கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஒன்றுக்கு ஒன்று தொடர் புடைய இரண்டு நிகழ்ச்சிகள் ஆக. 13, 2018 அன்று நடந்தன.

முதலாவது ஆக. 13, 2018 மதியம் இந்நாட்டின் தலைநகர் தில்லியில் மையப் பகுதியில் இருக்கும் அரசமைப்பு மன்றம் என்று அழைக்கப்படும் இடத்தின் வளாகத்தில் நாடறிந்த மாணவ செயற்பாட்டாளர் தோழர் உமர் காலித்தை அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்தார். பின்புறமாக இருந்து அவரைத் தாக்க முயல உமர் நிலைதடுமாறிப் போனார். அந்த ஆள் உமர் காலித்தைச் சுடக் குறி வைத்து அவர் வயிற்றில் துப்பாக்கியை வைத்தார். உமர் காலித் இதை உணர்ந்து கொண்டு அவரைத் தள்ளினார். அக் கணத்தில் அவருடன் இருந்த தோழர்கள் காலித் சயிஃபி, சாரிக் உசைன், பனோஜ் யோட்சனா லாஹிரி அவரைத் தள்ளி விட்டனர். அவர் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். அவரை சாரிக் உசைன் விரட்டிப் பிடிக்கப் பார்த்தார். அந்நேரம் அவர் குறியின்றி ஒருமுறை சுடவும் செய்தார். ஆனால் சாரிக் மீது அது படவில்லை. நாடாளுமன்றத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அந்தப் பாதுகாப்பு வளையப் பகுதியில் இருந்து அந்த ஆள் தப்பிவிட்டார். சுதந்திர தினத் திற்கு இரு நாட்களுக்குமுன் என்பதால் அப்பகுதி வழக்கத்தை விட உயர்பாதுகாப்பில் இருந்த தாகும். பின்னர் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு சென்று உமர் காலித் ஒரு புகார் தந்துள்ளார்.

umar khalidஇரண்டாவது இந்த செய்தி முகநூலில் வந்து பரபரத்துக் கொண்டிருந்த வேளையில் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ள மெரினா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளரிடம் இருந்து என் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. “கடந்த ஆண்டு நீங்கள் நடத்திய காந்தி சிலைப் போராட்டம் தொடர்பாக உங்களுக்கு ஒரு சம்மன் தர வேண்டியிருக்கிறது” என்றார். எனக்கு விசயம் புரிந்தது. அவரிடம் இருந்து சம்மனைப் பெற்றுக்கொண்டேன். கடந்த ஆண்டு அக்டோபர் 2 காந்திப் பிறந்த நாள் அன்று “காந்தியைக் கொன்றவர்களே கௌரியைக் கொன்றார்கள்” என்ற பதாகைகளுடன் காந்தி சிலையை நோக்கிச் சென்ற நாங்கள் அப்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோம். ஏனெனில் அன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு செப்டம்பர் 5 ஆம் நாள்தான் பத்திரிக்கை ஆசிரியரும் அரசியல் செயற்பாட்டளருமான கௌரி லங்கேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். 2015 ஆகஸ்ட் 30இல் வட கர்நாடகாவில் பகுத்தறிவுவாதியும் வரலாற்று ஆய்வாளருமான எம்.எம்.கல்புர்கி (77), 2015 பிப்ரவரி 16இல் பகுத்தறிவுவாதியும் இடதுசாரி சிந்தனையாளருமான கோவிந்த பன்சாரே(81), 2013 ஆகஸ்ட் 20இல் பகுத்தறி வாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர் (52) ஆகியோரைக் சுட்டுக் கொல்லப் பயன் படுத்திய அதே துப்பாக்கிதான் கௌரியையும் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகும். அது 7.65 மி.மீட்டர் நாட்டுத் துப்பாக்கியாகும். சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கௌரியின் மரணத்தைக் கொண்டாடினார்கள். ‘கௌரி தேச விரோதி’ என்ற ஊடகப் பரப்புரையில் குழம்பிப் போயிருக்கும் இந்நாட்டு மக்களுக்கு ஓர் உண்மையை உரத்துச் சொல்வதற்காக நாடெங்கும் ஒரு வேலை திட்ட மிடப்பட்டது. “காந்தியைக் கொன்றவர்கள் தான் கௌரியைக் கொன்றார்கள்” என்ற முழக்கத்துடன் காந்தி சிலை முன்பு திரண்டு மாலை அணிவிப்போம் எனவும் குருதிதாகம் அடங்காத ஆர்.எஸ்.எஸ். தோட்டாக்களால் அதுவரை கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வோம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

2017, அக். 2 அன்று தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் இதை செய்ய முடிந்தது. ஆனால், தமிழ்நாட்டிலோ பா.ச.க.வின் எடுபிடி அரசின் காவல்துறை அங்கு போவதற்கே அனுமதி மறுத்தது. அதை மீறி நாங்கள் சென்றோம். ‘மௌனமாக நீங்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்’ என்றது காவல்துறை. அதை மீறி நாங்கள் முழக்கமிட்டோம். காந்தி சிலைக்கு சில அடிகள் முன்பு கூடியிருந்த நாங்கள் குண்டாங் கட்டாக காவல் வாகனத்திற்குள் தூக்கியெறியப்பட்டோம். அதே மெரினா சாலையில் இருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் வீ.அரசு அங்கிருந்தார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அங்கிருந்தார். இந்த சமூக தகுநிலையை ஒத்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், படைப் பாளிகள், செயற்பாட்டாளர்கள் அங்கிருந்தனர். ஆனால், இவர்களெல்லோரும் எவ்வித வேறு பாடுமின்றி காவல்துறையால் கரடுமுரடாகக் கையாளப்பட்டு மண்டபத்தில் அடைக்கப் பட்டனர். பெங்களூருவிலோ, பூனேவிலோ, தில்லியிலோ யாரை வேண்டுமானாலும் கொல்ல ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு எவ்வித தடையு மில்லை. ஆனால், இந்த உண்மையைச் சொல்வதற்குகூட நமக்கு தடை விதித்து தடுக்க முயன்றது காவல்துறை. ஆர்.எஸ்.எஸ். விரும்பாத ஓர் உண்மையை இந்நாட்டு மக்களிடம் உரக்கச் சொல்ல முயன்ற குற்றத்திற்காகத்தான் இந்த சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புத் தரப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், அதன் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆகியோரும் இதே ‘குற்றத் திற்காக’ நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட் டுள்ளனர்.

இந்தியாவின் தலைநகரிலும் சென்னை யின் தலைநகரிலும் நடந்த இவ்விரு நிகழ்ச்சி களும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை; உறுதியாக தற்செயலானவை. ஆனால், காவி-கார்ப்பரேட்களின் சர்வாதிகார ஆட்சியின் செயல்முறையில் மிக நேர்த்தியாக கோர்க்கப்பட்ட சங்கிலியாகும். ஒரு சித்தாந்தப் போர் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அதில் தமக்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண் டவர்களை ஆர்.எஸ்.எஸ். சகித்துக் கொள்வ தில்லை. சட்டத்தின் பெயரால் காவல்துறை மிரட்டலாலும் பொய் வழக்குகளாலும் மக்களின் வாயை அடைத்துவிடுவது. இதையும் மீறி துணிந்து பேசுவர்கள் யாராயினும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு தடையாக வருபவர்கள் யாராயினும் அவர்களை ‘முடித்து விட’ ஆர்.எஸ்.எஸ். தயங்குவதில்லை.

இந்து காந்தியோ, லிங்காயத் கல்புர்கியோ, கம்யூனிஸ்ட் உமரோ யாராயினும் அவர்களுக்கு பொருட்டல்ல. அவர்களுக்கு மரணத்தைப் பரிசாக தருகின்றனர். காக்கிகளின் வழியாக சட்டமும் காவிகளின் வழியாக சட்ட விரோதமும் கைகோர்தப்படி சர்வாதிகார ஆட்சி இந்நாட்டில் எப்படி நடக்கிறது என்பதை விளக்குவதற்கு தில்லியில் நடந்த கொலை முயற்சியும் சென்னையில் பதியப்பட்ட வழக்கும் போதுமானதாகும்.

‘நாங்கள் பாரதத் தாயின் தவப்புதல்வர் கள்; எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடிய சனநாயக காவலர்கள்’; இந்தியாவை வல்லர சாக்குவோம்’ என்ப வர்கள், இந்து மதத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள், புண்ணிய நாட்டின் பெருமையில் மயங்கிக் கிடப்பவர்கள் கௌரிகளை, உமர் காலித்களை கொல்லத் துடிப்பதேன்? எனப் பேசித்தான் ஆக வேண்டி யுள்ளது.

தேநீர் அருந்திவிட்டு தன் நண்பர்களுடன் அந்த வளாகத்திற்குள்ளே வந்து கொண்டிருந்த உமர் காலித் ஒருவேளை வெற்றிகரமாக கொல்லப்பட்டிருந்தால் இரண்டு விதமான செய்திகள் உலா வந்திருக்கும். ஒன்று, ஓர் இளம் மாணவ செயற்பாட்டாளர் கொல்லப்பட்டார் என ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகமும் நாடெங்கும் உள்ள சனநாயகப் பற்றாளர்களும் கலங்கி நின்றிருப்பர். மற்றொன்று, ஒரு ’தேச விரோதி’, ’நக்சல்’ நாட்டின் தலைநகரத்தில் நாயைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று சங் பரிவாரங்கள் கொண்டாடியிருக்கும்.

இவர் தேச விரோதியான கதை என்ன? உமர் காலித் ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவர். 2011இல் நடந்த நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 2013இல் தூக்கில் போடப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குருவுக்கு 2016இல் ஜே.என்.யூ வளாகத்தில் நினைவுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் பங்குபெற்ற முன்னணியாளர் களான கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் மீது தேச துரோக வழக்குப் பதியப்படுகிறது. “இந்தியா வின் ஒற்றுமைக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்” என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இது நாடெங்கும் விவாதப் பொருளானது. ‘தேச விரோதிகள் யார்? தேசப் பற்றாளர்கள் யார்?’ என்ற காரசாரமான பட்டிமன்றம் நடந்தது. இவர்களுக்கு சங் பரிவார கும்பல்களால் கொலை மிரட்டல் விடப்பட்டது. ஆனால், இவர்கள் பின்வாங்கி விடவில்லை. பொய்ப் புனைவுகளால் வழி நடத்தப்படும் இந்தியா வின் இன்றைய இருண்ட நாட்களில் உண்மை யெனும் அகல் விளக்கோடு இவர்கள் நடைபோட்டுக் கொண் டிருக்கின்றனர்.

உமர் காலித் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர்தான். ‘ரெசிஸ்ட்’ அமைப்பு ‘துப்பாக்கிகளும் கற்களும்’ என்ற தலைப்பில் காஷ்மீர் போராட்டம் பற்றி நடத்திய கருத்தரங்கில் உரையாற்ற வந்திருந்தார் உமர் காலித். “இந்தியாவில் நான் எங்கு சென்றாலும் எனக்கு எதிரான முழக்கங்களைக் கேட்க முடியும்; பதாகைகளைக் காண நேரிடும். ஆனால், விமான நிலையத்தில் இருந்து இந்த அரங்கத்திற்கு வரும்வரை அப்படி எதையும் இங்குநான் எதிர் கொள்ளவில்லை. இது பெரியார் மண்ணல்லவா?” என்று அகம் மகிழ்ந்தார் காலித். காஷ்மீரிகளுக்கு இருக்கும் சுயநிர்ணய உரிமைப் பற்றி அழுத்தம் திருத்தமாக உரையாற்றினார்.

கௌரி லங்கேஷ் தன் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல் பற்றி அறிந்திருந்தைப் போல் உமர் காலித்தும் அதை தெரிந்தே வைத்திருந்தார். உண்மையில் தன் உயிரைவிட தன் பிள்ளையாய் நேசித்த கன்னையா குமார், உமர் காலித் பாதுகாப்புக்குத்தான் கௌரி அதிகமாகக் கவலைப்பட்டார். பலரும் வலியுறுத்திய பிறகே தன் வீட்டு வாயிலில் சி.சி.டி.வி கேமரவைப் பொருத்தினார் அவர். அந்த கேமராவில் அவர் இரத்த வெள்ளத்திலே மூழ்கடிப்பட்டது பதிவானது. கௌரி படுகொலை உமர் காலித் தேர்வு செய்த பாதையை மாற்றிவிட வில்லை. உண்மைக்காகவும், நீதிக்காகவுமான அவர் பயணம் தொடந்தது. எனவே, அவர் ஆர்.எஸ். எஸ்.ஸின் தோட்டாக்களை எதிர்ப்பார்த் திருந்தார். அது நடந்தேவிட்டது. ஆனால், இன்னும் உமர் காலித் சாகவில்லை.

1948 சனவரி 20 அன்று வெடிகுண்டை வெடிக்கச் செய்து ஆர்.எஸ்.எஸ். காந்தியைக் கொல்ல முயன்றது தோல்வியில் முடிந்தது. ஆனால், எந்த பின்வாங்கலும் இன்றி அடுத்த பத்தே நாட்களில் சனவரி 30 அன்று காந்தியின் கதையை முடித்தது ஆர்.எஸ்.எஸ். விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா ஆகிய இருவரும் இவ்விரண்டிலும் பங்கேற்றவர்கள். ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் கொலைப்பணியில் இருந்து பின்வாங்குவதில்லை! கௌரி கொல்லப்பட்டு ஓராண்டு இன்னும் முடியவில்லை. கௌரியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் வரை கூட உமர் காலித் உயிருடன் விட்டு வைக்கப் படுவாரோ என்ற பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொலைத் திட்டங்கள் நேரந் தவறாமல் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.

பன்சாரே, தபோல்கர் ஆகியோரது கொலைப் பின்னணியில் இருப்பது சனாதன சன்ஸ்தி என்ற சங் பரிவார் அமைப்பு என்பது புலனாய்வில் தெரியவந்தது. “இவ்வமைப்பை தடை செய்வது அவ்வளவு எளிதல்ல, மாவட்டத் திற்கொரு பெயரில் பதிவு செய்துள்ளனர்” என்கிறது மராட்டிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ஹகூளு). சனாதன சன்ஸ்தியைத் தடை செய்யக் கோரி மத்திய உள்துறைக்கு அனுப்பிய கோப்பு உறங்கிக் கொண்டிருக்கிறது. இவ் வமைப்பு உறங்காமல் இயங்கிக் கொண்டிருக் கிறது. மும்பையில் வைபவ் ரௌத் என்ற இவ் வமைப்பைச் சேர்ந்தவரின் வீட்டில் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை முன்னிட்டு குண்டு வைப்பதற்காக திட்டமிடப்பட்டது என்று புலனாய்வில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், தலைமை அமைச்சர் மோடி, “எதிர்கட்சிகளைக் கூட்டுச் சேரவிடாமல் சிதறடித்து தேர்தலில் மாபெரும் வெற்றிபெறும் பா.ச.க.” என்று நம்பிக்கையோடு முழங்குகிறார். நேற்று நாட்டின் தலைநகரத்தின் மையத்தில் சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லா வற்றையும் மீறி குண்டு சத்தம் கேட்டுள்ளது. எதுவும் எந்நேரமும் நடக்கலாம் என்ற வகையில் பீதியூட்டும் சர்வாதிகார ஆட்சியைக் காவி-கார்ப்பரேட் கூட்டணி நடத்திவருகிறது.

பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் இத்தாலியில் தலையெடுத்தது பாசிசம். முசோலினி பாசிஸ்ட் கட்சியைத் தொடங்கினான். சீருடை அணிந்த அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை கம்புகளால்தான் தம் எதிரிகளான கம்யூனிஸ்ட்களைத் தாக்கினர். ஆனால், ஆட்சிக்கு வந்தப் பிறகு கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகத் துப்பாக்கியைப் பயன்படுத்தினர்.

உத்தர பிரதேசத்தின் பீம் ஆர்மி அமைப் பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், குஜராத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித்தைப் போன்ற ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்கள் தம் உயிருக்கு விடப்படும் சவாலை ஏற்றப்படி பாசிச கூறுகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்த்து நிற்கின்றனர். ஆனாலும், உமர் காலித்துகளை தீர்த்துக் கட்டியே ஆக வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குறி வைப்பதற்கான காரணங்களைக் கண்டாக வேண்டும்.

உமர் காலித் ‘பகத்சிங் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தைச்’(BASO) சேர்ந்தவர். சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதன் இந்தியக் குறியீடான பகத் சிங்கின் மரபையும் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதன் குறியீடான அம்பேத்கரின் மரபையும் ஒருசேர உயர்த்திப் பிடிப்பது காவிக் கும்பலுக்கு கிலியூட்டுகிறது. “நானும் இந்துதான். நான் ஒரு சிவ பக்தன்” என்று தாராளவாதிகள் போல் இவர்கள் பம்முவதில்லை. “பொருள்முதல்வாதி களாகிய நாங்கள் அஞ்சுவதில்லை” என்று மாவோ சொன்னதைப்போல் பகுத்தறிவாளர் களாகவே இவர்கள் வலம்வருவது ஆர்.எஸ்.எஸ். ஸின் தூக்கம் கெடுக்கிறது. மோடியின் ஆட்சி காவி ஆட்சி என்பதோடு இவர்கள் நிறுத்திக் கொள்வதில்லை. காவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சி என்று துல்லியப்படுத்துகின்றனர். பார்ப்பனிய இந்துத்துவ பாசிஸ்ட்கள் என்று இந்த ஆட்சியை நிர்வாணப்படுத்துவதால் ஆர்.எஸ்.எஸ். பதற்றம் கொள்கிறது. “மாநில உரிமைகள்-தேச ஒற்றுமை” என்று இவர்கள் முனைமழுங்கிய அம்பெய்வதில்லை. “இந்தியா தேசமல்ல ஓர் ஒன்றியம், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு” என்று கூர்தீட்டிய ஈட்டியாய் பாய்வதால் ஆர்.எஸ்.எஸ். அலறுகிறது. மத்தியப் புலனாய்வு துறையைக் கொண்டு கையாள்வதற் கேற்ற ஊழல் குற்றச் சாட்டுகள் இவர்கள் மேல் இல்லை. வேறு வழியின்றி ஆர்.எஸ்.எஸ். துப்பாக் கியைத் தெரிவு செய்கிறது.

ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் நிலவும் சாதியடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடியவர்; 2016 சனவரி 17 அன்று இதை அம்பலப்படுத்திய வண்ணம் தன் உயிரை மாய்த்துக் கொண்டு நட்சத்திரங்களில் சங்கமித்துப் போன ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமூலா அங்கு உரையாற்ற இருந்தார்.

2016 அக்டோபர் 15இலிருந்து காணாமல் அடிக்கப்பட்ட ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நஜீப் அகமதுவின் தாய் பாத்திமா நஜீம் அங்கு பேச இருந்தார்.

2017 செப்டம்பரில் கோரக்பூர் மருத்துவ மனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாத நிலையில் மருத்துவமனையில் உள்ள குழந்தை களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக முயன்றதைத் தவிர வேறெந்த குற்றமும் செய்யாதவர்; அதனாலேயே முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் நிர்வாகப் பிரச்சனை களுக்கானப் பலிகடாவாக்கப்பட்டு எட்டு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டவர்; சிறையில் இருந்து பிணையில் வந்த பிறகு அச்சம் தவிர்த்து யோகி ஆதித்திய நாத் அரசுக்கு எதிராகப் பேசியதால் இவரது குடும்பத்தின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டது. தன்னுடைய அண்ணனுடன் இருக்கும் போது அடையாளம் தெரியாத இருவர் இவரது அண்ணனைத் துப்பாக்கியால் சுட்டனர். இத்தனை இன்னல்களுக்கும் ஆளானவர் மருத்துவர் கஃபீல் கான். அவரும் அச்சத்தில் இருந்து விடுதலை ஆவதை நோக்கிப் பேச வந்திருந்தார்.

ஈகைப் பெருநாளுக் காகப் பொருட்களை வாங்கிக் கொண்டு தன் சொந்த ஊரான அரியானா மாநிலத் தில் உள்ள பரிதாபாத்திற்கு தன் இரண்டு சகோதர்களுடன் ரயிலில் போய்க் கொண்டிருந்த 17 வயது இளைஞன் ஜூனைத் மாட் டிறைச்சி வைத்திருந்தான் என்ற ஐயத்தின் பெயரால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் ஊரே கூடிநின்று வேடிக்கைப் பார்க்க, காவி குண்டர்களால் 2017 ஜூன் 23 அன்று அடித்தே கொல்லப்பட்டார். அவரது தாய் பாத்திமா அங்கு வந்திருந்தார்.

2018 ஜூன் 18 அன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹப்பூர் மாவட்டத்தில் பசுப் பாதுகாப்புக் குண்டர்கள் குவாசிம்மையும் சமயதினையும் தாக்கினர். குவாசிம் கொல்லப் பட்டார். சமயதின் சாகவில்லை. அந்த சமயதின் அச்சத்தில் இருந்து விடுதலையாவதை நோக்கிய கூட்டத்தில் பேச வந்திருந்தார்.

2017 ஜூன் 29 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் அசாரிபாக் மாவட்டத்தைச் சேர்த்த முகமது அலிமுதீன் பசு பாதுகாப்புக் குண்டர்களால் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற பெயரில் கிரிடி மாவட்டத்தில் அடித்தே கொல்லப் பட்டார். அவரது மனைவி மரியம் அக்கூட்டத்தில் பேச வந்திருந்தார்.

இந்தப் பட்டியலில் இவர்தான் மிகவும் தனித்துவமானவர் – யஷ்பால் சக்சேனா. இவரது மகன் அன்கிட் சக்சேனா ஓர் இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்தக் காரணத்தால் அப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் இவர் கண்முன்னே கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். பஜ்ரங் தளம் இதைப் பயன்படுத்தி இந்து-முஸ்லிம் கலவரத்தைத் தூண்ட விரும்பியது. ஆனால், தனக்கு இஸ்லாமிய சமூகம் மீது எவ்வித வெறுப்பும் இல்லை என்றார் யஷ்பால் சக்சேனா. அவர் வெறுப்புக்கு எதிராக ஒன்றுபட்டோரின் மேடையில் பேச வந்திருந்தார்.

ரோஹித் வெமுலா மறையவில்லை. அவர் அவரது தாய் ராதிகா வெமுலாவின் உருவில் அடக்குமுறையாளர்களை எதிர்த்துக் கொண் டிருக்கிறார். நஜீம் காணாமலடிப்பட்டாலும் அவர் தாயின் வடிவில் வருகிறான். அடக்கு முறையால் உறவை இழந்த அன்னையர்களும் தந்தையர்களும் சகோதரர்களும் நண்பர்களும் மனைவியரும் அஞ்சி ஓடிவிடுவதில்லை. அவர்கள் நீதியின் பதாகையை ஏந்தியப்படி வருகின்றனர். ஆதிக்கத்திற்கு எதிராக அவர்கள் ஒன்றுபட்டு வருகின்றனர். ஒடுக்கப்பட்டிருப் போரின் ஒற்றுமைதான் ஒடுக்குமுறையாளர் களை நடுநடுங்கச் செய்கிறது.

உமர் காலித், கௌரி லங்கேஷ் போன்றோர் தலித்துகள், பழங்குடிகள், மதச் சிறுபான்மையினர், சனநாயகப் பற்றாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர், தேசிய இனங்கள் ஆகிய ஒடுக்கப்பட்டோரின் ஒற்றுமை குறித்துக் கொண்டிருக்கும் கண்ணோட்டம்தான் காவி-கார்ப்பரேட் கூட்டணியை நடுங்கச் செய்கிறது.

இந்த தத்துவார்த்த போரில் ஆர்.எஸ்.எஸ். வெறுப்பை கக்கியபடி அச்சத்தை மறைத்துக் கொண்டு துப்பாக்கியை ஏந்தி திரிகிறது. எப்படியும் வெற்றிக் கொண்டுவிடலாம் என்று அது நம்புகிறது. இன்னொருபுறம் வெறுப்புக்கு எதிராக ஒன்றுபட்டோராக அச்சத்தில் இருந்து விடுதலை அடைவதை நோக்கி உமர் காலித்தும் ஜிக்னேஷும் சந்திரசேகர் ஆசாத்தும் ராதிகா வெமுலாவும் பாத்திமா நஜீமும் இணைந்து நிற் கின்றனர். யஷ்பால் சக்சேனாவிடம் தோற்றுப் போனதைப்போல் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் இக்கோடிக்கணக்கான மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும்வரை இந்தப் போர் தொடரும்.

கட்டுரையாளர் : ‘இளந்தமிழகம்’ ஒருங்கிணைப்பாளர்

பஞ்சாப் மாநிலத்தின் விபரீத சட்டம்

புனித நூல்களாகக் கருதும் சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப், இஸ்லாமியர்களின் குரான், இந்து பார்ப்பனர்களின் ‘பகவத்கீதை’ ஆகியவற்றை சேதப்படுத்துவோர், களங்கப்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை என்று பஞ்சாப் மாநில அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த தண்டனைச் சட்டப்படி உள்நோக்கத்தோடு மத உணர்வுகளைப் புண்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இப்போது ஆயுள் தண்டனையாக மாற்றி திருத்தம் செய்திருக்கிறது பஞ்சாப் மாநில அரசு.

‘மத உணர்வுகளைப் புண்படுத்துதல்’ என்ற சட்டம் ஏற்கனவே முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத நூல்களை பகுத்தறிவு அடிப்படையில் கேள்விக்குட்படுத்தினாலே மத உணர்வைப் புண்படுத்துவதாக மதவாதிகள் கூச்சல் போட்டு பகுத்தறிவு சிந்தனைகளை முடக்கத் துடிக்கிறார்கள். இந்த நிலையில் இப்படி ஆயுள் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

“நான்கு வர்ணத்தை நான் தான் படைத்தேன் என்று பகவான் கிருஷ்ணன் கூறும் பகவத் கீதையை நியாயமாக தடை செய்திருக்க வேண்டும். அதை முட்டாள்களின் உளறல்” என்றார், புரட்சியாளர் அம்பேத்ககர். இப்போது அம்பேத்கர் இருந்திருந்தால் பஞ்சாப் சட்டப்படி ஆயுள் தண்டனைக்கு உள்ளாகியிருப்பார்.

இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதே மதத்தையும், கடவுளையும் அவமதிப்பதாகும். இந்தப் புனித நூல்களை எதிர்ப்போரை கடவுள் தண்டிக்க மாட்டாரா? சட்டம் போட்டுத்தான் தண்டிக்க வேண்டும் என்றால், அதுவே ‘கடவுள் மத நிந்தனை’ அல்லவா?