கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இன்று- 07 பிப்ரவரி 2017 ருமேனியாவின் புகாரஸ்ட் நகரச் சதுக்கத்தில் ஏழாவது நாளாக ஐந்து லட்சம் மக்கள் இரவு பகலாகத் திரண்டிருக்கிறார்கள். சின்ன விஷயம் என நமக்குத் தோன்றலாம். ஐந்துகோடி ரூபாய் மதிப்பிலான அரச அதிகாரிகளின் இலஞ்ச-ஊழல் என்பது பிரச்சினை. இலஞ்ச ஊழலுக்கு தண்டனை என அங்கு சட்டம் இருக்கிறது. இன்றைய அரசு, அரச அதிகாரிகளின் இந்த நடத்தைக்கு அவர்களைத் தண்டிக்க வேண்டியதில்லை எனச் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. பிப்ரவரி முதலாம் திகதி முதல் இலட்சக் கணக்கிலான மக்கள் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்திருத்தத்தைக் கை விடுவதாக அரசு அறிவித்துவிட்டது. என்றாலும், அரசு முழுமையாகப் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகிறார்கள். இது ருமேனிய வெகுமக்களின் மக்கள் திரள் எழுச்சி.
இத்தகைய வெகுமக்கள் எழுச்சிகளை அண்மைய ஆண்டுகளில் உலகு தொடர்ந்து கண்ணுற்று வருகிறது. 2011 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் அரபு நாடுகளைக் குலுக்கிய மக்களின் எழுச்சியான அரபு எழுச்சி இத்தகைய வெகுமக்களின் எழுச்சி. அந்த அரபு எழுச்சியின் படிப்பினைகளைத் தொடர்ந்து அதே போராட்ட வடிவத்தை 2011 செப்டம்பர் மாதம் அமெரிக்க வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுங்கள் என வெகுமக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அமெரிக்க பாசிஸ்ட் இனவெறியன் டிரம்ப் பதவியேற்றதனையடுத்து சன்டேன் நகரில் இந்த ஆண்டின் துவக்கத்தில் இலட்சக் கணக்கான பெண்கள் திரண்டார்கள்.
இப்போது தமிழகம் சென்னை-மதுரை-கோவை என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் 50 இலட்சம் வெகுமக்கள் வரை திரண்டனர். தலைநகர் சென்னையில் மட்டும் 10 இலட்சம் வெகுமக்கள் திரண்டனர். இது வெகுமக்கள் திரள் எழுச்சியின் யுகம். 1917 அக்டோபர் நாட்களின், 1968 மே பாரிஸ் நாட்களின் தொடர்ச்சி இது. இவை அனைத்தும் மக்களே வரலாற்றை உருவாக்கும் சக்தி என்கிற செய்தியை மீளவும் இந்த உலகுக்கு அறிவிக்கும் நிகழ்வுகள்.
ஒவ்வொரு எழுச்சிக்கும் ஒரு குறியீடு தேவைப் படுகிறது. ஒவ்வொரு எழுச்சிக்கும் உடனடியாக ஒரு முகாந்திரம் தேவைப்படுகிறது. சிறிது சிறிதாக ஒரு நிலப்பரப்பில் அங்கங்கு எழும் போராட்டங்கள் ஒரு நாளில் ஒரு பெரும் அலையென எழுகிறது. அக்டோபர் புரட்சி பெத்ரோகிராட் எனும் நகரில் எழுந்தது என்பது ஒரு குறியீடு, முழு ரஷ்ய எழுச்சியின் குறியீடு இது. அதன் பின் ஜார் ஆட்சியின் பல்லாண்டு ஒடுக்கு முறையும் சுரண்டலும் அதற்கு எதிரான வெகுமக்களின் வாழும் வேட்கையும் இருந்தது. பாரிஸ் ஒரு நகரம். அது மாணவர்-தொழிலாளர் எழுச்சியின் குறியீடு.
அது பிரெஞ்சு தேசம் முழுக்க எழுந்தது. அதன் பின் பிரெஞ்சு வாழ்வின் சகல முனைகளிலும் தலையிடும் டிகால் அரசின் கொள்கை இருந்தது. பல்கலைக்கழக விடுதிகளில் நுழைய பரஸ்பரம் தமக்கு உரிமை உண்டு எனும் மாணவர் கோரிக்கை இருந்தது. வியட்நாம் எழுச்சியின் பாலான ஆதரவு இருந்தது. பிரெஞ்சுத் தொழிலாளர் ஊதியக் கோரிக்கை இருந்தது.
எகிப்தின் கெய்ரோ தாஹிரர் நகரம் ஒரு குறியீடு. எழுச்சி முழு அரபு நாடுகளிலும் நிகழ்ந்தது. அதன் பின் அரைநூற்றாண்டு காலம் அந்த மக்களைச் சுரண்டிய குடும்பப் பாரம்பரியக் கொடுங்கோன்மை இருந்தது. வால்ஸ்ட்ரீட் என்பது நியூயார்க் நகரின் பொருளாதாரக் கொடுங்கோன்மையின் குறியீடு. வெகுமக்கள் எழுச்சி அமெரிக்க நகரங்கள் எங்கும் எழுந்தது. அதன் பின் 99 சதம் மக்களை அதிகாரம் செலுத்தும் ஒரு சதவீதம் மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான பெருங்கோபம் இருந்தது.
மெரீனா என்பது ஒரு குறியீடு. தமிழகததின் அனைத்து மாவட்டங்களிலும் சமகாலத்தில் மாணவர்கள் கிளர்ந்தனர். இளைஞர்கள் இணைந்தனர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அதில் இணைந்தனர். இந்த எழுச்சியின் பின் தமிழக மக்களின் அண்மைய நினைவுகள்-காயங்கள் இருந்தன. காவிரி நீர் தொடர்பான உசச்நீதிமன்றத் தீர்ப்பு, முல்லைப் பெரியாறு, மீனவர் படுகொலை, கூடங்குளம், மீத்தேன், ஈழப்படுகொலை, எழுவர் விடுதலை என மத்திய-மாநில அரசுகளால் தாம் வஞ்சிக்கப்பட்ட நினைவுகள் அவர்களிடம் இருந்தது. ஜல்லிக்கட்டு ஒரு முகாந்தரம்.
அது ஒரு கலாசாரக் குறியீடு. அது தமிழகம் தழுவிய விளையாட்டு அல்ல. எனினும் திரைப்படம் அந்த விளையாட்டு குறித்த நினைவுகளை, பிம்பங்களை வெகுமக்கள் நினைவுகளில் விட்டுச் சென்றிருக்கிறது. காளைகளை அடக்குபவர்கள் தமிழர் வீரத்தின் அடையாளம். அந்நிய நாட்டில் மையம் கொண் டிருக்கும் ஒரு அமைப்பு, தம்மை வஞ்சித்த மத்திய அரசின் வழி, உச்சநீதிமன்றத்தின் வழி ஒரு தடையை தம் நிலத்தின் மீது-தம் பண்பாட்டின் மீது திணிக்கிறது. தமது அன்றாடத்தின் மீது, தொன்ம நினைவுகளின் மீது திணிக்கிறது. இது வேறு வேறு பொறிகளின் ஒருங்கிணைந்த பெருந்தீ. கூட்டுப் பிரக்ஞை. சாதி, மதம், கட்சிகள், பால்பேதம், கிராமம்-நகரம் எனம் பேதம் கடந்த எழுச்சியாக ஆனது இவ்வாறுதான். இதனது நிறம் கறுப்பு. பெரியாரது எதிர் மரபின் கூறு இது.
இந்த எதிர்ப்பில் குறுக்கும் நெடுக்குமாக பல்வேறு பரிமாணங்கள் ஊடாடிச் செல்லும். ஜல்லிக்கட்டு ஒரு முகாந்திரமேயழிய அதுவே எழுச்சியின் அறுதியாகவும் ஒரே கோரிக்கையாகவும் உணர்வாகவும் இருக்கவில்லை. மத்திய-மாநில அரசுகளின் மெத்தனம், கார்ப்பரேட் எதிர்ப்பு, பூர்வீக நிலத்தின் வளம் பற்றிய உணர்வு எல்லாமும் இதில் உள்ளார்ந்து இருந்தன. போராட்டத்தை ஜல்லிக்கட்டு என்பதாகக் குறுக்கியவர்களுக்கும் பிற பிரச்சினைகளைப் பேசியவர்களுக்கும் இடையிலான முரண்கள்-பல் பரிமாணங்கள் போராட்டத்தின் பின்நாட்களில் ஸ்தூலமாக ஆகியது. ஜல்லிக்கட்டு மட்டுமே என்று பேசியவர்கள் காவல் துறையினருடன் மத்திய-மாநில அரசுகளுடன் கை கோர்த்தனர். போராட்ட நிலப்பரப்புகளில் இருந்து வெளியேறினர். மற்றவர்கள் காவல்துறை வன்முறைக்கு ஆளாகினர். தமது வாழ்வாதாரங்கள் எரியுண்டு போகக் கண்டனர்.
ஜல்லிக்கட்டு என்பது சிலரால் போராட்டத்தின் மையமாக முன்வைக்கப்பட்டபோது, அதனது சாதியப் பரிமாணம், விளையாட்டின் நவீன அறம், விஞ்ஞானத் தன்மை, விலங்குரிமை, நாட்டு மாடுகள் - அந்நிய மாடுகள் - பால் உற்பத்தி - மாடுகளின் மறு உற்பத்தி -கார்ப்பரேட் தலையீடு போன்ற கருத்துக் கட்டுக்களும் தோன்றின. முழு கலாசார வாழ்வும் அன்றாட வாழ்வும் சாதியக் கறைபடிந்த ஒரு நிலபரப்பில் வேளாண்மைச் சுமூகத்தின் விளையாட்டான - பண்பாட்டு நடவடிக் கையான ஜல்லிக்கட்டு சாதியப் பண்பு கொண்டிருக்காது என்று எக்காரணம் கொண்டும் சொல்ல முடியாது.
இருவகை எதிரெதிர் கருத்துக்கள் மேலோங்கின. ஜல்லிக்கட்டு என்பது விலங்கு வதை, நிலப்பிரபுத்துவ பண்பாட்டு வகை, நவீனத்துவத்திற்கு எதிரான, சாதி மேலாதிக்க விளையாட்டு என்பது ஒரு முனை வாதமாக ஆனது. மறுமுனையில், வடக்கு இந்தியர்களின் ஏக இந்துத்துவக் கலாசார ஏகாதிபத்தியத்திற்கெதிரான பூர்வீகப் பண்பாட்டு வகையினமான ஜல்லிக்கட்டு, மதநீக்க-சாதி நீக்க விளையாட்டாக ஆக வேண்டும் எனும் வாதம் முன்வைக்கப்பட்டது, அரசியல்ரீதியில் தேசிய இனங்களின் உரிமைகளில் அசமத்துவ உறவு கொண்ட இந்திய நாட்டில் இது ஒருவிதமான அரசியல் தாராளவாதப் பார்வை. அரசு நிறுவனம், மருத்துவத் துறை, மாவட்ட நிர்வாகங்கள் இந்த விளையாட்டைப் பொறுப்பேற்பதன் மூலம் இதனைச் சாதி நீக்கம் செய்யலாம் என இதனை நிபந்தனையுடன் ஆதரித்தனர் பிரதான தலித் கட்சியின் தலைவர்கள்.
அரபு எழுச்சி துவங்கி கடந்த ஏழு ஆண்டுகளில் எழுந்த இந்த வெகுமக்கள் எழுச்சிகளில் சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. இந்தப் போராட்டங்கள் பின்-சோவியத், பின்-செப்டம்பர் போராட்டங்கள். சோவியத் யூனியனின் சிதைவும் பின் தொடர்ந்த கிழக்கு ஐரோப்பிய நிகழ்வுகளும், உலகெங்கிலும் பின்னடைந்த தேசிய இன விடுதலைப் போராட்டங்களும் கருத்தியல் நெருக்கடியைக் கொண்டிருந்தன. விடுதலைக் கருத்தியலின் மறுபரிசீலனையை இது கோருகிறது.
பின்-செப்டம்பர் யுகம் என்பது விடுதலைப் போராட்டங்கள்-மக்கள் எழுச்சிகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் இருக்கும் வித்தியாசங்களை நிறுவ வேண்டிய தேவையை இத்தகைய போராட்டங்களை நடத்துபவர்களிடம் கோரின. பயங்கரவாதம் எனும் கருத்தாக்கத்தை கருத்தியல் கடந்து ரஷ்யா, சீனா, கியூபா துவங்கி அமெரிக்கா, மேற்குலகு, இந்தியா என அனைத்து நாடுகளும் ஏற்றன. இதனால் கருத்தியல் சார்ந்தும், போராட்ட வடிவம் சார்ந்தும் இந்த எழுச்சிகள் இரு பண்புகளை வெளிப்படுத்தின.
ஒரு கருத்தியல், ஒரு தலைமை, ஒரு கொள்கைத் திட்டம், அதை அடைவதற்கான ஒரு வழிமுறை என்பதை இத்தகைய எழுச்சிகள் மறுத்தன. வன்முறை என்பதை எல்லா வகையிலும் தவிர்த்த அமைதி வழியிலான வெகுமக்கள் போராட்டங்களிலான அழுத்தம் என்பதை இது போராட்ட வழிமுறையாகக் கொண்டிருந்தன. இந்தப் போராட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் கலந்து கொண்டார்கள். குடும்பங்கள் கலந்து கொண்டன. பல்வேறு கருத்து விவாதங்களை, கொண்டாட்டங்களை நிகழ்த்தும் இடங்களாக இவை ஆகின.
இந்தப் போராட்டங்கள் பாரம்பரியமாக வெகுமக்களின் கொண்டாட்ட இடங்களாக நகரச் சதுக்கங்கள், கடற்கரைகள் போன்றவற்றையே தமது எதிர்ப்பு நிகழும் இடங்களாகத் தேர்ந்து கொண்டன. ஒரே வார்த்தையில் சொல்வதனால் அமைதிவழிக் கொண்டாட்டம் என்பதை, அதில் அரசை நார்நாராகக் கிழித்து தமது கோபத்தை வெளிப்படுத்துவது எனபனவே போராட்ட வடிவங் களாக இருந்தன. இத்தகைய போராட்ட வடிவங் களுக்கான முன்னோடி என அரபு வெகுமக்களின் எழுச்சியையே நான் குறிப்பிடுவேன்.
மக்கள் திரள் பாதை என்பதை, தொழிலாளர்-மாணவர்-வெகுமக்கள் ஒன்றிணைந்த போராட்டம் எனும் போராட்டப் பாதையை ஒரு அரசியலின் கீழ் திரட்டியவர்கள் மார்க்சியர்கள்தான். ரஷ்யப் புரட்சி ஒரு வெகுமக்கள் திரள் எழுச்சி. நம் காலத்தின் மக்கள் திரள் எழுச்சி அரபு எழுச்சி. உலக அளவில் தமிழக மாணவர் எழுச்சி-மெரீனா எழுச்சிதான் முன்னோடி இல்லாத எழுச்சி என்பது அதீதமான கோருதலாகவே இருக்கும். இத்தகைய எழுச்சிகள் நடந்த நாடுகளின் ஜனப்பரம்பல், நகரங்களின் ஜனப்பரம்பலுக்கு ஏற்ப முன்பின்னாக மக்கள் எண்ணிக்கை அங்கங்கு திரண்டது என்பதுதான் உண்மை.
அரபு எழுச்சியில் அரபு நாடுகளில் முன்னெப் போதும் இல்லாத அளவில் அரபுப் பெண்கள் தெருவுக்கு வந்தார்கள். இந்த அளவில் இஸ்லாமியப் பெண்கள் போராட்டத்தில் இதற்கு முன்பு பங்கு பற்றியது என்பது அறுபது-எழுபதுகளின் ஈரானிய-யேமான் புரட்சிகளில்தான். அமைதிவழியில் பெண்கள் திரண்டதால் குழந்தைகளும் இரவும் பகலும் அவர் களோடு இணைந்து கொண்டார்கள். போராட்டங்கள் கொண்டாட்டங்களாக ஆனது இவ்வாறுதான்.
இந்தப் போராட்டங்களில் அரசின் காவல்துறை-இராணுவம் போன்ற ஆயுத அமைப்புகளின் பாலும் வெகுமக்கள் மரபான போராட்டங்களுக்கு மாறான ஒரு வித்தியாசமான தந்திரத்தைக் கடைப்பிடித்தார்கள். மோதல் போக்கு என்பதற்கு மாறாக காவல்துறைக்கும்-இராணுவத்துக்கும் போராட்டக்காரர்கள் பூங்கொத்து களைக் கொடுத்தார்கள். தமது தின்பண்டங்களையும் பானங்களயும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். தாம் இருந்த இடங்களின் கழிவுகளைச் சுத்தப்படுத்தி தமது இடங்களைத் துப்புரவாக வைத்துக் கொண் டார்கள். கவிதை புனைந்தார்கள். நாடகங்களை நடனங்களை அரங்கேற்றினார்கள். புல்வேறு கருத்தியல் விவாதங்களை மேற்கொண்டார்கள். பாடல்கள் இசைத்தார்கள். போராட்டம் என்பது இப்படித்தான் வெகுமக்களின் திருவிழாக்களாக ஆனது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த மாற்றங் களின் போது பயன்தந்த இந்த அணுகுமுறை, ஒரு கட்டத்திற்கு மேல் எகிப்தின் தாஹிரர் சதுக்கத்திலோ, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலோ, சென்னையின் மெரினாவிலோ, கோவையின் சிதம்பரம் பூங்காவிலோ, மதுரையின் தமுக்கம் மைதானத்திலோ பலன் தரவில்லை. காவல்துறையும் இராணுவமும் அரசும் வெகுமக்களின் வெற்றி உணர்வையும், அதன் பின்னிருந்த வெகு மக்களின் ஒற்றுமையையும் பெருமிதத்தையும் அங்கீகரிக்க விரும்பவதில்லை. வெகுமக்களுக்கு தம்மைக் குறித்த பயம் போய்விடுவதை இவர்கள் விரும்புவதில்லை.
‘நாம் உமது நண்பர்கள் அல்ல, எஜமானர்கள்’ என்பதை அவர்கள் வெகுமக்களுக்குத் திரும்பத் திரும்ப ஞாபகமூட்ட விரும்புகிறார்கள். தாஹிரர் சதுக்கத்தில் டாங்கிகள் நுழைந்தன. வால் ஸ்ட்ரீட்டில் குண்டாந்தடி களும் மிளகுப் புகையும் பேசின. மெரினா துவங்கி ஒரே நேரத்தில் தமிழக நகரங்களில் காவல்துறை லத்திகள் சுழன்றன.
2017 தை எழுச்சி-மாணவர் எழுச்சி பல தமிழ் தேசியர்கள் உணர்ச்சிகரமாகக் கோருவது போல, வெகுஜன இதழ்கள் வழமையான உசுப்பேற்றலாகக் கூறுவது போல எந்தவிதத்திலும் புரட்சி அல்ல. மக்கள் திரள் எழுச்சிகள் எழுந்த எல்லா நாடுகளிலும் அரை நூற்றாண்டுகளாக அம்மக்களைச் சுரண்டிய குடும்ப ஆட்சிகளை மாற்றி புதிய அரசுகள் அமைய வழிவகுத்த அரபு எழுச்சியைக் கூட புரட்சி என அழைப்பதை வரலாற்றாசிரியர்கள் விரும்புவதில்லை. புரட்சி என்பது நிலவும் சமூகத்தில் அரசியல்-பொருளியல்-பண்பாடு-நிறுவனம் என அனைத்திலும் நிகழும் தலைகீழ் மாற்றம். முதலாளித்துவ சமூகத்திற்குச் சகல வகையிலும் முடிவுகட்டி புதிய மனிதனை உருவாக்கும் சோசலிசப் புரட்சியை முன்னெடுத்த ரஷ்யாவில், கியூபாவில் நிகழ்ந்ததை இதனால்தான் நாம் புரட்சிகள் எனச் சொல்கிறோம்.
தமிழகத்தில் நடந்திருப்பது இந்தி எதிர்ப்புப் போர் எனும் மாணவர்-இளைஞர் எழுச்சிக்குப் பின்னான மாபெரும் மக்கள் திரள் எழுச்சி. இது மாணவர்-இளைஞர் எழுச்சி மட்டுமல்ல, முழு தமிழ் சமூகத் தினதும் எழுச்சி. தமிழக மக்கள் திரளின் தன்னேரில்லாத எழுச்சி. இந்த எழுச்சி இரண்டு மகத்தான பண்புகள் கொண்டிருக்கின்றன. தாம் வாழும் உலகை மாற்று வதற்கு, அதில் பங்கு பெறுவதற்கு, அரசுகளைக் கேள்வி கேட்பதற்கு எமக்கும் உரிமை உண்டு என்பதை குடிமைச் சமூகம் அனைத்து அதிகாரங்களையும் நோக்கிச் சவாலாக அறைகூவிய நிகழ்வு இது.
அரசியல் என்பது தாம் தேர்தல் அதிகாரம் பெறுவதும், அதன் மூலம் தமது கட்சியினரும் குடும்பங்களும் பதவி பெறுவதும் சொத்துச் சேர்ப்பதும் என்பதாக இருக்கிற-இருந்து வருகிற அரசியல் அதிகாரம் நோக்கிய அரசியல் கட்சி அமைப்புகளை-குறிப்பாக இரு கழகங்களின் அநீதிகளை- நிராகரித்த, சுயபிரக்ஞை கொண்ட மக்கள் திரளின் எழுச்சி அது. இதனை விடுதலை அரசியலாக மாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு என்பது தமிழக இடதுசாரி மற்றும் தலித் கூட்டணிக் கட்சிகளின் முன் காலம் முன்வைத்திருக்கும் சவால்.
போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் இப்போராட்டத்தை ஆதரிப்பதில் இவர்கள் தயக்கம் கொண்டிருந்தாலும், தமது குழந்தைகளின் மீதான, மாணவர்-இளைஞர்கள்-குப்பத்து மக்களின் மீதான அரச வன்முறையை எதிர்த்து, அவர்களைக் காக்க கம்யூனிஸ்ட்டுகளும் தலித்துகளும் தெருவில் இறங்கியதன் மூலம் அந்த விடுதலைப் பாதையை அவர்கள் திறந்திருக் கிறார்கள்.