அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாலோர் தகுதி திறமைக்கு உரிமை கொண்டாடும் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினராக இருப்பார்கள். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்பவரும் ஒரு பார்ப்பனர்தான். ஏழை எளிய மக்கள், வங்கியில் கடன் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், தொழில் நிறுவனங்களுக்கு பெரும் தொகையை வாரி வழங்குவதும், பிறகு அதை திரும்பி வராத கடன் என்று தள்ளுபடி செய்வதும் - எந்தத் தடையும் இல்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி இப்போது அதிர்ச்சியான தகவல்கள் வந்துள்ளன. 2008 மார்ச் நிலவரப்படி ரூ.455 கோடியாக இருந்த திரும்பி வராத கடன் தொகை, 2014இல் ரூ. 2.17 இலட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. 6 ஆண்டுகளில் ‘திரும்பி வராத’ கடன் தொகை 500 மடங்கு அதிகரித்துள்ளது. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேதண்திரோட்கர் என்ற ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற தகவல். பெரும் தொழில் நிறுவனங்கள், அரசியல்புள்ளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று முறைகேடான வழிகளில் ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் வங்கிகள் நடத்தியுள்ள முறைகேடுகளே இதற்குக் காரணம். இது குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த பத்திரிகையாளர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுதாரர் மனுவில் பல்வேறு முறைகேடுகளை சுட்டிக்காட்டியுள்ளார். 1969ஆம் ஆண்டு வங்கிகள் முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பொதுத் துறை வங்கிகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தமது தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விதியை பொதுத் துறை வங்கிகள் பின்பற்றுவது இல்லை. ரிசர்வ் வங்கியும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த வங்கிகள் பெரும் தொகையை யார் யாருக்கு கடனாக வழங்கியது என்பதை கண்காணிக்கவும் இல்லை. ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், பொதுத் துறை வங்கி அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்தியுள்ள சதி என்று கேதண்திரோட்கர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ‘திருப்பித் தர வேண்டாம்’ என்ற நிபந்தனையோடு உரிய பங்குத் தொகையை பேரம் பேசிக் கொண்டு பெரும் தொழிலதிபர்களுக்கு வங்கி அதிகாரிகள் வழங்கும் இந்த கடன் தொகையை சரிகட்ட சில தில்லுமுல்லுகள் அரங்கேற்றப்படுகின்றன. பெயரளவுக்கு மிகக் குறைவான ஒரு தொகையை வசூலித்துக் கொண்டு, அதற்கு ‘ஒரே முறையில் தீர்வு’ என்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். இப்படி ‘ஒரே முறையில் தீர்வு’ திட்டத்தின்கீழ் திரும்பப் பெறும் ‘சிறு தொகையை’க் கணக்கில் காட்டி, வாராக் கடன்களை திரும்ப வசூலித்துவிட்டதாக ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பதிவு செய்து விடுகிறார்கள்.

விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் உள்ளிட்ட 406 நிறுவனங்கள் வங்கிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.70,300 கோடி. வாராக் கடன்கள் குறித்து சி.பி.அய். வழக்குகள் பதிவு செய்தாலும், வங்கிகளின் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து விசாரணை நடத்த முடிவதில்லை. காரணம், இதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசோ, இதற்கு அனுமதி வழங்குவது இல்லை. உதாரணமாக ‘பயோதார் இன்டஸ்ட்ரீஸ்’ என்ற உயிரி எரி பொருள்களை (பயோ டீசல்) தயாரிக்கும் நிறுவனம் அய்.டி.பி.அய். வங்கியிடம் ரூ.1100 கோடி கடன் வாங்கியது. அது ‘திரும்பி வராத கடனாக’ வங்கி நிர்வாகம் அறிவித்து ஏமாற்றியுள்ளது. இது தொடர்பாக வழக்கு 2011இல் சி.பி.அய். வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அய்.டி.பி.அய். வங்கியின் உயர் அதிகாரியை சி.பி.அய். விசாரிப்பதற்கு அரசு அனுமதி கிடைக்கவில்லை. இதேபோல் ‘மாகுவா மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி கொடுத்த ரூ.2700 கோடியை ‘திரும்பி வாராத கடனாக’ அறிவிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக அந்த வங்கி உயர் அதிகாரியை சி.பி.அய். விசாரிக்க, கடந்த காங்கிரஸ்ஆட்சியும் மோடி ஆட்சியும் அனுமதி வழங்கவில்லை. பார்ப்பன-பனியா கூட்டுக் கொள்ளைக்கு இவை சில சான்றுகள் மட்டுமே.

Pin It