கடந்த 19.02.2023 அன்று JNUவில் இடதுசாரி மாணவர் அமைப்பினர் மீது ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குதல் தொடுத்து பலத்த காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

முற்போக்கு மாணவர்கள் இணைந்து 100 மலர்கள் என்ற மாணவர் குழுவை அங்கு நடத்தி வருகின்றார்கள். புத்தகம் படிப்பது, சிறந்த திரைப்படங்களை திரையிட்டு அதன் மீது விமர்சனங்களை முன்வைப்பது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகின்றது.

ஞாயிற்றுக் கிழமை மாலை 9 மணிக்கு 100 மலர்கள் குழுவினர் TEFLAS என்ற மாணவர் சங்கத்தின் அலுவலக அறையில் 'ஜானே பி தோ யாரொ' என்ற இந்தி திரைப்படத்தைத் திரையிட இருந்தனர். அப்போது அங்கு வந்த ஏ.பி.வி.பி ரவுடிகள் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளைக் தாங்கள் அதே இடத்தில் கொண்டாடப் போவதாக சொல்லி ரகளை செய்திருக்கின்றார்கள்.

அதை முற்போக்கு மாணவர்கள் எதிர்த்த போது அவர்களை மிகக் கடுமையாக தாக்கியதோடு அங்கே வைக்கப்பட்டிருந்த மார்க்ஸ், லெனின், பெரியார் போன்றோரின் படங்களையும் சேதப்படுத்தி உள்ளனர். இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் காயம் அடைந்திருக்கின்றார்.jnu studentsஜேன்யுவில் ஏ.பி.வி.பி ரவுடிகள் காலித்தனத்தில் ஈடுபடுவது இது முதன் முறை அல்ல. இதற்கு முன்பும் பல முறை நடந்துள்ளது.

கருத்துரிமைக்காகவும், ஜனநாயகத்தைக் காக்கவும், பாசிசத்திற்கு எதிராகவும் குரல் கொடுப்பதில் இந்தியப் பல்கலைக்கழகங்களிலேயே சிறந்து விளங்கும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை ஒழித்துக் கட்ட காவி பாசிஸ்ட்டுகள் பல்வேறு சதி வேலைகளை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள்.

இந்தியாவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களை ஓப்பிடும் போது ஜேஎன்யு தன்னுடைய மாணவர்களுக்கு தரும் கருத்துச் சுதந்திரம் அலாதியானது.

அந்த கருத்துச் சுதந்திரமும், ஜனநாயகமும்தான் இந்தியாவில் மிகச் சிறந்த அறிவு ஜீவிகள் எல்லாம் அங்கு உருவாவதற்கு பாதை ஏற்படுத்திக் கொடுத்தது.

இப்படி பல முற்போக்கு அறிவுஜீவிகளின் புகலிடமாக இருக்கும் அந்தப் பல்கலைக்கழகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அதை மாட்டு மூத்திரம் குடிக்கும் மடையர்களின் கூடாரமாக மாற்ற வேண்டும், அது முடியவில்லை என்றால் பல்கலைக்கழகத்தையே ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என வலதுசாரி பாசிஸ்ட்கள் பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றார்கள். ஆனால் அவர்களால் இதுவரை அதில் வெற்றி பெற முடியவில்லை.

ஏன் சங்கிகள் ஜேஎன்யுவைப் பார்த்து தொடை நடுங்குகின்றார்கள் தெரியுமா? கடந்த 2016 ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் ராம்லீலா கொண்டாடப்பட்டபோது, அதை எதிர்த்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் அமித்ஷா, ராம்தேவ், பிராய்ச்சி, ஆதித்யநாத், ஆசாரம் பாபு, நாதுராம் கோட்சே, சாக்ஷி, ஜான்தேவ் அகுஜா, பிரவின் தொகாடியா, அசோக் சர்மா என மொத்தம் பத்து பேரின் உருவத்தை வைத்துக் கொளுத்தி, தங்களது இந்துத்துவத்திற்கு எதிரான எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

அதே போல காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திக் கொண்டிருக்கும் அத்துமீறல்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக ஜேஎன்யு மாணவர்கள் குரல் கொடுத்து வருகின்றார்கள். அதற்காக கன்னையா குமார், உமர் காலித் போன்ற மாணவர்கள் பலர் கைது செய்து செய்யப்பட்டதும், அவர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும், கொடும் தாக்குதலுக்கு உள்ளானதும் நாம் அறிந்ததுதான்.

இப்போது தாக்குதல் நடந்தது போலவே, 5.1.2020 அன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த 50க்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஜேஎன்யு மாணவ, மாணவியரையும், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களையும், தடுக்கச் சென்ற பேராசிரியர்களையும் இரும்பு ராடு, உருட்டுக் கட்டை, ஹாக்கி மட்டை போன்ற ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கினார்கள்.

ஜே.என்.யு மாணவர் தலைவர் ஆயிஷ் கோஷின் தலை இரும்புக் கம்பியால் உடைக்கப்பட்டது. 35 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இந்தத் தாக்குதலை ஏபிவிபி மாணவர்கள் அமைப்புதான் நடத்தியது என தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களும், போராசிரியர்களும் குற்றஞ்சாட்டிய ஆதாரங்கள் வெளியிடப்பட்டன.

ஆனால் பல ஆதாரங்கள் இருந்தும் எப்படி குஜராத் கலவரத்தையும், பல்வேறு குண்டுவெடிப்புகளையும் நடத்திவிட்டு அதற்கும் தங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று சங்கிகளால் சொல்ல முடிந்ததோடு, அதில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் முடிந்ததோ, அதே போல ஜேஎன்யு மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திவிட்டு, அந்தத் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பல் மறுத்தது.

இந்தத் தாக்குதல் சம்மந்தமாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ''கல்வி நிறுவனங்கள் கல்வியை வழங்குவதாக மட்டுமே இருக்க வேண்டும். அரசியல் நிழலுலக நபர்கள் கூடிப் பேசும் இடமாக கல்வி நிறுவனங்கள் மாற அனுமதிக்க முடியாது" என்று கூறி இருந்தார்.

அவர்களை பொறுத்தவரை சங்கிகள் அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக வன்மத்தைக் கக்கினாலும், இந்தித் திணிப்பை ஆதரித்தாலும், சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடித்தாலும், கோட்சேவைக் கொண்டாடினாலும் அது அரசியல் செயல்பாட்டிற்குள் வராது.

ஆனால் முற்போக்கு மாணவர் அமைப்புகள் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தாலே அது தேச விரோதம், மாவோயிச ஆதரவு.

மாணவர் சமூகம் தெளிவான அரசியல் அறிவோடு வளர வேண்டும் என்பதுதான் இந்த நாட்டில் ஜனநாயகத்தையும், நீதியையும் விரும்பும் அனைவரின் ஒருமித்த விருப்பமாகும். ஆனால் அவர்களை தக்கை மனிதர்களாகவும், அற்ப சிந்தனை கொண்டவர்களாகவும், சுயநலவாதிகளாகவும், குறுகிய மனம் படைத்தவர்களாகவும் மாற்ற வேண்டும் என வலதுசாரி பாசிஸ்ட்கள் திட்டமிடுகின்றார்கள்.

அதனால்தான் மக்களுக்கான அரசியலைப் பேசினாலே வெறி நாய்கள் போல அவர்கள் மீது பாய்கின்றார்கள்.

மோடி அரசு தன்னுடைய திட்டத்தை ஒரு போதும் பொதுச்சமூகத்தின் முன்னால் மறைத்துக் கொண்டு இயங்கவில்லை என்பதையும் பெரும்பாலான இந்திய மக்கள் முஸ்லிம் வெறுப்பிற்கும் கிருஸ்துவ மத வெறுப்பிற்கும் ஏற்கெனவே நன்றாக பயிற்றுவிக்கப்பட்டு விட்டார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுச்சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களை கருத்தியல் ரீதியாக அணிதிரட்டாமல் பாசிஸ்ட்டுகளால் இங்கே எந்த ஒரு அத்துமீறலையும் மேற்கொண்டுவிட முடியாது.

பொதுச் சமூகத்தின் எண்ண ஓட்டம் பாசிசத்தை ஆதரிக்கும் நிலைக்கு கடந்த பல ஆண்டுகளாக நன்றாக பயிற்றுவிக்கப்பட்டு விட்டது. அவர்கள் சங்கிகளின் செயல்பாடுகளுக்கு அது சட்டத்தை மீறிய மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் செயலாக இருந்தாலும் அதை இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக செய்யப்படும் செயல்பாடுகளாக பார்க்க பழகி விட்டார்கள்.

மிகத் தெளிவாக திட்டமிட்டு சட்டத்தின் துணையுடன் இந்துத்துவ பாசிசம் அரங்கேற்றப்படுகின்றது. அது கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், ராணுவம் என அனைத்து மட்டங்களிலும் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்துகின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரை பிஜேபிக்கு மாற்று என சொல்லிக் கொள்ளும் அனைத்துக் கட்சிகளும் பிஜேபியின் அஜென்டாவை ஏதோ ஒருவகையில் ஆதரித்தால் மட்டுமே தன்னை இந்துமக்களின் நலன்விரும்பிகளாக காட்டிக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டை எடுத்து அதை ஆதரித்தே வருகின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் தன்னை முற்போக்கு கட்சிகள், மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொண்டிருந்தவை கூட ஓட்டு வங்கிக்காக பிஜேபியைவிட மிக மோசமான பிற்போக்குக் கட்சிகளாக வடிவம் எடுத்துள்ளன.

இன்று நாடு முழுவதும் பாசிச அரசியலை வேறோடு வீழ்த்துவதற்கான களம் கெடுவாய்ப்பாக காலியாக உள்ளதுதான் நம் காலத்தின் மிகப் பெரிய துயர நிலை.

- செ.கார்கி

Pin It