தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக போலி கூக்குரலை எழுப்பிக் கொண்டு பாஜக அரசியல் நடத்தப் பார்க்கிறது. பாஜகவின் அந்த அரசியலுக்கு, தமிழ்நாட்டில் சீண்டுவதற்கு கூட ஆள் இல்லை. அவர்களது கூட்டணிக் கட்சியான அ.இ.அதிமுக கூட அவர்கள் பக்கம் நிக்கத் தயாராக இல்லை. கட்டாய மதமாற்றம் என்று கூறி, நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அதிமுகவை சீண்டியிருக்கிறார். உடனே அதிமுகவே வெகுண்டெழுந்து பதிலடி கொடுத்து வருகிறது. பாஜக கூட்டணியே இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு வேண்டாம் என்று கூறுகிற அளவிற்கு இவர்களுடைய மதமாற்ற பிரச்சாரம் பா.ஜ.க.வை நெருக்கடிக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.விடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று சொல்லக்கூடிய நிலைக்கும் அண்ணாமலை வந்துவிட்டார்.
கட்டாய நீட் திணிப்பு, கட்டாய இந்தி திணிப்பு, கட்டாய உரிமை பறிப்புகளை மட்டுமே தமிழ்நாடு ‘திராவிட மண்’ எதிர்க்கும். ஆனால் கட்டாய மதமாற்றம் என்ற போலி கூக்குரல்கள் எடுபடாது என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். மைக்கேல்பட்டி என்ற ஊரில் இருக்கும் தூய மேரி பள்ளி 133 ஆண்டுகளாக பெரும்பாலான இந்து மாணவிகளுக்குத் தான் கல்வியை வழங்கி வருகிறது. அங்கே மத மாற்றம் என்ற குற்றச்சாட்டு இதுவரை வந்ததே கிடையாது. இன்னும் சொல்லப்போனால், மைக்கேல்பட்டியில் வாழும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒரு மனுவை கொடுத்திருக்கிறார்கள். “எங்கள் கிராமத்தில் மதமாற்றம் நடக்கிறது என்று கட்டாயபடுத்தி வாக்குமூலம் வாங்குகிற முயற்சிகளில் சில வெளி நபர்கள் ஊருக்குள் புகுந்து குழப்பங்களை உருவாக்கி வருகிறார்கள். அவர்களை கிராமங்களுக்குள்ளே விடக்கூடாது. நாங்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம்” என்று பொது மக்களே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்து பாஜகவை ஓரம்கட்டி வைத்திருக்கிறார்கள்.
எங்கே தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டி விடுவதாக வழக்குகள் தங்கள் மீது பாய்ந்து விடுமோ என்று பயந்து போன தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பாஜகவிடம் சரணடைந்து எங்களை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருப்பார்கள் போல. அதன் காரணமாக அகில இந்திய பாஜக தலைமை பிற மாநிலங்களைச் சார்ந்த நான்கு பெண்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்து மதமாற்றம் நடக்கிறதா என்று விசாரணை நடத்துவதாக மிரட்டி பார்க்கிறது. இந்த மிரட்டல்களுக்கு தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது. சொல்லப் போனால் தமிழ்நாடு அரசு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் எழுதி, பேசி வருகிற பாஜக தலைவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை.
‘நீட்’ எதிர்ப்புப் போராட்டம்: கழகத் தோழர்கள் 12 பேர் மீதான வழக்கை இரத்து செய்தது உயர்நீதிமன்றம்
‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாத நிலையில் அனிதா உயிர்ப் பலி தந்ததைத் தொடர்ந்து ‘நீட்’ இரத்து கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 2017இல் நடந்தது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறை பொது அமைதியைக் குலைத்ததாக வழக்கைப் பதிவு செய்தது.
போராட்டம் - சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைப்படித்தான் நடந்தது; சட்டம் ஒழுங்கு சீர்குலைவோ, பொது மக்களுக்கு இடையூறோ ஏதும் நிகழவில்லை என்று கழக சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி வாதிட்டார். நீதிபதி சதீஸ்குமார், வழக்கறிஞர் வாதத்தை ஏற்று 12 தோழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை இரத்து செய்தார்.
- விடுதலை இராசேந்திரன்