ஹிஜாப் அணியும், மாணவிகளை வகுப்பறையின் வாயில்களிலேயே நிறுத்தும் போக்கு நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, திட்டமிடப்பட்ட அரசியல் லாபத்த சங்பரிவார்களுக்கு கொடுத்து வருகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு சமூகம் குறிவைக்கப்படுவது என்பது இது முதல் தடவையல்ல என்றாலும், இம்முறை தென் மாநிலங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தான் உற்று கவனிக்க வேண்டும்.

இது அனைத்தும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் தொடங்கியது, அங்கு ஹிஜாப் அணிந்த மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவர்கள் ஹிஜாபை அகற்றும் வரை தனி அறைகளில் அமருமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. பின்னர், ஹிஜாப் அணிந்ததால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெரும்பான்மை வலதுசாரிகள் முன்வைக்கும் வாதங்கள் அனைத்துமே, பல்வேறு சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் அரசியலமைப்பு ரீதியாக மறுக்கப்படுகின்றன என்பது தான் உண்மை. அரசியலமைப்பு மாணவர்களுக்கு அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஆடை அணியும் உரிமையை உத்தரவாதம் செய்வது மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு ஆவணத்தையும் எதிர்த்து (அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பைக் கூறலாம்) நீதிமன்றத்தில் வழக்கு நடத்தலாம் என்பது சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட ஒன்றாகும். சட்டத்தின் படி. எனவே, இந்த வழக்கில், முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைகளுக்குள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் அரசின் ஆடைக் கட்டுப்பாடு உத்தரவு, அரசியலமைப்பிற்கு எதிரான ஒன்றாகும்.

கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால். பிரச்சினையின் பதற்றம் எந்த நேரத்தில் முடிவடையும் என்று தெரியவில்லை. இந்த வழக்கில் ஹிஜாபுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், ஒருவர் விரும்பிய ஆடையை அணியும் உரிமை இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமை என்றும், கடந்த காலங்களில் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், அதற்கு எதிராக வாதாடிய மற்றொரு மனுதாரர் கல்வி நிறுவனங்களுக்கு தலையில் முக்காடு மற்றும் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் மாநில அரசின் ஆடைக் கட்டுப்பாடு விதிகளை, சட்டப்பூர்வமாக நிரூபிக்க முயன்றார்.

ஆனால், அவர்களால் அதில் போதுமான ஆதாரங்களை எடுத்து வைக்க முடியவில்லை. ஏனென்றால், இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில், அனைவருக்கும் அவர்களுடைய மத நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அரசியல் சாசன சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. இது தான் இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையாகும். பிரான்சைப் போலல்லாமல் மற்றவர்களின் நடைமுறைகளில் தலையிடாமல், ஒவ்வொரு மதமும் அதன் விதிமுறைகளைப் பின்பற்ற அனுமதி அளிக்கிறது. அது இந்தியாவின் ஒற்றுமை.

இவ்வளவுக்கு வாதங்களுக்கு மத்தியில், நமக்கு ஒரு கேள்விகள் எழுகின்றன – ஹிஜாப் தான் உண்மையான பிரச்சனையா? இது இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை களங்கப்படுத்துகிறதா? ஹிஜாப் பழமைவாதத்தையோ அல்லது தாராளவாதத்தையோ தொந்தரவு செய்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும்.

ஹிஜாப் தான் உண்மையான பிரச்சனையா?

கர்நாடகா போன்ற மாநிலங்களில் சங்பாரத்தினர், இந்து பெண்களையும் ஜீன்ஸ், ஸ்கர்ட் அணியும் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதும், அதேப்போன்று தீபாவளி விளம்பரத்திற்கு சேலைக்குப் பதிலாக குர்தா அணிந்து வரும் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர். மேலும் அவர்களுக்கு ஒரு பெண் தன்னை விரும்பி மறைத்துக் கொள்கிறாள் என்பது பிரச்சனையல்ல, இந்திய முஸ்லீம் பெண்கள் கல்வி கற்கிறார்கள், முன்னேறுகிறார்கள், தங்கள் உரிமைகளுக்காக நிற்கிறார்கள், உலகம் முழுவதும் அவர்களின் துணிச்சலுக்காகப் பாராட்டப்படுகிறார்கள், அவர்கள் செல்லும் இடமெல்லாம் தடம் பதிக்கிறார்கள் என்பதே மையப் பிரச்சினை.

இஸ்லாமிய பெண்கள் தங்கள் அடக்கத்தை, தங்கள் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்கிறார்களா என்று பார்த்தால், எந்தப் போராட்டங்களிலும் விட்டுக் கொடுப்பதில்லை. ஒரு நவீன பெண்ணாக இருப்பதற்காக அவர்கள் தங்கள் கலாச்சாரத்தை சமரசம் செய்ய வேண்டியதில்லை என்பதை அவர்கள் உற்று நோக்குகிறார்கள். நவீனத்துவம் என்பது வேர்களை மறப்பது என்பதல்ல என்ற உண்மையை அவர்கள் புரிந்து செயல்படுவது தான், சங்பரிவார்களின் கண்களை உறுத்துகிறது.

ஹிஜாப் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை களங்கப்படுத்துகிறதா?

இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்தியா ஒரு இறையாண்மை, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு. இது ஒவ்வொரு நபரும் அவரவர் விருப்பப்படி மதத்தை கடைப்பிடிக்கவும், பின்பற்றவும் அனுமதிக்கிறது. அரசியலமைப்பின் 21வது பிரிவு, நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை உள்ளடக்கிய அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கிறது. பிரிவு 15 மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதைத் தேர்வுசெய்யக்கூடிய நாட்டில், ஒரு முதல்வர் காவி நிறத் தொப்பியை அலுவலகத்திலும் வெளியிலும் அணிவதைத் தேர்வுசெய்யக்கூடிய நாட்டில் தான், ஹிஜாப் அணிவது மிகவும் அவமானகரமானதாகத் தெரிகிறது.

உண்மையைச் சொன்னால், பாசிசவாதிகள் மதச்சார்பின்மை பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரல் ஒரு சமூகத்தை குறிவைப்பதும், தேசத்தை ஒரே மதமாக மாற்றுவதும், எந்த வழியில் முடியுமோ, அந்த வழியில் எல்லாம் அதை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதே அவர்களின் நோக்கமாக இருந்திருந்தால், இரு மதங்களுக்கு இடையே நல்லுறவைக் காட்டும் விளம்பரங்களுக்கு எதிராக, லவ்-ஜிஹாத் போன்ற அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்???

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு, வலதுசாரிகள் முஸ்லீம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆணாதிக்கத்திலிருந்து அவர்களை விடுவிக்கவும் முத்தலாக் சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கூக்கிரலிட்டார்கள். தற்போது, அதே முஸ்லிம் பெண்களின் கல்வி கற்பதைத் தடை செய்ய வேண்டும் என்பதற்காக ஹிஜாப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள். இதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. இந்திய நாடு வழங்கியுள்ள அனைத்து மக்களுக்குமான உரிமைகளை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது. நாம் தொடர்ந்து ஹிஜாப் உரிமைக்காக போராட வேண்டும். இதன்மூலம், முஸ்லிம் பெண்களிடம் தைரியம் தான் அதிகரித்துள்ளதே தவிர, பயம் கொள்ளவில்லை. ஹிஜாப் எனது உரிமை!

- நெல்லை சலீம்

Pin It