ஆளுநர் ரவிக்கு உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு அளித்தும் ஆளுநர் சட்டமன்றத்தை அவமானப்படுத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை நியாயப்படுத்துகிறார். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1994இல் ஆளுநரை எப்படி நடத்தினார்? மோதலில் பின்னணி குறித்த ஒரு மீள் பார்வை.

1994ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் இடையே முரன்பாடு வந்தது. தனது அரசைக் கவிழ்ப்பதற்கு அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் அனுப்பிவைக்கப்பட்டவர் தான் சென்னா ரெட்டி என்று உறுதியாக நம்பினார் ஜெயலலிதா. இருவரும் பத்திரிக்கை அறிக்கைகள் வழியாக தங்கள் எதிர்ப்புகளை வெளியிடத் தொடங்கினர். ஆளுநரிடமிருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் ஜெயலலிதா செயல்படத் தொடங்கினார்.

புத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கும். ( இப்போது ஆர்.என்.ரவி அந்த உரையைத் தான் வாசிக்க மறுத்து வெளியேறினார்.) அப்போது பேரவைத் தலைவராக இருந்த சேடப்பட்டி முத்தய்யா ஆளுநர் உரையே தேவையில்லை என்று கருதி ஆளுநருக்கு அழைப்பு விடுக்காமலேயே சட்டசபையைக் கூட்டினார்.

கூட்டத் தொடரில் பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் ஆளுநர் அதிகாரத்தைப் பறித்து முதல்வரே வேந்தராக இருப்பார் என்ற மசோதா சட்டசபையில் நிறைவேறி சட்டமானது.

தமிழ்நாடு அரசு வாய்மொழியாக கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்ததாக ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியது. ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்கக் கூடாது. அரசு கட்டிடங்களில் ஆளுநர் நிகழ்ச்சிகளை அனுமதிக்கக் கூடாது, ஆளுநருக்கு அரசின் பாதுகாப்புகள் குறைக்கப்பட்டன என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. அன்னை தெரசா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் சென்னா ரெட்டி பங்கேற்ற நிலையில் கல்வி அமைச்சர் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு மாநில அரசு பரிந்துரைத்த மூன்று பெயர்களை ஆளுநர் நிராகரித்தார். நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் உறவினரான குற்றாலிங்கம் பெயர் இடம்பெற்றதே ஆளுநர் புறக்கணிப்புக்கு காரணமாக சொல்லப்பட்டது. சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தத் தகவலை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று புகார் கூறிய ஆளுநர், முதல்வரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து அரசின் நிர்வாகத்தைக் குறைகூறினார். முதல்வர் ஜெயலலிதா ஆத்திரத்துடன் வெளியேறினார். அதற்குப் பிறகு ஆளுநர் மாளிகை பக்கம் திரும்பவே இல்லை. தனது நம்பிக்கைக்குரிய தலைமைச் செயலாளரான டி.வி.வெங்கட்ராமன் பதவி காலத்தை நீட்டித்து பிறப்பித்த உத்தரவை கிடப்பில் போட்டார். பிரதமர் நரசிம்மராவிடம் புகார் செய்தார் ஜெயலலிதா.

ஆளுநருக்கு குடியரசு நாளில் வழங்கும் அணிவகுப்பில் அமைச்சர்கள் பங்கேற்க ஜெயலலிதா தடை விதித்தார்.

(இந்தியா டுடே வெளியிட்ட செய்தி)