மக்கள் பேராதரவுடன் - தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - புதிய ஆட்சியின் பரிசீலனைக்கு...
தமிழ்நாட்டில் - மக்கள் அமைதியான ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்துள்ளனர். தமிழகத்தின் 17வது முதலமைச்சராக 34 அமைச்சர்களுடன் ஆடம்பரம் இல்லாத விழாவில் மக்கள் பேராதரவோடு செல்வி ஜெயலலிதா மூன்றாவது முறையாக பதவி ஏற்றுள்ளார். தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தந்து செயல்படவிருப்பதாக முதல்வர் கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் முனைப்புக் காட்டி, செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிடம் அரசியல் அரங்கில் ஆரவாரமாகப் பேசப்படாத - அதே நேரத்தில் மிக முக்கியமான கீழ்க்கண்ட பிரச்சினைகளை பெரியார் திராவிடர் கழகம் புதிய ஆட்சிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது.
1. தமிழ்நாடு கிராமங்களில் இன்னும் தீண்டப்படாத மக்கள் மீதான சாதி ஒடுக்குமுறை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரட்டைக் குவளை, தனிச் சுடுகாடு, செருப்பு போட்டு நடக்கும் உரிமை, முடி வெட்டிக் கொள்ளும் உரிமை, இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் உரிமை, தலித் மக்களுக்கு - சாதி ஆதிக்கவாதிகளால் மறுக்கப்படுகிறது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற அரசுத் திட்டங் களில்கூட ‘தீண்டாமை’ பின்பற்றப்பட்டு, தனித் தனி சுடுகாடுகள் கட்டப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட தமிழகத்தின் இந்த மோசமான ‘தீண்டாமை’ களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளது. நடந்து முடிந்துள்ள தேர்தலில் தலித் மக்கள் தங்களின் பேராதரவை அ.இ.அ.தி.மு.க. அணி வேட்பாளர்களுக்கு வழங்கி, ஆட்சியில் அமர உதவி புரிந்துள்ள நிலையில் - புதிய ஆட்சி, இந்தத் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்து வதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு, இந்தியாவிலேயே தீண்டாமை ஒடுக்குமுறை முற்றிலும் ஒழிந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்ட வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். மனிதனுக்கு மனிதன் - இழைக்கும் இந்த அவமதிப்பும், அடக்குமுறை யும் தான் தமிழகத்தின் பிரச்சினைகளிலேயே முதன்மையானது என்று நாம் கருதுகிறோம்.
2. தமிழ்நாட்டில் - செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் ஈழத் தமிழர்களுக்கான சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மிக மோசமாக எந்த வழக்கு விசாரணையுமின்றி பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளிலுள்ள உரிமைகள்கூட இந்த சிறப்பு முகாம்களில் கிடையாது. உறவினர்கள் வந்து பார்ப்பதுகூட அவ்வளவு எளிதல்ல. இந்த முகாம்களிலிருந்து தங்களை விடுவித்து, ஏற்கனவே வேறு அகதிகள் முகாம்களிலுள்ள தங்கள் உறவினர்களுடன் கலந்து வாழ அனுமதியுங்கள்; அல்லது குடும்பத்தினரையாவது தங்களுடன் சேர்ந்து வாழ அனுமதியுங்கள்; அல்லது தங்கள் மீதான வழக்குகளை விசாரணைக்கு வர ஏற்பாடு செய்யுங்கள் என்ற நியாயமான கோரிக்கைகளை இந்த சிறப்பு முகாம்களில் வதைபடும் தமிழர்கள் வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.
கடந்த முறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இத்தகைய சிறப்பு முகாம்கள் எண்ணிக்கை குறைந்தன. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது, இந்த முகாம்கள் எண்ணிக்கை அதிகரித்து விடுவது வாடிக்கை. தற்போது மீண்டும் செல்வி ஜெய லலிதா முதல்வராக வந்துள்ளதால், தங்கள் அவல வாழ்க்கைக்கு, விடிவு கிடைக்கும் என்ற நம்பிக் கையோடு, இந்தத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நியாயமான கோரிக்கையை புதிய ஆட்சி, பரிசீலிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
3. ஈழத்தில் நடந்த இறுதிக் கட்டப் போரில் ராஜபக்சே நடத்திய போர்க் குற்றங்களுக்கு, பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று அய்.நா. குழுவின் பரிந்துரையை - ஆதரித்து முதல் பேட்டியிலேயே அழுத்தமாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியவுடன், தமிழின உணர்வாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பூரித்துப் போய் நிற்கிறார்கள். இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ் நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் வெளிப் படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
4. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய பெருமை தமிழகத்துக்கு உண்டு. அந்தத் தமிழ் நாட்டில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் மாணவர்கள் இப்போது கல்விக் கட்டணக் கொள்ளையால் மிகவும் பாதிக்கப்பட் டுள்ளனர். தமிழகத்தில் பெரும் கொள்ளை வணிகமாக மாறிப் போய் நிற்கும் இந்த கல்வி வணிகத்தை கட்டுப்படுத்தி, கல்வி பெறத் துடிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மை யான சமூகநீதி கிடைத்திடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது, இந்த புதிய அரசின் தலையாய கடமையாகக் கருதுகிறோம்.
5. தமிழ்நாட்டின் தொழில் - வணிக வளர்ச்சி என்பது தமிழர்களின் வளர்ச்சியோடு இணைந்து நிற்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்த பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களின் சிறு, குறுந்தொழில்களை முழுமையாக நசுக்கி விட்டன. தமிழ்நாடு மக்களின் நிலங்கள், சுற்றுச் சூழல்கள், வாழ்வாதார உரிமைகளைப் பறித்து - அரசின், கொழுத்த சலுகைகளைப் பெற்று பெரும் லாபம் ஈட்டும், இந்த பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியால் தமிழ்நாட்டின் உண்மையான ஆரோக்கியமான வளர்ச்சி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆட்சி மாறியவுடன் - இதே பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் முதலீடு என்ற பெயரில் மீண்டும் வலை வீசி வருவதற்கு காத்திருக்கின்றன. இதனால் தமிழ் நாட்டு மக்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளை, கவலையுடன் புதிய ஆட்சி பரிசீலித்து, பன் னாட்டு தொழில் நிறுவனங்களின் சுரண்டலுக்கு கடிவாளம் போட வேண்டியது அவசியமாகும்.
பல்வேறு கடமைகள் - புதிய ஆட்சிக்கு காத்திருக்கின்றன என்றாலும் - இந்த முக்கியப் பிரச்சினைகளை பெரியார் திராவிடர் கழகம், புதிய ஆட்சியின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறது.
சாதி ஒழிப்பு - இன விடுதலை - பெண்ணுரிமை - சமூகநீதி - பகுத்தறிவு என்ற லட்சியங்களுக்காக தொடர்ந்து களப்பணியாற்றும், பெரியார் திராவிடர் கழகம், இந்தப் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே ஆட்சிக்கு ஆதரவையும், எதிர்ப்பையும் முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. அதே வழியில் பெரியார் திராவிடர் கழகத்தின் பணி தொடரும்!
5 தொகுதிகளில் காங்கிரஸ் தப்பியது எப்படி?
63 தொகுதிகளில் போட்டியிட்டகாங்கிரஸ் கட்சி, 5 தொகுதிகளில் மட்டும் வெற்றிப் பெற்றுள்ளது. உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் காங்கிரசுக்கு தர விரும்பியது ‘பூஜ்யம்’ தான். ஆனால், இந்த 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றதற்குக் காரணம் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டு கூடுதல் வாக்கு பெற்று, எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்தது தான்!
விளவங்கோடு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பெற்ற 37000 ஓட்டுகள், பட்டுக் கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் யோகானந்த் பெற்ற 22000 ஓட்டுகள்; குளச்சல் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பெற்ற 35000 ஓட்டுகள், கிள்ளியூரில் பா.ஜ.க. வேட்பாளர் பெற்ற 32000 ஓட்டுகள், ஓசூரில் சுயேச்சை வேட்பாளர் சத்யா பெற்ற 24000 பெற்ற ஓட்டுகள் இந்த தொகுதிகள்தான் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வாய்ப்பாகி விட்டன.
• வாக்காளர்களை சாதி அடிப்பையில் அணி திரட்டுவது சாதிய அரசியலே தவிர, சமூகநீதிக்கான அரசிய லாகாது. அது ஜனநாயகத்துக்கும் எதிரானதாகும். சமூக நீதியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சாதியினரின் எண்ணிக்கை பலமே வெற்றிகளைத் தீர்மானிக்கும். தமிழ்நாட்டில் சாதியடிப்படையில் செயல்படும் அரசியல் கட்சிகள், சாதி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டிராமல், சாதி வாக்குகளையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இது அக்கட்சிகளின் தலைவர்கள் வளர்ச்சிக்குத்தான் பயன்படுகிறதே தவிர, ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சிக்காக அல்ல.
அனைத்து இந்துக்களுக்கும் தலைமை தாங்கும் உரிமைகளை எடுத்துக் கொண்ட பார்ப்பனர்கள், தங்களின் சமூக ஆதிக்கத்துக்கு இந்துக்களைப் பயன்படுத்துவதற்கும், சாதிக் கட்சித் தலைவர்கள் தங்களது தலைமைக்கும், அதிகாரத்துக்கும் சொந்த சாதி மக்களைப் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு இல்லாத நிலையில், சாதிக் கட்சிகளும் உள்ளடக்கத்தில் பார்ப்பனியமாகவே மாறிப் போய் நிற்கின்றன. இந்தத் தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற சாதிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் மக்கள் சாதியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தந்தே வாக்களித்துள்ளனர்.
• 124 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., மொத்தம் பதிவான வாக்குகளில் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 42.11 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் பதிவான வாக்குகளில் சராசரியாக பெற்றது 35.64 சதவீதம் தான். தி.மு.க.வுக்கு வாக்களிக்க விரும்பியவர்கள்கூட காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் அக்கட்சிக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணை நின்று தமிழின வரலாற்றில் ‘நீங்காத் துரோக’ப் பழியை சுமந்து நிற்கும் காங்கிரசை தமிழ் மக்கள் இத் தேர்தலில் ஒதுக்கித் தள்ளியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டு, மொத்தம் பதிவான வாக்குகளில் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 42.15 வாக்குகள் பெற்ற காங்கிரசுக்கு, முள்ளிவாய்க்கால் துரோகத்துக்குப் பிறகு - தமிழக மக்கள் வழங்கியிருக்கும் ‘பரிசு’ இது!