நங்கவள்ளி ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி கோரிக்கை
நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, 01.02.2022 செவ்வாய் மாலை 4 மணியளவில் தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலையை காரணம் காட்டி தமிழகத்தில் பொது அமைதியைக் குலைக்கப் பொய்யான தகவல்களைப் பரப்பி வரும் மதவாத பா.ஜ.கவினரைக் கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கைது செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி நகரத் தலைவர் த.கண்ணன் தலைமையில் நடை பெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். உரையில், “தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி என்ற ஊரில் படித்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு, பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்புவதும், அதை சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகப் பரப்புவதும், சமூகப் பதற்றத்தை உருவாக்குகிற நோக்கத் தோடும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக பாஜக தலைவர் அய்.பி.எஸ் அதிகாரி யாக ஒரு காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகின்ற அண்ணாமலை அந்த மாணவியின் முழுப் படத்தை வெளியிட்டுள்ளார். மாணவியின் முழுப் பெயரையும் வெளியிட் டிருப்பது சட்டப்படி தவறு என்று அவருக்கே தெரியும். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஏற்கெனவே, கிருத்துவ மதப் பரப்புரைக்கு சென்றிருந்தவர்களை அடித்து விபூதி பூச வைத்த முத்துவேல் என்பவர் தான் இந்த காணொளியை பதிவு செய்திருக்கிறார். அவர்கள் மீது சமூக பதற்றத்தை உருவாக்கும் பிரிவு வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இரண்டாவதாக மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றி பேசுகிறார்கள். கட்டாயப்படுத்தி மதம் மாற்றக் கூடாது. நாம் கூறுகிறோம், மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கிற தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்தைக் கொண்டு வந்தால் தான் பாஜகவினரை கட்டுப்படுத்த முடியும். மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் தடை சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்” என்று உரையாற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் சி.பி.அய். ஒன்றிய செயலாளர் பழ. ஜீவானந்தம், தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் கோனூர் வைரமணி, திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சீ. செல்வமுருகேசன், விசிக மேட்டூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் எஸ்.டி.பி.அய். மாவட்ட செயலாளர் பி. ஷரீப் பாஷா, தி வி க மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, நங்கவள்ளி பேரூர் கழக திமுக செயலாளர் கே.பி.. வெங்கடாசலம், திவிக தலைமைக்குழு உறுப்பினர் அ.சக்திவேல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
நிறைவாக அ.செ.சந்திரசேகர் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர், தண்டா, தார்க்காடு, மேட்டூர், மேட்டூர் சுளு, நங்கவள்ளி, இளம்பிள்ளை, வனவாசி, வெள்ளார் ஆகிய பகுதியிலிருந்து தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.