பகல் நேரம். பேருந்து நிழற்குடையின் கீழ் மக்கள் காத்திருக்கின்றனர் - பேருந்தை எதிர்பார்த்து. எங்கிருந்தோ சிலர் சீருடையில் திடுமென வருகிறார்கள் - கையில் துப்பாக்கியுடன்! காத்திருந்தவர்களை நோக்கிக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளுகிறார்கள். பத்துப் பேர் சுருண்டு விழுந்து சாகிறார்கள். சுற்றி இருந்தவர்களுக்கு பலத்த அடி உதை. முப்பத்தி நான்கு பேர் படுகாயம் அடைந்தார்கள். இறந்த பலரில் ஒருவர் 62 வயது மூதாட்டி. மற்றொருவர் 1988ஆம் ஆண்டுக்கான சிறுவர் வீரச்செயல் பரிசு பெற்றவர் - வயது பதினெட்டு.
இப்படி நடந்தது இட்லரின் ஜெர்மனியில் அல்ல. இரண்டாம் உலகப் போரிலும் அல்ல. சுட்டவர்கள் சம்மு காசுமீர் தீவிரவாதிகளும் அல்லர். ஒருவேளை நக்சலைட்டுகளா என்றால் அதுவுமில்லை. தாலிபான் களும் அல்ல!
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில்! தலைநகரம் இம்பாலில்! இந்தக் கொடுமை யைச் செய்தவர்கள் அரசுப் படையைச் சேர்ந்த பாதுகாப் புப் படையினர்! இராணுவச் சீரூடையில்! சுடப்பட்டவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்! உலகிற்கே அகிம்சையைப் போதித்த அண்ணல் காந்தி பிறந்த மண்ணில் அரசே தன் மக்களைக் கொன்று குவிக்கிறது என்றால் நாம் எங்கே போய் முறையிடுவது.
மேற்சொன்ன நிகழ்ச்சி நடந்தது 2000, நவம்பர் முதல் நாளில். அப்போதைய குடியரசுத் தலைவராக காந்தியவாதியாம் மேதகு கே.ஆர். நாராயணனும் பிரதமராக வாஜ்பேயியும் ஆட்சியில் இருந்தனர்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நிறைய நடந்திருக்கின்றன. இளம் பெண்களைப் பட்டப்பகலில் வீடு புகுந்து இழுத்துவருவார்கள் முகாமில் வைத்து கூட்டமாகச் சேர்ந்து வன்புணர்ச்சி செய்வார்கள் பிறகு, அப்பெண்ணை சுட்டுக் கொன்று வீசிவிடுவார்கள். இப்படிச் செய்யும் இந்திய இராணுவப் பாதுகாப்புப் படையினரை யாரும் கேள்வி கேட்க முடியாது! காரணம் கேட்க முடியாது! வழக்குத் தொடுக்க முடியாது! விசாரணை செய்ய முடியாது! ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டம் - 1958 எனும் பெயரால் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புப் படை நாட்டையும் மக்களையும் பாதுகாக்கிறதோ இல்லையோ இந்தச் சட்டம் அப்படையைப் பாதுகாத்து வருகிறது.
ஆயுதப் படை (சிறப்பு அதிகார)ச் சட்டம் - 1958
ஆங்கிலத்தில் Armed Force (Special Power) Act - 1958 என்று அழைக்கப்படுகிறது. இச் சட்டம் முதன் முதல் போடப்பட்டது 1942ஆம் ஆண்டில் - ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில். ஏன் தெரியுமா? இரண்டாம் உலகப் போரின் போது இந்திய விடுதலை கேட்டுப் போராடி வந்த காங்கிரஸ்காரர்களை ஒடுக்கி அழிப்பதற்காக ஆங்கிலேயர்கள் தமது காலனி நாடான இந்தியாவில் கொண்டு வந்த சட்டமாகும் இது. அதே சட்டத்தைத்தான் இன்றுவரை காங்கிரஸ்காரர்களும் பின்பற்றி வருகின்றனர். மணிப்பூர் ஒன்றும் இந்திய அரசின் காலனி நாடல்ல. ஆங்கிலேயர் ஆட்சியின் போது காங்கிரஸ் விடுதலை கேட்க முடியுமென்றால் இப்போதைய இந்திய சனநாயக ஆட்சியில் மணிப்பூர் மக்கள் விடுதலை கேட்கக் கூடாதா? பழைய சட்டம் அப்படியே நீடிப்பதேன்? ஆட்சி மாறியதே தவிர சட்டம் அதேதான்! சட்டத்தின் சாரம் மாறவில்லை சில வார்த்தைகள் மட்டுமே மாறின!
'அசாம் கலவரப் பகுதிச் சட்டம் - 1955' என்ற ஒன்றை அசாமில் செயல்படுத்தினார்கள். நாட்டில் ஏதாவது ஒர் இடத்தைக் கலவரப் பகுதி என்று அறிவித்து விட்டு, இந்தக் கொலை பாதகச் சட்டத்தைக் கொண்டு வந்து விடுவது தில்லி அரசின் வாடிக்கை.
அசாமுக்குப் பிறகு நாகாலாந்து! அங்கே 'நாகா இயக்கம்' விடுதலைக்காகப் போராடியது. அதை ஒடுக்குவதற்காக, 'ஆயுதப் படை (சிறப்பதிகார)ச் சட்டம் - 1958' என்ற சட்டத்தை நாடாளுமன்றம் 1958 செப்டம்பர் 11ஆம் நாள் நிறைவேற்றியது. அடுத்து விடுதலை வேட்கை மணிப்பூரிலும் பற்றியது. ஏறக்குறைய பதினேழுக்கும் மேற்பட்ட விடுதலைக் குழுக்கள் அங்கே இயங்கி வருகின்றன.
1.ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF)
2.மக்கள் விடுதலைப் படை (P.L.A)
3.காங்கிலிய் பாக் புரட்சிகர மக்கள் கட்சி (PREPAK)
4.காங்கிலிய் யாவோல் கான்னா லுப் (KYKL)
5.குகி புரட்சிகரப் படை (KRA)
6.குகி தேசியப் படை (KNA)
7.மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணி (PULF)
இப்படிச் சில……
இந்த அமைப்புகளின் விடுதலைப் போராட்டத்தைக் காரணம் காட்டி மணிப்பூரைக் கலவர பூமியாக அறிவிப்பு செய்து ஆயுதப் படை (சிறப்பதிகார)ச் சட்டம், 1958 ஐ அங்கே 1980ஆம் ஆண்டு திணித்துவிட்டது இந்திய அரசு.
இந்தச் சட்டத்தின் அம்சங்களைக் கேட்டால் யாரும் நடு நடுங்கிப் போவார்கள். முக்கிய அம்சங்கள் சில:
1. பிடி ஆணை இல்லாமல் யாரையும் கைது செய்யலாம். சுட்டுத் தள்ளலாம். எச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற அவசியமோ தேவையோ கிடையாது.
2. கூட்டங்கூடுவது தடை செய்யப்பட்டிருந்தால், கூடியவர்கள் அப்பாவிப் பொதுமக்களாக இருந்தாலும், சுட்டுத் தள்ளலாம்.
3. சுடுவதற்கான காரணங்களோ நியாயங்களோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.
4. ஒழுங்கை நிலை நாட்டுவதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்று அதிகாரி கருதினால் போதும் சுடலாம். வேறு காரணம் தேவையில்லை.
5. ஆயுதப் படை தவறு செய்துவிட்டது என்று அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடியாது. நீதி விசாரணை கோர முடியாது.
இவ்வளவு பாதுகாப்புடன் இருக்கும் பாதுகாப்புப் படை கொடுமைகள் செய்வதில் வியப்பில்லை அல்லவா. ஆனாலும் அடக்குமுறையை எதிர்த்து மணிப்பூரில் விடுதலைத் தாகம் வீறுகொண்டெழுந்து வருகிறதேயல்லாமல் கிஞ்சிற்றும் குறையவில்லை. காரணம், மணிப்பூர் ஒரு போராட்டப் பாரம்பரியம் கொண்ட தேசம்.
மணிப்பூர்
மணிப்பூர் தேசத்திற்கு மூவாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பெருமை மிகு வரலாறு உண்டு. கி.மு. 1445 முதல் யார் யார் ஆண்டார்கள் என்ற வரலாறு தெளிவாக இருக்கிறது. 'மகுடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கம்' என அந்நாடு அழைக்கப்படுகிறது. செந்நெல்லும் கோதுமையும் சோளமும் செழித்து வளரும் தேசம். சுண்ணாம்புக் கல் தாது நிறைய கிடைக்கும். பட்டு உற்பத்தி, பிரம்புப் பொருட்கள், மூங்கில் பொருட்கள், தோல் பொருட்கள் போன்ற குடிசைத் தொழில்களும், கைத்தறியும் மிகுந்த தேசம். மக்கள் தொகை 22,93,896. பரப்பளவு 22,327 ச.கி.மீ.
1891ஆம் ஆண்டு வரை மணிப்பூர் இறையாண்மையுள்ள சுதந்திரத் தேசமாக இருந்தது. 'ஆங்கில - மணிப்பூர்' போரில் அது அடிமையாயிற்று. இந்தியா சுதந்திரம் பெற்றபோது மணிப்பூரும் சுதந்திரமடைந்தது. மக்களாட்சி மலர்ந்தது! மகாராசா புதசந்திரசிங் அதிபரானார். 1949 அக்டோபர் 15இல் இந்தியா மணிப்பூரை விழுங்கிவிட்டது. 1956இல் அது ஒன்றியப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. 16 ஆண்டு கழித்து 21-1-1972 அன்று மணிப்பூர் தேசம் மாநிலம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் இராணுவ பலத்தின் காரணமாக மணிப்பூர் இணைக்கப்பட்டதே தவிர, அது விரும்பி இணையவில்லை என்பதால் மணிப்பூர் மக்கள் தங்கள் தேசம் இந்தியாவிலிருந்து விடுதலை பெறுவதையே விரும்புகின்றனர். நாளுக்கு நாள் விடுதலை வேட்கை மணிப்பூர் மக்களிடையே கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. மாநில அரசாலும் முதலமைச்சர் உக்ராம் இபாபி சிங்காலும் விடுதலை கோரும் புரட்சிகர மக்களை அடக்கி ஒடுக்க முடியவில்லை. எனவே இந்திய அரசு தலையிட்டுத் துணை இராணுவத்தை அங்கே அனுப்பியது. அந்த இராணுவத்திற்கு 1980இல் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம் - 1958 - ஐ வழங்கியது.
அந்த ஆயுதப் படை செய்துவரும் கொடுமைகளில் ஒன்றைத்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக் கொல்வதை யார்தான் பொறுத்துக் கொள்வர். ஒரு மனித உரிமைப் போராளியாம் இளம்பெண் இரோம் சார்மிளாவால் பொறுக்க முடியவில்லை.
இரோம் சார்மிளா சானு
இவர், மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு அருகில் உள்ள கொங்கபால் எனும் ஊரில் 14-03-1972ஆம் நாள் பிறந்தார். தந்தை இரோம் நந்தர் தாய் இரோம் ஓங்பி சக்தி. இவர் ஒரு மனித உரிமை ஆர்வலர், பத்திரிகையாளர், அரசியல் ஆர்வலர், கவிஞர், காந்தியத்தில் ஈடுபாடுடையவர்.
இக்கட்டுரைத் தொடக்கத்தில் கூறப்பட்ட நிகழ்ச்சி இவரைப் பெரிதும் பாதித்தது. ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உண்ணாநோன்பு மேற்கொண்டார். மக்களைத் திரட்டவும் அரசின் கவனத்தை ஈர்க்கவும் 04-11-2000 அன்று மாலை, தாயின் ஆசீர்வாதத்தோடு தன் உண்ணாநோன்பைத் தொடங்கினார். நோன்பின் இரண்டாம் நாளான 6-11-2000 அன்று தற்கொலை முயற்சி எனக் குற்றம் சாட்டப்பட்டு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 300இன் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாள்கள் கடந்தன. உடல்நிலை கவலைக்கிடமானது. ஆனாலும் உண்ணாநோன்பைத் தொடர்ந்தார். மூக்கின் வழியே குழாயைத் திணித்து அக்குழாயின் மூலம் உணவை செலுத்தினார்கள். பலர் வேண்டிக் கேட்டுக் கொண்டும் உண்ண மறுத்துவிட்டார் சார்மிளா. ஒரு நாள் இரு நாள் அல்ல் ஒரு மாதம் இரு மாதம் அல்ல் ஆண்டுக் கணக்கில் உண்ணாநோன்பு தொடர்ந்தது. ஆண்டுக்கு ஒருமுறை அவரை விடுதலை செய்வதும் மீண்டும் கைது செய்வதும் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மணிப்பூரில் இராணுவம் நடத்திய கொடுமைகளில் உச்சகட்டமான கொடுமை ஒன்றை இங்கே கூறியாக வேண்டும்:
தங்ஜம் மனோரமா என்ற பெண் விடுதலைப் போராளி அல்ல. ஆனாலும் பாதுகாப்புப் படைக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. காரணம் அவரது இளமை! 11-7-2004 நள்ளிரவில் வீடு புகுந்து அவரைப் படையினர் இழுத்துச் சென்றனர் மாறி மாறி பலரும் அவரை வன்புணர்ச்சி செய்தனர் பிறகு கொன்று வீசிவிட்டனர்.
மணிப்பூர் மக்களிடையே இது பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கோபம் கொண்ட பெண்கள் சிலர் இம்பாலின் இதயம் போன்ற இடமான காங்லாவில் கூடினார்கள். பெண்கள் பன்னிரெண்டுபேர் தங்கள் ஆடைகளை துப்புறவாக அவிழ்த்து நின்று “இந்திய இராணுவமே எங்களையும் வன்புணர்ச்சி செய்து கொல்லுங்கள்” என்று கூக்குரலிட்டனர். உலக ஏடுகளிலும் வலைதளங்களிலும் இந்தக் காட்சிகள் வெளியிடப் பெற்றன.
இவ்வளவு கேவலம் நேர்ந்த பிறகு 2004 ஆம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் மணிப்பூர் வந்தார். அவர் தந்த வாக்குறுதிப்படி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஜீவன் ரெட்டிக் குழு “ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டம் 1958ஐ மறுபரிசீலனை செய்வது குறித்து அறிக்கை தரவேண்டுமென ஆணையிடப்பட்டது. 2005 ஜுன் 6ஆம் நாள் அக்குழு அறிக்கை அளித்தது. அச்சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் 'சட்டப்புறம்பான நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் - 1967'ஐ வேண்டுமானால் அதற்குப் பதில் செயல்படுத்தலாம் என்றும் அக்குழு பரிந்துரை செய்தது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்சி உடனடியாக மறுத்துவிட்டார். 147 பக்க அறிக்கை தூசிபடிந்து கிடக்கிறது. எனவே, இன்றளவும் இராணுவக் கொடுமைகள் தொடர்கின்றன. சார்மிளாவின் உண்ணாநோன்பும் தொடர்கிறது.
சார்மிளாவை விடுதலை செய்வதும் கைது செய்வதுமான கண்ணாமூச்சி விளையாட்டு நடந்தபோது ஒருமுறை (2-10-2006 அன்று) அவர் தில்லிக்குத் தப்பிச் சென்றுவிட்டார். நேரே ராஜ்காட்டுக்குச் சென்று அண்ணல் காந்தியின் சமாதியை அடைந்தார். “எனது தெய்வத்திற்கு மரியாதை செலுத்த வந்தேன்” எனக்கூறி மாலை அணிவித்து வணங்கினார்.
பிறகு, உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், ஆதரவாளர்களோடு ஜந்தர் மந்தர் வந்தமர்ந்தார். அங்கும் உண்ணாநோன்பு தொடர்ந்தார். தில்லி காவல்துறை அவரை நள்ளிரவில் கைது செய்தது.
நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் திருமதி ஷ்ரின் எபடி, சார்மிளாவை இங்குதான் முதன்முதல் சந்தித்தார். “ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் செய்யும் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலுக்கும் மற்றும் உலகெங்கும் எடுத்துச் செல்வேன்” என்று சார்மிளாவிடம் உறுதியளித்தார். “சார்மிளா இறந்தால் அதற்கு இந்திய நாடாளுமன்றமும் நீதிமன்றமும் நீதித்துறையும் இராணுவமும் பொறுப்பு… பிரதமரும் குடியரசுத் தலைவரும் பத்திரிகையாளரும் பொறுப்பு” என எபடி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார்.
சார்மிளாவின் உடல்நலம் குன்றுவதைப் பார்த்துத் தில்லி காவல்துறை பயந்தது உடனடியாக மணிப்பூர் சிறையில் அவரைத் தளைப்படுத்தியது.
மணிப்பூர் மருத்துவமனையில் அவர் வைக்கப்பட்டிருந்த அறையே சிறையாக அறிவிக்கப்பட்டது. சிறையில் உள்ள செவிலியர்கள் மருத்துவர்கள் காவலர்கள் யாவரும் இவருக்கு உற்ற உறவினர்களைப் போல் நடந்து கொள்கிறார்கள். படித்தல், கட்டுரையும் கவிதையும் எழுதுதல் என தன் நேரத்தைச் செலவிடுகிறார். பார்வையாளர் களைச் சந்திப்பார், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதிலளிப்பார்.
6-11-2009ஆம் நாளோடு அவரது உண்ணாநோன்பு ஒன்பதாண்டு நிறைவடைந்து விட்டது. அப்போது அவர் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தி இதுதான்:
“நமது அரசாங்கம் கிளர்ச்சியாளர்களைப் பார்த்து ஆயுதங்களைக் கீழே போடுங்கள் என்றும் அகிம்சையை நோக்கி நடைபோடுங்கள் என்றும் அறிவுரை கூறுகிறது. முதலில் இதை போதிக்கும் அரசாங்கம் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் …..
“இந் நாட்டில் நாம் வாழ்வது குறித்து ஏதாவது பெருமைப்பட முடியுமா?.... எங்கு பார்த்தாலும் வெறுமையையும், இன்மையையும், அடிமைத்தனத்தையும்தானே காண்கிறோம்…
“எனது உடம்பே எனது ஆயுதம். இதை நான் எப்படி விளக்குவது? எனக்கு இது ஒன்றும் தண்டனை அல்ல. என்னளவில் இதை எனது அதிகபட்சக் கடமையாகக் கருதுகிறேன்.
“மேலும் மேலும் ஆயுதப்படை அத்துமீறுவதைத் தடுத்து நிறுத்த வேறெந்த வழியும் தெரியவில்லை. ஆயுதப் படைச் சட்டம் 1958ஐ விலக்காதவரை நான் உண்ணாநோன்பை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்”
ஆதரவுக் கரங்கள்
சார்மிளாவின் உண்ணாநோன்புப் போராட்டத்தை உலகளவில் பலரும் ஆதரித்து வருகின்றனர். அவர்கள் வருமாறு:
1. பிரபீர் கோஷ் - இந்திய அறிவியல் மற்றும் பகுத்தறிவுக் கழகப் பொதுச் செயலாளர்.
2. சுமித்ரா பத்மநாபன் - மனிதாபிமானக் கழகப் பொதுச் செயலாளர்.
3. ஷ்ரின் எபேடி நொபெல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர்.
4. மகேஸ்வட தேவி
5. அருந்ததிராய்
6. பிரபாத் மஹாரானா
7. குவங்ஜு- ஆசிய மனித உரிமைக் குழு, தென்கொரியா.
இவர்கள் தவிர இன்னும் பலர் ஆதரித்தே வருகிறார்கள்.
பரிசும் பாராட்டும்
தென்கொரிய நாட்டிலுள்ள க்வன்ஜு மனித உரிமைக் கழகம் 18-5-2007 அன்று சார்மிளாவுக்குப் பரிசளித்துப் பாராட்டியது. அதைப் பெற்றுக் கொண்ட போது சார்மிளா இப்படிச் சொன்னார்.
“ஏதோ மகிழ்ச்சி. பரிசு பெறுவது எனது விருப்பமன்று. எனது போராட்டம் புகழுக்காகவோ பரிசுக்காகவோ அன்று”
திட்டமிடல் மற்றும் நிர்வாகத்துக்கான இந்திய நிறுவனம் 12-9-2010 அன்று இவருக்கு ரவீந்திரநாத் தாகூர் அமைதிப் பரிசாக ஒரு சால்வை, ஒரு பாராட்டிதழ், ஒரு தங்கப்பதக்கம், 51 லட்சம் ரூபாய் பணமுடிப்பு ஆகியவை அளித்துக் கவுரவித்தது.
அமைதிக்கான நோபெல் பரிசினை (2010 ஆண்டுக்குரியதை) சார்மிளாவுக்குப் பரிந்துரைக்க வேண்டுமென்று 2010 மார்ச்சு முதல் தேதியன்று மனிதாபிமானக் கழகமும் இந்திய அறிவியல் மற்றும் பகுத்தறிவுக் கழகமும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
சார்மிளா பற்றி எழுதப்பட்ட நூல்கள்
இரண்டு நூல்கள் இதுவரை எழுதப் பட்டுள்ளன.
1) பிரகாசமாக ஒளிர்கிறார்
ஆசிரியர்: தீப்தி பிரியா மெஹ{ட்ரா இந்நூல் 15-6-2009 அன்று வெளியிடப்பட்டது.
2) சார்மிளா
ஆசிரியர்: அகதா சங்மா (இவர் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.எ. சங்மாவின் மகள். தற்போது மைய அமைச்சராக இருக்கிறார்) இந்நூல் செப்டம்பர் 2009 இல் வெளியிடப்பட்டது.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில்…
1991 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிடம் இந்தியா தனது இரண்டாவது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அப்போது உறுப்பினர்கள் பலரும் ஆயுதப் படைச் சட்டத்தின் உண்மைத் தன்மை பற்றி வினா எழுப்பினர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு இது உட்பட்டதா எனக் கேட்டனர். மனித உரிமை, அரசியல் உரிமை பற்றிய சர்வதேசச் சட்டப் பிரிவு 4இன் படிதான் ஆயுதப் படைச் சட்டம் - 1958 உள்ளது என நிரூபிக்க முடியுமா எனக் கேட்டனர்.
23-03-2009 அன்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை இந்த ஆயுதப் படைச் சட்டத்தை இந்தியா திரும்பப் பெறவேண்டும் என்றார். இச்சட்டம் காலாவதியான ஒன்று என்றும் இது காலனி ஆட்சிக் காலத்தது என்றும் சமகால சர்வதேச மனித உரிமைகளின் தரத்தை இது மீறுவதாக உள்ளது என்றும் கூறினார். இப்படியெல்லாம் கேட்கப்பட்ட பிறகு கூட இந்திய அரசுக்கு வெட்கமில்லை. கவலையும் இல்லை.
*********
இன்றுவரை இரோம் சார்மிளாவுக்கு மூக்கில் குழாய் செருகி அதன் வழி உணவளித்து வருகிறார்கள். 2010 செப்டம்பர் 4ஆம் நாளோடு அவரது உண்ணாநோன்பு பத்தாண்டுகளை நிறைவு செய்துவிட்டது. இருபத்தெட்டு வயதில் ஆரம்பித்த நோன்பு முப்பத்தெட்டு வயதாகியும் தொடர்கிறது. அரசு இப்படி நடந்து கொண்டால் விடுதலை வேட்கை தீவிரமாகுமே தவிர கிஞ்சிற்றும் தணியாது. விடுதலை உணர்வாளர்கள் ஆயுதமேந்தும் நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.
எந்த நாட்டில் இருபத்தி ஏழு ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டாரோ அந்த நாட்டுக்கே அதிபரானார் நெல்சன் மண்டேலா. ஊல கெங்குமிருந்து இருநூற்று அய்ம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அதுமட்டு மன்று, 1993ஆம் ஆண்டு நோபெல் அமைதிப் பரிசும் அவருக்குக் கிட்டியது. இலண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்குச் சிலை வைக்கப்பட்டது. மண்டேலாவின் சொந்த நாடான தென் ஆப்பிரிக்கா சோகனஸ் பார்க்கில் அவருக்கு இருபது அடி உயர சிலை வைக்கப்பட்டது.
சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்த குற்றத்திற்காகத் தற்சமயம் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் சீன மக்கள் நாயகவாதியான லியு ஜியோபோ அமைதிக்கான நோபெல் பரிசு அளித்துப் பாராட்டப்பட்டார்.
பர்மா படையாட்சியாளர்களால் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச் சிறை வைக்கப்பட்டார் மியான்மர் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி. புற்று நோயால் இலண்டனில் மாண்ட அவரது கணவர் மைக்கேல் அரிஸ் உடலை ஆங் சான் சூச்சி சென்று பார்க்கக் கூட அனுமதிக் கவில்லை இராணுவம். இதே ஆங் சான் சூச்சிக்குத்தான் 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. இன்று அவர் விடுதலை செய்யப்பட்டதானது சனநாயகத்தின் வெற்றியாகவே உலகம் பார்க்கிறது. இவற்றை யெல்லாம் இந்திய ஆளும் வர்க்கம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆணுக்குப் பெண் இளைப் பில்லை என்று கூறத் தக்க அளவுக்குப் பெண்கள் அங்கங்கே போராடி வருகின்றனர். அந்த வகையில் ஆங் சான் சூச்சியைப் போல் இந்தியாவால் மணிப்பூர் தேசத்தின் இரோம் சார்மிளா சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார். உண்ணாநோன்பு இருந்தபடி.! தொடர்ந்து உறுதி குலையாது போராடி வருகிறார்!
உலக மனித உரிமை ஆர்வலர்கள் காரி உமிழ்வதையும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கண்டிப்பதையும் மனதில் கொண்டு மணிப்பூர் ஆயுதப் படை (சிறப்பதிகார)ச் சட்டம் - 1958 - ஐ இந்திய வல்லாதிக்க அரசு திரும்பப் பெற வேண்டும். மறுத்தால் மணிப்பூர் தேசிய விடுதலை மலரும்.