பார்ப்பன அதிகாரிகள் நிர்வாக ஒழுங்கீனம் - ஊழல்களால் நலிவடையும் பொதுத் துறை வங்கிகளைக் காப்பாற்ற ஏழை எளிய மக்கள் முதலீடு செய்யும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்.அய்.சி.) குலைக்கும் முயற்சிகளில் நடுவண் ஆட்சி இறங்கியுள்ளது.

நாட்டின் நிதி நிலைமை மோசமாகும்போதும், பங்குச்சந்தை பாதிப்பு அடையும் போதும், எல்ஜசி நிறுவனத்தின் அதீதமுதலீடு மூலம், அந்த பாதிப்பு சரிக்கட்டப்பட்டு வருகிறது. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. ஆனால், மோடிஆட்சியில் இது அதிகமாகி இருக்கிறது.அந்த வகையில், தற்போது குடைசாய்ந்து நிற்கும் ஐடிபிஐ வங்கியின் 43 சதவிகித பங்குகளையும், பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியிடம் தள்ளிவிடும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. அதாவது, எல்ஐசியிடம் இருந்து ரூ. 13 ஆயிரம் கோடியை பிடுங்கி, ஐடிபிஐ வங்கிக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இது தற்போது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

சாமானியர்கள், தங்களின் குடும்பத் தைக் காப்பாற்ற மாதந்தோறும் நூறும், ஆயிரமுமாய் எல்ஐசி-யின் காப்பீட்டுத் திட்டங்களில் சேமித்து வருகின்றனர். பெரிய முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்களும் எல்ஐசியிடம் காப்பீடுபெற்றுள்ளன. இவர்கள் அனைவருமே எல்ஐசி, தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என தற்போது கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர்.

ஏனெனில், ஐடிபிஐ வங்கியானது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில், 3 ஆயிரத்து 199 கோடியே 77 லட்சம் இழப்பைச் சந்தித்து இருந்தது. அது நடப்பாண்டில் சுமார் 5 ஆயிரத்து 662 கோடியே76 லட்சம் அளவிற்கு இழப்பைச் சந்தித்த வங்கியாகும். அதேபோல ஐடிபிஐ வங்கியின் வராக்கடன் மதிப்பு கடந்த நிதியாண்டில் 44 ஆயிரத்து 753 கோடியாக இருந்தது. இது தற்போது 55 ஆயிரத்து 588 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மேலும், கடந்த ஓராண்டில் ஐடிபிஐ வங்கியின் மொத்த வருமானமும் 44 சதவிகிதம் சரிந்து, ஆயிரத்து 633 கோடியே29 லட்சத்திலிருந்து, வெறும் 915 கோடியே 47 லட்சம் ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், சாமானியர்களின் முதலீட்டால் மட்டுமே இயங்கும் எல்ஐசி,அதிக நஷ்டத்தில் இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வது, எல்ஐசியிடம் காப்பீடு பெற்றுள்ள மக்களுக்கும்,அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட தொகைக்கும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே மக்களின் எதிர்ப்புக்குக் காரணம்.

மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 21 பொதுத்துறை நிறுவனங்களில் மிகப் பெரிய தொகையை எல்ஐசி முதலீடு செய்துள்ளது. ஆனால், அவற்றில் 18 நிறுவனங்கள் இழப்பை மட்டுமே எல்ஐசிக்கு அளித்துள்ளன.

Pin It