மிகவும் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திட்டு விட்டது. இது சிங்கள அரசு தமிழரின் உரிமை பற்றிய விடயத்தில் எப்படியோ ஒரு முன்னேற்றகரமான கட்டத்திற்கு வந்துவிட்டது என்றே இன்று பலரும் வாதிக்கின்றனர்.

“இனப்பிரச்சினையின் அடிப்படை குறித்து தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் குறித்து உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகார பூர்வமாகப் பகிரங்கப்படுத்துங்கள்;” என்று ஆளும் கட்சியிடம் எதிர்க்கட்சியிடம் கடந்த மாவீரர்நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த கோரிக்கைக்கு இன்றுவரை ஏன் பதிலில்லை என்பதை இவர்கள் ஏன் விளங்குவதாக இல்லை.

தீர்வுபற்றிய கொள்கை நிலைப்பாட்டையே தெளிவுபடுத்த முயலாதவர்கள் அல்லது இயலாதவர்கள் சிறுபான்மை அரசாங்கமாக இருந்து கொண்டு பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திடுகிறார்களென்றால் அதன் அரசியல் சூக்குமம் பற்றி விளங்க வேண்டாமோ. எதிர்க்கட்சி அதை எதிர்க்க வில்லையென்றால் அதன் அதிசயத்தை புரிந்து கொள்ள வேண்டாமோ. அரசியல் யாப்புக்கு வெளியே யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு இலங்கையில் இரு ராணுவம் என்பதை ஏற்றுக்கொண்டு சமாதானத்தை முன்னெடுக்கப் போவதாகக் கூறிய பொதுஜன ஐக்கிய முன்னணியோடு கூட்டு சேர்ந்த ஜே.வி.பி இப்போ பொதுக்கட்டமைப்புக்காக வெளியேறுகின்றதென்றால் அதன் மர்மம்தான் என்ன?.

அம்புறுஸ் பையர்ஸ் என்பவர் எழுதினார் “பொதுக் காரியங்களை சொந்த இலாபத்திற்காக நடத்துவதே அரசியல்” என்று. சிங்களத் தலைவர்களின் வாயில் கமழும் “சமாதானம்” எனபதையும் இதனடிகொண்டு விளங்கலாம்.

இலங்கையில் சமாதானம் பற்றிப் பேசிய எந்த அரசாங்கமும், எந்தத் தலைவர்களும் இனப்பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என்பதை முன்னறிவித்தது கிடையாது. அறுபது வருட இனச்சிக்கலுக்குப் பிறகும் முப்பது வருட யுத்தத்திற்கு பின்பும் இதுதான் தீர்வென்று திடமாக ஒன்றை முன்வைக்க முடியாமல் இருக்கிறார்கள். பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்து பிரச்சினைக்கு இதுதான் தீர்வென்று தீர்வை முன்வைத்தே டோனி பிளேயர் தேர்தலில் நின்றார். ஆட்சிக்கு வந்தார் ஆனால் இலங்கையில் அது முடியாததாக உள்ளது.

சமாதானத்தைக் கொண்டு வருவோம் அதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்பார்கள். சமாதானம் என்ற மொட்டைச் சொல்லுக்குள் அவர்கள் வழுக்கும் அரசியல் பண்ணத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சிங்களத்தின் மேட்டுக்குடி முதல் பட்டிதொட்டிவரை “தமிழருக்குச் சமாதானம்” என்ற சொல்லின் பொருளை அவர்கள் விளங்க வைத்திருப்பது வேறுவிதம். சர்வதேசத்திற்கு சமாதானம் என்ற சொல்லிற்கு விளக்கம் கொடுப்பது வேறுவிதம். சமாதானம் என்ற இந்த மொட்டைச் சொல்லை இவர்கள் தத்தெடுத்துவைக்க காரணமே ஜே.ஆர் இன் ஜனாதிபதித் தேர்தல் முறைமைதான் என்பது வேறுவிடயம்.

அரசாங்கம் அடுத்து ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. சந்திரிகா தனது ஜனாதிபதி அதிகாரத்தைக் கொண்டு கலைத்த பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்குத் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விசுக்கினார்;. இன்று வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிர்வழமாக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இவரை நம்பிக் கனவு கண்ட மக்கள் சுமக்கின்றார்கள் தலைகளில் முட்கிரீடம். இந்த இலட்சணத்தில் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதே அர்த்தமற்றதாகிவிடும் (ஜனாதிபதித் தேர்தல் குறித்து தன் குடும்ப அரசியலைக் காப்பாற்ற சந்திரிகா மாற்று நிகழ்ச்சி நிரல்களை வைத்துள்ளார் என்பது வேறு கதை) ஆனாலும் அந்த சர்வ வல்லமை பொருந்திய அதிகாரம் ஆளுங்கட்சிக்கு அவசியமானது.

அரசாங்கத்தைக் கொண்டு நடத்த நிதியில்லாத சூழலில் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிர்வழமாக அரசியல் நடந்து கொண்டிருக்க அடித்துப் போன சுனாமியோ பொன்முட்டைகளை இட்டுப் போயிருக்கிறது. கோடிக் கணக்கான அந்த டொலர்கள் கைக்கு வந்துவிட்டால் அதை வைத்துப் பண்ணும் அரசியலில் அரசாங்கம் துணிவுடன் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளலாம். ஆனால் உதவிவழங்கும் நாடுகள் பொதுக்கட்டமைப்பை ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தின. இதற்குப் பணிந்து இந்தப் பொன்முட்டைகளை கையிலெடுப்பதால் எதிர்க்கப் போவது யார்? ஐ.தே.க எதிர்க்காது என்பது தெரியும். அடுத்தது ஜே.வி.பி.

ஜே.வி.பி கூட்டணிக்குள் இருந்துகொண்டே அரித்துக் கொண்டிருக்கும் கறையான். இதனால் கட்சி உடைந்தும் உதிர்ந்தும் விடும் ஆபத்துண்டு என்பதை ஜனாதிபதி மாளிகையில் நடந்த சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் சந்திகா தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். எனவே கட்சியைப் பாதுகாக்க ஜே.வி.பியை வெளியில் விடவேண்டியது கட்டாயமானது என்பதை குறிப்புணர்த்தி அவர் பேசியுள்ளார்.

ஜே.வி.பி யை வெளியேற்றுவதனால் அவர்கள் யு.என்.பி யுடன் கூட்டுசேர்ந்து ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை. எனவே கறையான்களை வெளியே விடுவதனால் அரசாங்கத்திற்குப் பலவீனம் என்று சொல்வதற்கில்லை. பொதுக் கட்டமைபை நடைமுறைப்படுத்துவதில் தடைகளை ஏற்படுத்தவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு வருமுன் ஜே.வி.பி மீது அதற்கான பழியைப் போட்டுவிட முடியும். நெருக்கடிக்கு மத்தியில் சமாதானத்திற்கு நெகிழ்ந்து கொடுத்த தலைவி என்ற பெயரைப் பெற்றுக்கொள்ளவும் இது உதவும். எனவே ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

ஐ.தே.கவைப் பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலை வெல்வதொன்றே குறிக்கோள். இருகட்சி ஆட்சி மரபைக் கொண்டிருந்த இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முறைமை சிறுபான்மை வாக்காளர்களில் வேட்பாளரை தங்கி நிற்கவைத்து விட்டது. எனவே சிறுபான்மை இனத்தைப் பகைக்காமல் இருப்பதே ஐ.தே.கவிற்கு நலம். அதேநேரம் பெரும்பான்மையினம் தமிழருக்கெதையும் கொடுத்து விட்டதாகத் தன்மீது சீற்றறவும் கூடாது. ஐ.தே.க மௌனமாகவிருந்து இதைச் சாதிக்கின்றது. எதிர்கட்சி பொதுக் கட்டமைப்பை எதிர்க்கவில்லை என்ற புதிர் அது ஒத்துழைப்பதாக விளங்கப்பட்டுவிடுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.

ஜே.வி.பியைப் பொறுத்தவரை பொதுக் கட்டமைப்பில் அரசாங்கம் கைச்சாத்திட்டால் வரப்போகும் நிதியில் பொதுஜன ஐக்கிய முன்னணி தன்னை வளர்த்துக் கொள்ளும். அந்த நிதியின் மூலம் தனக்குக் கிடைத்த அமைச்சுக்களுக்கூடாக ஜே.வி.பி எழுச்சிபெற அது அனுமதிக்கப் போவதில்லை. அரச ஊடகங்களில் சிறிதொரு இடம் அளிக்கப் போவதில்லை என்பதைக் கட்டியம் கூற ஏற்கனவே பல சம்பவங்கள் நடந்துவிட்டன.

பொதுக்கட்டமைப்பால் ஜே.வி.பிக்கு இலாபமில்லை. தவிரவும் சமாதானத்தின் வழுக்கும் அரசியலில் இரு பெரும் கட்சிகளும் ஈடுபடவேண்டியிருக்க ஜே.வி.பி தீவிர இனவாதத்திற்கு தலைமை வகிக்க முடிவதுதான் அதன் கவர்ச்சியே. கடந்த தேர்தல் மூலம் கெல உறுமய இனவாதத்தை ஒரு வக்கிர வடிவிலான கோசங்கள் மூலம் கவர முயன்றது. இது ஜே.வி.பியின் கவர்ச்சியின் எல்லையைச் சுருக்குகின்றது. பொதுக்கட்டமைப்பில் கைச்சாத்தாக கூட்டணியில் உள்ளிருந்தால் தீவிர இனவாதத் தலைமைக் கவர்ச்சி ஜே.வி.பியிடமிருந்து கெல உறுமயவிடம் சென்றுவிடும். அதேநேரம் அரசாங்கம் உள்வட்டத்துள் விட்டுவைக்கப் போவதுமில்லை. எனவே வெளியேறி எதிர்க்க முடிவு செய்தது. தன் கவர்ச்சியைக் காக்க வகை செய்தது.

ஐ.தே.கவைப் பொறுத்தவரை பொதுக்கட்டமைப்பால் சிங்கள மக்கள் சீற்றமடைந்தால் அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டுவிடலாம். நடைமுறைப்படுத்தாமல் தமிழ் மக்கள் சீற்றமடைந்தாலும் அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டுவிடலாம்.

அரசாங்கத்தைப் பொறுத்த வரை கட்டமைப்பால் சிங்கள மக்கள் சீற்றமடைந்தால் அதை நடைமுறைப்படுத்தாமல் விட்டு சர்வதேசத்திற்கும் தமிழருக்கும் ஜே.வி.பிமீது பழியைப் போட்டுக் காட்டிவிடலாம்.

ஜே.வி.பியைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் அதன் தளமல்ல. சிங்கள மக்களை கொதிப்படைய வைத்து அரசாங்கத்தின் மீது பழியைப்போட்டு தன்னைக் கதாநாயகனாக்கிக் கொள்ளலாம். தன் கவர்ச்சியை விரித்துக் கொள்ளலாம்.

பொதுக்கட்டமைப்பு தமிழரின் பெயரால் வந்ததேயன்றி தமிழருக்காக வந்ததல்ல. தமிழர்களுக்காக எதிர்க்கட்சியால் ஆதரிக்கபட்டதுமல்ல அன்றி சிங்களவர்களுக்காக ஜே.வி.பியால் எதிர்க்கப்பட்டதுமல்ல. அது அவரவர் அரசியல் தேவைகளுக்காக அரங்கேறியிருக்கிறது.

வில்றோயஸ் என்பவர் குறிப்பிட்டார். “தொண்ணூறு சதவீத அரசியல் யார்மேல் பழிபோடுவது என்பதைத் தீர்மானிப்பதாகும்”.

பிரபுத்திரன்

Pin It