"யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உன் புத்திக்கும், பொது அறிவிற்கும் பொருந்தாத எதையும் நம்பாதே" - தந்தை பெரியார்....

அதனால் தான் அவர் பெரியார்.

thirukuralum aariyakurale bookமதங்கள் மனித அறிவின் மீது நிகழ்த்தும் ஆகச் சிறந்த வன்முறை என்பது 'நான் சொல்வதை ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே கேள்' என்பது ...

எந்த கருத்தையும் அது சொல்லப்பட்ட காலம், அப்போதைய அறிவியல் மற்றும் ஆய்வு சூழல், சமூக அமைப்பு கொண்டே கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆரியம் முழுதாய் இந்தியாவை விழுங்கக் காத்திருக்கும் இந்தப் பொழுதில் திராவிட சிந்தனைகளை இந்தியா முழுக்க கடத்த வேண்டிய தேவையை பேசி வருகிறோம்...

பெரியாரின் கருத்துக்களை எந்த இடத்தில் அழுத்தமாகவும், எந்த இடத்தில் மெதுவாகவும் சொல்ல வேண்டும் என்ற தெளிவு பெரியாரியவாதிகளுக்குத் தேவை.... அப்படியே, பெரியாரை தீர்க்கதரிசியாக சித்தரிக்கும் சூழல் நீண்டால் அது மதவாதத்திற்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு மதமாகவே மாறக் கூடும்...

பெரியாரின் தெளிந்த அறிவை உள்வாங்கும் அறிவு, கேட்கும் எத்தனை பேருக்கு இங்கு உள்ளது? புரிதல் திறன் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது...

ஏற்கனவே, அவர்மீது சுமத்தப்படும் தவறான புரிதலுக்கு பதிலளித்து, பதிலளித்து சோர்வு ஏற்படுகிறது... இந்தப் புத்தகம் மேலும் அந்த சுமையை கூட்டும் என்பது திண்ணம்.

நூலின் தொகுப்பு ஆசிரியர் வேண்டுமென்றே பரபரப்பிற்காக மட்டுமே இந்தத் தலைப்பை வைத்துள்ளார் என நான் குற்றம் சாட்டுகிறேன்.... திருக்குறளில் மதக் கருத்துக்கள் என்றால் அது சரியான தலைப்பே. இப்படி ஒரு தலைப்பு திட்டமிட்டே வைக்கப்பட்டுள்ளது...

இந்த திட்டம் திருக்குறள் அர்த்த சாஸ்திரம் போன்ற வடமொழி நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்று நூல் வெளியிட்ட இந்துத்துவ வாதி நாகசாமியின் திட்டத்திற்கும்....

திருக்குறளின் மருத்துவக் கருத்துகள் ஆயுர்வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்ற கருத்திற்கும்,

இன்னும் RSS தமிழ்நாட்டில் திருக்குறள் சங்கம் நடத்தவும், அதை ஆரிய நூலாகக் கொண்டாடவும் சிறப்பாகவும் வழி வகுக்கும்.

இங்கு அரசியல்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகள், அரசியல்படுத்தப்பட்ட தேர்தல் வழி திராவிடக் கட்சிகள் இரண்டிற்கும் தொடர் கருத்து மோதல்கள் அரசியல் காரணங்களுக்காக நிகழ்ந்து கொண்டே வருகின்றன....

நான் கண்ட மிகச் சிறந்த தமிழ்த் தேசியவாதி பெரியார்.... ஆனால், இந்த அரசியல் மோதல்களுக்காக தனது சித்தாந்தங்களை திராவிடக் கொள்கையாளர்கள் காவு கொடுக்கத் துணிகிறார்களா????

தமிழ்த் தேசியத்திற்கு பயந்து கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதை தான் உங்கள் வீரம் என்பீர்களா???

எச்.ராசா திருக்குறள் மாநாட்டை எதிர்க்கிறாரே ஏன்???? அவருக்குத் தெரிந்து இருக்கிறது... அது ஆரிய மதத்திற்கு எதிரான ஒரு போராளியின் அறைகூவல் தான் திருக்குறள் என்று...

உண்மையில் திருக்குறள் என்னவாக இருக்க முடியும்?

1. .திருவள்ளுவர் நிச்சயம் பார்ப்பனியப் பண்பாட்டின் எதிர்நிலைப் பண்பாடான பவுத்தம், சமண மதம் தமிழ்நாட்டில் தழைத்த காலத்தில் வாழ்ந்தவராக இருக்க வேண்டும்

2.. பூர்வ பவுத்த தமிழ்க்குடியான கந்தப்பன் வீட்டில் இருந்து பெறப்பட்டதால் பவுத்த மதம் சார்ந்தவராக அவர் இருந்து இருக்கலாம் (என் கூற்று)

3. இன்னும் சமணம் சார்ந்தவாராக சொல்வாரும் உண்டு.

ஏன் ஆரியமதம் மட்டும் இல்லவே இல்லை:

1. தமிழர் பண்பாட்டு அறநூலான திருக்குறள் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோர் தொழுதுண்டு பின் செல்பவர்" என்கிறது.

ஆரியப் பண்பாடு உழவுத் தொழிலை இழிவுபடுத்தியும், அது சூத்திரன் தொழில் என்றும் சொல்கிறது.

2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமூக நீதிப் பாடம் சொல்கிறது வள்ளுவம்...

ஆரியம் பிறப்பின் அடிப்படையில் மக்களை கூறு போடுகிறது.

3. "இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்" என்கிறது வள்ளுவம்...

பார்ப்பனர்கள் பிச்சை எடுத்து உண்பதை தர்மமாகவே எழுதி வைத்து, மற்ற வர்ணத்தவர்கள் உணவளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

4. "உயிர் நீப்பர் மானம் வரின்" என உயிரை விட மானம் பெரிது என்றார் வள்ளுவர்.

மானமா, உயிரா என்றால் உயிரை காப்பாற்றிக் கொள் என்பது பார்ப்பனியம்...

இப்படி இருக்கையில் வள்ளுவர் கருத்தும், ஆரியமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

பெரியார் வாழ்ந்த காலத்தில் இந்தியத் தத்துவங்கள் ஆய்வுக்கு உட்படாதவை... இன்றைக்கு மீள் ஆய்வுக்கு அனைத்தும் உட்படுகின்றன... அவர் வாழ்ந்ததும் 50 ஆண்டுகளுக்கு முன்னர்... இதையெல்லாம் கணக்கில் கொள்ளுங்கள்!

'கலியாணம் என்பதே ஒரு ஏற்பாடு தானுங்களே' என்று marriage is just an agreement என்றவர் பெரியார்... பெரியாரிஸ்ட் எல்லாம் குடும்பத்தை விட்டுப் போய் விட்டார்களா??

யாருக்கு சொன்னார்? குடும்பம் என்பது நரகமாகும்போதும் விட்டுத் தொலைக்காத பெண்களுக்கு சொன்னார். அது போன்றுதான் அவர் சொன்னவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வள்ளுவத்தில் உள்ள பெண்ணடிமை :

நில உடைமை சமூக அமைப்பு எப்படி குடும்பம் என்ற அமைப்பை உண்டாக்கியது. அதன் விளைவுகளில் ஒன்று பெண்ணடிமைத்தனம்... அந்த அமைப்பைக் காப்பாற்ற வேண்டிய சூழல் அந்த கால வள்ளுவருக்கு ஏற்பட்டு இருக்கலாம்....

தீ(யாகம் மட்டும் செய்து) வளர்த்து, வயிறு வளர்க்கும் நாடோடி ஆரியக் கூட்டத்தில் விவசாயம், அது சார்ந்த பொருள் உற்பத்தி, அதன் விளைவாக குடும்ப அமைப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை....

முற்றாக, தமிழ் மண்ணின் மரபின் வேர்களில் இன்னும் மிச்சமிருக்கும் உயிரிலும் இது போன்று வெந்நீர் ஊற்றாதீர்கள்!

- கவுதமி தமிழரசன்

Pin It