jallikattu marina agitation

தமிழ்நாடு இதுவரை கண்டிராத எழுச்சி; புரட்சி என்றும் கூறலாம். புரட்சித் திருவிழா என்றும் அழைக்கலாம். ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறியீடுதான். தொடர்ந்து தமிழர்கள் டெல்லி, அந்நிய ஆட்சிகளால் புறக்கணிக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராக எழுந்த ஆவேசம். கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்காகக் கல்வி உரிமை கோரி 1950ஆம் ஆண்டுகளில் தொடங்கிய சமூக நீதிப் புரட்சியின் தாக்கங்கள். தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கல்விப் புரட்சி உருவாக்கிய தன்னம்பிக்கை, தன்மான உணர்வு, சமூக வலைதளங்கள் வழியாக இந்த சக்திகளை இணைத்தது. “இந்த அரசியல் கட்சிகள் மீதோ, அரசியல் தலைவர்கள் மீதோ, திரைப்பட பிரபலங்கள் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை; விலகிச் செல்லுங்கள்” என்று அறிவித்து, தன்னெழுச்சியாகத் திரண்ட இலட்சக்கணக் கான இளைஞர்கள் 24 மணி நேரமும் மெரினா கடற்கரையை புரட்சிக் களமாக மாற்றினர்.

‘தமிழன்டா’ என்ற ஒற்றை வாசகத்துக்குள்ளே பீறிட்டது இந்த உணர்வு. இந்தக் குறிச் சொல்லுக்குள் ஆண் அடையாளம் பதிந்திருக் கிறது என்பது உண்மைதான் என்றாலும், சரி பகுதியாக திரண்டிருந்த இளம் பெண்களும் சொல்லுக்குள் பொருள் தேடாமல், உணர்வுகளின் குறியீடாகவே புரிந்துகொண்டு அந்த முழக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டனர். இந்த கருத்துப் புரிதலே ஒன்றுபடுத்தும் வலிமையான இணைப்புச் சங்கலி.

•             இரவு பகலும் பெண், ஆண் தோழர்கள் தோழமையோடு கலந்து நின்றனர்.

•             திரும்புமிடமெல்லாம் கருப்புடை; எந்த ஒரு பாலியல் சீண்டலோ முறைகேடுகளோ எங்கும் இல்லை.

•             தொடர் போராட்டத்தின் வெற்றி அமைதி வழி முறையை தேர்ந்தெடுத்ததிலும், மகிழ்ச்சிகர மான கொண்டாட்ட உணர்வாக அதை மாற்றியதிலும் அடங்கி இருந்தது.

•             காவல்துறையின் கெடுபிடிகள் இருந்திருக்கு மானால் இலட்சக்கணக்கான இளைஞர் களின் இந்த ஒன்று கூடல் நிகழ்ந்திருக்கவே முடியாது. காவல் துறையினரும் ‘தமிழன்டா’ என்ற முழக்கத்தில் தங்களை இயல்பாக இணைத்துக் கொண்டனர்.

•             இலட்சக்கணக்கான மக்கள் திரண்ட மெரினாவில் ‘டன் டன்களாக’ குவிந்த குப்பைகளை ஒவ்வொரு நாளும் இளைஞர்களே அகற்றிக் கொண்டனர்.

•             மக்களுக்கும் வாகனங்களுக்கும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தித் தந்ததும் - இதே மாணவர் இளைஞர்கள்தான்.

•             உணவுப் பொருள்கள் தாராளமாகக் குவிந்தன.

•             மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பும், தமிழர் திருநாளை பொது விடுமுறைப் பட்டியலிலிருந்து நீக்கியதும், காவிரி பிரச்சினையில் இழைத்த துரோகமும், விவசாயிகள் நலன்களை புறக்கணிக்கும் கொள்கைகளும் ஒன்றாகச் சேர்ந்து களத்தை - மோடி எதிர்ப்பு களமாக்கிவிட்டன. ‘உலகம் சுற்றும் மோடி; தமிழ்நாட்டுக்கு வாடி’ என்ற பதாகைகளும் முழக்கங்களுமே திரும்பும் இடமெல்லாம் கேட்க முடிந்தது.

•             நாடாளுமன்றத்தில் தமிழக மக்கள் வாக்களித்து அனுப்பிய 39 நாடாளுமன்ற உறுப்பினர்களால் திறக்க முடியாத பிரதமர் அலுவலகக் கதவுகளை தமிழகத்தில் திரண்ட இளைஞர்கள் எழுச்சிதான் திறக்க வைத்தது. அந்த எழுச்சிதான் முதல்வர் பன்னீர் செல்வத்தை டெல்லிக்கு விமானம் ஏற வைத்தது. அந்த எழுச்சி தான் ஒரே நாள் இரவில் அவசர சட்டத்தை வடிவமைத்தது. அந்த எழுச்சிதான் ஒரே நாளில் மத்திய அமைச்சகர்களின் ஒப்புதலைப் பெற்றுத் தந்தது. அந்த எழுச்சிதான் சட்டசபையை கூட்டியது. அவசர சட்டத்துக்கு ஏற்பு வழங்க வைத்ததும் அந்த எழுச்சிதான்.

இளைஞர் சக்தி வென்றது; இது தொடரும்; எதிர் காலங்களில் தமிழின உரிமைக்காக பொங்கி எழும்; அந்த நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது இந்த சக்தி. ஏராளமான இளைஞர்களின் கரங் களில் பெரியார், பிரபாகரன் படங்கள் காட்சி அளித்தன. இவர்கள் பெரியாரைப் பார்க்காத வர்கள்; ஏன், முழுமையாகப் படிக்காதவர்கள் என்றுகூட கூறலாம். ஆனால் பெரியார் ஊட்டிய இன உணர்வை தங்கள் உள்ளத்தில் ஏந்திக் கொண்டிருக்கிறார்கள்!

தொடங்கிவிட்டது இனப் போர்!

Pin It