“உலகம் முழுவதும் பல நாடுகளில் நாத்திகக் கொள்கைகள் நசுக்கப்படுவதும், நாத்திகர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவதும், முன்னொரு காலத்தில் வழமையாக இருந்து வந்த நிலையில், தற்போதும் சில நாடுகளில் அத்தகையதொரு நிலையே தொடர்வது வேதனைக்குரிய ஒன்றாகும். நாத்திகர்களுக்கு எதிரான எதிர்மறை எண்ணங்களும், அச்சுறுத்தல்களும், பாரபட்சங்களும், விரோதங்களும் சகிப்புத்தன்மையற்ற மனநிலையும் பல்வேறு வலதுசாரி நாடுகளில் இன்றளவும் பரவலாக இருக்கின்றன. நாத்திகர்கள் என்றாலே “ஒழுக்கம் இல்லாதவர்கள்” என்கிற அடிப்படை முகாந்திரமற்ற வெறுப்புப் பிரச்சாரமும் செய்யப்படுகின்றது.

சொந்த குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, உறவுகளால் கைவிடப்பட்டு, சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு, அரசுகளால் தண்டிக்கப்பட்டு, ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்படியான வாழ்க்கையை நாத்திகர்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. இதெல்லாம் தாண்டி நாத்திகர்கள் தங்களை மனிதநேயர்களாக (humanist) அடையாளப்படுத்திக் கொண்டு, சர்வதேச அளவில் மனித உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடும், பாலின உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும், LGBTQ+ உரிமைகளை வென்றெடுக்கவும் தொடர்ச்சியாக பல இன்னல்களை கடந்து செயல்பட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் நாத்திக இயக்கங்களை ஒருங்கிணைக்க Humanist International என்கிற கூட்டியக்கமும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

ஒருபுறம், ஐநா சபையின் பொது அவையில் கொண்டு வரப்பட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 18 வது விதி, இறை நம்பிக்கையாளர்களின் மத உரிமைகளையும் நாத்திகர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் (2011), பாலியல் வன்கொடுமையாளர்களை இந்த சமூகம் பார்க்கும் அதேவிதத்தில் நாத்திகர்களையும் பார்ப்பதாகத் தெரிய வந்துள்ளது . ஜெர்மனியில் கிறித்தவ மதத்தை ஒருவர் கைவிட்டால் அவர் அரசுக்கு “நிர்வாகக் கட்டணம்” செலுத்த வேண்டும் என்பது சட்டத்திலேயே உள்ளது. அயர்லாந்து நாட்டின் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக வேண்டுமென்றால், கிறித்தவக் கல்லூரிகளில் மதப்பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே முடியும்.

உடல் உறுப்பு தானத்திலும் கூட நாத்திகர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாக Phil Zuckerman உருவாக்கிய “Atheism, Secularity and Well being” (2014) என்ற ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Gallup (2015) கணக்கெடுப்பில், 40% அமெரிக்கர்கள், “நாத்திகர்களுக்கு வாக்களிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளனர். மின்னிசோட்டா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் (2014), 42% பேர் “தங்களது பிள்ளைகளை நாத்திகர்களுடன் மணம்முடித்துக் கொடுக்க மாட்டோம்” என்று அறிவித்துள்ளனர். விவாகரத்து வழக்குகளில் கூட நாத்திக பெற்றோர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. “குழந்தை யாரிடம் இருக்கலாம்?” என்ற கேள்வி வரும் பொழுது, நாத்திகர்களிடம் குழந்தை வளர்வது சரியல்ல என்ற கருத்தின் அடிப்படையில், பல அமெரிக்க குடும்ப நல நீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகும் உண்மையை, நியூயார்க் பல்கலைக்கழகத்தின் Law Review இதழும் (2006). வெளிப்படுத்துகிறது.

16.12.2016ல் நாத்திகர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டிருந்தாலும் கூட, இந்த 8 ஆண்டுகளில் பெரிய அளவுக்கு எந்த மாற்றமும் சமூக உளவியலில் நிகழவில்லை. ஆப்கானிஸ்தான், ஈரான், மாலத்தீவு, மலேசியா, மவுரிடானியா, நைஜீரியா, பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சோமாலியா, லிபியா ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய 13 நாடுகளில், தீவிர நாத்திகம் பேசுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடிய சட்டப்பிரிவுகள் இன்றளவும் உள்ளன. “Free Saudi Liberals” என்ற பெயரில் ஒரு முற்போக்கு இணையதளத்தை தொடங்கி பகுத்தறிவு பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த Raif Badavi என்பவர் 2012இல் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஏழு ஆண்டு சிறை வாசமும், 600 சவுக்கடிகளும் வழங்குமாறு தீர்ப்பு எழுதப்பட்டது. சமீபத்தில் (2022) தான் அவர் தண்டனை காலம் முடிந்து விடுதலை அடைந்தார். கடவுச்சீட்டு முடக்கப்பட்டதால் பத்தாண்டுகள் எந்த வெளிநாட்டுக்கும் செல்ல முடியாத அவல நிலையில் உழல்கிறார்.

எந்த மதத்தைச் சேர்ந்த அல்ஜீரிய நாட்டுக் குழந்தையாக இருந்தாலும், பள்ளியில் இஸ்லாமை கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்திய நாட்டில் “மதச்சார்பின்மை” என்ற பெயரில், அனைத்து மதத்தில் உள்ள அறிவியலுக்கு ஒவ்வாத கற்பனை புராணங்களும், கட்டுக்கதைகளும் இன்றளவும் பள்ளிப்பாட புத்தகத்தில் நீக்கமற நிறைந்துள்ளன. கவுரி லங்கேஷ், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி போன்ற அறிஞர் பெருமக்கள் படுகொலை செய்யப்படும் நிலையில்தான் நம் சமூகம் உள்ளது. பக்கத்து நாடான வங்கதேசத்திலும் அவிஜித் ராய் என்ற சீரிய பகுத்தறிவாளர், புத்தகக் கண்காட்சி வாசலிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நாத்திக சமயங்களான புத்தமும், சமணமும், சார்வாகமும், ஆசீவகமும் தழைத்தோங்கிய இந்த இந்திய துணைக் கண்டத்தில், இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகிறது என்பதை வரலாற்றின் பெருங்கறையாகக் கருத வேண்டியுள்ளது. ஈரான் நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும், வழக்கறிஞர் ஆவதற்கும் ஏதோ ஒரு மதத்தில் உறுப்பினராக இருந்தே தீர வேண்டும் என்கிற நிர்பந்தம் உள்ளது. எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக, 2014 மார்ச் மாதத்தில் சவுதியில் “நாத்திகம் பேசும் அனைவரும் தீவிரவாதிகள்” என்று பிரகடனப்படுத்தும் அரசாணை வெளியிடப்பட்டு சர்ச்சையானது.

மேற்கத்திய நாடுகளில் நாத்திகத்தின் தோற்றம், அறிவியலின் அடிப்படையில் இருந்தது. ஆனால், இந்திய துணைக் கண்டத்தில் நாத்திகத்தின் தோற்றம், சனாதான ஒழிப்பை அடிப்படையாகக் கொண்டது. தற்போது, நன்கு கல்வி கற்றுப் பட்டம் பெற்ற பெருமக்களின் எண்ணிக்கை, நம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அறிவியல் வழியில் நாத்திக சிந்தனைகளை விதைப்பதும் எளிமையானது; அவசியமானதும் கூட. அதே வேளையில் , “கடவுள் இல்லை” என்று பிரச்சாரம் செய்து விடுவதால் மட்டுமே, அனைத்து சமூக மாற்றங்களும் நிகழ்ந்து விடாது. இறை மறுப்புக் கொள்கை என்பது, 1. ஜாதி ஒழிப்பு, 2. வர்க்க பாரபட்ச ஒழிப்பு, 3. பாலின சமத்துவம், 4. மாற்றுப் பாலின உரிமைகள், 5. மாநில சுயாட்சி (அல்லது) தனிநாடு, 6. மொழி உரிமைகள், 7. சூழலியல் விழிப்புணர்வு போன்ற இன்னும் பல கொள்கைகளுடன் இணைக்கப்பட்டு, ஒரு கருத்துருவாக்கம் பெறும்போது தான், அந்த இறை மறுப்புக்கொள்கை நம்முடைய சமுதாயச்சூழலில் அர்த்தமுள்ளதாக ஆகிறது. எந்த நாத்திக இயக்கமும், ஒருவர் ஆத்திகராக இருக்கிறார் என்பதற்காகவே அவர் அழிக்கப்பட வேண்டியவர் என்றோ, அவர் ஒழிக்கப்பட வேண்டியவர் என்றோ, கொள்கைகளை கொண்டிருக்கவில்லை. ஆனால் மதப்பித்துபிடித்து அலையும் மடையர்கள், இயக்கமாக ஒன்றிணைந்து, சங் பரிவார் வானர கூட்டங்களாக பரிணமித்து, அறிவியல் மனப்பான்மையை சிதைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு மிகப்பெரிய நாத்திகப் புரட்சியை நோக்கி நம் சமூகம் நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!”

எட்வின் பிரபாகரன்

Pin It