பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருநபரை சிறையிலிருந்து விடுவித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சமரசம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடர்ந்திட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த ஆணை பலரையும் வியப்படையச் செய்தது. இந்தஆணை கடும் விமர்சனங்களை எதிர் கொண்டது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வந்த ஒருபாலியல் வன்முறை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு நேர் எதிராக இருந்தது. இத்தகைய வழக்குகளை சமரசத் தீர்வு மய்யங்களுக்குஅனுப்பக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தான் பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெறுவதாகஅறிவித்துள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டார்.

 இதேபோன்று, உயர்நீதிமன்றத்தில் மற்றொரு நிகழ்வு கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஆம்பூரைச் சார்ந்தபவித்ரா என்ற பெண், காணாமல் போனார் என்பதால், ஆம்பூரில் இஸ்லாமியர்களுக்கும் காவல்துறைக்குமிடையே பெரும் கலவரமே நடந்து முடிந்துள்ளது. அந்தப் பெண்ணின்கணவர் தந்த புகாரின் மீது ஒரு இஸ்லாமிய இளைஞரை விசாரணை நடத்திய காவல்துறை, விசாரணையின்போது நிகழ்த்திய சித்திரவதைகளால் மருத்துவமனையில் மரணமடைந்துவிட்டார். காணாமல் போன பவித்ரா, சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப் பெண், தனது கணவரிடமிருந்து இப்போது மணவிலக்கு கேட்கிறார்.நீதிபதிகள் அந்தப் பெண்ணிடம், “விவகாரத்து என்னகடைகளில் கிடைக்கும் பொருளா? உன்னால்தான் கலவரம்” என்ற தொனியில் ஒருமையில் பேசியதாகவும், ஊடகங்களில்சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.

 விவகாரத்து கடைகளில் கிடைக்காது என்பதுதெரிந்ததால்தான் அந்தப் பெண், நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். சாமான்ய நிலையிலுள்ள ஒரு ஏழை பெண்என்பதாலேயே நீதிமன்றம் அவரை அவமதிப்பதை ஏற்கமுடியாது. “நீதி வழங்கும் நீதிபதிகளிடம், ஆண்களே வெளிப்படுகிறார்கள்; நிச்சயம் மணவிலக்குக் கோரும் ஒருஆணிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்காது; நீதிமன்றங்கள்கூட சமத்துவமில்லாமல் இருக்கின்றன என்பதுபேரவலம்” - என்றெல்லாம் பெண்ணுரிமையாளர்கள் வெளியிட்டுள்ள கருத்தை நூற்றுக்கு நூறு - நாம் வழிமொழிகிறோம்.

 குடும்பம் - திருமண உறவுகள் – அண்மைக்காலமாக நெருக்கடிக்குள்ளாகி வருவதை சுட்டிக்காட்ட வேண்டும். தங்களின் கட்டுப்பாட்டுக்குள் பெண்களை இயக்கு வதற்கானஆண்களின் முயற்சிகளால் முரண்பாடுகள் உருவாகி வருகின்றன. பெண்கள் தங்களுக்கான சுயமரியாதையை உறுதி செய்வது, அவர்களுக்கான உரிமை. சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு, ஆண்களின் அதிகாரத்துக்குட்பட்டவர்களாக அடங்கிக் கிடக்க வேண்டும் என்ற சிந்தனையை இனியும் தூக்கி சுமக்கக் கூடாது; அதிலிருந்து ஆண்கள் விடுபட வேண்டும்.

பெரியார் கூறுகிறார்:

“ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவதுபுருஷன் பெண் ஜாதி என்ற வாழ்க்கையானது நமதுநாட்டில் உள்ள கொடுமையைப்போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்றுசொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம்சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்ளுவது என்பதைத் தவிர வேறுஒன்றுமே அதில் இல்லை. அவ்வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்குமுதலியவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்திற்கு தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஒருஅர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்துபெண்களை வஞ்சிக்கின்றோம்.” - (‘குடிஅரசு’, 17.8.1930)

 திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையைப் பெற்றுக்கொண்ட ஒரு பெண்ணுக்கு அந்தக் குழந்தையின் சட்டபூர்வபாதுகாப்பாளராக உரிமை உண்டு என்று அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள புரட்சிகரமான தீர்ப்பை குறிப்பிட வேண்டும். இது மேலே எடுத்துக்காட்டிய பெரியார்சிந்தனைக்கு கிடைத்த வெற்றிதான்!

 இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றங்களின் சில தீர்ப்புகளும், கருத்துகளும், பெண்ணடிமைப் பார்வையோடு பிணைந்து கிடப்பது வருத்தத்துக்கும், வேதனைக்கும் உரியது என்பதை கவலையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.

Pin It