“பாலியல் சீண்டல்களாலும், பாjeyandran on nakkheeranயல் வன்முறைகளாலும்  ‘நானும்தான்’ (MeToo) பாதிக்கப்பட்டேன். ஆனால் அவற்றை மீறி, இன்று சமூகத்தில் நான் மேலேறி வந்துள்ளேன். வா பெண்ணே நீயும் வா, அந்தத் துயரத்திலேயே மூழ்கிக் கிடக்காதே, எழு” என்று சொல்லி, பாதிப்புக்கு உள்ளான பெண்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் (Empowerment through Empathy) 2006 ஆம் ஆண்டு, தரானா பர்க் (Tarana Burke) என்னும் பெண்மணி My Space என்னும் சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவுதான் இந்த “நானும்தான்” என்னும் இயக்கத்தின் தொடக்கம் என்று வலைத்தளங்கள்  பதிவு செய்துள்ளன. எனினும் MeToo என்னும் தொடர், 2017 அக்டோபர் 15 அன்று மிலானா (Milana) என்பவர் பயன்படுத்திய பிறகே  உலகெங்கும் பரவிற்று என்றும் கூறுகின்றனர்.

ஆனால் உண்மையான வரலாறு மறைக்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். அந்த இயக்கம் தமிழ்நாட்டில்தான் உண்மையில் தொடங்கியுள்ளது.   2004 டிசம்பர் 2 ஆம் நாளிட்ட நக்கீரன் இதழின் அட்டைப்படக் கட்டுரையாகவே அது அமைந்துள்ளது. மறைந்த தமிழ எழுத்தாளர் அனுராதா ரமணன், காஞ்சி சங்கராச்சாரியாரால் தான் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதை ஒரு காட்சியாகவே விளக்கி எழுதியுள்ளார்.

வளையோசை என்னும் இதழைத் தான் தொடங்கிப்  பெரும் நட்டத்திற்கு உள்ளானபோது, வங்கியில் கடன் வாங்கச் சென்ற வேளையில்,  அங்கு பணியாற்றிய மைதிலி ராகவன் என்பவர் தன்னைச் சங்கராச்சாரியாரிடம் அழைத்துச் சென்றதாகவும், அவர் முதல் நான்கு நாள்கள் தன்னிடம் ஆன்மிகம் பேசியதாகவும், ஐந்தாவது நாள், நிர்வாணமாகத் தன்னை அணுகிப் பாலியல் வன்முறைக்கு முயன்றதாகவும் ஒளிவு மறைவின்றி எழுதியுள்ளார்.

அதற்குப் பிறகு நடிகை சொர்ணமால்யா, பொன்பாடி என்னும் இடத்தில் உள்ள காஞ்சி மடத்தின் விருந்தினர் மாளிகையில் “சின்னப் பெரியவாளைச்” சந்தித்து “ஆசி” பெற்ற விவகாரமும், காவல்துறையினால் விசாரிக்கப்பட்டது அனைவரும் அறிந்த செய்தி.

எனவே தமிழ்நாட்டில்தான் “மீ டூ” என்னும் பெண்களின்  இயக்கம் தொடங்கியுள்ளது என்பது தெளிவாகின்றது. .

இந்த இயக்கம், அடக்கி வைக்கப்பட்ட பெண்களின் குமுறல்கள் வெளிப்பட ஒரு வடிகாலாக ஆகியுள்ளது. வரும் காலத்தில் தவறு செய்ய நினைக்கும் ஆண்களுக்குப் பெரிய எச்சரிக்கையாகவும்  உள்ளது.

ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இதனை  வெளியிடுவது ஏன் என்ற வினா என் போன்றவர்களிடமும் எழுந்தது.

பெண்ணின் வலியையும், துயரத்தையும் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்டால் என்ன என்று தோழர்கள் சிலர் தங்களின் குரலைப்  பதிவு செய்தபோது, அதன் உண்மையை உணர்ந்தேன்.  அதனால் என் ட்வீட் ஒன்றைக் கூட உடனே விலக்கிக் கொண்டேன்.

அவர்கள் சொல்வதே சரியானது.

எழுத்தாளர் அனுராதா ரமணன் கூட, 12 ஆண்டுகளுக்குப் பின்பே தன் வலியை நக்கீரன்  இதழில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதே நேரம், அனுராதாவின் குற்றச்சாற்றிற்கு என்ன ஆதாரம் உள்ளது  என்று கேட்கின்றனர்.

கேள்வி நியாயமானதே. எந்த ஆதாரமும் இல்லாமல், யார் வேண்டுமானாலும், யார் மீதும் ஒரு  பொய்யான குற்றச்சாட்டினை  வைப்பதற்கும் இந்த இயக்கத்தில் இடமுள்ளது என்னும் ஆபத்தை நாம் எளிதில் புறந்தள்ளி விட முடியாது.