அவர் சென்னையைச் சேர்ந்த ஒரு சாய்பாபா பக்தை; இதயத்தில் மூன்று அடைப்பு ஏற்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்தேயாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். அந்தப் பெண்ணின் கனவில் வந்த சாய் பாபா, “நீ உயிர் பிழைப்பாய்; அறுவை சிகிச்சை வேண்டாம்” என்றாராம். பக்தை அடுத்த நாள் மருத்துவர்களிடம் சென்று இதை கூறினார். மருத்துவர்களும் பக்தையை சோதித்து, ‘ஆமாம் உனக்கு எந்த ஆபத்தும் இல்லை; அறுவை சிகிச்சை தேவை இல்லை’ என்று கூறி விட்டார்களாம்.

இதே போல் பேராசிரியராகவும், பரத நாட்டியக் கலைஞராகவும் இருந்த ஒரு இளைஞருக்கு இடுப்புக்குக் கீழே தீராத வலி ஏற்பட்டு, என்ன நோய் என்றே கண்டறிய முடியாதபோது, பாபா தந்த விபூதியை இடுப்புக் கீழே தடவியபோது நோய் குணமடைந்து விட்டதாம்.

இப்படிப்பட்ட கதைகள் புட்டபர்த்தி சாய்பாபாவின் மகிமை பற்றி வலம் வந்தன. அத்தகைய சக்தியை தன்னிடம் வைத்திருந்த பாபாவுக்கு, ஏன், தனது நோயைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை? பல நாட்கள் மருத்துவமனையில் தங்கி, ஏன் சிகிச்சை செய்துகொண்டார்?

கையசைப்பில் விபூதி வரவழைப்பது, ஒரு தந்திரமே தவிர ‘அற்புதம்’ அல்ல என்று, உலகத்தின் தலைசிறந்த நாத்திகவாதியான டாக்டர் கோவூர் நிரூபித்தார். அவரது சீடரான மறைந்த பிரேமானந்தாவும், சாய்பாபா மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்தி வந்தார். புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு சவால் விட்ட கோவூர், நேரடியாக அவரது ஆசிரமத்திலேயே சந்திக்கச் சென்றபோது, பாபா புட்டபர்த்தியை விட்டே நகர்ந்து விட்டார்.  கையசைப்பில் மோதிரம் வரவழைத்த பாபா மீது, தங்கக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் பிரேமானந்தா முயன்றார்.

பெங்களூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த எச். நரசிம்மையா, சீரிய பகுத்தறிவாளர்; காந்தியவாதி. அவரது தலைமையில் பாபாவின் ‘அற்புத மோடிகளை’ விஞ்ஞான பூர்வமாக அம்பலப்படுத்த, 1976 இல் ஒரு குழு அமைக்கப்பட்டது. சாய்பாபா, தனது அற்புதங்களை குழுவிடம் நேரில் செய்து காட்ட முடியுமா, என்று குழுவினர் சவால் விட்டனர். ஆனால் பாபா சவாலை எதிர்கொள்ள தயாராக இல்லை.

பாபாவின் நெருக்கமான சீடர்கள் பலரே - பிறகு உண்மையை உணர்ந்து, பாபாவை விமர்சிக்கத் தொடங்கியதும் நிகழ்ந்துள்ளது. கிளேன்மெலாய் என்ற அவரது முன்னாள் அமெரிக்க சீடர், ‘பாபா ஒரு மாந்திரிக தலைவர்; ஆன்மீகத் தலைவர் அல்ல’ என்று குற்றம் சாட்டினார். நார்வேயின் ஓஸ்லோ பல்கலைக் கழகப் பேராசிரியர் இராபர்ட் பிரிட்டி, பாபாவின் பக்தராக இருந்து, பிறகு அவர் எதிர்ப்பாளரானார். பாபா - விஞ்ஞானம் பற்றிய புரிதலோ, மதங்களின் வரலாறோ அறிந்திடாதவர் என்பதை அம்பலப்படுத்தினார். ஆஸ்திரேலிய நாட்டைச் சார்ந்தவரும், மிகச் சிறந்த அறிஞருமான பிரய்ன்ஸ்டீல் - இதேபோல் பாபா பக்தராக இருந்து பிறகு மனம் மாறியவர். பாபாவின் உண்மையான தெலுங்கு ‘உபதேசங்கள்’ மிக அபத்தமானவை. அதை அப்படியே ஒலி பரப்பினால் அவரது அறியாமை அம்பலமாகிவிடும் என்பதால் அந்த ஒலி நாடாக்களில் அவரைப் போலவே வேறு ஒரு பேராசிரியரால் தயாரித்த உரையை பாபாவின் குரலைப் போல் பேச வைத்து, இது தான் பாபாவின் ‘உபதேசம்’ என்று, பரப்பியதாக அவர் குற்றம் சாட்டினார்.

தனது அமெரிக்க சீடரான ‘வால்டர் கிரவுன்’ என்பவருக்கு அவரது மரணத்துக்குப் பிறகு பாபா உயிர் கொடுத்தார் என்று ஒரு பிரச்சாரம் - உலகம் முழுதும் பரப்பப்பட்டது. பிரிட்டிஷ் பத்திரிகை யாளரும், உலகம் முழுதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருபவருமான மிக் பிரவுன் - இது மோசடிப் பிரச்சாரம் என்று எதிர்த்தார். சாய்பாபா தன்னைப் பற்றிய இந்த விமர்சனங்களைப் புறக்கணித்தார்.

சாய்பாபாவின் உண்மை முகம் அம்பலமாகும்போதெல்லாம் அவரைக் காப்பாற்ற பெரிய மனிதர்களின் படை ஒன்று தயாராகவே இருந்தது. 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் சாய்பாபா மீது மோசமான குற்றச்சாட்டுகள் வந்தபோது, பிரதமர் வாஜ்பாய், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பகவதி, ரெங்கநாத் மிஸ்ராத உள்துறை அமைச்சர் சிவராஜ்பட்டீல் ஆகியோர் கூட்டாக கையெழுத் திட்டு, ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், “பாபா ஒரு உயர்ந்த மகான்; அவரைப் பற்றி செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தனர். உயர்ந்த மகானின் பெருமையைப் பரப்புவதற்கு உயர்ந்த அதிகாரத்திலுள்ள மனிதர்கள் தான் தங்களது அதிகார செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டுமா?

‘ரகசிய சாமியார்கள்’ என்ற ஆவணப் படத்தை லண்டன் பி.பி.சி. தொலைக்காட்சி 2004 இல் ஒளிபரப்பியது. அதில் பாபா சிறுவர்களோடு பாலுறவு கொள்ளும் பழக்கமுடையவர் என்ற உண்மையை அவரது முன்னாள் சீடர்களான அலையா ரம், மார்க் ரோச்சே தங்களது சொந்த அனுபவங்களைக் கொண்டு அம்பலப்படுத்தினர். இதேபோல் பாபாவுக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தி, டென்மார்க் நாட்டின் வானொலி (Danamarks Radio)) மற்றொரு ஆவணப்படத்தைத் தயாரித்து ஒலிபரப்பியது. ‘யுனெஸ்கோ’வின் ‘ஆசியாட்’ நிறுவனம் (UNESCO - Aceid) புட்டபர்த்தி ஆசிரமத்துடன் இணைந்து கல்வி தொடர்பான ஆய்வு நிகழ்ச்சி ஒன்றை புட்டபர்த்தியில் நடத்த திட்டமிட்டிருந்தது. சாய்பாபாவின் ‘சிறுவர்கள் பாலுறவு’ தொடர்பான செய்திகள் வந்தவுடன், யுனெஸ்கோ தனது திட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது.

1993 ஜூன் மாதம் புட்டபர்த்தியின் படுக்கை அறைக்குள் நுழைந்த நான்கு துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள், துப்பாக்கியால் சுட்டனர். சாய்பாபா உயிர் பிழைத்துக் கொண்டார். உள்ளே அவரது மெய்க் காப்பாளர்களுடன் சண்டை நடந்தது. போலீசார் துப்பாக்கியுடன் வந்த 4 பேரையும் சுட்டுக் கொன்றனர். பாபாவின் உதவியாளர்கள் இருவரும் இறந்தனர். முறையான விசாரணை நடத்தாமல் மூடி மறைத்து விட்டனர்.  முன்னாள் உள்துறை செய லாளர் வி.பி.பி. நாயர் காவல்துறை விசாரணையை திட்டமிட்டு மூடி மறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் மட்டுமே பல்லாயிரக்கணக்கான மேடைகளில் இந்த சாய்பாபா மோசடிகளை மக்களிடம் அம்பலப் படுத்தி, இந்த ‘பாபா’க்களை நகைப்புக்குரிய ஏமாற்றுப் பேர்வழிகளாக மக்களிடம் அம்பலப் படுத்தி வந்தன. மறைந்த சுயமரியாதை வீரர் நாத்திகம் இராமசாமி, திராவிடர் கழகத்தில் இருந்த காலத்தில் நடத்தி வந்த தனது “நாத்திகம்” வார ஏடு வழியாக வாரம்தோறும் புட்டபர்த்தி சாய்பாபா மோசடிகளை அம்பலப் படுத்தி வந்தார்.

கடைசியாக தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, தனது இல்லத்துக்கு புட்டபர்த்தி சாய்பாபாவை அழைத்தார். அப்போது அவரது துணைவியார், குடும்பத்தினர், சாய்பாபா காலில் விழுந்து ஆசி வாங்கினர். கையசைப்பிலேயே மோதிரம் வரவழைத்து கலைஞர் கருணாநிதி மற்றும் தயாநிதி மாறனுக்கு வழங்கினார். உடனிருந்த அமைச்சர் துரைமுருகன், தமக்கும் ஒரு மோதிரம் வரவழைத்துத் தருமாறு கேட்டபோது, சாய்பாபாவிடமோ மோதிரம் இருப்பில் இல்லை.

‘மனிதர் உருவில் நடமாடும் கடவுள்’ என்று புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு கலைஞர் கருணாநிதி புகழாரம் சூட்டினார். இந்த “அவலங்களை” மூடநம்பிக்கையாளர்களும், பார்ப்பன ஏடுகளும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டனர். பாபா இறந்தபோது, கலைஞர் கருணாநிதியுடன் பாபா இருந்த படத்தை தவறாமல் அனைத்து ஏடுகளும் வெளியிட்டதோடு, ‘நாத்திகர்கள் நம்பிக்கையையும் பெற்றவர் பாபா’ என்று புகழாரம் சூட்டி எழுதின. இந்தப் பிரச்சாரத்துக்குத்தான் கலைஞர்-புட்டபர்த்தி சாய்பாபா சந்திப்பு பயன்பட்டது.

குறிப்பு: கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுற்றுப் பயணத்தில் பாபாவின் மோசடிகளை அம்பலப் படுத்தும் ‘வீடியோ’ ஒளிப் பேழைகள் கிடைக்கும். தோழர்கள் அதை பெற்றுப் பரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பாபாவுக்கு அரசு மரியாதை அடக்கம்: அரசியலமைப்புக்கே எதிரானது

உயிரியல் துறை விஞ்ஞானியும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான புஷ்பா எம். பார்கவா, ‘இந்து’ ஏட்டில் (மே 15) எழுதிய கட்டுரையில், புட்டபர்த்தி சாய்பாபாவுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ததை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்கள், சமூகத்தில் செல்வாக்கு பெற்றிருந்தவர்களை தனது சீடர்களாக வைத்திருந்தவர் புட்டபர்த்தி சாய்பாபா. முறையற்ற வழிகளில் செல்வத்தை ஈட்டிய ஏராள மானோர், அவரது சீடர்களாக இருந்தனர். அவரது மறைவு, நாட்டுக்கு எப்படி சோகமாக இருக்க முடியும்? ஏன், அரசு மரியாதையுடன் அவரை அடக்கம் செய்ய வேண்டும்?

அறிவியல் மனப் பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய குடிமகனின் கடமையாக அரசமைப்பு சட்டம் கூறும் போது, அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக செயல்பட்ட ஒருவருக்கு, அரசு மரியாதை காட்டுவது அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை அல்லவா என்று அவர்கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரும் - ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் கைகோர்த்துக் கொண்டு சாய்பாபாவுக்கு மரியாதை செலுத்த வந்ததை சுட்டிக் காட்டியுள்ள பார்கவா, சாய்பாபா சாதாரணமான ஒரு ‘மாஜிக்’ மனிதர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியான டாக்டர் ஒய். நாயுடம்மாவும், டாக்டர் பகவந்தமும் (இவரும் ஒரு விஞ்ஞானி - சாய்பாபா பக்தராக இருந்து பிறகு, மனம் திருந்தியவர்) புட்டபர்த்தி சாய்பாபாவை நேரில் சந்தித்தார்கள்.  அப்போது நாயுடம்மா, தனது இரு கரங்களையும் கூப்பி, பாபா முன் நின்று கொண்டு மிகுந்த மரியாதையுடன், தனது, இரு கரங்களிலிருந்து ஒரே ஒரு புல்லை மட்டும் வரவழைத்து தருமாறு பாபாவிடம் கேட்டார்.  பாபாவால் புல்லை வரவழைக்க முடிய வில்லை. தனது தெய்வீக ஆற்றலால் எந்த நோயையும் பாபா குணப்படுத்தியதும் இல்லை. இயற்கை யாகவோ அல்லது மனோதத்துவ முறையிலோ, குணமடைந்த நோய்க்கு பாபாவின் ஆற்றல் என்று பொய்யாக பரப்புரை நடத்தப்பட்டது என்றும் பார்கவா அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Pin It