இதுவரை நம்மிடையே நடைபெற்று வந்த நிகழ்ச்சியானது கல்யாணம், விவாகம் என்னும் பெயரால் நடைபெற்று வந்ததோடு, அதன் மூலம் பெண்களை அடிமைப்படுத்தவும், பெண்களை ஆண்களுக்கு நிரந்தர அடிமையாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதால், மனித ஜீவனில் ஒருபாகமானப் பெண்கள் மனித சமுதாயத்திற்குப் பயன்பட முடியாமல் போய்விட்டனர். நம் மத, சாஸ்திரம், புராணம் யாவும் பெண்களை அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதேயாகும். இந்த நாட்டிலே பெண்கள் விடுதலைக்காக முதன் முதல் தொண்டாற்றியது சுயமரியாதை இயக்கமேயாகும்.
பழைய முறை என்பவற்றின் அடிப்படை, முதலாவது பெண்களை அடிமையாக்குவது. இரண்டாவது, ஆண்களை அறிவு கொண்டு சிந்திக்கமுடியாமல் அவர்கள் அறிவை முடமாக்கி, அவர்களை மூட நம்பிக்கைக்காரர்களாக்குவது. அடுத்து மூன்றாவதாக, நம் சமுதாயத்தில் சாஸ்திரத்தின் பெயரால் இருந்து வந்த ஜாதி இழிவை நிலைநிறுத்துவதுமாகும். இப்படி மூன்று அடிப்படைகளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதே கல்யாணம், விவாகம் என்பதெல்லாமாகும்.
ஒரு பெண் தானாக சுதந்திரம் பெற வேண்டுமானால், விபச்சாரி என்ற பெயரோடுதான் சுதந்திரம் பெற முடியும். பின் அவர்கள் விடுதலைக்காக ஆண்கள்தான் முற்பட வேண்டும். அதற்காக நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், பெண்கள் 20 வயது வரை படிக்க வேண்டும். படிக்கும் போதே தனது ஜீவனத்திற்காக ஒரு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்குப் படிப்பும், ஜீவனத்துக்கான தொழிலும் இருந்தால் அந்தப் பெண், தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கருதவே மாட்டாள். ஆணுக்கு அடிமைப் பட்டிருக்கவும் மாட்டாள்.
அடுத்து இரண்டாவது காரியம், மூட நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்காகவேயாகும். திருமணமென்றால் முகூர்த்தம், நேரம், சகுனம், ஜாதகம், ஜோசியம் பார்ப்பதும், அறிவிற்கும் தேவைக்கும் சற்றும் பொருத்தமற்ற அம்மியைக் கொண்டு வந்து வைப்பதும், பானையை அடுக்குவதும், ஓமம் வளர்ப்பதும், மனிதனை மடையனாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையே ஒழிய, அவை வேறு எதற்கும் பயன்படுவது கிடையாது. தாலி கட்டுவது என்பது பெண்களை அடிமை என்பதைக் காட்டுவதற்கும், கணவன் இறந்தால் அதை அறுத்து முண்டச்சி என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவுமே தவிர, வேறு எதற்காகத் தாலி பயன்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.
மூன்றாவதாக, ஜாதி நிலை நிறுத்தப்படுவதற்கு நம் நாட்டில் முக்கிய காரணம், ஜாதியானது தொழிலோடு இணைக்கப்பட்டதாலேயே ஆகும். பரம்பரைப் பரம்பரையாக அந்தந்த ஜாதியைச் சார்ந்தவன் அந்தந்த ஜாதிக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட அந்தந்த தொழிலைச் செய்து வந்ததால், ஜாதியானது நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகத்தான் ஜாதி காப்பாற்றப்பட வேண்டுமென்பதால்தான் பள்ளிக்கூடம் வைக்காமல் இருந்தனர். பள்ளிக் கூடங்கள் வைத்தால் மனிதன் அறிவு பெற்று விடுவான். அறிவு பெற்றால் நான் ஏன் தாழ்ந்த ஜாதி? அவன் மட்டும் ஏன் உயர்ந்த ஜாதி? என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவான் என்பதோடு, எவனும் தான் தாழ்ந்த ஜாதியாக இருக்க விரும்ப மாட்டான். ஆனதால் அரசாங்கங்கள், பள்ளிக்கூடங்கள் வைக்க முன்வரவில்லை என்பதோடு, மனிதனின் மூடநம்பிக்கை, முட்டாள்தனம் வளரும்படியான காரியங்களையே செய்து வந்தன.
எனக்கு இந்த மருத்துவ சமுதாயத்தோடு 12 வயது முதல் தொடர்பு உண்டு. எனது வீட்டிற்குப் பின்னால் இந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் வீடுகள் இருந்தன. அங்கிருந்து என்னோடு இரண்டு பையன்கள் பள்ளிக்கூடத்திற்குப் படிக்க வருவார்கள். அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும்போதே வீட்டிலிருந்து ஓலைப் பாயைக் கையில் சுருட்டி எடுத்துக் கொண்டு வருவார்கள். பள்ளிக்கூடத்தில் நாங்கள் எல்லாம் உள்ளே போய் வகுப்பில் உட்காருவோம். அவர்கள் வகுப்புக்கு வெளியே தாழ்வாரத்தில் பாயை விரித்து அதில் உட்கார்ந்து கொள்வார்கள். வாத்தியார் சொல்வது அவர்கள் காதில் விழாது. 8 வருஷம் படித்தால் தங்கள் பெயரை அதுவும் தப்பும் தவறுமாக எழுதவே கற்றுக் கொள்வார்கள்.
பள்ளிக்கூடத்தில் மட்டும் அவர்களுக்கு இந்த நிலையில்லை. டிஸ்ட்ரிக் போர்டு-தாலுக்கா போர்டு மெம்பராக இருந்தாலும் அவர்கள் ஆபீஸ் கட்டடத்திற்கு வெளியேதான் உட்கார வேண்டும். என்ன பேசுகிறார்கள், என்ன தீர்மானம் போடுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. "மினிட் புக்'கை கொண்டு போய் இங்கு கையெழுத்துப் போடு என்று பியூன் காட்டினால், அந்த இடத்தில் கையெழுத்துப் போடுவார்கள். காங்கிரஸ் காலத்திலும் இந்த நிலைதான். இவர்களுக்காக சுயமரியாதை இயக்கம்தான் போராடி அவர்களுக்கு உரிமை வழங்கச் செய்ததே தவிர, வேறு எவரும் அவர்களின் உரிமைக்காகப் போராடவில்லை. அரசாங்கமும், ஜாதி ஆணவமும் மக்களை முன்னேற முடியாமல் செய்து விட்டன.
நாம் கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம் இவற்றையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். பழமை, முன்னோர் என்பது பற்றி சிந்திக்கவே கூடாது. நமக்கு முன் நடக்கும் நடப்புகளைப் பார்த்து அறிவிற்கேற்ப நடந்து கொள்ள முன்வர வேண்டும்.
திருச்சியில் 14.5.1969 அன்று நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி
- விவரங்கள்
- பெரியார்
- பிரிவு: தலித் முரசு - ஜூன் 2009